1995 ஆம் ஆண்டாக இருக்கலாம். ஒரு நாள் அஸ்ர் நேரம். அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் பள்ளிவாசலில் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் பாக்கியாத்தின் முஃப்தி பட்டேல் ஸாஹிப் (ரஹ்) எழுந்து மக்கள் முன் உரையாற்றத் தொடங்கினார். மாணவர்களும் பொதுமக்களும் வழமைக்கு மாறான அவரின் அந்நேர உரையை மிகக் கவனமாகக் கேட்டனர்.
மக்கள் பலர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து அழைப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. எனவே அது குறித்துப் பேசிவிட்டு, அதை ஓர் உதாரணத்தோடு விளக்குமுகமாக,
யா ஃகௌஸ் முஹ்யித்தீன் என்று அழைப்பதும் யா திருப்பதி என்று அழைப்பதும் ஒன்றுதான். இரண்டுமே ஒரே அளவிலான ஷிர்க்தான் என்று கூறி உரையை முடித்தார். பின்னர் அவரே துஆ ஓதினார். அதில் டி.வி.யின் சீர்கேட்டிலிருந்து பாதுகாப்பாயாக என்ற துஆவும் அடக்கம். துஆ முடிந்தவுடன் பாக்கியாத்தின் முதல்வர் பி.எஸ்.பி. ஹள்ரத் எப்போதும்போலவே இயல்பாகத் தம் இல்லம் நோக்கிச் சென்றுவிட்டார்கள். இவ்வுரையைக் கேட்டுக் கொதிநிலையடைந்த கேரள மாணவர்களுள் ஒரு குழுவினர் பள்ளியின் வெளியே முஃப்தியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்க, அவர் வெளியே வந்தவுடன் அவரை அடிக்க அவர்கள் ஓடி வர,நூர்முஹம்மது ஹைதர் அலீ பாகவி,முஹம்மது கான் பாகவி உள்ளிட்ட ஆசிரியப் பெருந்தகைகள் அம்மாணவர்களைத் தடுத்து,முஃப்தி ஸாஹிபைப் பாதுகாப்பாக அவரது இல்லம் வரை அழைத்துச் சென்றார்கள்.
கேரள மாணவர்கள் ஒரு குழுவினர், யா ஃகௌஸ் முஹ்யித்தீன் என்று மீண்டும் மீண்டும் முழக்கமிட பாக்கியாத்தில் ஒரே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவர்களின் கோபமும் வேகமும் அடங்கவில்லை. இறுதியில் பிஎஸ்பி ஹள்ரத் அவர்களுக்குச் செய்தி சொல்லப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து அம்மாணவர்கள் முன்னிலையில் சமாதான உரையாற்ற அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
நான் பாக்கியாத்தில் பயின்ற காலத்தில் கொள்கைரீதியாக நடைபெற்ற ஒரு முஃப்தியின் தெளிவுரையாகவும் துணிவுரையாகவுமே இதைக் கருதுகிறேன்.
பின்குறிப்பு: இந்நிகழ்வு குறித்து அறிந்த பலர் இன்றும் நம்மோடு இருக்கின்றார்கள் என்பதால் இதை எழுதுகிறேன்.
-முனைவர் மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி
2 கருத்துகள்:
இதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.
عن عتبة بن غزوان رضي الله عنه، عن نبي الله صلى الله عليه وآله وسلم قال: «إِذَا أَضَلَّ أَحَدُكُمْ شَيْئًا، أَوْ أَرَادَ أَحَدُكُمْ عَوْنًا وَهُوَ بِأَرْضٍ لَيْسَ بِهَا أَنِيسٌ، فَلْيَقُلْ: يَا عِبَادَ اللهِ أَغِيثُونِي، يَا عِبَادَ اللهِ أَغِيثُونِي، فَإِنَّ للهِ عِبَادًا لَا نَرَاهُمْ». قال الطبراني: وَقَدْ جُرِّبَ ذَلِكَ.[روى الطبراني]
கருத்துரையிடுக