சனி, 14 டிசம்பர், 2019

மக்களின் அறியாமை எங்களின் மூலதனம்!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மக்களின் அறியாமையையும் பலவீனத்தையும் சிலர் தம்முடைய மூலதனமாக்கிக்கொள்கின்றனர்.
அத்தகையோரைச் சுற்றியே மக்கள் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்த வலைக்குள் சிக்கியுள்ளனர். அதை விட்டு அவர்களால் வெளியே வர இயலாமல் தடுப்பது அவர்களின் அச்சமே. அவர்கள் தெளிவாகச் சிந்தித்து, துணிவோடு முடிவெடுத்து உறுதியாக வெளியேறினால் அவர்களுக்கு விடுதலை உண்டு. அதுவரை அந்த ஏமாற்றுக்காரர்களின் வலையினுள் சிக்குண்டு கிடக்க வேண்டியதுதான்.


அரசியல், ஆன்மிகம், மருத்துவம், நம்பிக்கைகள் முதலானவற்றில் மக்கள் பெரும் அறியாமையில் உள்ளனர். அவர்களின் அறியாமை அல்லது பலவீனம்-அதனைப் பயன்படுத்தியே அத்துறை சார்ந்த சிலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். மக்களின் அறியாமைதான் அவர்களின் மூலதனம். குறிப்பாக ஆன்மிக நம்பிக்கைகள் சார்ந்து பல்வேறு வகைகளில் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். அந்த வலையிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தாலும் அவர்களின் அச்சம் அவர்களைத் தடுத்துவிடும். இதை இவ்வாறு செய்யவில்லையென்றால் தெய்வக் குற்றம் ஆகிவிடுமோ என்ற அச்சம் அவர்களின் மனங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. இந்த வருடம் இதை ஓதாமல் விட்டதால்தான் நம் வியாபாரத்தில் அபிவிருத்தி இல்லாமல் போய்விட்டது என்ற மூடநம்பிக்கை மூளையில் பதிந்துபோய்விட்டது.

பாமர மக்களுக்கு அரசியல்வாதிகளின் தில்லுமுல்லுகள் தெரியாது; அவர்களின் சொத்து விவரங்கள் தெரியாது; அவர்களின் குணநலன்களும் தெரியாது; அத்தோடு அவர்களுக்கு அரசியலும் தெரியாது. அந்த அறியாமைதான் அரசியல்வாதிகளின் மூலதனம். ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு, சுருட்ட வேண்டிய அளவிற்குச் சுருட்டிக்கொண்டு, தேர்தலின்போது பணத்தை எறிந்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையாலும் திமிராலும் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். படைத்தவன் தண்டிப்பான் என்ற அச்சமோ மனசாட்சிக்குப் பயப்பட வேண்டுமே என்ற உணர்வோ அற்றவர்களாக உலா வருகின்றார்கள். பொன்னையும் பொருளையும் கோடிக்கணக்கில் சேர்த்தவர்களெல்லாம் மரணித்தபின் சவக்கோடியோடு மட்டுமே சென்றார்களே தவிர ஒரு குண்டூசி அளவிற்குக்கூட எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை அறிய மறுக்கின்றார்கள்.

மருத்துவத் துறையில் மக்கள் ஏமாற்றப்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது. மருத்துவச் சொற்களெல்லாம் மக்களின் காதுகளுக்குப் புதியவை. அந்த வார்த்தைகளைக் கேட்டவுடனேயே அவர்கள் பயந்துவிடுவார்கள். "டாக்டர், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; உயிரைக் காப்பாத்திடுங்க'' என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறுவார்கள்; அன்பின் மிகுதியால் பேசுவார்கள். அதுதான் நல்வாய்ப்பெனக் கருதும் மருத்துவர்கள் சிலர் அறியா மக்களிடமிருந்து பணத்தைக் கறக்க முயல்கின்றார்கள்.

ஸ்கேன் எடுத்து வா, எக்ஸ்ரே எடுத்து வா, பிளட் டெஸ்ட் எடுத்து வா என்று ஆர்டர் மேல் ஆர்டர் போட்டு அவர்களை அலைய விடுவதும், பரபரப்பாகச் செயல்படுவதைப்போல் காட்டுவதும் அவர்கள் அறியாத வார்த்தைகளைக் கூறி அவர்களை அச்சுறுத்துவதும் இறுதியில் பணத்தையெல்லாம் பிடுங்கிக்கொண்டு பிணத்தை ஒப்படைப்பதும் ஆங்காங்கே நடைபெறுகின்ற அவலம். இந்த அவலத்தை அறியாத மக்கள் இன்னும் இருக்கின்றார்கள். அவர்கள் சுயமாகச் சிந்தித்துத் தீர்க்கமான முடிவெடுக்கின்ற வரை இந்தச் சதிப் பின்னலிலிருந்து வெளியே வர முடியாது.

ஆப்ரேஷன் என்றால், அவரின் உறவினரை அலைய விடுவது, ஐந்து யூனிட் இரத்தம் கொடுத்தால்தான் ஆப்ரேஷன் செய்ய முடியும் என நிர்ப்பந்தப்படுத்துவது, பணத்தை முன்கூட்டியே கட்டினால்தான் ஆப்ரேஷன் செய்ய முடியும் எனப் பீதியைக் கிளப்புவது எல்லாம் மருத்துவத் துறையில் மக்கள் சந்திக்கும் அவலங்கள். மக்கள் எவ்வளவுதான் குருதிக்கொடை செய்தாலும் போதவில்லை என்பதுதான் பதில். குருதிக்கொடையை வலியுறுத்தி மருத்துவர்கள் எங்காவது குருதிக்கொடை கொடுக்க முன்வந்துள்ளார்களா? மருத்துவர்கள் ஒருங்கிணைந்து இத்தகைய முகாம்களை நடத்தியுள்ளார்களா? ஏன் அவர்கள் செய்வதில்லை?
இன்று மருத்துவத் துறையின் பெருவளர்ச்சியால் உறுப்பு தானம் செய்யப்படுகிறது. மக்கள் தம் உடலுறுப்புகளைத் தானம் செய்ய முன்வருகின்றார்கள். தம் உற்றார், உறவினரின் உறுப்புகளையும் தானம் செய்கிறார்கள். இருப்பினும் மருத்துவத்துறையில் இது ஒரு வியாபாரமாகவே நடந்து வருகிறது. மக்களிடமிருந்து இலவசமாகப் பெற்று, பிறரிடம் பணத்திற்கு விற்கப்படுகிறது. இப்படி மருத்துவத் துறையில் ஏராளமான ஏமாற்றங்களும் மோசடிகளும் நிறைந்துள்ளன.

ஆன்மிக ரீதியாக மக்கள் பெருவாரியாக ஏமாற்றப்படுகின்றார்கள். ஆன்மிக வழிகாட்டிகள் என்று கூறிக்கொள்வோர் சிலர் மக்களின் அறியாமையைத் தமது மூலதனமாக்கிக்கொள்கின்றார்கள். மக்களின் அறியாமையும் அச்சமும் அவர்களின் மூலதனமாகும். ஏக இறைநம்பிக்கையை முழுமையாக மக்கள் மனங்களில் ஊட்ட வேண்டிய மார்க்க அறிஞர்கள் சிலர் தவறான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் சொல்லி, அவர்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்கின்றார்கள். இஸ்லாமிய மார்க்கம் அங்கீகரிக்காத செயல்பாடுகளைப் புதிது புதிதாக உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்தும் பழக்கத்தை விதைத்துள்ளார்கள். அவற்றைச் செய்யவில்லையெனில் அவன் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைச் சார்ந்தவன் அல்லன் என்ற பொய்யான தோற்றத்தை மக்கள் மனங்களில் பதியச் செய்கின்றார்கள். அவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்கும் மார்க்க அறிஞர்களையெல்லாம் "அவர்கள் இன்ன பிரிவைச் சார்ந்தவர்கள்' என்று முத்திரை குத்திவிடுகின்றார்கள். ஆக இஸ்லாமியக் கடமைகளை நோக்கி அழைக்க வேண்டியவர்கள் சடங்குகள், சம்பிரதாயங்களை நோக்கி அழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

சிலர் மக்களின் நம்பிக்கையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். தர்ஹாவிற்கு ஸியாரத்திற்காக வருவோரை இலக்காக வைத்து, வியாபாரம் செய்கின்றார்கள். கயிறுகளில் முடிச்சுகளைப் போட்டு அமோகமாக விற்பனை செய்கின்றார்கள். கருப்பு, சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் கயிறுகள் விற்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு "பவர்' என்றும் ஒவ்வொன்றும் ஒரு விலை என்றும் மக்களின் நம்பிக்கையைப் பணமாக்கிக்கொள்கின்றார்கள். அத்தோடு தகடு, தட்டு, தாயத்து உள்ளிட்டவை மூலம் மக்களின் நம்பிக்கையை ஈர்த்து, பணமாக்கிவிடுகின்றார்கள். இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சையை தர்ஹாக்களுக்குச் செய்யவைக்கின்றார்கள். "பாவாவுக்கு நேர்ந்துகொண்டால் எல்லாம் சரியாயிடும்'' என்ற தவறான நம்பிக்கையை விதைக்கின்றார்கள். பிற மதத்தைச் சார்ந்த மக்கள் தம் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று தலைமுடி காணிக்கை செலுத்துவதைப் போன்று, முஸ்லிம்கள் தமக்குப் பிடித்தமான தர்ஹாவிற்குச் சென்று அங்கே தம் குழந்தைகளுக்குத் தலைமுடி மழித்துக் கொள்கின்றார்கள். இன்னும் பற்பல நேர்ச்சைகளை அங்கே நிறைவேற்றுகின்றார்கள். அறியா மக்களின் இச்செயல்களையெல்லாம் ஆதரிக்குமுகமாக மார்க்க அறிஞர்கள் சிலர், "எல்லாம் கூடும்' என்ற தோரணையில் பதிலளிக்கின்றார்கள்.

மரத்தடியில் அமர்ந்துகொண்டு மக்களின் எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஆரூடக்காரனுக்குத் தனது வாழ்க்கை குறித்தும் எதிர்காலம் குறித்தும் ஏதும் தெரியாது. தன் வாழ்க்கையை யூகித்து அறிய முடியாதவன் பிற மக்களின் வாழ்க்கையை எப்படிக் கூற முடியும்? யூகமாக எதையெதையே அவன் சொல்ல, அதை நம்பி வாழுகின்றவர்களுக்கு, அவன் சொன்னது அப்படியே நடப்பதைப்போன்ற ஒரு மாயத்தோற்றம் மனதில் தோன்றும். அதுதான் அந்த ஆரூடக்காரனின் வெற்றி. "யார் ஓர் ஆரூடக்காரனிடம் வந்து, அவன் சொல்வதை நம்பினாரோ அவருடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்னது அஹ்மத்: 16041)

வியாபாரிகள் மக்களின் அறியாமையையும் பலவீனத்தையும் தமக்கான மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். கலப்படம், பதுக்கல், விலையேற்றம், எடை குறைப்பு உள்ளிட்ட என்னென்ன தில்லுமுல்லுகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்கின்றார்கள். அறியா மக்கள் அவர்களின் பேச்சை நம்பி அப்படியே வாங்கி வருகின்றார்கள். அதில் மிகப்பெரும் ஏமாற்றம் தங்க வியாபாரிகள் செய்வதுதான். ஒரு பவுன் தங்க நகை வாங்கினால், செய்கூலி, சேதாரம் என்று கூறி, செம்பு கலந்த தங்கத்தை மக்கள் தலையில் கட்டிவிடுகின்றார்கள். அதாவது ஆறரை கிராம் தங்கமும் ஒன்றரை கிராம் செம்பும் சேர்ந்த தங்க நகையைக் கொடுத்துவிட்டு, ஒரு பவுன் (எட்டு கிராம்) தங்கத்திற்கான பணத்தைப் பெற்றுக்கொள்கின்றார்கள். ஒரு பவுனுக்கு ஒன்றரை கிராம் என்றால் ஒரு நாளைக்கு எத்தனை பவுன் விற்பனை, எவ்வளவு இலாபம், மக்கள் எவ்வளவு நட்டமடைகின்றார்கள் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இப்படித்தான் அவர்கள் ஆண்டுதோறும் அபரிமிதமாக வளர்ச்சியடைகின்றார்கள்.

ஆக இப்படி எங்கு நோக்கினாலும் மக்களின் அறியாமையையும் பலவீனத்தையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வோர்தாம் மிகுதியாகக் காணப்படுகின்றார்கள். மக்களின் அறியாமையை நீக்கி, அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டி, அவர்களின் பொருளாதாரத்தையும் நம்பிக்கையையும் காத்து, அவர்களின் அச்சத்தை நீக்கும் பெருமனதுக்காரர்கள் மிகச் சிலரே தென்படுகின்றார்கள். மக்கள் விழிப்போடு இல்லையென்றால் அவர்களின் பொருளாதாரமும் சுரண்டப்படும்; அவர்களின் மத நம்பிக்கையும் சிதைந்துபோகும்.

எனவே எல்லா ஆற்றலும் நிறைந்தவன் அல்லாஹ்தான் என்ற நம்பிக்கையை மனதில் பதிய வைத்துக்கொண்டு, மூடநம்பிக்கைகளையும் அச்சத்தையும் முதுகுக்குப்பின் தூக்கியெறிந்துவிட்டு, துணிவோடு காலடி வைத்தால் மனிதர்களின் ஏமாற்றங்களிலிருந்து தவிர்ந்துகொள்ளலாம்.
=========================================






கருத்துகள் இல்லை: