-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(துணை ஆசிரியர், ‘இனிய திசைகள்’ மாத இதழ்)
. __________
முதல் மனிதரைப் படைத்த அல்லாஹ் அவருக்குத் துணையாக ஹவ்வாவைப் படைத்தான். விதியின் விளைவால் பூமிக்கு வந்தார்கள். சொர்க்கத்தில் இருந்த வரை எண்ணியது எண்ணியவுடன் கிட்டியது; உழைப்பின்றிக் கிட்டியது. நிலத்திற்கு வந்தபின் நினைத்தவுடன் கிடைத்திடுமோ உணவு? நினைத்ததை உண்ண வேண்டுமெனில் நித்தமும் உழைக்க வேண்டும்.
தொடக்கக் காலத்தில், முதல் நாள் பயிரிட்டால் மறு நாள் அறுவடை செய்யலாம் எனக் காலத்தைச் சுருக்கி வைத்திருந்தான் இறைவன். காலம் செல்லச் செல்ல காலம் விரிந்தது. மூன்று முதல் நான்கு மாதங்கள் அறுவடை செய்யக் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. ஆக முதல் மனிதரே ஒரு விவசாயிதான். அன்று தொடங்கிய விவசாயத் தொழில் இறுதி நாள் வரை தொடரும் என்பதில் ஐயமில்லை. அது அல்லாஹ்வின் அடிப்படை நியதி.
மனிதன் நிலத்தில் பயிரிட்டு, அது வளர்ந்து முதிர்ந்தபின் அறுவடை செய்கிறான்; புசிக்கிறான்; பிறருக்கு விற்பனை செய்கிறான்; ஏழைக்குக் கொடுக்கிறான். எனவே இது ஓர் அறச் செயல் ஆகும்.
இது குறித்து நபியவர்கள் கூறிய செய்தியைப் பார்க்கலாம்.
“முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2320)
இந்த நபிமொழியின் அடிப்படையில் ஒரு விவசாயியின் விவசாயத் தொழில் ஓர் அறச் செயல் என்பதை விளங்கலாம்.
இந்திய விவசாயிகள் தம் வேளாண்மைப் பொருள்கள்மூலம் சம்பாதிக்கின்ற பணத்திற்கு வரி கட்டத் தேவையில்லை என்பது சட்டம். இருப்பினும் இந்திய விவசாயிகள் பலர் ஏன் ஏழ்மை நிலையிலேயே இருக்கிறார்கள்? ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?
பெரும்பாலோர் சொந்த முதலீடு இல்லாமல் பிறரிடம் அல்லது வங்கியில் கடன் வாங்கியே விவசாயம் செய்து வருகின்றனர். மகசூல் நல்ல முறையில் வந்தால், அதை விற்றுக் கடனைச் செலுத்தியதுபோக, எஞ்சிய கொஞ்சத்தைத் தமக்காக வைத்துக்கொள்வர். அதேநேரத்தில் வானம் பொய்த்துவிட்டால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போய்விடும்; மீண்டும் கடன் வாங்குவர். ஒரு பக்கம் வட்டி வளர்ந்துகொண்டிருக்கும். இந்தத் துர்பாக்கிய நிலைதான் அவர்களை வாட்டிக்கொண்டிருக்கிறது.
மீண்டும் அவன் தனது நிலத்தை உழுது, பக்குவப்படுத்தி, விதை தூவி, விவசாயம் செய்து, தேவையான பருவத்தில் பயிருக்கு உரமிட்டு, தேவையற்ற களைகளை அகற்றி, முதிர்ந்தவுடன் அறுவடை செய்து, பாதுகாத்து, தேவையுடையோருக்கு விற்று, அதன்பின் போட்ட முதலை எடுப்பதற்குள் நீண்ட போராட்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது.
பின்னர் அதில் இலாபம் என்பது சிலருக்கு வாய்க்கிறது; பலருக்கு வாய்ப்பதில்லை.
இந்த விவசாயப் போட்டியில் கவனமாக ஓடியவருக்குப் பரிசு; கவனம் சிதறியவருக்கு, அவர் தம் வாழ்க்கையே தரிசு என்றுதான் சொல்ல வேண்டும். மற்றொரு கோணத்தில் இறைவனின் கருணைப்பார்வை பட்டோர் வெற்றி பெறுகின்றனர்; இறைவனின் கருணைப்பார்வை கிட்டாதோர் தோல்வியடைகின்றனர்.
அதைத்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். (56: 63-65)
வட்டிக்குக் கடன் வாங்கி விவசாயம் செய்வோர் அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், நெக்குருகி, துணிவிழந்து, இறுதியில் தம் உயிரையே மாயத்துக் கொள்கின்றனர். நெஞ்சின் ஒரு பகுதியில் எஞ்சியிருக்கிற நம்பிக்கையோடு அடுத்த தடவை வரும் மகசூலை விற்று, வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்றெண்ணி மீண்டும் உழுது, பயிரிட்டு விவசாயத்தைத் தொடங்குகின்றான். இரண்டாவது தடவை நாடிய சாகுபடி கிடைத்தால் அவன் வாங்கிய கடனை அடைப்பான். இல்லையேல் அவன் சாகும்படி ஆகிவிடும்; சிலர் விதிவிலக்காக வெற்றிபெறலாம். இதுவே இந்திய விவசாயிகளின் நிலை.
இஸ்லாமிய மார்க்கத்தில் விவசாயிகள் சுதந்திரமான வாழ்க்கையையும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் மேற்கொள்கின்றார்கள். அவர்கள் விளைவிக்கும் மகசூலை விரும்பியவாறு விற்பனை செய்து கொள்ளலாம். அரசுக்கு ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை வரி செலுத்தினால் போதுமானது. விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கப்படும். எனவே இஸ்லாமிய நாடுகளில் எந்த விவசாயியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக எந்த வரலாறும் இல்லை.
ஒரு விவசாயி, தன் நிலத்தில் தானே உழுது பயிரிடலாம். அல்லது தனக்கு இயலவில்லையெனில், அந்நிலத்தை, தான் விரும்பியவருக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளோடு குத்தகைக்கு விடலாம். குத்தகை என்பது நில உரிமையாளர் தம் நிலத்தை ஒரு விவசாயியிடம், மகசூலில் கால் பங்கு என்றோ, பாதி என்றோ நிபந்தனையிட்டு வழங்குவதாகும்.
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும், அபூபக்ர், உமர், உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும், முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு தம் நிலங்களைக் குத்தகைக்கு விட்டு வந்தார்” என்று நாஃபிஉ ரஹிமஹுல்லாஹ் கூறினார். (நூல்: புகாரீ: 2343)
இதன் அடிப்படையிலும் நபியவர்கள் கைபரில் இருந்த நிலங்களை யூதர்களிடம் குத்தகைக்கு விட்டிருந்தார்கள் என்ற செய்தியின் அடிப்படையிலும் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது கூடும் என்பது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.
அந்த விவசாயி, நிலத்தை உழுது, பயிரிட்டு, மகசூல் செய்து, கிடைத்த மகசூலில் நில உரிமையாளருக்கு அவர் நிபந்தனைவிதித்த கால் அல்லது அரைப் பங்கைக் கொடுத்துவிட்டு எஞ்சியதைத் தனக்காக வைத்துக்கொள்வான். இது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் குறிப்பிட்ட ஒரு நிலத்தைக் குத்தகைக்கு விடும்போது மகசூலில் 50 மூட்டை என்றோ 100 மூட்டை என்றோ நிபந்தனை விதிக்க முடியாது. அந்த நிபந்தனை செல்லாது. ஏனெனில் நிலத்தில் எவ்வளவு விளையும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும்போது இத்தனை மூட்டை விளைச்சலைத் தந்தே ஆக வேண்டுமென ஒரு விவசாயியை எவ்வாறு நிர்ப்பந்திக்க முடியும்?
ஆக இஸ்லாமிய மார்க்கம் விவசாயிகளுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்கவில்லை. மேலும் குத்தகை நிலத்தில் அவர் பயிரிட்டு வளர்த்து வருகிறபோது, திடீரென இயற்கைச் சீற்றத்தால் அழிந்து போனால் அதற்கு அந்த விவசாயி எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டான். அதாவது குத்தகைதாரருக்கு எந்தப் பங்கும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் விவசாயிகள் மனஅழுத்தம் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இதுதான் இஸ்லாமியச் சட்டம்.
இனி இந்திய நிலவரம் என்னவென்பதைப் பார்ப்போம். சொந்தப் பணத்தை முதலீடு செய்து விவசாயம் செய்வோர் மிகக் குறைவு. பெரும்பாலான விவசாயிகள் வட்டிக்குக் கடன் வாங்கியே விவசாயம் செய்கிறார்கள். அவர்களுடைய மகசூல் நல்லவிதமாகக் கிடைக்கின்றபோது வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்துகிறார்கள். அதேநேரத்தில் மழை பெய்யாமல் பயிர்கள் கருகிப் போனாலோ இயற்கைச் சீற்றத்தால் அழிந்து போனாலோ அந்த விவசாயி வாங்கிய கடன் தள்ளுபடி ஆகாது. அதைத் திரும்பச் செலுத்தித்தான் ஆகவேண்டும். இல்லையேல் வாங்கிய கடனுக்கு வட்டி ஏறிக்கொண்டிருக்கும். இதனால்தான் விவசாயிகள் பலர் ஏழைகளாகவே உள்ளனர்; சிலர் தம்மை மாய்த்துக்கொள்கின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் வட்டிக்குக் கடன் கொடுப்பதை நிறுத்த வேண்டும்; விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும். மேலும் இயற்கைச் சீற்றத்தால் பயிர்கள் அழிந்துவிட்டால், அப்போது வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்துவிட வேண்டும். இதுதான் இந்திய அரசு விவசாயிகளுக்குச் செய்ய வேண்டிய முதற்கடமையாகும். நாட்டு நலனில் அக்கறைகொண்ட ஆட்சியாளர் இதைத்தான் முதலில் செய்வார்.
ஆனால் இன்று நடுவண் அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளை மேன்மேலும் அடிமையாக்கவே முனைகின்றன. அந்த மூன்று சட்டங்களின் முக்கிய விஷயங்கள்: 1. ஆதார விலையை நிர்ணயிக்கும் பொறுப்பிலிருந்து நடுவண் அரசு விலகிக்கொள்கிறது. அதாவது விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யாது. இதனால் ஒரு விவசாயி அறுவடைக்குப்பின் கிடைத்த மகசூலை எங்கு விற்பனை செய்வான்? உடனடியாகக் கிடைக்க வேண்டிய பணத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 2. பன்னாட்டு நிதி அனுமதிக்கப்படுகிறது. இதன் காரணமாக பெருமுதலாளிகள் விவசாயிகளிடம் ஒப்பந்தச் சாகுபடி முறையில் விளைநிலங்களை அபகரித்துக் கொள்வார்கள்.
3. நீர்நிலை மேம்பாடு என்ற பெயரில் தண்ணீரைத் தனியார் நிர்வாகம் நிர்வகிக்கும். இதனால் தண்ணீர் வணிகமயமாக்கப்படும். வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ‘தண்ணீர் மீட்டர்’ பொருத்தப்பட்டு அதற்கெனத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை உருவாகலாம். மேலும் இலவச மின்சாரமும் நிறுத்தப்படும்.
4. விவசாயிகள் தம் விளைபொருள்களைச் சுதந்திரமாக உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த உழவர் சந்தைகள் முடக்கப்படும். 5. பெருமுதலாளிகள் வழங்குகிற மரபணு மாற்று விதைகளைத்தான் விவசாயிகள் தம் நிலங்களில் பயிரிட வேண்டும். இதனால் காலப்போக்கில் நிலம் பாழ்பட்டு, மலட்டுத்தன்மை அடைந்துவிடும். 6. விவசாயம் செய்ய பத்து சதவிகிதப் பணத்தை முன்பணமாக வழங்குவார்கள். மீதித் தொகையை விவசாயிகள்தாம் போட வேண்டும். விளைச்சல் சரியாக அமையவில்லையானால், அடுத்த தடவையும் பணம் கொடுப்பார்கள். காலப்போக்கில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல்போகின்றபோது அந்நிலம் பெருமுதலாளிகளுக்கே சொந்தமாகிவிடும்.
7. குளிர் சாதனக் கிடங்குகள் தனியார் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் மிகை உற்பத்தி ஏற்படும்போது அவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கி, இருப்பு வைத்துக்கொள்வார்கள். தட்டுப்பாடு ஏற்படும்போது மிகுதியான விலைக்கு விற்று, கொள்ளை இலாபம் சம்பாதிப்பார்கள்.
அதனைச் செவ்வனே செய்துகொள்ளுமுகமாக, வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருள்களை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது என்பதை அறிக. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு, செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு, பின்னர் மிகுதியான விலைக்கு விற்கப்படுவது சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. 8. தற்போது வரை மாநில அதிகாரப் பட்டியலில் உள்ள விவசாயத் துறை அதிலிருந்து நீக்கப்படும். ஆக இந்த மூன்று சட்டங்களும் வெளியில் தேன் தடவி, விவசாயிகளுக்குச் சாதகமானவையாக ஊடகங்கள்மூலம் காட்டப்பட்டு, உள்ளே அவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இம்மூன்று சட்டங்கள்மூலம் பெருமுதலாளிகளுக்கு விவசாயத்தைத் தாரை வார்க்கப் பார்க்கிறது மத்திய அரசு. அதைத் தடுத்து நிறுத்தவே நாட்டின் தலைநகரில் விவசாயிகள் அனைவரும் போர்க்கொடி தூக்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் மட்டுமின்றி, இந்திய நாட்டு நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகும்.
===================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக