Dr. மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
_______________
மனித மனம் இந்நீண்ட நெடிய நிலப்பரப்பைப்போல பரந்துவிரிந்து கிடக்கிறது. அதனுள் பல்வேறு ஆசைகள் புதைந்துகிடக்கின்றன. அதனால்தான் நாள்தோறும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இளைஞர்கள் முதல் முதியோர் வரை புதிய புதிய சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கின்றனர். மனிதன் இந்நிலப்பரப்பைத் தாண்டி சந்திரனுக்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் விண்வெளிப்பயணம் செய்து கொண்டிருக்கிறான் என்றால் அது அவனது ஆசையின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.
மனித மனம் ஆசைகளால் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு நாளும் அதனுள் புதிய புதிய ஆசைகள் பிறக்கின்றன. அவையே மனித மனத்தை உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகின்றன. இவ்விடத்தில் ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்ற புத்தரின் போதனை உங்கள் உள்ளத்தில் தோன்றி மறையலாம். அது உண்மைதான். ஆனால் அந்த ஆசைகளால் கிடைத்த, அடைந்த பயன்களைத் தனக்காக மட்டுமே வைத்துக்கொண்டால்தான் ஆபத்து. மாறாக ஆசைகளின் பயனால் விளைந்தவற்றைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றெண்ணி, அவற்றைப் பகிர்ந்தளித்தால் அந்த ஆசை வரவேற்கத்தக்கது. அதாவது நான் சொல்ல வருவது என்னவென்றால் நம் ஆசைகளால் கிடைத்த பயன்களை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் பகிர்ந்தளிக்கும் எண்ணம் கொண்டவர்களாக உருவாக வேண்டும். அதற்கேற்ப நாம் உள்ளத்தைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒருவர் ஒரு சிறிய கடை வைத்துள்ளார். நான் இந்தக் கடையிலிருந்து சம்பாதித்து ஒரு பெரிய கடையைக் கட்ட வேண்டும். அதி-ருந்து சம்பாதிக்கிற பணத்திலிருந்து என்னால் இயன்ற வரை ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் வழங்க வேண்டும் என்றெண்ணுகிறார். அந்த ஆசையோடு ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கிறார் என்றால் அவருடைய ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே கழியும். ஏனென்றால் அவர் ஒவ்வொரு நாளும் தம் இலக்கை நோக்கிப் பயணிக்கிறார். அவர்தம் உயர்ந்த எண்ணத்தை அடையவே உழைக்கிறார். அதனால் அல்லாஹ்வும் அவரது எண்ணத்தை அடையவும் நிறைவேற்றவும் உதவுகிறான். அவர் அவ்வாறே சம்பாதித்து மேன்மேலும் வளர்ச்சியடைவதோடு தாம் சம்பாதித்த பணத்திலிருந்து ஏழைகளுக்கு உதவி செய்கிறார்; வாரி வழங்குகிறார்.
ஓர் இளைஞன் தன் இளமைப்பருவத்தில் நன்றாகப் படிக்க ஆசைப்படுகிறான். இறுதி வரை படித்து, உயர் மதிப்பை அடைந்து, உயர் பதவியைப் பெற்று அதன்மூலம் தன்னால் இயன்ற வகையில் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று எண்ணுகிறான். அதனால் அவன் ஒவ்வொரு நாளும் தன் இலக்கை நோக்கிப் பயணிக்கிறான்; ஆர்வத்தோடு படிக்கத் தொடங்குகிறான். கடிகாரம் பார்க்காமல், சிரமங்களைப் பொருட்படுத்தாமல் படிக்கத் தொடங்கிவிடுகின்றான். ஒவ்வொரு படியாக முன்னேறிச் செல்கிறான். இறுதியில் அவன் கொண்டிருந்த இலக்கை அடைந்துவிடுகின்றான். அவன் தன் மனத்தில் ஆசை கொண்டதைப்போல் உயர்பதவியை அடைந்து மக்கள் சேவையாற்றத் தொடங்கிவிடுகின்றான். அதனால் அவன் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகக் கழிக்கிறான்.
ஒரு மாமியாரின் கண்காணிப்பின்கீழ் வாழ்கிற ஓர் இல்லத்தரசி தன் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாகக் கழிக்க எளிய வழி உண்டு. அவள் அதிகமான வேலைகள் செய்ய ஆசைப்பட வேண்டும்; நல்லதொரு மருமகளாக, இந்த ஊருக்கே ஒரு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். இந்த இரண்டும் இருந்தால் அவளது இல்வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாகவே கழியும்.
அத்தகைய எண்ணம் கொண்டவள் மாமியாரின் கட்டளைகளுக்குப் பணிந்து அவள் மனதைக் கவர முனைவாள். மாமியார் வாய் தவறிப் பேசிய வார்த்தைகளை வன்மமாகச் சேர்த்து வைக்காமல் ஒதுக்கிவிடுவாள். அவள் உத்தரவிடுவதற்கு முன்னரே அதைச் செய்து முடித்துவிடுவாள். மிகுந்த பொறுமையோடு இருப்பாள். ஒவ்வொரு நாளும் தன் இலக்கை நோக்கிப் பயணிப்பாள்.
கணவனிடம் மகிழ்ச்சியாகப் பேசுவதோடு, தன் கணவன் சார்ந்த உறவினர்களோடு அன்பாகப் பழகி அவர்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க முயல்வாள். அவர்களிடம் இனிமையாகப் பேசத் தொடங்குவாள். அண்டை வீட்டாரிடம் இணக்கமாகப் பழகுவாள். தேவையுடையோருக்கும் ஏழைகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்வாள். ஆக ஒவ்வொரு நாளும் தன்னுடைய மதிப்பைக் கூட்டும் வகையில் தன் நடவடிக்கைகளை மாற்றியமைத்துக் கொள்வாள். அதனால் அவளுடைய ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே கழியும். காண்போரெல்லாம் அவளைப் புகழ்ந்து பேசுவார்கள். அவளுடைய சுறுசுறுப்பையும் துள்ளலான உள்ளுணர்வுகளையும் போற்றிப் பேசிக்கொள்வார்கள்.
அதாவது நாம் எப்போதும் ஆசைப்பட வேண்டும். விசாலமாகவும் உயர்வாகவும் நம் ஆசைகள் இருக்க வேண்டும். அத்தோடு நம் ஆசைகளால் கிடைக்கிற பயன்களையும் பலன்களையும் பிறருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். நாம் எதை ஆசைப்படுகிறோமோ அதை நோக்கியே நம் பயணம் அமைகிறது. இறுதியில் நாம் அதையே அடைகிறோம். எனவே நம்முடைய ஆசைகள் ஏன் சிறியனவாக இருக்க வேண்டும்? பெரியனவாகவும் உயர்வானவையாகவும்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அதை அடைவதிலேயே நம்முடைய காலம் கழியும். அதை நோக்கியே நம் மனது நம்மை அழைத்துச் செல்லும்.
ஒருவன் செல்வத்தின்மீது ஆசை கொள்வதால்தான் அவனால் செல்வத்தைச் சேர்க்க முடிகிறது. ஒருவன் கல்விமீது ஆசை கொள்வதால்தான் அவனால் கல்விச் செல்வத்தை அடைய முடிகிறது. ஓர் இளைஞன் நன்றாகப் படித்து ஒரு கல்லூரியை அல்லது ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஒவ்வொரு நாளும் அந்தக் கனவோடும் ஆசையோடும் படித்து முன்னேறுகிறான். ஒவ்வொரு நாளும் தன் இலக்கை நோக்கியே பயணிக்கிறான். அவ்வாறு இலக்கை நோக்கிப் பயணிப்பதால் இடையிடையே அவன் எதிர்கொள்கிற சங்கடங்கள், துன்பங்கள், சிரமங்கள், அவனுடைய கண்களுக்குத் தெரிவதில்லை. இறுதியில் அவன் தன் இலக்கை அடைந்து, தான் நினைத்ததைப்போல் கல்லூரியை உருவாக்கத் தொடங்கிவிடுகின்றான். அதற்கான கால்கோள் விழாவை நடத்திவிடுகிறான். அப்போது அவன் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.
அதன்பிறகு அதைக் கட்டி முடிக்கப் பாடுபடுவது அதை மேம்படுத்த உழைப்பதிலுமே காலம் வேகமாகச் சென்று கொண்டிருக்கும். அதனால் அவனுடைய ஒவ்வொரு நாளும் உயிர்ப்போடும் உற்சாகத்தோடும் கழிந்துகொண்டிருக்கும்.
இவ்வுலகில் ஒருவர் செய்கின்ற நல்லறங்களின் அடிப்படையிலும் அல்லாஹ்வின் கருணையின் அடிப்படையிலும்தான் ஒரு முஸ்லிம் சொர்க்கத்தை அடைய முடியும். அப்படியிருக்கும்போது உத்தமத் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொர்க்கத்தில் உயர்வான சொர்க்கத்தைக் கேட்குமாறு கூறியுள்ளார்கள். நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 2790)
அதாவது மிக உயர்ந்ததை ஆசைப்படச் சொல்லியிருக்கிறார்கள். ஏனெனில் அந்த உயர்ந்த சொர்க்கத்தை அடைய நிறைய நல்லறங்கள் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். அதிகமான நல்லறங்கள் செய்ய வேண்டுமென்ற உந்துதல் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நபியவர்கள் அவ்வாறு கூறினார்கள்.
மற்றொரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (-மனிதனுக்கு) இரு நீரோடைகள் (நிறையச்) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது... (நூல்: புகாரீ: 6436)
மரணம் வரை அவனது ஆசை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அந்த ஆசை மூலம் விளைகின்ற பயன்களைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும்போது அது தடை செய்யப்பட்ட ஆசை அன்று என்பதைப் பிற நபிமொழிகள் மூலம் அறியலாம். அதாவது ஒருவன், தனக்குக் குவியல் குவியலாகச் செல்வம் இருந்தால் நான் அவற்றை இறைவழியில் செலவிட்டு மிக அதிகமான நன்மைகளை அடைந்துகொள்வேன் என்று ஆசைப்பட்டால் அது வரவேற்கத்தக்க ஆசையாகும்.
இதே கருத்தில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ‘எனக்கு ஒரு குவியல் தங்கம் இருந்தாலும், கடனுக்கான தொகையை மட்டும் எடுத்து வைத்துவிட்டு மற்றெல்லாவற்றையும் மூன்று நாள்களுக்குள் செலவிட்டுவிடுவேன்.’ ஆக செல்வம் சேர்க்க நினைப்பது தவறன்று. அதைத் தனக்கேயுரியது எனச் சேர்ப்பதுதான் தவறு. அதுதான் ஆபத்தான செல்வம். அதுபோலவே கல்வியும். கல்வியைத் தேடித் தேடிக் கற்று, கற்றதன்மூலம் பிறருக்குப் பயனளிக்க வேண்டும்; கற்பிக்க வேண்டும். அத்தகைய கல்வியே சிறந்த கல்வி.
கல்வியும் செல்வமும் பிறருக்குப் பயன்படும் வகையில் தேடிக்கொள்ள வேண்டும்; ஈட்ட வேண்டும். எனவே பெரிய பெரிய ஆசைகளை மனத்தில் கொள்வோம். அவற்றை அடைய முறையாகத் திட்டமிடுவோம். அதன்மூலம் நம் வாழ்க்கையை உயிர்ப்போடு ஆக்கிக்கொள்வோம்.
=======================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக