வியாழன், 11 ஜனவரி, 2018

அண்ணலாரின் ஆர்வமூட்டல்...


                        -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு செய்தியை மக்கள் மனத்தில் பதிய வைக்கக் கையாண்ட உத்திகள் அறிவுப்பூர்வமானவை. பரபரப்பான உலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைக் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்; ஏதோ ஒரு பிரச்சனையை அசைபோட்டுக்கொண்டிருப்பார்கள். அந்நேரத்தில் திடீரென ஒரு செய்தியைச் சொன்னால் அது அவர்களின் மனத்தில் பதியாது. எனவே அவர்களைக் கனவுலகிலிருந்து நிகழுலகிற்குக் கொண்டுவந்து, சொல்லப்போகும் செய்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சொல்ல வேண்டும். அப்போதுதான் அந்தச் செய்தி கேட்போரின் மனத்தில் ஆழமாகப் பதியும்.

அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் பல தடவை இந்த உத்தியைப் பயன்படுத்தியுள்ளார்கள். நான் உங்களுக்கு ஒரு  செய்தியைச் சொல்லட்டுமா?” என்று கேட்டுவிட்டுச் சில மணித்துளிகள் அமைதியாக இருப்பார்கள். உடனே தோழர்கள், “சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!என்று மறுமொழி கூறுவார்கள். சிலபோது நான் உங்களுக்கு ஒரு  செய்தியைச் சொல்லட்டுமா?” என்று கேட்டு, அவர்களின் கவனத்தைத் தம் பக்கம் திருப்பியபின், அவர்களின் பதிலை எதிர்பார்க்காமலேயே செய்தியைச் சொல்லத் தொடங்கிவிடுவார்கள். இது அவர்கள் மேற்கொண்ட உளவியல் உத்திஎன்று சொல்லலாம்.

அவ்வாறு பல தடவை பல செய்திகளைச் சொல்லியிருந்தாலும் அவற்றுள் மிக முக்கியமான நான்கு செய்திகளை மட்டும் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.    

உங்களுக்கு நான் ஒன்றை அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கலாம். உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2612) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் நேசம் கொள்வதற்கான வழிமுறையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இச்செய்தியின்மூலம் சொல்லியுள்ளார்கள். தற்காலத்தில் பெரும்பாலோரின் உள்ளத்தில் பிறர்மீது உண்மையான நேசமோ அன்போ இல்லை. மக்களின் மனங்கள் இறுகிய நிலையில் காணப்படுகின்றன. இதை நீக்கிக்கொள்ளும்முகமாகவே நபி (ஸல்) அவர்களின் இக்கூற்று அமைந்துள்ளது. நம்மை யாரேனும் ஒரு முஸ்லிம் எதிர்கொண்டால் அவருக்கு முகமன் உரைப்பது நம் கடமையாகும். அதன்மூலம் அவ்விருவருக்கிடையே அன்பு ஏற்பட வழிபிறக்கிறது. இந்த முகமன் இருவரின் உள்ளத்திலும் உள்ள மனஇறுக்கத்தை நீக்கிவிடுகிறது.

சுராக்கா பின் மாலிக் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: நான் உமக்குச் சிறந்ததொரு தர்மத்தைப் பற்றி அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு, (திருமணத்திற்குப்பின்) உம்முடைய மகள் உம்மிடமே (மணவிலக்குச் செய்யப்பட்டு) திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அவளுக்கு உம்மைத் தவிர சம்பாதித்துக்கொடுப்பவர் யாரும் இல்லாதபோது (நீர் செய்யும் தர்மமாகும்) என்று கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 3657)

ஒருவர் தம் மகளின் திருமணத்தை நடத்துவதற்காக மிகச் சிரமப்பட்டுப் பொருளாதாரத்தை ஈட்டி, நல்ல முறையில் அவளது வாழ்க்கை அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார். நல்ல கணவனாக அமைய வேண்டும் என்ற உயர் எண்ணத்தோடு துருவித் துருவி ஆராய்ந்து ஒரு மணாளனைத் தேர்வுசெய்கிறார். இறுதியில் மணமுடித்துவைக்கிறார்.  இவ்வளவு சிரமப்பட்டு மணமுடித்துவைத்து, திருமணத்திற்குப்பின் இரண்டு மாதங்களில் ஏதோ ஒரு பிரச்சனையால் தலாக்பெற்று பெற்றோரின் வீட்டிற்கே அவள் திரும்பி வந்தால் அப்போது  அவர்களின் மனம் என்ன பாடுபடும்?

வாங்கிய கடனையே அடைக்கவில்லை. அதற்குள் மகள் திரும்பி வந்துவிட்டாளே என்ற கவலை ஒரு பக்கமும் குடும்ப நெருக்கடி மற்றொரு பக்கமும் அழுத்தும்போது கோபத்தால் வார்த்தைகள் கொப்பளித்து வரத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனமுடைந்து வந்த மகளை இன்முகத்துடன் வரவேற்று, அரவணைத்து அவள் இருக்க இடம் கொடுத்து, உணவையும் கொடுத்துப் பராமரிப்பதே தர்மத்தில் சிறந்த தர்மமாகும்; அறத்தில் சிறந்த அறமாகும்.

சிலர் தம் கோபத்தை அடக்க முடியாமல் வார்த்தைகளைக் கொட்டிவிடுகின்றனர். குலாபெற்று வந்த பெண்ணை வீட்டில் சேர்ப்பதில்லை. அல்லது வீட்டில் தங்க வைத்து வார்த்தைகளால் வதைப்பார்கள்; காயப்படுத்துவார்கள். அத்தகைய பெற்றோர் இந்நபிமொழியைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். கணவன் இறந்துவிட்டதால் ஒரு பெண் தன் பெற்றோரின் வீட்டில் தங்க நேரிடும். அதையும் சிலர் அரைகுறை மனத்துடன் அங்கீகரிப்பார்கள். உறவினர்கள் சிலர் வார்த்தைகளால் குத்திக்காட்டிப் பேசுவார்கள். இத்தகைய தருணங்களில் சிக்கிக்கொண்டுள்ள மகளிடம் பெற்றோர் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்; அவளுக்கு ஆறுதல் கூறி ஆதரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதே  மிகச் சிறந்த தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.    

ஹாரிஸா பின் வஹ்ப் (ரளி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின்வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் உண்டு கொழுத்தவர்கள்; இரக்கமற்றவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.” (நூல்: புகாரீ: 6657)

சொர்க்கவாசிகளின் பண்புகளையும் நரகவாசிகளின் தன்மைகளையும் மிகத் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள். மக்களின் பார்வையில் மிகச் சாதாரணமானவர்களாகவும் அல்லாஹ்வுக்குப் பணிந்து நடப்பவர்களாகவும் இருப்பார்கள்என்ற நபிகளாரின் கூற்று மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இச்செய்தியைக் கேள்விப்படுவோர் தம்மைச் சொர்க்கவாசிகளுள் ஒருவராக ஆக்கிக்கொள்ள ஆசைப்படுவார்கள். அத்தகையோர் சொர்க்கவாசிகளுக்கான பண்புகளைத் தம்முள் வளர்த்துக்கொள்ள முயல வேண்டும்.

இதில் மற்றொரு  செய்தியும் உள்ளது. அல்லாஹ்வை ஐவேளை முறையாகத் தொழுதும் அவனுடைய கட்டளைகளைப் பேணி நடந்தும் தம்மை யாரும் மதிப்பதில்லையே என்று எண்ணுவாரும் உள்ளார்கள்.  அவர்கள் இந்நபிமொழியை நினைவில் கொள்ள வேண்டும். சொர்க்கம் செல்ல வேண்டுமானால் உலக மக்களின் புகழையோ பாராட்டையோ எதிர்பார்க்கக்கூடாது. அவர்களின் மரியாதையை அறவே எதிர்பார்க்கக்கூடாது. மிகச் சாதாரணமாக, எளிமையாக இருந்துகொள்ள வேண்டும். அத்தகைய நம் நிலையைக் கண்டு பிற மக்கள் நம்மை மதிக்காவிட்டாலும் அல்லாஹ் நம்மை மதிக்கின்றான் அல்லவா? அது போதாதா?

உங்களின் நோயையும் (அதற்கான) மருந்தையும் உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு, “அறிந்துகொள்க! திண்ணமாக உங்களுடைய நோய் என்பது உங்களின் பாவங்கள் ஆகும். உங்களுக்கான மருந்து (அதற்காகப்) பாவமன்னிப்புத் தேடுதல் ஆகும்என்று கூறினார்கள்.  (நூல்: ஷுஅபுல் ஈமான்: 6746)

நாம் செய்யும் பாவங்கள் நம் உள்ளத்தில் ஏற்படுகின்ற ஒரு வகையான நோயின் வெளிப்பாடுதான் என்பதை நபி (ஸல்) அவர்கள் இதன்மூலம் தெரிவிக்கின்றார்கள். இந்த வகை நோய்க்கான மருந்து ஏகன் அல்லாஹ்விடம் மனமுருகிப் பாவமன்னிப்புத் தேடுவதே ஆகும். பாவங்கள் நோயானால் பாவமன்னிப்புத் தேடுதலே அதற்கான மருந்தாகும். பாவங்கள் செய்துவிட்டுச் சிலர் அதற்கான பரிகாரம் என்னவென்று தெரியாமல் இருக்கின்றார்கள். சிலர் பாவமன்னிப்புத் தேடாமல் தொடர்ந்து பாவங்களைச் செய்துகொண்டே இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு தீர்வாக இந்நபிமொழி அமைந்துள்ளது. அறியாமல் பாவம் செய்துவிட்டோர் அதற்காகக் கவலைப்பட்டு, உயர்ந்தோன் அல்லாஹ்விடம் இரு கைகளுயர்த்தி அழுது புலம்பி பாவமன்னிப்புப் கோரினால் நிச்சயமாக அல்லாஹ் அவர்தம் பாவங்களை மன்னித்துவிடுவான் என்பதில் ஐயம் இல்லை.

ஆக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களின் மனங்களில் பதிவுசெய்யும் விதத்தில் உளவியல் உத்திகளைக் கையாண்டு பல செய்திகளைச் சொல்லியிருக்கின்றார்கள். அவற்றுள் முக்கியமான இச் செய்திகளை நாம் நம் மனத்தில் பதிய வைத்துக்கொண்டு நம்முடைய அன்றாட வாழ்வில் செயல்படுத்த ஏகன் அல்லாஹ் அருள்புரிவானாக. 

=========================================================









கருத்துகள் இல்லை: