புதன், 10 பிப்ரவரி, 2021

காதல் ஓர் அருட்கொடை

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனிதர்கள் பல்வேறு உணர்வுகளுடன் படைக்கப்பட்டுள்ளனர். அந்த உணர்வுகள் சிலருக்கு மிகையாகவும் சிலருக்குக் குறைவாகவும் வழங்கப்பட்டுள்ளன. பசி, தாகம், கோபம், காதல், காமம், பாசம், நேசம், அன்பு, மகிழ்ச்சி, கவலை முதலான உணர்வுகள் மனித வாழ்க்கையில் அடிக்கடி வந்துபோகக் கூடியவை. அவற்றுள் சில, மனிதர்கள் சிலருக்கு மிகையாகவும் வேறு சிலருக்குக் குறைவாகவும் வழங்கப்பட்டுள்ளன.

நம் உணர்வுகளுள் சிலவற்றை எல்லோரிடமும் தெரிவிக்கலாம்; எல்லா இடங்களிலும் வெளிப்படுத்தலாம். சிலவற்றைக் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெளிப்படுத்த முடியும். சிலவற்றை யாரிடமும் வெளிப்படுத்தாமல் இருப்பதே நலம். சில உணர்வுகளால் உந்தப்பட்ட மனிதன் அவற்றைக் கட்டுப்படுத்த இயலாமல் தவிக்கிறான்.  அதே நேரத்தில் அந்த உணர்வு மிகையாக வழங்கப்பட்டிருந்தால் அதுவே அவனது தீங்கிற்குக் காரணமாகிவிடுகின்றது. அவற்றுள் கோபமும் காமமும் முன்னிலை வகிக்கின்றன. கோப உணர்வை நாம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே வெளிப்படுத்த முடியும். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெளிப்படுத்த முடியும். இல்லையேல் அது நமக்குத் தீங்காகவே முடியும்.

அதுபோல் காமம் என்பது ஓர் உணர்வு. அது மனைவியிடம் மட்டுமே வெளிப்படுத்த வேண்டிய உணர்வு. அவளிடம் மட்டுமே அது வெளிப்படுத்தத் தகுதியானது. அதை வேறெங்கும் வெளிப்படுத்தக்கூடாது என்று இஸ்லாம் தடைவிதிக்கிறது. இந்த உணர்வு நடுநிலையாக இருந்தால் பிரச்சனை இல்லை. மிகையாக இருந்தால் அதைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். மிகக் குறைவாக இருந்தாலும் பிரச்சனைதான். தன்னை நம்பி வருகிற பெண்ணைத் திருப்திப்படுத்த இயலாமல் போய்விடும். அது அவளுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கும். பெண்ணுக்கும் இது பொருந்தும். அவளுக்கு அது மிகையாக இருந்தால் அதைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். கணவனிடம் மட்டுமே அத்தேவையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். குறைவாக இருந்தால் தன் கணவன் திருப்தியுறும் வகையில் ஒத்துழைக்க முடியாமல் போகலாம். 

காதல் என்ற அன்புணர்வு மனைவியிடம் காமமாக வெளிப்படுகிறது. காதல் என்ற உணர்வு பருவ வயது தொடங்கியதும் அரும்பத் தொடங்கிவிடுகிறது. அந்த உணர்வு அரும்பத் தொடங்கும்போதே எதிர்பாலினத்தை ஈர்க்கத் தொடங்கிவிடுகின்றது. அப்போது அரும்புகிற காதல் உணர்வைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது. திருமணம் வரை அந்த உணர்வைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.  திருமணத்திற்குப்பின் அந்த உணர்வைத் தன் மனைவியிடம் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அதுவரை அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். இது இஸ்லாம் காட்டும் வாழ்வியல் நெறிமுறை.

ஆனால் இன்றைய ஊடகங்கள் காதல் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிற இளைஞர்களையும் இளைஞிகளையும் உசுப்பேற்றி, அனுமதிக்கப்பட்ட காலம் கனிவதற்கு முன்னரே அதை வெளிப்படுத்தத் தூண்டுகின்றன. காதல் உணர்வை வெளிப்படுத்தத் திருமணம் வரை காத்திருக்கத் தேவையில்லை. அது இருபாலருக்கும் இயல்பாக வருகின்ற உணர்வுதான். இருபாலரும் இசைந்துவிட்டால் கூடி மகிழலாம்; ஒருவருக்கொருவர் காதலைப் பரிமாறிக்கொண்டு ஒன்றாக வாழலாம்; தவறில்லை என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.

ஊடகங்களின் மாயப் பேச்சை மண்டைக்குள் பதிவுசெய்துகொண்ட இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும்  ஒருவருக்கொருவர் காதல் வயப்படுகின்றனர்; நெருங்கிப் பழகுகின்றனர்; கூடி வாழவும் செய்கின்றனர். பெற்றோரின் சம்மதமோ அனுமதியோ தேவையில்லை எனக் கருதுகின்றனர். பிடித்திருந்தால் தொடர்கின்றனர்; இல்லையேல் உனக்கும் எனக்கும் ஒத்துவராது எனக் கூறிப் பிரிந்துவிடுகின்றனர். பின்னர் இருவரும் தமக்குத் தோதுவான வேறு துணையைத் தேடிக் கண்டுபிடிப்பதில் ஈடுபடுகின்றனர்.

இளைஞிகள் சிலர் திருமணத்திற்கு முன்னரே காதல் உணர்வுகளுக்கு ஆட்பட்டு, தகாத இளைஞனோடு நெருங்கிப் பழகி, கூடி வாழ்ந்துவிட்டு, வயிற்றில் கருவைச் சுமந்துகொண்டு, அந்த இளைஞனால் கைவிடப்பட்டு,  குழந்தையோடு அலைகிறாள். அல்லது அக்குழந்தையைப் பெற்றெடுக்காமல் கருவிலேயே சிதைத்துவிடுகிறாள்.  இந்தக் காதல் உணர்வு சாதி, மதம், இனம் பார்த்து வருவதில்லை. இந்த உணர்வு எல்லாச் சமயத்தவர்க்கும் பொதுவானது. எனவே இந்த உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல், வெளிப்படுத்தும் நேரமும் காலமும் கனிந்து வருவதற்குமுன்னரே அவசரப்பட்டு வெளிப்படுத்த முனைவதால் நிறையப் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

திருமணத்திற்குப்பின் வெளிப்படுத்த வேண்டிய காதலுணர்வைத் திருமணத்திற்குமுன்னரே வெளிப்படுத்தி வாழ்ந்தும் விடுகின்றனர். பிறகுதான் திருமணம் நடைபெறுகிறது. அல்லது அவ்விருவரிடையே மனமாற்றம் ஏற்பட்டு, அவன் வேறொரு பெண்ணையும், அவள் வேறோர் ஆணையும் மணந்துகொண்டு வாழத் தொடங்குகின்றனர்.  இதுவே இன்றைய நிலவரம். இத்தகைய காதலை இஸ்லாம் விரும்பவில்லை. இதை முற்றிலும் தடைசெய்கிறது.

அதேநேரத்தில் ஓர் இளைஞன் ஓர் இளைஞியைப் பார்த்து, அவளால் ஈர்க்கப்பட்டானென்றால் அந்தத் தகவலைத் தன் பெற்றோரிடம் தெரிவித்து, அவனுடைய பெற்றோர் அப்பெண்ணின் பெற்றோரிடம் சென்று கூறி,  அவர்கள்தாம் அவ்விருவருக்கும் இடையே திருமண ஒப்பந்தம் பேச வேண்டும். அப்பெண்ணின் பெற்றோர் விரும்பினால் அந்த இளைஞனுக்குத் தம் மகளை மணமுடித்துக்கொடுக்கலாம்; இல்லையேல் மறுத்துவிடலாம். மாறாக அவனாகவே அவளைப் பின்தொடர்ந்து செல்வதற்கோ, கடிதம் கொடுப்பதற்கோ, தன் காதலை வெளிப்படுத்துவதற்கோ அனுமதியில்லை.

ஒருவன் வந்து ஒரு பெண்ணிடம் காதலைக் கூறினாலும் அதைத் தான் ஏற்றுக்கொள்வதாக அப்பெண் கூற அவளுக்கு அனுமதியில்லை. இருவரும் தத்தம் பெற்றோரிடம்தான் அக்காதல் உணர்வை எடுத்துச் சொல்ல வேண்டும். தாமே சுயமாக முடிவெடுக்கக் கூடாது. ஒரு பெண் தானாகவே ஒருவனின் காதலை ஏற்றுக்கொள்ள அனுமதியில்லை.

எந்தப் பெண் தன் பொறுப்பாளரின் அனுமதியின்றித் திருமணம் செய்துகொண்டாளோ அவளுடைய திருமணம் செல்லாதுஎன்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 2083)

மேலும் தம் பிள்ளைகள் காதல் உணர்வுகள் அரும்பப்பெற்றவர்களாகவும் பருவ வயதை அடைந்தவர்களாகவும் ஆகிவிட்டால் அவர்களுக்கு உரிய பருவத்தில் உரிய துணையைத் தேடிப்பிடித்துத் திருமணம் செய்துவைப்பது பெற்றோரின் கடமையாகும். பருவ வயதை அடைந்தும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்காததால் அப்பிள்ளைகள் தவறுசெய்தால் அக்குற்றத்திற்குப் பெற்றோரும் ஒரு வகையில் காரணமாவர்.

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்: பெற்றோர் தம் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமை,  அப்பிள்ளைக்கு நல்ல பெயரைச் சூட்டுவது, அவனுக்கு நல்லொழுக்கத்தைப் போதிப்பது, அவன் பருவ வயதை அடைந்தால் அவனுக்குத் திருமணம் செய்து வைப்பது ஆகியவை ஆகும். (நூல்: அல்பிர்ரு வஸ்ஸிலா: 155) 

சரி, இந்தக் காதலுணர்வு திருமணத்தோடு கட்டுப்பட்டுவிடுகிறதா? காதல் உணர்வுக்கான வடிகால் கிடைத்துவிட்டதால் பெரும்பாலானோர் தமக்குரிய எல்லைக்குள் இருந்துகொள்கின்றனர். உரிய இடத்தில் மட்டும் தம் உணர்வை வெளிப்படுத்த வேண்டுமென்ற தெளிவைப்பெற்றுவிடுகின்றனர். ஆனால் சிலர் திருமணத்திற்குப் பின்னும் குறிப்பிட்ட எல்லைக்குள் நிற்காமல் வேலி தாண்ட முயல்கின்றனர். ஆண்கள் தம் மனைவியைத் தாண்டி பிற மங்கையர்மீது மோகம் கொள்வதும், பெண்கள் தம் கணவரைத் தாண்டி பிற ஆடவர்கள்மீது மோகம் கொள்வதும் நிகழ்கிறது. அத்தகைய தருணத்தில் தத்தம் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு படைத்த இறைவனின் சட்டத்திற்குக் கட்டுப்படுவோரே ஈருலகிலும் வெற்றி பெற முடியும்.

இன்றைய ஊடகங்கள், பாலுணர்வை யாரிடமும் வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளன. திருமணத்திற்குமுன் தவறான உறவுகொண்டால் சமுதாயத்திற்குத் தெரிந்துவிடும் வாய்ப்புண்டு. ஆனால் திருமணத்திற்குப்பின் தவறான உறவுகொண்டால் எந்தச் சந்தேகமும் ஏற்படாது என்ற சூழ்நிலை உள்ளது. ஆகவே திருமணத்திற்குப்பின் தகாத உறவு கொள்ளும் துணிவு பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஆக, காதலுணர்வு மிகைத்து உந்தும்போது அதைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள் திருமணத்திற்குப்பின்னும் தவறு செய்கிறார்கள். கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள் அதற்குரிய இடத்தில் மட்டும்  அதை வெளிப்படுத்தி, அதற்கான நன்மையை அடைந்துகொள்கின்றனர்.

திருமணத்திற்குப்பின்னர்தான் ஆணும் பெண்ணும் தத்தம் காதலுணர்வை தமக்கிடையே பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று சொன்னோம். ஆனால் ஆண்-பெண் இடையே ஏற்படுகிற அன்பும் காதலும் இறைவனால்  வழங்கப்படுகிற ஓர் அருட்கொடை ஆகும். இவ்வுணர்வு எல்லாத் தம்பதியருக்கும் வாய்க்காது. இறைவன் யாருக்கு அருள்புரிந்துள்ளானோ அத்தம்பதியருக்கு மட்டுமே வாய்க்கும். காசு, பணம் கொடுத்து அன்பையும் காதலையும் இதயங்களுக்குள் உண்டுபண்ண முடியாது. தற்காலிகமாக வேண்டுமானால் உண்டாக்கலாம். வாழ்நாள் முழுவதும் அவ்வுணர்வைப் பணத்தால் உண்டாக்க முடியாது. இறைவனின் கருணையால் இயல்பாகவே மனைவிமீது கணவனுக்கும் கணவன்மீது மனைவிக்கும் ஏற்பட வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் அது இறைவனின் அருட்கொடையே ஆகும்.

இது குறித்து அன்பாளன் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்: அந்த நம்பிக்கையாளர்களுடைய உள்ளங்களில் (இஸ்லாத்தின் மூலம்) அன்பை ஊட்டி (சிதறிக்கிடந்த அவர்களை) ஒன்று சேர்த்தான். பூமியிலுள்ள அனைத்தையும் நீங்கள் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உங்களால் முடியாது... (8: 63)

திருமணத்திற்குப்பின் ஒரு பெண்மீது ஆணுக்கும் ஓர் ஆண்மீது பெண்ணுக்கும் அன்பை ஏற்படுத்துவதும் காதலுணர்வைக் கிளர்ந்தெழச் செய்வதும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவனது கருணைப் பார்வை அத்தம்பதியர்மீது பட வேண்டும். அதற்காகத்தான் திருமணத்திற்குப்பின் பிரார்த்தனை செய்யப்படுகிறது. யாரேனும் நல்லவர் ஒருவருடைய பிரார்த்தனையின் பொருட்டால் அத்தம்பதியரிடையே அன்புணர்வும் காதலுணர்வும் மலர்ந்துவிட்டால் அத்தம்பதியர் இன்பத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

அல்லாஹ்வின் அருட்கொடையான அந்தக் காதலுணர்வு தம்பதியரிடையே இல்லாதுபோய்விட்டால், ஓர் ஆண் தன் மனைவி விரும்பியதையெல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் அவளுடைய உள்ளத்தில் இடம்பிடிக்க முடியாது. அதுபோல் ஒரு பெண், எவ்வளவுதான் நல்ல முறையில் கணவனுக்காகச் சமைத்துப்போட்டாலும் அவனது உள்ளத்தில் இடம்பிடிக்க முடியாது. கணவன்மீது மனைவியோ மனைவிமீது கணவனோ எவ்வித ஈர்ப்பையும் உண்டுபண்ணிவிட முடியாது. அது அல்லாஹ்வின் கையிலுள்ளது. அதை அவன், தான் நாடியோருக்கே ஏற்படுத்துகிறான். காதலுணர்வு மட்டுமின்றி, அன்பு, பாசம், நட்பு முதலான ஈரிதயங்கள் தொடர்பான எந்த ஈர்ப்பையும் இறைவன், தான் நாடியோருக்கே கொடுக்கின்றான்.

பணம் கொடுத்து நட்பை வாங்க முடியாது; பணம் கொடுத்துப் பாசத்தை வாங்க முடியாது; அதுபோலவே பணம் கொடுத்துக் காதலை வாங்க முடியாது. அது இறைவனின் கருணையால் தானாகவே முகிழ்க்க வேண்டும். அதனால்தான் இலட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தி வைக்கப்பட்ட திருமணம், தம்பதியரிடையே இதயங்கள் ஒன்றாமல் சில வாரங்களில், சில மாதங்களில், சில ஆண்டுகளில் முறிந்துபோய்விடுகிறது. சிலபல ஆண்டுகள் ஒரே கட்டிலில் படுத்துறங்கிய தம்பதியர்கூட, பின்னர் பிரிந்துவிடுகின்றனரே ஏன்? அத்தம்பதியரிடையே முகிழ்க்க வேண்டிய  உல்ஃபத் எனும் அன்பும் இணக்கமும் முகிழ்க்கவில்லை என்பதே காரணமாகும். எனவே ஈரிதயங்கள் ஒன்றுபடுகிற அன்பையும் இணக்கத்தையும் பிணைப்பையும் அன்பாளன் அல்லாஹ் நமக்கும் நம் சந்ததிகளுக்கும் அருள வேண்டுமென நாம் அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும். 

இறைநம்பிக்கைகொண்ட இளைஞர்களே, இளைஞிகளே! காதலர் தினம்எனும் கற்பு வேட்டையாடப்படும் நாள் ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படும் ஒரு நாள். அதில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவோருக்கு எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது. உங்களுடைய காதலுணர்வை உங்கள் பெற்றோரிடமே சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்குரிய தகுந்த துணையைத் தேடி, மணமுடித்து வைப்பார்கள். அது அவர்களின் தலையாயக் கடமையாகும். அதை அவர்கள் செவ்வனே முடித்துவைக்கத் தயாராகவே இருக்கின்றார்கள் என்பதை உணருங்கள்.

*********************************** 









 


கருத்துகள் இல்லை: