சனி, 11 ஜனவரி, 2020

புத்தாண்டில் புதிய சிந்தனை!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
========================
2020ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நாம் ஒவ்வொருவரும் நம் அகவை குறித்துச் சிந்திப்போம். இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்குப் பிறந்த நாள் வரலாம். இத்தகைய தருணத்தில், “அல்லாஹ் நம்மை இத்தனை ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு வாழ வைத்தானே அவனுக்காக நாம் என்ன செய்தோம்என்று சிந்தித்துப் பார்ப்பது அவனுடைய அடிமைகளாகிய நமக்கு அவசியமாகும். இவ்வளவு வயது வரை நம்மை வாழ வைத்த இறைவனுக்கு நன்றியுள்ள அடியாராக நாம் இருந்துள்ளோமா, அவனது திருப்தியைப் பெறுமளவிற்கு நம்முடைய வாழ்க்கை அமைந்திருந்ததா என்றெல்லாம் யோசிப்பது நம் கடமையாகும். ஏனென்றால் உன் அகவையை எவ்வாறு கழித்தாய்எனும் இறைவனின் கேள்விக்கு நாம் எவ்வாறு பதில் சொல்லப்போகிறோம்?
ஒவ்வொருவரும் தம் நேரத்தையும் காலத்தையும் வீணடித்துக்கொண்டுதானே இருக்கின்றார்கள்? எத்தனை பேர் திருக்குர்ஆன் ஓதுவதிலும் இறைவனை (திக்ர் செய்து) நினைவுகூர்வதிலும் கழித்துக்கொண்டிருக்கிறார்?

பெரும்பாலோர் தம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் காலம் என்பது ஒரு பொழுதுபோக்கு; அவ்வளவுதான். காலம் என்பது விலைமதிக்க முடியாத ஒன்றல்லவா? அதன் மதிப்பை நாம் உணர வேண்டாமா? பல ஆண்டுகளைக் கடந்து ஈராயிரத்து இருபதில் காலடி வைத்துள்ள நாம் இதுவரை செய்த சாதனைகள் என்ன, சேவைகள் என்ன, பெற்ற கல்வி எவ்வளவு, கொடுத்த பயன்கள் எவ்வளவு என்று சிந்திப்பதும் அவற்றுக்கான பதில் எதிர்மறையாக இருந்தால், அதை நேர்மறையாக ஆக்கிக்கொள்வதற்கான வழியைத் தேடுவதும்தான் நாம் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுக்கும்.

ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல் நாம் மரணித்த பிறகும் நம்மைப் பற்றிப் பேசும் சில அடையாளங்களையாவது இவ்வுலகில் விட்டுச் செல்ல வேண்டும். அதுதான் நம் மறுமைக்கான வெற்றிக்கு வழியாகும். பெரும்பாலோரின் காலமும் நேரமும் வீணாகவே கழிந்துகொண்டிருக்கின்றன. உலக ஆசைகளும் தேவைகளும் அல்லாஹ்வின் சிந்தனையைவிட்டு அப்புறப்படுத்திவிட்டன. எதற்காகப் படைக்கப்பட்டோமோ அந்த நோக்கத்தை மறந்து, உலக வாழ்வே நிலையானதைப் போன்ற எண்ணத்தில் அதற்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் தம் பெற்றோரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருப்பதைப்போல் நாம் அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்தால் நிம்மதியாக வாழலாம். ஆனால் நாம் அல்லாஹ்விடம் நம்மை முழுமையாக ஒப்படைக்காமல் நம் தொழிலையும் கடையையும் வியாபாரத்தையுமே நம்பி வாழ்கிறோம். அதனால்தான் நாம் ஒவ்வொரு நாளும் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.


புத்தாண்டில் காலடி வைத்துள்ள நாம் ஒவ்வொருவரும் புதிய கோணத்தில் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இத்துணைக் காலம் எவ்வாறு கழிந்ததோ, போகட்டும். இனிவரும் காலத்தில், நம்முடைய ஒவ்வொரு நிமிடமும் அல்லாஹ்வுக்கு உவப்பான தருணமாகக் கழிய வழிவகை என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்போம்.

அதாவது நம்முள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியில் அல்லது பொறுப்பில் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுகிறோமா என்று சுயமதிப்பீடு செய்வதுதான் நம்முடைய அடுத்த கட்ட இலக்கை நோக்கி நாம் துடிப்போடும் ஆர்வத்தோடும் செல்ல ஏதுவாக அமையும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், சென்ற ஆண்டில் சாதித்தது என்ன, இந்த ஆண்டில் சாதிக்கப்போவது என்ன என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்.

குர்ஆனை மனனம் செய்யும் ஒரு ஹாஃபிழ், சென்ற ஆண்டில் எத்தனை ஜுஸ்வுகள் மனனம் செய்துள்ளார் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்து, அதைவிட இந்த ஆண்டில் கூடுதலாக மனனம் செய்ய வேண்டும் என ஓர் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி வேகமாகச் செல்ல முடியும். இலக்கே இல்லாமல் மனனம் செய்துகொண்டிருந்தால் ஆண்டுகள் கழிந்துகொண்டே இருக்குமே தவிர அதை விரைவாக முடிக்க முடியாது.

ஓர் ஆசிரியர், சென்ற ஆண்டு வரை தம்மிடம் கற்ற மாணவர்களுள் குறிப்பிடத்தக்க உயர் பதவிகளில் இருப்போர் எத்தனை பேர் என்பதைச் சிந்திக்க வேண்டும். இவ்வாண்டு முதல் இன்னும் சிறப்பான மாணவர்களை உருவாக்க உறுதிகொள்ள வேண்டும். தம்மிடம் கற்று, உயர் பதவிகளில் உள்ள மாணவர்களைத் தற்போதைய மாணவர்களிடம் எடுத்துக்கூறி, இதுபோன்ற உயரிய இடத்தை நீங்கள் பெற வேண்டுமென்ற உந்துதலையும் உத்வேகத்தையும் அவர்களின் நெஞ்சில் பதிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் உயர் பதவியை அடைகின்ற திறமைமிகு மாணவர்களை இன்னும் அதிகமாக உருவாக்குவேன்என்று உறுதியேற்க வேண்டும். அந்த உறுதிதான் இனிவரும் காலத்தில் அவர் உத்வேகத்தோடு செயல்படத் தூண்டும்.
ஒரு விவசாயி, தான் உற்பத்தி செய்த விளைபொருள்களின் அளவைக் கணக்கிட்டுப் பார்த்து, இதுவரை செய்த மகசூலைவிட, இவ்வாண்டு இன்னும் அதிகமான மகசூலைப் பெற வேண்டுமென்ற உந்துதலோடு செயல்பட உறுதியேற்க வேண்டும். மற்ற விவசாயிகளைவிட நான் மேம்பட்ட விவசாயியாக உயர்வேன் என்று சபதம் ஏற்க வேண்டும். அதுதான் அவரைப் புத்தாண்டில் புதிய இலக்கை நோக்கிப் பயணிக்கத் தூண்டும்.

ஒரு மனைவி, “என் கணவனின் அன்பைப் பெற நான் இதுவரை என்ன செய்தேன், அவருடைய அன்பைப் பெறும் வகையில் நான் நடந்துகொண்டேனாஎன்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தன் கணவருக்கான பணிவிடைகளில் குறைவு இருந்தால், அதைச் சரிசெய்துகொண்டு, அவரின் அன்பைப் பெற முயல வேண்டும். ஏனெனில் ஒரு பெண்ணைப் பொறுத்த வரை, “கணவனின் திருப்தியில்தான் அவள் சொர்க்கம் செல்ல முடியும்என்பதை நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே கணவனின் திருப்தியைப் பெறத் தன்னால் ஆன முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதுதான் அவள் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான அடையாளமாகும்.

கணவனாக உள்ள ஒருவன், தன் மனைவிக்காக அல்லும் பகலும் உழைத்தாலும், அவளை நல்ல முறையில் கவனித்துக்கொண்டாலும் அவளுடைய விருப்பம் என்ன, அவள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்று தெரிந்துகொண்டு அதை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவளிடம் மனம் விட்டுப் பேச நேரம் ஒதுக்க வேண்டும். கடந்த காலங்களைவிட இனிவரும் காலத்தில் இன்னும் அன்பாக அவளிடம் நடந்துகொள்வேன் என்று உறுதியேற்க வேண்டும். அதுதான் தம்பதியர் இருவரின் வாழ்க்கையை அன்புமயமாக்க உதவும்.

ஒரு மஹல்லா பள்ளிவாசல் பொறுப்பிலுள்ளோர் தம் மஹல்லா மக்களின் முன்னேற்றத்திற்காக இதுவரை நான் என்ன செய்தேன் என்று சிந்திக்க வேண்டும். இது வரை நான் செய்யாதது என்ன என்று யோசிக்க வேண்டும். என் பொறுப்பின்கீழ் உள்ளோர் அனைவரும் நல்லவிதமாக வாழ்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். பின்னர், “என் மஹல்லா மக்கள் எல்லா வசதிகளையும் பெற என்னால் இயன்ற வரை பாடுபடுவேன்என்று உறுதியேற்க வேண்டும். ஒரு மஹல்லாவிற்குத் தேவையான பைத்துல்மால், மக்தப் மத்ரஸா, பெண்கள் மத்ரஸா, நூலகம், மஹல்லா மக்கள் கணக்கெடுப்பு, இளைஞர் மன்றம், சிறுவர் மன்றம் முதலானவற்றில் கவனம் செலுத்தி, மஹல்லாவின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட உறுதியேற்க வேண்டும். அதை நோக்கி விரைந்து செல்ல வேண்டும். தம்மோடு பிறரையும் சேர்த்துக்கொண்டு செயலாற்ற வேண்டும். அதுதான் இனிவரும் நாள்களில் சிறப்பாகவும் பொறுப்புணர்வோடும் செயல்பட ஒரு தூண்டுதலாக அமையும்.

ஓர் இமாமைப் பொறுத்த வரை, “என் கல்வியால் இச்சமுதாய மக்களுக்கு நான் இதுவரை என்னென்ன சேவைகள் செய்தேன்; என் கல்வியால் இம்மக்கள் என்ன பயன் பெற்றார்கள்என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் இதைவிடச் சிறப்பாக என் கல்வியால் இம்மக்கள் பயன்பெறும் வகையில் நான் செயல்படுவேன் என்று உறுதியேற்க வேண்டும். அதுதான் அவரைப் புத்துணர்வோடு செயல்படத் தூண்டும். மக்தப் மத்ரஸாவைத் திறம்பட நடத்துதல், இதுவரை அரபியில் குர்ஆனை வாசிக்கத் தெரியாத முதியவர்களுக்கு அதனைக் கற்பித்தல், சமுதாய மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தம் கல்வியை வழங்குதல், பெண்கள் பயான் ஏற்பாடு செய்தல் முதலானவை முக்கியமானவை. இன்னும் சீராக இச்சமுதாய மக்களுக்கு வழிகாட்டுவேன்; இச்சமுதாய மக்களுக்கு மிகப் பயனுள்ளவராக இருப்பேன்; சடங்கு சம்பிரதாயங்களில் மக்களை மூழ்கடிக்காமல் அறிவுப்பூர்வமாக மக்களைச் சிந்திக்கத் தூண்டுவேன்; அதற்கேற்ப என் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வேன்; ஏகத்துவச் சிந்தனையைப் பெருக்கும்விதத்திலான செயல்களைச் செய்யத் தூண்டுவேன்; அவர்களின் இறைநம்பிக்கை இங்குமங்கும் சிதறும்வண்ணம் செயல்பட மாட்டேன்; அத்தகைய பாதையை நோக்கி வழிகாட்ட மாட்டேன்என்று உறுதிகொள்ள வேண்டும். அத்தகைய உறுதிமொழிதான் அவர் தம் சமுதாய மக்களுக்குச் சீரான பாதையைக் காட்டவும் அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாகத் திகழவும் உத்வேகத்தைக் கொடுக்கும்.


ஒரு வியாபாரி இதுவரை சம்பாதித்துச் சேர்த்த பொருட்செல்வத்தையும் அதனை அவர் எவ்வாறு, எவ்வழியில் ஈட்டினார் என்பதையும் மீளாய்வு செய்துகொள்ள வேண்டும். நல்வழியில் சேர்த்தோமா, அல்வழியில் சேர்த்தோமாஎன்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அல்வழியாக இருந்தால், அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதோடு தர்மமும் செய்ய வேண்டும். நல்வழியாக இருந்தால், தொடர்ந்து அவ்வழியே செல்ல உறுதியேற்க வேண்டும். ஏனெனில் நீ எவ்வாறு சம்பாதித்தாய்? எவ்வாறு செலவழித்தாய்?” முதலான வினாக்களுக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும். எனவே சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் எவ்வழியில் சம்பாதித்தோம் என்பதை ஊன்றிப் பார்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் முறையான வியாபாரத்தில் ஈடுபடுவேன்; தடைசெய்யப்பட்ட (ஹராமான) வழியில் நான் ஒருபோதும் பொருளீட்ட மாட்டேன்; யாரையும் ஏமாற்ற மாட்டேன்; வட்டி வாங்க மாட்டேன்; அளவு-நிறுவையில் மோசடி செய்ய மாட்டேன்என்று சபதமேற்க வேண்டும்.

நம்பகத்தன்மையுள்ள வாய்மையான வியாபாரி நபிமார்கள், வாய்மையாளர்கள், இறைப்பாதையில் உயிர்த்தியாகம் செய்தோர் ஆகியோருடன் (சொர்க்கத்தில்) இருப்பார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ: 1130) அத்தகைய வாய்மையாளர்களுடன் சொர்க்கத்தில் இடம்பிடிக்க வேண்டுமெனில் செய்யும் வியாபாரமும் தொழிலும் நேர்மையானதாக இருக்க வேண்டும். அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி, பொறுப்பிலுள்ள ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பில் நேர்மையாக நடந்துகொண்டோமாஎன்பதை மீளாய்வு செய்து, இதைவிடச் சிறப்பாகவும் பொறுப்புணர்வோடும் நடந்துகொள்ள உறுதியேற்பதுதான் புத்தாண்டின் தொடக்கத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கியப் பணியாகும். எடுத்துக்கொண்ட உறுதிமொழியிலும் சபதத்திலும் உறுதியாக இருந்து அதனை நிறைவேற்ற முழுமுயற்சி செய்ய வேண்டும். அதுவே இனிவரும் காலத்தில் நாம் ஒவ்வொருவரும் புத்துணர்வோடும் புதுத்தெம்போடும் பணியாற்ற வழிவகுக்கும். கடந்து சென்றுவிட்ட காலங்களை எண்ணிக் கவலைப்படாமல் நிகழ்காலத்தில் எத்தகைய உத்வேகத்தோடு பணியாற்ற வேண்டும் என்று சிந்திப்பதே காலம் உணர்த்தும் பாடமாகும். ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டிருந்தாலும் அடுத்தடுத்த நாள்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது நம் கையில் உள்ளது. காலம் கரைந்துவிடும்; அத்தோடு நம் ஆயுளும் அழிந்துவிடும். ஆனால் அக்காலத்தைப் பயன்படுத்தி நாம் செய்த நல்லறங்களே நம்மோடு இறுதி வரை வரும். அதற்காக உழைப்போம்; வெற்றிபெறுவோம்.
===============================









கருத்துகள் இல்லை: