வெள்ளி, 16 ஏப்ரல், 2021

நன்றிக்குரியோருக்கு நன்றி செலுத்துவோம்

நன்றிக்குரியோருக்கு நன்றி செலுத்துவோம்!
 
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
----------------------

இவ்வுலகில் பிறந்து வாழ்கிற மனிதர் ஒவ்வொருவரும் முதன்முதலில் நன்றி செலுத்த வேண்டியது அல்லாஹ்வுக்குத்தான். அந்த நன்றியை எவ்வாறு வெளிப்படுத்துவது? அல்லாஹ்வுக்குச் சிரம் தாழ்த்தி,  பணிந்து வழிபடுவதன்மூலமே வெளிப்படுத்த வேண்டும். அதையே இறைவன் தன் அடியார்களிடம் எதிர்பார்க்கிறான். அதனால்தான் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான்.

 
இரண்டாவது அவனது பெற்றோருக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆக இவ்விரண்டையும் அல்லாஹ்வே மனிதனுக்குக் கற்றுத்தருகிறான். முதலில் அல்லாஹ்வுக்கும் இரண்டாவது பெற்றோருக்கும் நன்றி செலுத்தவேண்டுமென அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். அல்லாஹ்தான் மனிதனைப் படைத்தான். எனவே அவனுக்கு முதல் நன்றி. பெற்றோர் அவனைப் பெற்றெடுத்தனர். எனவே அவர்களுக்கு இரண்டாவது நன்றி.

 
பின்வரும் வசனத்தைப் பாருங்கள்: "தனது தாய் தந்தைக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் அறிவுறுத்தினோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். (பிறந்த) பிறகும் அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகளாகின்றன. ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. (31: 14) 

       
பெற்றோர் எனும் ஒரே வார்த்தையில் தாய்-தந்தை இருவரையும் சேர்த்துக் கூறும் இறைவன், பிறகு தாயை மட்டும் பிரித்து, அவளது தியாகத்தையும் சேவையையும் தனியாகக் கூறுகின்றான்.  அதாவது அவனுடைய தாய் துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவித்து அவனைக் கர்ப்பத்தில் சுமந்தாள் என்றும் பிறந்தபின் அவனுக்கு ஈராண்டுகள் பாலூட்டினாள் என்றும் அவளது தியாகத்தைத் தனியாகக் கூறுகின்றான். இதையெல்லாம் பாசத்தோடு செய்யவைத்த இறைவனாகிய எனக்கு நன்றி செலுத்து. அத்தோடு உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்து என்று கூறுகின்றான். நன்றி செலுத்து என்று கூறும்போது தன்னை அல்லாஹ் முற்படுத்தியுள்ளான். பிறகு இரண்டாவதாகப் பெற்றோர் என்ற வார்த்தையில் தாயையும் தந்தையும் ஒன்றிணைத்துக் கூறுகின்றான்.

 
இவ்வசனத்தை நாம் ஆழ்ந்து நோக்கும்போது, நன்றிக்குரியவர்கள் யார் யார் என்பதை விளங்கிக்கொள்ள முடியும். அதாவது நேரடியாக உபகாரம் செய்வோர் மட்டுமின்றி, மறைமுகமாக, கண்ணுக்குத் தெரியாமலும் நமக்கு உபகாரம் செய்வோருக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்று இறைவன் கூறுவதை நாம் உணரலாம். அதாவது தாய்தான் சிசுவைப் பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுக்கிறாள்; ஈராண்டுகள் பாலூட்டுகிறாள். எனவே தாய்க்கு மட்டும் நன்றி செலுத்தினால் போதுமா? அந்தத் தாய் சிசுவைச் சுமப்பதற்கும் பாலூட்டுவதற்கும் காரணமான தந்தைக்கும் நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்தாம் தாயின் தேவைகளை நிறைவேற்றுகிறார்; குழந்தைக்குப் பாலூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறார். எனவே அவருக்கும் சேர்த்தே நன்றி செலுத்துமாறு இறைவன் கட்டளையிடுகிறான். 

சரி, தாய்க்கும் தந்தைக்கும் மட்டும் நன்றி செலுத்தினால் போதுமா? அன்போடும் பாசத்தோடும் வளர்க்கின்ற இத்தகைய பெற்றோரைத் தனக்கு வழங்கியவன் யார் எனச் சிந்திக்க வேண்டாமா? கண்முன் தெரிகின்ற இந்தப் பெற்றோரை வழங்கிய ஒருவன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றான். அவனே இறைவன். எனவே அவனுக்கு முதல் நன்றி. இரண்டாவது பெற்றோருக்கு நன்றி.

 
இறைவனுக்கான நன்றியை எவ்வாறு செலுத்த வேண்டும்? சிரம் பணிந்து வணங்குவதன்மூலம் அவனுக்கான நன்றியைச் செலுத்த வேண்டும். பெற்றோருக்கான நன்றியை அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன்மூலம் நிறைவேற்ற வேண்டும். அதாவது அவர்களிடம் கனிவாகப் பேசுதல், கண்ணியமாக நடந்துகொள்ளல்,  அவர்களைக் கண்ணியப்படுத்துதல், அவர்களிடம் பணிவாக நடந்துகொள்ளல், அவர்களை அன்போடு பார்த்தல், அன்போடு உரையாடுதல், பணிவிடைகள் செய்தல், அவர்களுடைய கட்டளைக்கு மாறுசெய்யாதிருத்தல், எதிர்த்துப் பேசாதிருத்தல், அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் உள்ளிட்டவை அடங்கும்.

 
முதலாவது நன்றியை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால் பெரும்பாலான மனிதர்கள் அல்லாஹ்வுக்கு உரிய முறையில் நன்றி செலுத்துவதில்லை. மனிதர்களை இப்புவியில் படைத்து, அன்பான பெற்றோரை அவர்களுக்கு வழங்கி, நல்லவிதமாக வாழ வைத்த இறைவனுக்கு உரிய முறையில் நன்றி செலுத்தாமல் நன்றி கொன்றோராக இருக்கிறார்கள். அதனால் அல்லாஹ் அவர்கள்மீது கோபமடைந்து சோதனைகளை ஏற்படுத்துகிறான். சிலர் மட்டும் நன்றி கொன்றவர்களாக இருந்தால் அவர்களை மட்டும் சோதிக்கலாம்; தண்டிக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் நன்றி கொன்றோராக இருப்பதால் சோதனைக்கு மேல் சோதனையை ஏற்படுத்துவதோடு கரடுமுரடான, இரக்கமற்ற ஆட்சியாளர்களை நியமித்து மேன்மேலும் அவர்களைத் துன்புறுத்துகிறான்.

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அந்த வாய்ப்புகளை அலட்சியம் செய்தவர்கள், தற்போதைய சூழ்நிலையில் கொரோனா எனும் நோய்த்தொற்றைக் காரணம் காட்டி, அரசால் இறைவனை வணங்குகிற வாய்ப்பும் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுகிறது. தன் அடியார்கள் தனக்கு நன்றி செலுத்துவதன்மூலம் ஈருலகிலும் மகிழ்ச்சியாக வாழ அல்லாஹ் வாய்ப்பளிக்கிறான். ஆனால் அறிவிலியான அடியார்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் தம் வாழ்க்கையை அவர்களே சிரமத்திற்குள்ளாக்கிக்கொள்கிறார்கள். தன்னை வணங்கும் அந்த  வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அல்லாஹ் அந்த வாய்ப்பைப் பறித்துக்கொள்வான். அதுதான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே வாய்ப்புக் கிடைக்கும்போதே அவனுக்கு நன்றி செலுத்த முந்திக்கொள்வோம்.  

அல்லாஹ்வுக்கு உரிய முறையில் நன்றி செலுத்தியோர் இறைத்தூதர்கள் ஆவர். அவர்கள் குறித்து அல்லாஹ்வே திருக்குர்ஆனில் கூறுகின்றான். இப்ராஹீம் நபியைப் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்: "இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராக இருந்தார்.'' (16: 121) இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார் என்று இறைவன் புகழ்ந்து கூறுகின்றான் என்றால் அவர் எந்த அளவிற்கு நன்றி செலுத்துபவராக இருந்திருப்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அதுபோலவே சுலைமான் அலைஹிஸ்ஸலாம் குறித்துப் பேசும்போது, அவருக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைக் குறிப்பிடுகின்றான். அந்நேரத்தில் அவர் சொன்ன வார்த்தையையும் பதிவு செய்துள்ளான். இதோ: "இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நட்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (யாருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனும் ஆவான்'' என்று கூறினார். (27: 40) 

இறைத்தூதர் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவராகவே இருந்து வந்தார். எனவேதான் அவருக்கு அல்லாஹ் மேன்மேலும் அருட்கொடைகளை வழங்கிக்கொண்டே இருந்தான். ஒரு தடவை தொலைதூர நாட்டு அரசியின் சிம்மாசனம் அவர் கண்மூடித் திறப்பதற்குள் அவர்முன் கொண்டுவந்து வைக்கப்பட்டது. அதைக் கண்டு அவர் வியந்தார். அல்லாஹ் இத்தகைய பணியாளர்களையெல்லாம் எனக்கு வழங்கி, நான் அவனுக்கு நன்றி செலுத்துகிறேனா இல்லையா என்று சோதிக்கிறான் என்றார். அவர் மிகுதியாக நன்றி செலுத்தியதால்தான் அல்லாஹ் அவருக்கு ஏராளமான அருட்கொடைகளை வழங்கினான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். 

ஆக இவ்வாறு ஒவ்வோர் இறைத்தூதரும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியோராகவே இருந்தனர்.  எல்லா இறைத்தூதர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுக்கு மிகவும் நன்றிக்குரியவராக இருந்தார்கள் என்பதை அவர்களின் வரலாற்றில் காண்கிறோம். 

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழும்போது தம் கால்களில் வெடிப்பு ஏற்படும் அளவுக்குத் தொழுவார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்படிச் செய்கிறீர்களே! தங்களின் முந்தைய, பிந்தைய தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்டனவே?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்டார்கள். (நூல்: முஸ்லிம்: 5433) 

முந்தைய, பிந்தைய தவறுகள் மன்னிக்கப்பட்டபோதும் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியாராக இருக்க வேண்டும் என்பதற்காக, அவனுடைய அருட்கொடைகளுக்காக இரவு பகலாக நின்று வணங்கியுள்ளார்கள் என்பதை அறிந்து வியக்கிறோம். நம்மையும் அவர்களுடைய வணக்க வழிபாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது வெட்கித் தலைகுனியாமல் இருக்க முடியாது. 

அல்லாஹ்வுக்கு முதல் நன்றி. பெற்றோருக்கு இரண்டாவது நன்றி. மூன்றாவது நன்றி யாருக்கு? கல்வியைக் கற்பித்த ஆசிரியருக்கே மூன்றாவது நன்றி. "லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம்'' (31: 12) என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது ஞானக் கல்வியை வழங்கிய அல்லாஹ் எனும் ஆசிரியனுக்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிடுகின்றான். எனவே நமக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டுமல்லவா?

  
இதைத் தாண்டி நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும் நம்முடைய நலனுக்காகவும் பாடுபடுகிற, உதவி செய்கிற, ஒத்துழைப்பு நல்குகிற ஒவ்வொருவருக்கும் நாம் நம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதும் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்வதும்தான் அவர்களுக்கு நாம் செலுத்துகிற நன்றியாகும். நம் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டோர், நம் கல்விக்கு உதவியோர், நல்வழி காட்டியோர், நல்ல ஆலோசனை வழங்கியோர், நம்முடைய வாழ்வில் எப்போதும் நம்மைச் சார்ந்தே நிற்கக்கூடிய மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள், மாமன்கள், மச்சான்கள், மச்சிகள், மாமிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி செலுத்த வேண்டும். மேற்கண்ட ஒவ்வொருவரும் நம் வாழ்வின் ஏதேனும் ஒரு தருணத்தில் நமக்கு உதவியவர்களாகவே இருப்பார்கள். நாம் உயர வேண்டும், நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணியவர்களாக, நமக்காகப் பிரார்த்தனை செய்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு நாம் நன்றி செலுத்தினால் அதைக் கண்டு அல்லாஹ் மகிழ்வான். 

மனைவி வழியே உறவுகளாக ஒட்டிக்கொண்ட மாமனார், மாமியார், மனைவியின் உறவினர்கள் என ஒவ்வொருவருக்கும் நன்றி செலுத்துவோம். எனக்குக் கல்வி கற்பித்தவருக்கு நன்றி செலுத்துவதோடு என் பிள்ளைக்குக் கல்வி கற்பித்தவருக்கும் நான் நன்றி செலுத்த வேண்டும். அது என் கடமை என்பதை உணர வேண்டும். அந்த வகையில் என் மனைவிக்கு உதவியவர்கள், என் மனைவியின் இல்வாழ்க்கைக்குத் துணைநின்றவர்கள் என அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகட்டும் என்று  நினைத்தால் நாம் நன்றி செலுத்துவதில் விசாலமான மனதுக்காரர் ஆகிவிடுவோம்.

  
யாரும் நம்முடைய நன்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. அல்லாஹ்வும்  நம்முடைய நன்றியை எதிர்பார்த்து இல்லை. நம்முடைய நன்றி அவனுக்குத் தேவையே இல்லை. அப்படியானால் நாம் ஏன்  அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்? நாம் நன்றாக வாழ்வதற்குத்தான். "(இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்'' என்று இறைவன் (14: 7) கூறுகின்றான்.

மற்றொரு வசனத்தில், "எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர்  தம் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் (அதனை) நிராகரிக்கிறானோ (அவன் தனக்குத் தீங்கைத் தேடிக்கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனாகவும் புகழுடையவனாகவும் இருக்கிறான்'' என்று (27: 40) கூறுகின்றான். 

ஆகவே நன்றி செலுத்துவது நம்முடைய நல்வாழ்விற்காகத்தானே தவிர பிறருடைய நலனுக்காக அன்று என்பதை நாம் உணர்ந்து அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் நன்றிசெலுத்துவோராகத் திகழ்வோம். 
====================

கருத்துகள் இல்லை: