புதன், 19 நவம்பர், 2014

உரிமையைப் பறிக்காதீர்!


                        -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

"உங்களுள் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டுப்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: புகாரீ: 1905)

வாழும் உயிரினங்கள் யாவும் தமக்கென ஒரு துணையை ஏற்படுத்திக்கொண்டு இணை இணையாக வாழ்வதே இயற்கை அமைப்பாக இறைவன் அமைத்துள்ளான். ஒவ்வொன்றும் தத்தம் துணையை இயல்பாகத் தேடிக்கொள்கின்றன. ஆனால் மனித இனம் முறைப்படி, இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் இணைந்து இல்வாழ்வைத் தொடங்குவதையே இறைவன் விதியாக்கியுள்ளான். ஓர் ஆண் தன் மனவிருப்பப்படி தன் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முழு உரிமை இருப்பதைப்போல் பெண்ணுக்கும் அத்தகைய உரிமையை இஸ்லாம் தாராளமாக வழங்கியுள்ளது. ஓர் ஆணோ பெண்ணோ தன் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது வெளிப்படையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும். துணையைத் தேடிக்கொடுப்பதில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. அவர்கள் தம் பிள்ளைக்குத் தகுந்த துணையைத் தேர்ந்தெடுக்கும்போது தம் பிள்ளையின் நிறை-குறைகளை வெளிப்படையாகப் பெண்வீட்டாரிடம் தெரிவித்துவிட வேண்டும். அதுபோலவே பெண்வீட்டார் தம் பிள்ளையின் நிறை-குறைகளை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு, அதை மாப்பிள்ளை வீட்டார் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுவிட்டால் பின்னர் அவ்விருவரையும் இணைத்து வையுங்கள். அவ்வாறு இணைக்கப்படுகின்ற தம்பதிகள், தம் இதயங்கள் இணைந்த வாழ்க்கையைத் தொடர்வார்கள். இல்லையேல் அவ்விருவரும் மனக்கசப்புடனே வாழ நேரிடும்.

நம்முள் பலர், "ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்து'' எனும் முட்டாள்தனமான பழமொழியை முதுகில் சுமந்துகொண்டு திருமணத்திற்கு வரன் தேடும் பணியில் குதிக்கின்றார்கள். "ஆயிரம் பேரிடம் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்து'' என்பதுதான் உண்மையான பழமொழி. அதைப் பொய்யாகத் திரித்து, தன் இயல்புக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டான் மனிதன். பொய்யுரைத்து ஈரிதயங்கள் இணைக்கப்படுகின்ற திருமண வாழ்க்கை பொய்யுடனே தொடர்கிறது. அவர்களின் வாழ்நாளிலும் பொய் தொடர்ந்து பயணம் செய்கிறது. "ஆயிரம் பேரிடம் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்து'' என்னும் உண்மையான பழமொழிக்கேற்பவே, "திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்'' (நூல்: முஸ்னது அஹ்மத்) எனும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாக்கு அமைந்துள்ளது.

பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டிய அவசியம் எந்த முஸ்லிமுக்கும் இல்லை.  "எவர் நம்மை ஏமாற்றினாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை''  (நூல்: முஸ்லிம்: 164) எனும் அண்ணல் நபியின் அமுத வாக்கு ஏமாற்றுவோரை எதிர்த்து நிற்கிறது. குறைபாடுகளை மறைத்து, "எல்லாம் திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடும்'' எனும் ஒற்றை வாக்கியத்தினுள் மூடி மறைத்துச் செய்துவைக்கும் திருமணம் நீண்ட நாள்கள் நீடிப்பதில்லை என்பதை நாம் அன்றாட வாழ்வில் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

பொறுமையைக் கைக்கொண்டு பதுமையாய் வாழ்கின்ற பெண்ணோ, மறுமையை மனதில்கொண்டு மனத்திட்பத்தோடு வாழ்கின்ற ஆணோ தற்காலத்தில் முற்றிலும் குறைவு என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். எனவே குறைகளை மறைத்துத்  திருமணத்தை நடத்தி வைக்க முன்வரும் பெற்றோர் சற்றுநேரம் நிதானமாகச் சிந்தியுங்கள்.

திருமணத்திற்கு ஏழ்மைகூட ஒரு தடையில்லை. ஆனால் தாம்பத்திய உறவுக்கான ஆற்றல் அவசியம் என்பதைப் பின்வரும் நபிமொழி, இறைவசனம் ஆகியவை மூலம் அறிந்துகொள்ளலாம்.

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஅதீ (ரளி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த மக்களிடையே இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண்மணி (வந்து) நின்று, "என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக (-மஹ்ரின்றி மணமுடித்துக் கொள்வதற்காக-) வழங்கிவிட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்!'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதிலேதும் சொல்லவில்லை. பிறகு மீண்டும் எழுந்து நின்று, "என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்!'' என்று சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்குப் பதிலேதும் சொல்லவில்லை. மூன்றாவது முறையாக அப்பெண்மணி எழுந்து, "என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்'' என்றுரைத்தார்.

அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(இவருக்கு மஹ்ராகக் கொடுக்க) உம்மிடம் ஏதேனும் பொருள் உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இல்லை'' என்று கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், "நீர் சென்று, (இவருக்கு மஹ்ராகச் செலுத்த) இரும்பாலான ஒரு மோதிரத்தையாவது தேடுக'' என்று சொன்னார்கள். அவர் போய்த் தேடிவிட்டு பிறகு (திரும்பி) வந்து, "ஏதும் கிடைக்கவில்லை. இரும்பாலான மோதிரம்கூடக் கிடைக்கவில்லை'' என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அதற்கவர், "ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் (மனப்பாடமாக) உள்ளது'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன், நீர் செல்லலாம்!'' என்று கூறினார்கள்.  (நூல்: புகாரீ: 5149)

ஏதுமற்ற ஏழைக்கு ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு திருமணம் செய்து வைக்கலாம்? அவர் எப்படி அப்பெண்ணுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை வழங்குவார்? என்றெல்லாம் வினாக்கள் தொடுக்கலாம். அவர் ஏதுமற்ற ஏழையாக இருப்பினும், திருமண உறவுக்கேற்ற ஆரோக்கியமான உடல்வளம் இருந்தது; திருமண ஆசை இருந்தது. எனவே நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அப்பெண்ணை மணமுடித்து வைத்தார்கள்.

ஒருவர் ஏதுமற்ற ஏழையாக இருந்தாலும் அவர் மணமுடிப்பதன் மூலம் அல்லாஹ் தன் அளப்பரிய அருளால் அவரைச் செல்வராக ஆக்குவான். அது குறித்து இறைமறைக் குர்ஆனில் இடம்பெற்றுள்ள வசனத்தைப் பாருங்கள்.  (ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களுள் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (24: 32)

ஏதுமற்ற ஏழையாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளலாம்; தவறில்லை. அவர் தம் கடுமையான உழைப்பால் தம் மனைவியையும் அவள் ஈன்றெடுக்கும் பிள்ளைகளையும் கண்ணெனக் காப்பான்; சந்தேகமில்லை. ஆனால் தாம்பத்திய உறவுக்குத் தகுதியற்றவனுக்கு ஒரு பெண்ணை மணமுடித்து வைத்து, வாழ்நாள் முழுவதும் அப்பெண்ணை மனப்புழுக்கத்தோடு வாழவைப்பது எவ்வகையில் நியாயம்? ஒரு பெண்ணின் இல்லற உறவின் உரிமையை மற்றொருவன் பறிக்கலாகுமா? இதற்குப் பெற்றோரும் உடந்தையாகலாமா?

ஆண்மையற்ற தன்மை, கடுநோய் உள்ளிட்டவற்றை மூடி மறைத்துச் செய்து வைக்கப்படும் திருமணங்கள் நெடுநாள் நீடிப்பதில்லை. இதுபோன்ற நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் அதைத் தெளிவாகப் பறைசாற்றிவிட வேண்டும். அதுவே இருவீட்டாருக்கும் அவர்கள்தம் உறவினர்களுக்கும் நல்லது. இன்றைக்கு ஆண்களின் உணவுப் பழக்கம், புகைப்பழக்கம், தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பழக்கம், குடிப்பழக்கம் உள்ளிட்டவை அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடுகின்றன. எனவே இளமையிலேயே இவைபோன்ற பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள் திருமண வாழ்க்கையை மறந்துவிட வேண்டியதுதான். இல்லையேல் இவைபோன்ற தீய பழக்கங்களுக்கு ஆட்படாமல் இருக்க வேண்டும். ஆட்பட்டவர்கள் உடனடியாக அவற்றைக் கைவிட்டுவிட வேண்டும். மறுப்பவர்கள் திருமணம் செய்யாமலேயே இருந்துவிட வேண்டும்.

இன்றைக்குத் திருமணத்திற்கு முன்பே, மருத்துவச் சான்றிதழை ஆணும் பெண்ணும் சமர்ப்பிக்க வேண்டும் எனும் கருத்து அரசாங்க ஆலோசனையில் இருந்து வருகிறது. அதைக் கட்டாயமாக்கலாமா, வேண்டாமா என்பது விவாதத்தில் உள்ளது. ஆனால் இஸ்லாம் அதற்குத் தீர்வாக உள்ளது. "எவர் நம்மை ஏமாற்றினாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை''  (நூல்: முஸ்லிம்: 164) எனும் அண்ணல் நபியின் அமுத வாக்கு ஏமாற்றுவோரை எதிர்த்து நின்று, மருத்துவச் சான்றிதழுக்கும் வகை செய்கிறது. பொய்யுரைத்தும் சான்றிதழ்கள் வாங்கிவிடலாம். ஆனால் அவர் அல்லாஹ்விடம் மாட்டிக்கொள்வார் என்பதை நினைவில் கொள்ளட்டும். ஆகவே தற்கால இளைஞர்கள் தம் பழக்க வழக்கங்களைச் சீராக்கிக்கொண்டு, ஆரோக்கியமான உடல்வளத்தைப் பெறுவதற்கு ஆவன செய்து, திருமணத்திற்குத் தயாராகட்டும்!
====================