சனி, 16 அக்டோபர், 2021

உயிர்கொடுப்பவனே! மரணிக்கச் செய்பவனே!

 -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

 

அல்லாஹ்வின் அழகிய பெயர்களுள் இரண்டு முஹ்யீ, முமீத் ஆகியவை ஆகும். உயிர் கொடுப்பவன், மரணிக்கச் செய்பவன் எனப் பொருளாகும். பிறந்த ஒவ்வொரு மனிதனும் இறக்கிறான்.  அதன்பின் மறுமையில் அவனுக்கு உயிர்கொடுத்து இறைவன் எழுப்புவான். எனவே அந்த இறைவனுக்கு முஹ்யீ என்றும் முமீத் என்றும் உள்ள பெயர்கள் சாலப் பொருத்தமானவை.

 

ஒவ்வொரு நாளும் நாம் ஓய்வு என்ற பெயரில் இரவில் உறங்கி விழித்தெழுகிறோம். அவ்வாறு நாம் தூங்குகிற தூக்கம் ஒரு சிறு மரணம் என அழைக்கப்படுகிறது. ஆக இச்செயலில் இறைவனுடைய ஆற்றலான, மரணிக்கச் செய்வதும் அதன்பின் உயிர்கொடுத்து எழுப்புவதும் அடங்கியுள்ளது. ஆகவே இறைவன் ஒவ்வொரு நாளும் நம்மை மரணிக்கச் செய்கிறான். உயிர்கொடுத்து எழுப்புகிறான்.

 

இது குறித்து திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையிலிருக்கும் பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள்மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம் வரை வாழ அவன் அவர்களிடமே அனுப்பிவிடுகின்றான். கவனித்து அறிந்துகொள்ளக்கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. (39: 42)

 

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் நம்ரூத் அரசன், உன் இறைவன் யார் என்று கேட்டபோது, உயிர்கொடுத்து, மரணிக்கச் செய்பவனே என் இறைவன் என்று பதிலளித்ததை  அல்லாஹ் திருக்குர்ஆனில் அல்பகரா அத்தியாயத்தின் 258ஆம் வசனத்தில் பதிவு செய்துள்ளான்.

 

ஒரு தடவை உஸைர் அலைஹிஸ்ஸலாம் ஓர் ஊரைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அது அப்போது புஃக்த்து நஸ்ஸர் என்பவனால் அழிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் இந்த ஊர் எப்படித்தான் செழிப்படையப்போகிறதோ என எண்ணிக்கொண்டு ஓரிடத்தில் தங்கினார்கள். அல்லாஹ் அவர்களை நூறாண்டுகள் அதே இடத்திலேயே உறங்கவைத்துவிட்டான். அதன்பின் அல்லாஹ்  அவர்களை எழுப்பியபோது அந்த ஊர் மிகவும் பசுமையாய்க் காட்சியளித்தது. அது மட்டுமின்றி, அவர்களுடைய கழுதை மக்கிப்போய் எலும்பாகக் கிடந்தது. அதன்பின் மக்கிய எலும்புகளையெல்லாம் ஒன்றாக்கி அதன்மீது தோல்போர்த்தி, அவர்களின் கண்முன்னே உயிர்கொடுத்து எழுப்பியதைக் கண்டு அவர்கள் அல்லாஹ்வின் பேராற்றலை உணர்ந்துகொண்டார்கள். இது குறித்து அல்பகரா அத்தியாயத்தின் 259ஆம் வசனத்தில் அல்லாஹ் தெளிவாக எடுத்தியம்புகிறான்.

 

மற்றோர் அரிய வரலாற்று நிகழ்ச்சி. அதாவது உரோம் நகரில் தக்யானூஸ் எனும் ஓர் அரசன் இருந்துவந்தான். அவன் தன்னை வணங்குமாறு தன் நாட்டு மக்களுக்கு ஆணையிட்டிருந்தான். ஏழு இளைஞர்கள் மட்டும் அவனை வணங்காமல் ஏக இறைவன் அல்லாஹ்வையே வணங்கினர்; அவனை எதிர்த்து நின்றனர். கோபமடைந்த அவன், அந்த இளைஞர்களைக் கொண்டுவருமாறு அவர்களுடைய பெற்றோருக்கு ஆணையிட்டான். அவர்களை இங்கு கொண்டுவராவிட்டால் கடும் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக நேரிடும் என எச்சரித்தான். இதையறிந்த அவ்விளைஞர்கள் தம் ஊருக்கருகிலுள்ள ஒரு குகைக்குள் தஞ்சம் புகுந்து ஒளிந்துகொண்டனர். அங்கேயே அல்லாஹ் அவர்களை முந்நூறு ஆண்டுகள் உறங்கவைத்துவிட்டான். அதன் பிறகு அவர்களை எழுப்பினான். இதுவும் அல்லாஹ்வின் பேராற்றல் ஆகும். அல்லாஹ்வே உயிர்கொடுப்பவன், மரணிக்கச் செய்பவன் என்பதை இந்நிகழ்வு நிரூபிக்கிறது. இது பற்றிய விவரமான செய்தி கஹ்ஃப் அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

 

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் இறைவனின் தன்மைகள் குறித்துப் பேசியபோது, "நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னைக் குணப்படுத்துகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்'' (26: 80-81) என்று கூறினார்கள்.

 

நாளை  மறுமையில் இறைமறுப்பாளர்கள்,  "எங்கள் இறைவா! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றோம். ஆகவே, (இதில் இருந்து நாங்கள்) வெளியே செல்ல ஏதும் வழி உண்டா?'' என்று கேட்பார்கள். (40: 11) இந்த வசனத்தில் இரண்டு தடவை மரணிக்கச் செய்ததாகவும் இரண்டு தடவை உயிர்கொடுத்ததாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். அதாவது இல்லாமையிலிருந்து உருவம்  உண்டாக்கி, உயிர்கொடுத்து மனிதனாக வாழ வைத்து, மரணிக்கச் செய்தான். பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பினான். ஆக ஒரு மனிதன் இரண்டு தடவை இறப்பு நிலையிலும் (இல்லா நிலை) பிறகு இரண்டு தடவை உயிர்பெற்ற நிலையிலும் உள்ளான். ஆக அதைத்தான் இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய்; இரண்டு தடவை உயிர் கொடுத்தாய் என்று இறைமறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.

 

மேற்கண்ட இறைவசனத்தின்மூலம் இறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு தடவை உயிர்கொடுப்பதாகவும் இரண்டு தடவை மரணிக்கச் செய்வதாகவும் விளங்கிக்கொள்ள முடிகிறது. இது பண்டைய அறிவியல் ஆகும். ஆனால் தற்கால அறிவியல்படி இறைவன் ஒவ்வொரு நொடிப் பொழுதும் மனிதருக்கு உயிர்கொடுப்பதும் மரணிக்கச் செய்வதுமாக உள்ளான் என்பதே உண்மை. ஆம்! இன்றைய அறிவியல் அதை நிரூபித்துள்ளது. நம் உடல் கோடிக்கணக்கான (37.2 டிரில்லியன் செல்) அணுக்களால் அமைந்துள்ளது. ஒரு டிரில்லியன் என்பது ஓராயிரம் பில்லியன் ஆகும். அதாவது ஒன்றுக்குப்பின் 12 சுழிகள் (1012) போட்டால் அதுவே ஒரு டிரில்லியன் ஆகும்.

 

ஒவ்வொரு செல்லின் ஆயுட்காலத்தையும் அறிவியல் தொகுத்து வழங்குகிறது. அதன்படி, சிறுகுடல்- 2 முதல் 4 நாள்கள், வயிறு- 2 முதல் 9 நாள்கள், இரத்தச் சிவப்பணுக்கள் 2-5 நாள்கள்நாவின் சுவை அரும்புகள் 10 நாள்கள், குடல் அணுக்கள் 20 நாள்கள், தோலின் மேல்தோல் அணுக்கள் 10 முதல் 30 நாள்கள். இவ்வாறு ஒவ்வோர் உறுப்பும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உயிர் வாழ்ந்து, பின்னர் மரணித்துவிடுகின்றன. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான அணுக்கள் இறந்துபோவதும் அவை இறந்ததும் புதிய அணுக்கள் தோன்றுவதும் நாள்தோறும் தொடர்படியாக நடைபெற்றுவரும் செயலாகும். ஆக இதன்மூலம் இறந்த உயிர்களுக்கு உயிர்கொடுத்து எழுப்புபவன்  என்ற பண்பு இறைவனுக்கு ஒவ்வொரு கணமும் நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது.

 

ஏழினை (ஈமான்) இறைநம்பிக்கைகொள்வது கடமை. அவற்றுள் ஒன்று, ‘மரணத்திற்குப்பின் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என்று நம்புதல்' ஆகும். இதை நம்ப மறுத்த இறைமறுப்பாளன்,  "(மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக்கொண்டு) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகின்றான். அவன் தன்னைப் படைத்த(து யார் என்ப)தை மறந்துவிட்டு "உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று (ஓர் எலும்பை எடுத்து அதனைத் தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கின்றான். (நபியே!) அதற்கு நீங்கள் கூறுங்கள்: "முதன் முதலாக அதனைப் படைத்தவன் எவனோ அவனே அதனை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லாப் படைப்பினங்களையும் மிக அறிந்தவன்.'' (36: 79-80)

 

இன்று வரை இந்தச் சந்தேகம் மக்கள் பலரிடம் உள்ளது. நாம் இறந்துபோனபின், நம் பிரேதத்தை எரித்துச் சாம்பலாக்கிவிடுகின்றனர். அதன்பின் நாம் எவ்வாறு உயிர்ப்பிக்கப்படுவோம் என்று கேட்கின்றனர். மனித உடல் எவ்வளவுதான் எரிக்கப்பட்டாலும் அதில் அழிக்கமுடியாத ஓர் எலும்பு உள்ளது. அதுதான் முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியில் அமைந்துள்ள உள்வால் எலும்பு (Coccyx bone) என அழைக்கப்படுகிறது. அதை அழிக்க முடியாது என நபிமொழி (புகாரீ: 4935) கூறுகின்றது. இதனை இன்றைய விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது.

 

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் ஸ்பீமேன்  (Hans Spemann) இதைத் தம்முடைய ஆய்வுக்கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும், பல அமிலங்களைக் கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. மனித உடலிலுள்ள அழிக்க முடியாத பகுதி இது என்பதை இந்த உலகுக்குத் தம்முடைய சோதனையின் மூலம் நிரூபித்தார்.

 

அந்த உள்வால் எலும்புமூலமே மனிதன் உயிர்கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான். இது குறித்து  இறைவன் பேசும்போது, இல்லாமையிலிருந்து படைத்த நமக்கு மீண்டும் அவனைப் படைப்பது அவ்வளவு சிரமமன்று என்று கூறுகின்றான்.

 

ஆக உயிர்கொடுப்பவன், மரணிக்கச் செய்பவன் என்பதைக் கடந்த காலங்களில் விளங்கியதைவிட, இன்றையக் காலத்தில் மிகத் தெளிவாக விளங்கிக்கொள்வதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவனே உயிர்கொடுத்து மீண்டும் நம்மை எழுப்புவான் என்பதை உறுதிபட நம்பி வாழ்வோம்!

===================






கருத்துகள் இல்லை: