சனி, 15 ஜனவரி, 2022

நேர்க்கோட்டில் பயணிப்போம்!

  


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

-----------------------------------

"நேரிய பாதையைக் காட்டுவாயாக'' என்று திருக்குர்ஆனின் தொடக்கத்திலேயே அல்லாஹ் கூறியுள்ளான். எனவே பெரும்பாலான முஸ்லிம்கள் அந்த நேரிய பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்காகவே தம்முடைய எல்லாச் செயல்பாடுகளையும் நேர்மையாகவும் செவ்வையாகவும் ஆக்கிக்கொள்ள முயன்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மற்றொரு புறம் நேரிய வழி எதுவென்று தெரியாமலும் அதனால் என்ன பயன் என்பதைப் புரியாமலும் பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.


ஓர் ஊர்த்தலைவர் நேர்க்கோட்டில் பயணித்தால் அவரால் அந்த ஊர்மக்கள் பயன்பெறுவார்கள். ஓர் அரசியல்வாதி நேர்க்கோட்டில் பயணித்தால் அந்தத் தொகுதி மக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள். ஓர் அதிகாரி நேர்க்கோட்டில் பயணித்தால் அவரைத் தொடர்புகொள்கிற மக்கள் அனைவரும் பயன்பெறுவர். ஒரு மாவட்ட ஆட்சியர் நேர்க்கோட்டில் பயணித்தால் அந்த மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். ஒரு மாநிலத்தின் முதல்வர் நேர்க்கோட்டில் பயணித்தால் அந்த மாநில மக்கள் அனைவரும் பயனுறுவார்கள். ஒரு நாட்டின் பிரதமர் நேர்க்கோட்டில் பயணித்தால் அந்நாட்டு மக்கள் அனைவரும் பயனுறுவர்; இன்புறுவர்; மகிழ்ச்சியாக வாழ்வர்.


ஒரு நேர்க்கோடு என்பது முடிவுறாமல் சென்றுகொண்டே இருக்கும். அதுபோல் யாரெல்லாம்  இவ்வுலகில் வாழ்கின்றார்களோ அவர்கள் அனைவரும் இந்த நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் ஒவ்வொரு காலத்திலும் ஓர் இறைத்தூதரை அனுப்பினான். அவர்கள் மக்களுக்கு எல்லா வகைகளிலும் நல்வழி காட்டினார்கள். அவர்கள் காட்டிய நேரிய வழியைப் பின்பற்றியோர் இருமையிலும் வெற்றிபெற்றார்கள். யாரெல்லாம் அந்த நேர்க்கோட்டில் பயணிக்கவில்லையோ அவர்கள் அனைவரும் தோல்வியுற்றனர்.


உலகில் வாழும் எல்லோருமே நேர்க்கோட்டில் பயணிக்கத் தொடங்கிவிட்டால், நீதிமன்றங்களும் தேவையில்லை; காவல் நிலையங்களும் தேவையில்லை. கணவனும் மனைவியும் நேர்க்கோட்டில் பயணித்தால், ஒருவருக்கொருவர் தத்தம் கடமையை உணர்ந்து செயல்பட்டு அவரவர் உரிமையை உரிய முறையில் வழங்கிவிட்டால் அங்கு அன்பு பெருகும்; வம்புக்கு வழியில்லை.

 

ஓர் அதிகாரி தம் கீழ் பணியாற்றுகின்ற எல்லோரிடமும் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டால் அவர் நேர்க்கோட்டில் பயணிக்கிறார் என்று பொருள். அதுபோலவே அவரின் மேற்பார்வையில் பணியாற்றுகிற அனைவரும் நேர்க்கோட்டில் பயணிக்கும் வண்ணம் நேர்மையாக உழைத்தால் மேலாளர் தம் பணியாட்களைக் கண்காணிக்க வேண்டிய தேவையே இருக்காது.

 

இப்படி ஒவ்வொரு பொறுப்பாளரும் அவரின்கீழ் பணியாற்றுவோரும் நேர்க்கோட்டில் பயணித்தால் எல்லோரும் இவ்வுலகில் இன்புற்று வாழலாம். இங்கேயே அனைவரும் சொர்க்க வாழ்வை அனுபவிக்கலாம்.

 

ஆனால் அந்தோ மனித இனத்தின் துர்பாக்கியம்! மனித இனத்திற்கு மிகப்பெரும் எதிரியாய், அவனுடைய நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுருவி வழிகெடுக்கும் ஷைத்தான், "நான் உன்னுடைய அடியார்களை வழிகெடுப்பேன்'' என்று இறைவனிடம் அறைகூவல் விடுத்துள்ளான். ஆகவே ஒருவன் நேர்க்கோட்டில் பயணிக்க நினைத்தாலும் அவனுடைய மனதைக் கெடுத்து, வழிபிறழச் செய்து, செவ்வையான வழியில் செல்லவேண்டியவனைக் கோணலான பாதையில் பயணிக்குமாறு திசை திருப்பிவிடுகின்றான். நேரிய பாதையிலிருந்து விலகி, குறுக்கு வழியில் செலுத்திவிடுகின்றான். இதனால் அவன் சம்பாதிக்கின்ற வழியும் கோணலாகி, அது தடைசெய்யப்பட்ட வருமானமாக ஆகிவிடுகின்றது. பின்னர் அவன் அல்லாஹ்வின் சினத்திற்கு ஆளாகின்றான்.

 

ஓர் ஊர்த்தலைவரோ, அமைச்சரோ, மாவட்ட ஆட்சியரோ, முதலமைச்சரோ நேர்க்கோட்டிலிருந்து விலகி குறுக்குப் பாதையில் பயணிக்கத் தொடங்கினால் அவர்களின்கீழ் பணியாற்றுகிற, வாழ்கிற பலர் நேர்க்கோட்டைவிட்டுப் பிறழ்ந்து குறுக்குப் பாதையில் பயணிக்கத் தலைப்பட்டுவிடுகின்றனர். அவர்களிடம் அவர்களின் அநியாயத்தைச் சுட்டிக்காட்டினால், "நான் மட்டுமா இவ்வாறு செய்கிறேன். என்னுடைய மேலதிகாரியும்தான் செய்கிறார் அவரிடம் போய்க் கேள்'' என்று சொல்கிற துணிவு பிறந்துவிடுகின்றது. இதையே "அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி'' எனும் பழமொழி உணர்த்துகிறது.

 

வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போதே ஒருவர் தம் மூத்த அதிகாரிக்குக் கையூட்டு வழங்க வேண்டியிருக்கிறது. பிறகெப்படி அவர்தம் பணியில் நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டுமென எதிர்பார்க்க முடியும்? ஒரு மாணவன் கல்லூரியில் சேரும்போதே அந்த "சீட்டு'க்குப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அந்த மாணவன் நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டுமென எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

 

 இவ்வாறே ஒவ்வொரு துறையிலும் அதன் தொடக்கமே இலஞ்சம், கையூட்டுகட்டாய அன்பளிப்பு எனத் தொடங்குவதால் அதன் முடிவு கோணலாகத்தான் இருக்கிறது. அதையே "முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்ற பழமொழி உணர்த்துகிறது.

 

வாக்களிக்கப் பணம் வாங்கிப் பழக்கப்பட்ட மக்கள் அதை அடுத்த தேர்தலிலும் எதிர்பார்க்கின்றனர். மக்களை எதிர்பார்ப்பிலேயே வைத்தவர்கள் மீண்டும் அதைக் கொடுத்துவிட்டுத் தேர்தலில் எளிதாக வென்றுவிடுகின்றார்கள். பிறகு ஐந்தாண்டுகள் மக்கள் படாத பாடு படுகின்றார்கள். வெற்றிபெற்ற அவரோ போட்ட பணத்தைப் பன்மடங்காகத் திருப்பி அள்ளுவதிலேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்துகிறார். இதுவே பெரும்பாலான இடங்களில் இன்றைய நடைமுறை.

 

மக்கள் அனைவருக்கும் நேரிய பாதையைக் காட்ட இறுதி இறைத்தூதராக வந்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அளத்தல், நிறுத்தல், முகத்தல், கொடுத்தல், எடுத்தல் உள்ளிட்ட எல்லாவற்றிலும் சீரான பாதையைக் காட்டினார்கள். "யார் நம்மை ஏமாற்றினாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறி எச்சரித்தார்கள். "நீங்கள் அளந்துகொடுத்தால் நிறைவாக அளந்துகொடுங்கள். சரியான தராசில் நிறுத்துக்கொடுங்கள்'' (17: 35) என்று அல்லாஹ் நேரிய முறையில் அளந்து வழங்குமாறு வழிகாட்டுகிறான். 


இப்படி ஒவ்வொரு செயலிலும் நேரிய பாதையைக் காட்டி நேர்க்கோட்டில் பயணிப்பதற்கான வழிவகையை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் செய்தார்கள்.

 

ஆனால் இன்று உலக மக்கள் பெரும்பாலோர் நேர்க்கோட்டி லிருந்து விலகி, கோணலான பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள். பொய் பேசுதல், கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றாமை, பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமை, ஏமாற்றிப் பிழைத்தல், அடித்துப் பிடுங்குதல், கொள்ளையடித்தல், திருடுதல் உள்ளிட்ட எல்லாவிதமான குறுக்கு வழிகளையும் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.

 

நேரிய பாதையிலிருந்து விலகி, குறுக்கு வழியைப் பின்பற்றிப் பிழைத்தோர் கடைசியில் இழிவடைகின்றனர். அதைப் பார்க்கின்ற பிறர் அதிலிருந்து படிப்பினை பெறுவதில்லை. மாறாக எந்தவித அச்சமோ பயமோ இன்றிக் குறுக்கு வழியிலேயே பயணித்து, இறுதியில் சிறைக்குள் சென்று சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.

 

எனவே நம்முள் ஒவ்வொருவரும் நேர்க்கோட்டில் பயணித்தால் இவ்வுலகிலும் நிம்மதியாக வாழ்ந்து மறுமையிலும் வெற்றிபெறலாம். அதுவே ஒவ்வொரு முஸ் லிமின் உயர்நோக்கமாகும். அதற்காக இனி வரும் ஒவ்வொரு நாளும் நாம் முயல்வோம்.   

===========================

கருத்துகள் இல்லை: