புதன், 20 ஆகஸ்ட், 2014

படிப்பிற்காக வாழ்க்கையைத் தொலைக்கலாமா?


           -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

     கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும் (நூல்: இப்னுமாஜா: 220) என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒவ்வொரு முஸ்லிம் எனும் வார்த்தைக் கோவையிலிருந்து ஆண்-பெண் அனைவர்மீதும் கட்டாயக் கடமை என அறிஞர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.

     கட்டாயக் கல்வி என்பது ஓர் ஆண் அல்லது ஒரு பெண் தன் இறைவனை அறிந்து அவனை வழிபடுவதற்கான கல்விதான் என மார்க்க அறிஞர்கள் விளக்கமளிக்கின்றார்கள். வேறு சிலர்  பயனுள்ள எக்கல்வியையும் படிக்கலாம் என்று கூறுகின்றனர். விரிவாக விளக்கமளிக்கின்ற மார்க்க அறிஞர்கள், ஓர் ஆண் அல்லது ஒரு பெண் தன் இறைவனை அறிந்து வழிபட என்னென்ன கல்வி தேவையோ அது மட்டுமே கட்டாயக் கல்வி. இது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதாவது சாதாரண நிலையில் உள்ள ஓர் ஏழைக்குத் தொழுகை, நோன்பு ஆகியன குறித்த கல்வியே கட்டாயக் கல்வியாகும். ஓர் ஏழை ஸகாத் பற்றியோ ஹஜ் பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் ஒரு செல்வர், ஸகாத், ஹஜ் ஆகியன குறித்த அறிவைப் பெறுவது கட்டாயமாகும். ஏனெனில் அவை குறித்த தெளிந்த அறிவு இருந்தால்தான் அவர் உரிய முறையில் அக்கடமைகளை நிறைவேற்ற முடியும். ஆக கட்டாயக் கல்வி என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. இருப்பினும்  கற்றுக் கொடுக்கும் பொறுப்பிலுள்ள ஆசிரியர்கள் அனைத்தையும் படிப்பது அவசியமாகும். அவர்கள் ஆண்களாகவும் இருக்கலாம். பெண்களாகவும் இருக்கலாம். 

     இன்றைக்கு ஆண்கள், பெண்கள் இருபாலரும் மஸ்ஜிதுகளில் நடைபெற்று வருகின்ற பாலர் வகுப்புகளில் கற்பிக்கப்படுகின்ற தீனிய்யாத் கல்வியைக் கற்றுக் கொள்கின்றனர். அதற்கான வாய்ப்புகள் இன்றைக்கு நிறையவே உள்ளன. அவற்றைக் கற்றுக்கொண்டவர்கள் தம்முடைய மார்க்கக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றார்கள். பாலர் வகுப்பில் பங்குகொள்ளாதவர்கள்தாம் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் குறை செய்கின்றார்கள். அல்லது தப்பும் தவறுமாக ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றி வருகின்றார்கள்.

     இதனைத் தாண்டிச் சென்று, உலகுசார் கல்வியை ஆண்-பெண் இருபாலரும் பள்ளிக்கூடங்களில் பயில்கின்றனர். பாலர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி என அரசு வகுத்திருக்கிறது. அனைவரும் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற நன்னோக்கம். இதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது. அதன்பின் பத்தாம் வகுப்பு வரை சிலரும் பன்னிரண்டாம் வகுப்பு வரை சிலரும் பயில்கின்றனர். இதில் குறையேதும் இல்லை.

     அதன்பின் கல்லூரி சென்று ஒரு பட்டதாரியாக ஆகிவிட வேண்டும் எனும் நோக்கில் ஆண்களும் பெண்களும் போட்டி போடுகின்றனர். தமக்குப் பிடித்த கல்லூரியில் சேர்ந்து தமக்குப் பிடித்த துறையில் ஒரு பட்டதாரியாகிவிடுகின்றனர். இதுவரை பயின்ற ஆண்டுகளைக் கணக்கிட்டு அவர்களின் வயதைக் குறித்தால் 21 முதல் 23 வரை இருக்கும். அதாவது திருமண வயது. இதுவரை தம் மகன் அல்லது மகளின் கல்வியில் கவனம் செலுத்திய பெற்றோர் திருமண வயதை நெருங்கிவிட்ட தம் பிள்ளைகளின் திருமணத்தில் கவனம் செலுத்துகின்றனர்; திருமணமும் செய்துவைத்துவிடுகின்றனர். ஆனால் அவர்களுள் விதிவிலக்கானவர்களும் சிலர் உள்ளனர். பட்டதாரி ஆகிவிட்ட தம் பிள்ளைகள் இன்னும் படிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். எனவே அவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்கின்றனர். முதுகலைப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆவலில்  அந்தத் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுவிடுகின்றனர். அதில் ஈராண்டுகள் கழிந்துவிட்டன. அதன்பின்னராவது அவர்கள் தம் பிள்ளைகளின் திருமணத்தில் அக்கறை செலுத்துகின்றார்களா என்றால், இல்லை. மாறாக, அவர்களுள் சிலர் பணிக்குச் செல்ல எத்தனிக்கின்றனர்; வேறு சிலர் மேற்படிப்பைத் தொடரப் போவதாகக் கூறுகின்றனர்.


ஒரு சில ஆண்டுகளில் எம்.ஃபில். எனும் இளம் முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டு அதன்பின் ஏதோ ஒரு பணியில் சேர்ந்து நல்லபடியாகச் சம்பாதித்துக்கொண்டு இருக்கும்போது மாப்பிள்ளை தேடத் தொடங்குவார்கள். அத்தேடலிலேயே சில ஆண்டுகள் கழியும். இப்போது அப்பெண்ணுக்கு வயது முப்பது. அவர்களுள் சிலர் இன்னும் மேலே உயர நினைத்து முனைவர் பட்டத்திற்காக விண்ணப்பம் செய்கின்றனர். அதைப் பெற ஈராண்டுகள் முதல் ஐந்தாண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் அப்பெண்ணின் வயது முப்பத்தைந்து.

     முப்பது வயதில் மணமுடிக்கின்ற ஒரு பெண், இந்தியத் திருமணச் சட்டப்படி 12 ஆண்டுகள் தன் இல்வாழ்க்கையை இழந்துவிட்டாள். முப்பத்தைந்து வயதில் மணமுடிக்கின்ற ஒரு பெண் 17 ஆண்டுகள் இல்வாழ்க்கையை இழந்துவிடுகின்றாள். பத்து முதல் இருபது ஆண்டுகள் நாம் பின்னோக்கிப் பார்த்தால் முப்பத்தைந்து வயதுள்ள ஒரு பெண் தன் பேரன் பேத்திகளோடு கொஞ்சி மகிழ்ந்துகொண்டிருந்திருப்பாள். ஒரு தலைமுறை வாழ்க்கையையே இழந்துவிட்ட இவள் முப்பந்தைந்து வயதிற்குப்பின் என்ன வாழப் போகிறாள்? இதுவரை நான் கூறிவருவது என்னுடைய சொந்தக் கற்பனை அன்று. திருமணத் தகவலுக்காக இயங்கிவருகின்ற வலைத்தளங்களைப் பாருங்கள். உண்மை புரியும். 

     அது மட்டுமல்ல, 30-35 வயதில் பணிக்குச் சென்று சம்பாதிக்கின்ற அந்தப் பெண், தன்னுடைய கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற விவரத்தைப் பட்டியலிடும்போது அவளுக்கு இந்த யுகத்தில் திருமணம் நடக்குமா என்றே கேட்கத் தோன்றுகிறது. படிப்பும் பணமும் இருப்பதால் அவளின் எதிர்பார்ப்புகள் மிகுந்து விடுகின்றன. அவ்வளவு எதிர்பார்ப்புகளும் நிறைவேறும் வகையில் மணமகன் கிடைக்கும் வரை திருமணத்தை ஒத்திப்போடுவதால் அவளுக்கு வயது மட்டும் ஏறிக்கொண்டே போகிறது.

     இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? படிப்பு வேறு; பணி வேறு; இல்வாழ்க்கை வேறு என்பதைப் பகுத்துப் பார்க்கும் பக்குவம் வந்துவிட்டால் இந்நிலை மாறும். கல்வியை நாம் ஏன் கற்க வேண்டும்; எதற்காகக் கற்க வேண்டும் என்று தீர்மானிக்கத் தெரிய வேண்டும். பெரும்பாலோர் பணியை இலக்காக நோக்கியே படிக்கின்றார்கள். அது ஒரு தவறான இலக்கு; முட்டாள்தனமான இலக்கு. ஏனெனில் படித்தோர் பலர் ஏதோ ஒரு வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றார்களே தவிர உரிய பணி கிடைப்பதில்லை. சரி, முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றுவிட்டால் உரிய பணி கிடைத்துவிடும் என்று யாராவது உத்திரவாதம் தரமுடியுமா? முனைவர்  பட்டம் பெற்ற பலர் உரிய பணியின்றி ஏதோ ஒரு பணியைச் செய்துகொண்டிருப்பதை நான் அறிவேன். மேலும் படித்துவிட்டதால் பணிக்குச் சென்றுதான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இஸ்லாமியப் பெண்களுக்கு இல்லை.

     படிப்பிற்கேற்ற மணமகனைத் தேடுதல் இரண்டாவது தவறு. நான் இளம் முனைவர் (எம்.ஃபில்.) பட்டம் பெற்றிருப்பதால் என் கணவர் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எனக்குச் சமமாக இளம் முனைவர் பட்டமாவது பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன்; எனக்குக் கணவனாக வருபவன் என்னைவிடக் கூடுதலாகச் சம்பாதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் முற்றிலும் தவறு. இதனால் சமுதாயச் சீர்கேடுதான் விளையும் என்பதை இன்றைய பெண்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.


     எனவே இஸ்லாமியச் சகோதரிகள், பிற சமுதாய மக்களோடு தம்மையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதும், போட்டி போட்டுக்கொண்டு படிப்பதும், நிறைய சம்பாதித்து ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று எண்ணுவதும் அவர்களின் இல்வாழ்க்கையே இல்லாத வாழ்க்கையாக ஆக்கிவிடும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டால்  மகிழ்ச்சி கூடும் என்பதை உணருங்கள். வீண் பகட்டிற்காகவும் பிறர் மெச்சுவதற்காகவும் நான் இவ்வளவு படித்திருக்கிறேன்; இவ்வளவு சம்பாதிக்கிறேன்; என் பிள்ளை இவ்வளவு உயரிய பள்ளியில் படிக்கிறான் என்று சொல்லிக்கொண்டு ஒரு போலியான வாழ்க்கை வாழத்தான் நீங்கள் ஆசைப்படுகின்றீர்களா என்பதை உங்கள் உள்மனதிடம் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே தீர்ப்பு வழங்குங்கள்!