நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர் 19)
(மூன்றே மனிதனின் சொத்து)
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,
“அடியான், ‘என் செல்வம்; என் செல்வம்’ என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும். அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச் செல்லக்கூடியவையும் ஆகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 5666)
நிலையில்லா இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் எல்லாமே என்னுடையது, எல்லாமே எனக்குரியது என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றான். அதனால்தான் தான் சம்பாதித்தவற்றிலிருந்து பிறருக்குக் கொடுத்துதவ மறுக்கின்றான். எல்லாவற்றையும் தானே அனுபவித்துவிட வேண்டுமென எண்ணுகிறான். ஆனால் அதற்குள் மரணம் அவனைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. சரி, இதைப் பார்க்கின்ற மற்றொரு மனிதனாவது திருந்துகின்றானா என்றால் இல்லை. அவனும் அப்படித்தான் செயல்படுகின்றான். ஆக மனித இனமே அத்தகைய நிலையில்தான் உள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது.
ஒருவன் தான் வாழ்கின்றபோது சம்பாதித்துச் சேர்த்து வைத்தவையெல்லாம் அவனுக்குரியவை அல்ல என்றும் அவன் நல்லபடியாக உண்டு கழித்ததும், சிறந்த ஆடைகளை உடுத்திக் கிழித்ததும், இயன்ற வரை பிறருக்குக் கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எவ்வளவு உயரிய தூரப்பார்வை. இத்தகைய தூரப்பார்வை எல்லா மனிதருக்கும் இருந்துவிட்டால் இவ்வுலகில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்களுக்கு மத்தியில் போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது இவையெல்லாம் நொடிப்பொழுதில் அற்றுப் போய்விடும். எல்லோரும் நிம்மதியாக வாழ்வார்கள். தர்மம் செய்வதிலும் பிறருக்கு வாரி வழங்குவதிலும் மனிதன் போட்டிபோடத் தொடங்கிவிடுவான்.
உண்டு கழித்தது என்றால் ஒருவன் தனக்காக உண்பதையே குறிக்கும். அதேநேரத்தில் தன் பிள்ளைகள், மனைவியர் ஆகியோருக்கு வாங்கிக் கொடுப்பது தர்மம் ஆகும். ஆம். நீ உன் மனைவிக்கு ஊட்டும் ஒரு கவள உணவும் உனக்கு தர்மம் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே மனைவிக்கு வழங்கும் உணவிற்காக அல்லாஹ் நன்மையைத் தந்துவிடுகின்றான். மனிதர்களுள் சிலர் தமக்காகவே வாங்கி உண்பதில்லை. பின்னர் தம் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எப்படி வாங்கிக் கொடுப்பார்கள்? பிறகு சக மனிதர்களுக்கு எப்படிச் செலவு செய்வார்கள்?
ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவருள் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!’’ என்று கூறுவார். மற்றொருவர் “அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!’’ என்று கூறுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 1442)
பொதுவாக, செலவு செய்தல் என்ற பழக்கம் எல்லாருக்கும் வாய்க்காது. ஏனெனில் பணத்தைச் செலவு செய்தால் தீர்ந்து போகும் என்ற எண்ணமே முதலில் மனதில் வந்து நிற்கும். அந்த எண்ணத்தை நீக்கிவிட்டுச் செலவு செய்தல் அவ்வளவு எளிதானதன்று. ஏனெனில் அது மனம் சார்ந்தது. ஆகவே இறையச்சமும் இறைநம்பிக்கையும் மிகுதியாக உள்ளோரே செலவு செய்ய முனைவர். ஏனையோர் செலவு செய்ய யோசிப்பார்கள். சேர்த்து வைக்கவே எண்ணுவார்கள். அவ்வளவு எளிதில் தம் பணத்தைப் பிறருக்குச் செலவு செய்ய முனைய மாட்டார்கள்.
உடுத்திக் கிழித்தல் என்பது, ஒருவன் தன் வாழ்நாளில் நல்ல ஆடைகளையும் புத்தாடைகளையும் வாங்கி உடுத்தி அதற்காகச் செலவு செய்தலைக் குறிக்கிறது. ஆடை என்பது ஒருவர் தம் மானத்தை மறைப்பதற்காக என்றாலும் ஆள் பாதி, ஆடை பாதி என்பதற்கேற்ப நல்ல ஆடைகளை அணிவது பிறரின் பார்வைக்கு அழகாகத் தெரிவதற்கும் சேர்த்துத்தான் என்பதை அனைவரும் அறிவோம். எனவே பிறரின் பார்வைக்கு அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக உடுத்துகின்ற ஆடை நல்ல ஆடையாகவும் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். அப்படியெனில் அதற்காக நாம் செலவு செய்துதான் ஆக வேண்டும்.
ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக்கூடியதும் (உங்களை) அலங்கரிக்கக்கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம். எனினும், (பாவங்களை மறைத்துவிடக்கூடிய) இறையச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது (7: 26) என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
இருப்பினும் எல்லா ஆடைகளுக்கும் மேலாக ஒருவர் அணிந்துகொள்ளும் இறையச்சம் எனும் ஆடையே உயர்வானது, மேலானது என்று அல்லாஹ் கோடிட்டுக் காட்டாமல் விட்டுவிடவில்லை. ஆகவே நம்முடைய ஆடைக்காக நாம் செலவு செய்கிறோம். ஆனால் அது பிறரின் பார்வைக்கு அழகாகத் தென்பட வேண்டும் என்பதற்காக இருக்கலாமே தவிர பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இருக்கக் கூடாது.
இருப்பினும் சிலர் போதிய வசதியிருந்தும் தம் ஆடைக்காகச் செலவு செய்ய மாட்டார்கள். பழைய ஆடையையே உடுத்திக்கொண்டிருப்பார்கள். ஆடைக்காகச் செலவு செய்தால் பணம் தீர்ந்துபோகும் என்ற கவலை. அத்தகையோருக்காக நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைதான் இது: திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய அடியானிடம் தன் அருட்கொடையின் வெளிப்பாட்டைக் காண விரும்புகிறான். (நூல்: திர்மிதீ: 2744)
தான் உண்பது, தான் உடுத்துவது-இவ்விரண்டும் போக ஒருவன் இவ்வுலகில் வாழும் காலத்தில் பிறருக்காக எவ்வளவு செலவு செய்கின்றானோ அதுவெல்லாம் அவன் தனக்காகச் சேர்ப்பதாகும். இவ்வுலகில் ஒருவன் வங்கியில் சேமித்து வைத்து, தனக்குத் தேவையானபோது அதை எடுத்துச் செலவுசெய்வதுபோல் ஒருவன் இவ்வுலகில் பிறருக்காகச் செலவழித்ததையெல்லாம் மறுமையில் அவன் நன்மையாகப் பெற்றுக்கொள்வான். ஆகவே இம்மூன்றும்தான் ஒரு மனிதன் அனுபவிக்கின்ற தன்னுடைய சொத்து. மற்றவையெல்லாம் தான் சார்ந்த வாரிசுகளுக்கும் அல்லது பிற மக்களுக்கும்தான். அதிலிருந்து அவனுக்கு நன்மை சேருமா, சேராதா என்பது அவனுடைய வாரிசுகளைப் பொறுத்தே அமையும்.
பிறருக்காகச் செலவு செய்ய மனம் வராத மக்களுக்காக அல்லாஹ் கீழ்க்கண்ட இரண்டு வசனங்களைக் கூறுகிறான்: உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்துகொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்), “”என் இறைவனே! என் தவணையை எனக்குச் சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே’’ என்று கூறுவான். (63:10)
இறைநம்பிக்கை கொண்டோரே! பேரங்களும் நட்புறவுகளும் பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள். (2: 254)
ஆக மனிதன் எவ்வளவு உழைத்துச் சேர்த்தாலும் அவனுக்கு மிஞ்சுவது அவன் சேர்த்த நல்லறங்கள்தாம். எனவே நாம் வாழும் காலத்தில் நல்ல முறையில் உண்டு, உடுத்தி, பிறருக்கு வழங்கி வாழ்வோம். ஈருலகிலும் நன்மையை அடைவோம். -இன்ஷா அல்லாஹ் தொடரும்
===========