திங்கள், 22 பிப்ரவரி, 2021

மனைவியோடு காதல் செய்வீர்!

 


-முனைவர் மௌலவி நூ.  அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

பருவமடைந்த ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சந்திக்கின்றபோது இருவரின் மனங்களிலும் பாலுணர்வு தூண்டப்படுகிறது. காந்தம் இரும்பை ஈர்ப்பதைப்போல் ஒருவரையொருவர் ஈர்த்துக்கொள்கின்றனர். எனவேதான் இஸ்லாம் தேவையற்ற பார்வைக்குத் தடைவிதிக்கிறது. ஓர் இளைஞன் ஏதோ ஓர் இளைஞியை வழியில் எதேச்சையாகப் பார்ப்பதைத் தவறு எனச் சொல்லவில்லை. மீண்டும் அவளைப் பார்ப்பதையே தவறு என்கிறது. மீண்டும் மீண்டும் பார்ப்பதுதான் அவ்விருவருக்கிடையே தவறான உறவு ஏற்பட வழிவகுக்கிறது. எனவேதான் இஸ்லாம் அதை முளையிலேயே கிள்ளிவிடுகிறது.

பருவப்பெண்ணுக்கும் ஆணுக்கும் மனதில் காதல் அரும்புகிறது. அதன்பின் மனம் ஒருவரையொருவர் விரும்புகிறது. நம் நாட்டைப் பொருத்த வரை பயில்வது முதல் பணியாற்றுவது வரை ஆண்-பெண் இணைந்தே செய்துவருகின்றனர். ஒழுக்கத்தோடு இருப்போர் ஒழுக்கமாக இருந்தாலும் கட்டுப்பாடுகளை மீறித் தவறுகள் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன. அதனால்தான் இஸ்லாமிய மார்க்கம் நிரந்தரமாகவே ஒரு தடையைப் போட்டுவிடுகிறது. அதாவது அந்நியப் பெண்ணை அந்நிய ஆண் பார்க்கக்கூடாது என்றும் அந்நியப் பெண் அந்நிய ஆணைச் சந்திக்கக்கூடாது என்றும் தடைபோட்டுவிடுகிறது. அதனால் “உன்மீது நான் காதல் கொண்டுள்ளேன்” என்று கடிதம் நீட்டவோ, காதலை முன்னுரைக்கவோ எந்த வாய்ப்பும் கொடுப்பதில்லை. இத்தகைய இஸ்லாமியச் சட்டத்தால் பெண்கள் தம் பணிகளைப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள இயலுகிறது.

‘காதலர் தினம்' என்று இன்றைய இளைஞர்-இளைஞிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டு வருகிறது. இது உலக இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை இந்த அளவிற்கு முக்கியத்துவப்படுத்தியதில் ஊடகங்களின் பங்களிப்பு அதிகம். பெரு வணிகர்களுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்துவோருக்கும் வேண்டுமானால் இது இலாபமாக இருக்கலாம். வேறு யாருக்கும் இதில் இலாபமோ பயனோ கிடையாது. மாறாக இளைஞர்களும் இளைஞிகளும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். தனக்கொரு பாய்ஃபிரண்ட் இல்லையே என்று ஏங்கும் இளைஞிகளும், தனக்கொரு கேர்ள்ஃபிரண்ட் இல்லையே என  இளைஞர்களும் உள்ளனர். இதுவெல்லாம் இன்றைய ஊடகங்களின் விளைவுகள் எனலாம்.

கடந்த காலத் திரைப்படங்கள் பொழுதுபோக்குகளாக இருந்தாலும் அதில் சில நல்ல அறிவுரைகளையும் இலக்கியங்களையும் பண்பாடுகளையும் போதிக்க முற்பட்டார்கள். ஆனால் இன்றைய திரைப்படங்கள் முற்றிலும் சீர்கேடானவை. வக்கிரம், வன்மம், கவர்ச்சி, பாலியல் புணர்ச்சி,  மது நுகர்ச்சி, போதை நுகர்ச்சி, புகைப் பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கங்களையே போதிக்கின்றன.  இளைய தலைமுறையினர் உள்ளங்களில் தவறான சிந்தனைகளைத் திணிக்கின்றன.

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

கையோடு கைசேர்த்துக் கொள்ளலாமா? என்ற பாடல் 35 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. அதாவது ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக்கொள்ள வேண்டுமெனில் கல்யாணம்-திருமணம் செய்து கொண்டுதான் அதைச் செய்ய வேண்டும். அதற்குமுன் அது கூடாது. எனவே திருமண நாளை முடிவு செய்யுமாறு பெற்றோரிடம் சொல்லலாமா என்று தலைவனும் தலைவியும் பேசிக்கொள்வதாக அமைந்துள்ளது இப்பாடல். இது கடந்த காலப் பாடல்களுள் ஒன்று.

ஆனால் காலம் செல்லச் செல்ல இளைஞர்களின் மனநிலையும் மாறியது. அதற்கேற்பக் கவிஞரின் மனநிலையும் மாறியது.

கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா-இல்ல

ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா

தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா-இல்ல

புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா? என்று ஒரு கவிஞர் எழுதியுள்ளார்.

பெற்றோரின் சம்மதமின்றித் திருமணம் செய்துகொண்டு ஓடிப்போய்விடலாமா? அல்லது தம் ஊரைவிட்டு எங்கேனும் ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்ளலாமா? என்று இன்றைய இளைஞர்கள்-இளைஞிகளின் மனோநிலையையும் அவசரத்தையும் பெற்றோருக்குக் கட்டுப்படாமையையும் படம் பிடித்துக் காட்டுகிறது இப்பாடல். அதையும் தாண்டி,  தாலி எனும் திருமணச் சடங்கை முடித்துவிட்டு, பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளலாமா? அல்லது  பிள்ளைகளையெல்லாம் பெற்றுக்கொண்டு பிறகு தாலி எனும் திருமணச் சடங்கை வைத்துக் கொள்ளலாமா? என்று ஒரு பெண் கேட்பதாக அமைந்துள்ள பாடல், இன்றைய பெண்களின் அவசரப்புத்தியைப் பிரதிபலிக்கிறது.

இன்னும் ஒரு படி மேலே சென்று இன்றைய யுவன்-யுவதிகளின் மனோநிலையைக் கவிஞர் இவ்வாறு எழுதியுள்ளார்:

டாடி மம்மி வீட்டிலில்லை

தடைபோட யாருமில்லை

விளையாடலாமா உள்ளே

பின்லேடா?  - என்று ஓர் ஆணைப் பார்த்து பெண் கேட்பதாக அமைந்துள்ள பாடல், முதலில் ஆண்-பெண் இருவரும் இணைந்து வாழ்க்கையை விளையாடி முடித்து விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது. நம் விளையாட்டிற்குத் தடைபோட தாயோ தந்தையோ வீட்டில் இல்லை. உள்ளேபோய் விளையாட்டைத் தொடங்கலாம் வா என்று ஒரு பெண் அழைக்கிறாள். இத்தகைய சிந்தனைப் போக்குதான் தற்காலத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது.

“ஓர் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஒத்த மனநிலையில் இணைந்து வாழ்ந்தால் அது தவறில்லை” என்று உச்ச நீதிமன்றமும் இன்றைய இளைஞர்கள்-இளைஞிகளின் மனோநிலைக்கேற்பச் சட்டங்களை வகுத்துள்ளது. இது காலத்தின் கோலம் என்றும் கலிகாலத்தின் உச்சம் என்றும் அறிஞர்கள் பலர் குறிப்பிடுகின்றார்கள்.

பெண்ணிடத்தில் இன்பம் உள்ளது. அதை அடைந்துகொள்வதற்கான வழிமுறையை எல்லாச் சமயங்களும் வகுத்துள்ளன. இஸ்லாமிய மார்க்கம் மிக எளிதாக அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒரு பெண்ணை, அவளுடைய பெற்றோரின் சம்மதத்துடன் உரிய முறையில் மணக்கொடை கொடுத்து, மனைவியாக்கிக்கொண்டு பின்னர் அவளைக் காதலிக்க  வேண்டியதுதான். மனைவியைக் காதலிப்பதுதான் உண்மையான காதல். அதையே இஸ்லாமிய மார்க்கம் ஊக்கப்படுத்துகிறது.

 "இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் இன்பப் பொருள்களே; பயனளிக்கும் இவ்வுலக இன்பங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே ஆவாள்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.  (நூல்: முஸ்லிம்: 2911) எல்லா இன்பங்களையும் தன்னகத்தே வைத்திருப்பவள் பெண் என்பதையும் அவளைவிடப் பேரின்பம் தரும் எப்பொருளும் புவியில் இல்லை என்பதையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உள்ளூர உணர்த்துவதை நாம் காணலாம்.    

இதே கருத்தை வலியுறுத்துமுகமாக தமிழ்ப்புலவர் வள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார்:

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்கொடி கண்ணே உள (1101) - விழியில் பார்த்து, செவியில் கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படியான இன்பம், ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு என்று பேராசிரியர் சாலமன் பாப்பையா உரை எழுதியுள்ளார். புணர்ச்சி மகிழ்தல் எனும் இந்த அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பத்துக் குறட்பாக்களும் மனைவியிடம் கணவன் பெறுகின்ற ஒவ்வொரு சுகத்தை எடுத்துரைக்கின்றன. ஆக கணவன்-மனைவி இல்லறத்தில் எவ்வாறு நெருக்கமாக வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டலும் நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. ஆதலால் இன்பம் அனுபவித்தல் என்பது திருமணத்திற்குப்பின் தன் மனைவியோடுதான் என்பதை வள்ளுவர் போதிக்கிறார். திருமணத்திற்கு முன்பே வாழத் துடிக்கும் இன்றைய இளைய தலைமுறையினர்க்குப் பாடம் கற்பிக்கிறார்.

அதாவது இதை இன்னும் சற்று விரிவாகச் சொல்ல வேண்டுமெனில், பெண்ணைக் காண்பதும் சுகம். அவள் பேச்சைக் கேட்பதும் சுகம். அப்படியிருக்கும்போது மனைவியாக ஆக்காமல் அந்நியப் பெண்ணாகவே வைத்துக்கொண்டு எப்படி இந்தச் சுகங்களை அனுபவிப்பது தகும்?  எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் அந்நியப் பெண்ணைப் பார்ப்பதையும் அந்நியப் பெண்ணிடம் பேசுவதையும்  தடை செய்கிறது. அதாவது திருமணம் செய்யாமல் காதலிப்பதைத் தடைசெய்கிறது. 

"ஒருவருக்கொருவர் அன்புகொள்ளுதல் திருமணத்தைப் போன்று (வேறொன்றில்) காணப்படுவதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 1837) பருவப் பெண்ணை மணந்துகொண்டவன் தன் மனைவியைக் காதலிப்பதும் அவள் தன் கணவனைக் காதலிப்பதும் இனிய தம்பதியருக்கு அழகாகும். அவள் தன்னை முழுமையாகத் தன் கணவனிடம் ஒப்படைப்பதும் அவன் தன்னை முழுமையாகத் தன் மனைவியிடம் ஒப்படைப்பதும் மனமொப்பி மணந்துகொண்ட தம்பதியருக்கே சாத்தியம். இத்தகைய அன்பு கணவன்-மனைவியரிடையே தவிர வேறெங்கும் ஊற்றெடுக்காது. தம்பதியர் இருவரிடையே மட்டுமே இத்தகைய அன்பைக் காண முடியும் என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

நன்னெறியும் நற்பண்புகளும் கொண்ட ஒரு மனைவி தன் கணவனின் முகக்குறிப்பை அறிந்து அவனது தேவையை நிறைவேற்றுவாள்; அவன் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பாள்; கணவனிடம் அன்பாகப் பேசுவாள்; தன் வசீகரப் பேச்சாலும் அன்பாலும் அவனை ஈர்ப்பாள்; கணவனிடம் நெருக்கமாகவும் அணுக்கமாகவும் இருப்பாள்; தொட்டுத் தொட்டுப் பேசுவாள். ஆக எல்லா வகையான இன்பங்களையும் சுகங்களையும் கொடுப்பவள்தான் ஸாலிஹான-நல்ல பெண்மணி. 

கணவன்-மனைவி என்றாலே சண்டைதான் நம் நினைவுக்கு வரும். அத்தகைய கருத்தோட்டத்தை மக்கள் மனங்களில் விதைத்துள்ளன இன்றைய ஊடகங்கள். காதலைக் காமமாகவும் அசிங்கமாகவும்  சித்திரித்துள்ளன நவீனத் திரைப்படங்கள். ஆனால் எல்லா வகையான அன்பும் கணவன்-மனைவிக்கிடையே மட்டுமே இருக்க முடியும். காதலர்களுக்கென ஒரு நாளைக் குறிப்பிட்டு, அந்நாளில் காதலர்கள் தம் காதலைத் தத்தம் காதலியிடம் சொல்லும் நாளே காதலர் தினமாகக் கொண்டாடுகின்றார்கள். ஆனால் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தன் காதலைச்  சொல்ல வேண்டியது திருமணம் செய்துகொண்ட தத்தம் ஜோடியிடம்தான். அதுதான் உண்மையான காதல். மணந்துகொண்ட அவளை அவனும் மணந்துகொண்ட அவனை அவளும் மனதாரக் காதலிப்பதுதான் உண்மையிலேயே அங்கீகரிக்கப்பட்ட காதல் என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் உணரட்டும்.

==================






கருத்துகள் இல்லை: