-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
------------------------------------------------------------------------------------------------------
சாம்பல் நெருப்பை மறைத்துக்கொண்டிருப்பதைப்போல் பொய்யானது உண்மையை மறைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறது. உணவில் கலப்படம் செய்வதைப்போல் சிலர் உன்னதமான மார்க்கத்திலும் கலப்படம் செய்துள்ளனர். அந்தக் கலப்படத்தையே உண்மை மார்க்கமென மக்கள் பலர் நம்பிக்கொண்டுள்ளனர். உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்திப் பார்ப்பது ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரின் கடமையாகும். குறிப்பாக குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் சிந்தித்து, உண்மை இதுதான் என மக்களுக்குத் தெளிவுபடுத்துவது ஆலிம்களின் பொறுப்பாகும். அதில் மக்களின் வெறுப்பு, பழிப்பு, கோபம் ஆகியவற்றைப் பொருட்படுத்தக்கூடாது. அல்லாஹ்வின் திருப்தியையே ஆலிம்கள் தம் இலக்காகக் கொள்ள வேண்டும்.
சாம்பல் நெருப்பை மறைத்துக்கொண்டிருப்பதைப்போல் பொய்யானது உண்மையை மறைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறது. உணவில் கலப்படம் செய்வதைப்போல் சிலர் உன்னதமான மார்க்கத்திலும் கலப்படம் செய்துள்ளனர். அந்தக் கலப்படத்தையே உண்மை மார்க்கமென மக்கள் பலர் நம்பிக்கொண்டுள்ளனர். உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்திப் பார்ப்பது ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரின் கடமையாகும். குறிப்பாக குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் சிந்தித்து, உண்மை இதுதான் என மக்களுக்குத் தெளிவுபடுத்துவது ஆலிம்களின் பொறுப்பாகும். அதில் மக்களின் வெறுப்பு, பழிப்பு, கோபம் ஆகியவற்றைப் பொருட்படுத்தக்கூடாது. அல்லாஹ்வின் திருப்தியையே ஆலிம்கள் தம் இலக்காகக் கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை அல்லாஹ்வும் அவனது தூதரும் வரையறுத்துத் தந்தவையே ஏற்கப்பட்டதாகும். அதன்பின் கலீஃபாக்கள், இமாம்கள் யாரும் மார்க்கத்தில் இல்லாத ஒன்றைப் புதிதாகச் சேர்க்கவில்லை. மாறாக அவர்களெல்லாம் மார்க்கத்தைச் செவ்வைப்படுத்தி ஒழுங்குபடுத்தினார்கள். நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு இஸ்லாமியச் சட்டங்களை வகுத்துக்கொடுத்தார்கள். குர்ஆன், ஹதீஸ்களோடு தம் பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு பக்குவமாகச் சட்டங்களை அமைத்தார்கள்.
அந்த அடிப்படையில் உலக அளவில் ஃபர்ள், வாஜிப், சுன்னத், ஹலால், ஹராம் முதலானவற்றில் எந்த வித்தியாசமும் இருக்காது. உலக மக்கள் யாரும் அவற்றைச் சிதைத்துவிடாமல் அல்லாஹ் பாதுகாத்துவிட்டான். ஆனால் இது கூடும், இதைச் செய்யலாம், இது ஆகுமானது என்ற அடிப்படையில்தான் பல்வேறு சடங்குகளும் சம்பிரதாயங்களும் மார்க்கத்தினுள் நுழைந்துகொண்டன. காலப்போக்கில் ஃபர்ள், சுன்னத்துகளுக்கு உள்ள முக்கியத்துவம் குறைந்து சடங்கு, சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். அவற்றையே மார்க்கத்தின் அடிப்படையாகவும் அடிப்படைக்கொள்கையாகவும் எண்ணத் தொடங்கிவிட்டனர்.
இஸ்லாமிய மார்க்கத்தினுள் புகுந்துகொண்ட சடங்கு, சம்பிரதாயங்களான பிற்சேர்க்கைகள் குறித்து மக்கள் மத்தியில் ஆலிம்கள் பிரச்சாரம் செய்து தெளிவுபடுத்திக்கொண்டிருக்கின்றனர். இன்றைய காலத்தில் ஆலிம்கள் பலர் இப்பணியைச் செவ்வனே செய்துவருகின்றனர். மார்க்கத்தில் நுழைந்துகொண்டவை எவை என்பது குறித்த தெளிவு இல்லாத மார்க்க அறிஞர்கள் அறியாமையிலும் மடைமையிலும் இருந்துவருகின்றார்கள்; எதிர்ப்பிரச்சாரம் செய்கின்றார்கள்; அறியாமையிலேயே உழன்றுகொண்டிருக்கின்றார்கள்.
(இறைத்)தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்றதை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக. (அவ்வாறு) நீர் செய்யவில்லையாயின் அவனது தூதுச் செய்தியை எடுத்துரைத்தவர் ஆகமாட்டீர். அல்லாஹ் உம்மை மக்களிடமிருந்து காப்பாற்றுவான். (5: 67)
இந்த இறைவசனத்தின் அடிப்படையில், அன்று முதல் இன்று வரை நபிமார்களின் வாரிசுகளான மார்க்க அறிஞர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தே வருகின்றனர்; மக்களை நெறிப்படுத்தியே வருகின்றனர்; அவர்கள் வழிதவறும்போது நேர்வழி எதுவெனக் கற்றுக்கொடுக்கின்றனர். அது இன்றும் தொடர்கிறது.
ஆனால் சிலர் இந்த இறைவசனத்தின் பொருளையும் தமது பொறுப்பையும் மறந்துவிட்டு, மக்களைத் தவறான வழியிலும் அறியாமையை நோக்கியும் அழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அறியா மக்களும் அவர்களின் வழியில் சென்றுகொண்டிருக்கின்றார்கள். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு உண்மையை உரக்கச் சொல்லும் ஒவ்வோர் ஆலிமுக்கும் உண்டு. மக்களைத் தவறான வழியில் செலுத்தி, அறியாமையில் மூழ்கச் செய்து ஆதாயம் தேடும் சிலர் இருக்கவே செய்கின்றனர். அவர்களின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டியது உண்மையான மார்க்க அறிஞர்களின் கடமையாகும். எதிர்ப்பிரச்சாரம் செய்யும்போது மக்களோ தவறான வழிநடத்தும் ஆலிம்கள் சிலரோ எதிர்க்கத்தான் செய்வார்கள். அவர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி உண்மையை உரைப்பதிலிருந்து பின்வாங்கக்கூடாது.
ஏனெனில் மேற்கண்ட இறைவசனத்தில், “அல்லாஹ் உம்மை மக்களிடமிருந்து காப்பாற்றுவான்” என்று அல்லாஹ் கூறியுள்ளான். மக்களிடமிருந்தோ தவறான வழிநடத்தும் ஆலிம்களிடமிருந்தோ எதிர்ப்பு வரத்தான் செய்யும். அந்த எதிர்ப்பிலிருந்தும் அச்சத்திலிருந்தும் அல்லாஹ் நம்மைக் காப்பான் என்ற மனஉறுதியும் துணிவும் வேண்டும். அப்போதுதான் துணிவோடு உண்மையைச் சொல்ல முடியும்.
மக்கள் மத்தியில் ஏதேனும் தீமையைக் கண்டால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அது அந்தந்தப் பொறுப்புடையோரின் கடமை. அது மார்க்கம் சார்ந்த தீமையாக இருந்தால், மார்க்க அறிஞர்கள் அதைத் தடுக்க வேண்டும். சமூகம் சார்ந்த தீமையாக இருந்தால் சமுதாயப் பொறுப்பாளர்கள் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசு சார்ந்த தீமையாக இருந்தால் அரசு அதிகாரிகள் அதைத் தடுக்க வேண்டும். ஆக ஒவ்வொரு துறையிலும் அதனதன் துறைசார்ந்த பொறுப்பாளர்களும் அதிகாரிகளும் அத்தீமையைத் தடுத்துவிட்டால் பிற மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். மாறாக அந்தத் தீமையைக் கண்டு, அமைதியாக இருந்துவிட்டால் அது நம்மையே ஒரு நாள் தாக்கும்; நமக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.
அது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாவது: “உங்களுள் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதை அவர் தமது கையால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்); அதுவும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.” (நூல்: முஸ்லிம்: 78)
இறைநம்பிக்கையின் ஆழமும் அழுத்தமும் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கின்றதோ அந்த அளவிற்குத் தீமையைத் தடுப்பதிலும் மக்கள் மத்தியில் பரவியிருக்கின்ற தவறான நம்பிக்கைகளைக் களைவதிலும் வேகமும் துடிப்பும் இருக்கும். இறைநம்பிக்கையில் பலவீனம் இருந்தால் அந்தத் துடிப்பும் வேகமும் இருக்காது. அதனால் தீமைகளைக் கண்டும் காணாததுபோல்தான் செல்ல நேரிடும்.
உண்மையை உரக்கச் சொல்லும்போது கல்லடி, சொல்லடி எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். அதனால்தான், “கசப்பாக இருப்பினும் உண்மையை உரைப்பீராக” என்று அபூதர் (ரளி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இன்னும் கொஞ்சம் கூறுவீராக” என்று கேட்டபோது, “அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவரின் பழிப்பைக் கண்டு அஞ்சாதீர்” என்று கூறினார்கள். உண்மையை எடுத்துச் சொல்லும்போது அதைக் கேட்பவருக்கு அது கசக்கும். அதனால் அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். அந்தக் கசப்பை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். உண்மையாகச் செயல்பட்டால், அல்லாஹ்வின் சட்டத்தில் சற்றும் பிசகாது நடந்துகொண்டால் மக்கள் சிலர் பழிப்பார்கள்; கேலிசெய்வார்கள். மக்களின் பழிப்பைக் கண்டு மனம் சுருங்கிப்போய்விடக்கூடாது; துவண்டுவிடக் கூடாது.
ஒவ்வொருவரும் தத்தம் வீட்டில் மார்க்கத்தின் உண்மைச் செய்திகளை எடுத்துக்கூறி, சத்தியத்தை நிலைநாட்ட வேண்டும். வீட்டிலும் உறவினர்களிடமும் பரவியுள்ள தீமைகளையும் மூடப்பழக்கங்களையும் களைய முற்பட வேண்டும். அவர்களைத் திருத்த முயன்று, அதில் ஒருவர் வெற்றிபெற்றுவிட்டால் பிறகு அவர் சமூகத்தில் பரவியுள்ள தீமைகளையும் மூடப்பழக்கங்களையும் களைவது மிக எளிதாகிவிடும். ஏனெனில் ஒருவர் தம் வீட்டிலுள்ளோரைத் திருத்த முயல்வதுதான் அவரது முதற்கடமையாகும்.
லுக்மான் (அலை) அவர்கள் தம் குடும்பத்திலிருந்துதான் சீர்திருத்தத்தைத் தொடங்கியிருக்கின்றார்கள். அவர்கள் தம் அருமைப் புதல்வருக்கு அறிவுரை வழங்கியபோது, “என்னருமை மகனே! தொழுகையைக் கடைப்பிடி; நன்மை செய்யுமாறு ஏவு; தீமையிலிருந்து தடு; (அதனால்) உனக்கு நேருகின்ற (துன்பத்)தைச் சகித்துக்கொள்; நிச்சயமாக இதுவே தீரச் செயலாகும்” (31: 17) என்று கூறினார்கள்.
“நன்மை செய்யுமாறு ஏவு; தீமையிலிருந்து தடு” என்ற அறிவுரைக்குப்பின், “உனக்கு நேருகின்ற (துன்பத்)தைச் சகித்துக்கொள்” என்ற அறிவுரை ஏன்? நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்போது தானாக எதிர்ப்பு வரும். வட்டி, விபச்சாரம், சூது, மது, போதை முதலான தீமைகளைக் கண்டிக்கின்றபோது, அதில் ஈடுபட்டுள்ளோர் எதிர்க்கவே செய்வார்கள்; கடுஞ்சொற்களால் வசைபாடுவார்கள்; துன்புறுத்தவும் செய்வார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொண்டுதான் தீமையைத் தடுக்க வேண்டும். கடைசியாக, “இதுவே தீரச் செயலாகும்” என்று நிறைவு பெறுகிறது. மனத்துணிவும் மனத்திட்பமும் உள்ளோர்தாம் இத்தகைய செயலில் ஈடுபட முடியும். மனத்தில் துணிவு இல்லாதவர்கள் தீமையைத் தடுக்க முடியாது. ஏனெனில் மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும்போது அடங்கிப்போய் விடுவார்கள்.
உண்மையைச் சொல்கின்றபோதும் தீமையைத் தடுக்கின்றபோதும் சிலர் பாதிக்கப்பட்டாலும் அதனால் பலர் பயன்பெறுவார்கள். நாம் செய்கின்ற இச்செயலால் மக்கள் பயன்பெறுகிறார்கள் என்ற உந்துதலும் உத்வேகமும் என்றும் குன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் தொடர்ந்து நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க முடியும். சிலர் தீமையைக் கண்டும் மக்களின் அச்சத்தால், அல்லது மக்கள் சினந்துகொள்வார்களே என்ற காரணத்தால் அதைத் தடுக்காமல் விட்டுவிடுவார்கள். அல்லது கண்டும் காணாமல் போய்விடுவார்கள். அத்தகையோர் பின்வரும் நபிமொழியைக் கவனிக்க வேண்டும்.
“யார் மக்களின் வெறுப்பைப் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின் அன்பைத் தேடிக்கொள்கிறாரோ அவரை மக்களின் தொல்லையிலிருந்து காக்க அல்லாஹ்வே போதுமானவன். யார் அல்லாஹ்வின் வெறுப்பைப் பொருட்படுத்தாமல் மக்களின் அன்பைத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் மக்களிடமே விட்டுவிடுகிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ: 2338)
இன்று அரபி மூலாதாரங்கள் அனைத்தும் இனிய தமிழில் கிடைக்கத் தொடங்கிவிட்டதால், படிப்பறிவுள்ளோர் அவற்றைப் படித்து, உண்மை எது, புனைவுகள் எவை, பிற்சேர்க்கைகள் எவை என்பதையெல்லாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். ஆகவே இனியும் மார்க்க அறிஞர்கள் சிலர் தவறான பாதையில் மக்களை அழைத்தால் அத்தகையோரை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பது திண்ணம். எனவே உண்மையை உரக்கச் சொல்லும் ஆலிம்களாகவும் சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் சமுதாயத் தலைவர்களாகவும் திகழ்ந்து மக்களை நல்வழிப்படுத்துவோம்.
=============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக