செவ்வாய், 3 டிசம்பர், 2019

திறமைமிகு ஆசிரியர்களைப் பயன்படுத்திக்கொள்வோம்!



----------------------------------------------------------------------
நம் உஸ்தாத்கள் எத்தனையோ பேர் ஓய்வுபெற்று ஆங்காங்கே இருக்கின்றார்கள். இருப்பினும் நம் பிள்ளைகளுக்கு ஏதாவது ஓரிரு பாடங்களை நடத்தினால் மகிழ்ச்சியாக இருக்குமே என்ற ஆசையையும் ஆவலையும் தம் மனத்திற்குள் மறைத்து வைத்திருக்கின்றார்கள்; சிலர் அதை வெளிப்படையாகவே சொல்கின்றார்கள். இத்தகைய உஸ்தாத்களின் கல்வியை இன்றைய அரபுக் கல்லூரிகளின் முதல்வர்கள் தம் மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்தால் அதுதான் அவர்கள் தம் உஸ்தாதுகளுக்குச் செய்யும் கைம்மாறாகும்.

அதற்கான வாய்ப்பு இரண்டு விதமாக உள்ளது. ஒன்று அவர்களை நேரடியாக அழைத்து வந்து மாணவர்களுக்கு வாரம் ஒரு தடவை அல்லது மாதம் ஒரு தடவை பாடம் நடத்த ஏற்பாடு செய்யலாம். இரண்டாவது, அவர்களின் இருப்பிடத்திலேயே இருந்துகொண்டு, முகநூல், யூ-டியூப் போன்ற நேரலை மூலமாக மாணவர்களுக்குப் பாடம் நடத்த ஏற்பாடு செய்யலாம்.

அதற்கு அரபுக் கல்லூரிகளில் வீடியோ கான்ஃபரன்ஸ் ஹால்   (Video Conference Hall) ஒன்றை உருவாக்கி வைத்திருக்க வேண்டிய அவசியத் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. அதை உருவாக்கிவிட்டால் நம் உஸ்தாத்கள் மட்டுமின்றி, பிற அரபுக் கல்லூரி முதல்வர்கள், உஸ்தாத்கள் ஆகியோரும் பாடம் நடத்தலாம்; மாணவர்களிடையே கலந்துரையாடலாம். ஏன், உலகின் எந்த மூலையிலிருந்தும் திறன்மிகு ஆசிரியர்களின் கல்வியை மாணவர்கள் பெறலாம். அதற்கான வாய்ப்பு இன்று பரவலாகவும் எளிதாகவும் உள்ளது.
அரபிமொழி இலக்கணக் குறிப்புகளையும் நவீனச் சிக்கல்களுக்கு ஃபிக்ஹ் கூறும் விளக்கங்களையும் அரபு நாட்டு அறிஞர்களிடமிருந்து நேரடியாகக் கேட்கும்போது மாணவர்கள் கூடுதல் உற்சாகமடைவார்கள்; அரபிமொழி பேசுவதற்கான ஆர்வமும் துடிப்பும் அதிகமாகும்; மாணவர்களின் சிந்தனைத்திறன் விரியும்.

மேலும் திறன்மிகு ஆசிரியர்கள் நடத்துகின்ற பாடத்தை அப்படியே பதிவு செய்து பாதுகாக்க வேண்டிய அவசியமும் இன்று ஏற்பட்டுள்ளது. ஏனெனில் திறன்மிகு ஆசிரியர்களின் வெற்றிடத்தை நிரப்புகின்ற வேறோர் ஆசிரியர் கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது. அவர் போன்று நடத்த ஆள் இல்லைஎன்று நம்முள் பலர் சொல்லக் கேட்டிருப்போம். எனவே அவர்கள் நடத்துகின்ற பாடங்களின் பதிவு நம்மிடம் இருந்தால் பிற்கால மாணவர்களும் ஆசிரியர்களும் அதன்மூலம் பயன்பெறுவார்கள் என்பது திண்ணம்.

ஆக இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தை நம்மால் இயன்ற வரை பயன்படுத்திக்கொண்டால் யாவரும் பயனடையலாம்; வெற்றிப் பாதையை நோக்கி நடைபோடலாம்; பெருவளர்ச்சி காணலாம்.

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
03.12.2019   05.04.1441
===================================

Abdul Hadi Baquavi


கருத்துகள் இல்லை: