செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர்-15)


(நரகம் தீண்டாத மூன்று கண்கள்)
                                                   

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: திண்ணமாக அல்லாஹ் மூன்று பேர்களைக் கண்டு சிரிக்கிறான். (மகிழ்ச்சியடைகிறான்). தொழுகைக்கான வரிசையில் நிற்பவர், நடு இரவில் தொழுகின்ற மனிதர், போர்க்களத்தில் போராடுகின்ற மனிதர். (படையினர் ஓடிவிட்ட பிறகும் அஞ்சாமல்) கடைசி வரை போராடுகின்ற மனிதர் என்று கூறியதாகக் கருதுகிறேன் என்று அறிவிப்பாளர் கூறுகிறார். (நூல்: இப்னுமாஜா-200)

ஜின் இனத்தையும் மனித இனத்தையும் என்னை வழிபடுவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை என்று (51: 55) உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். எனவே ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் அல்லாஹ்வை வழிபடுவதே மிக முக்கியப் பணியாகும். அது தவிர உள்ள ஏனைய அனைத்துச் செயல்பாடுகளும் அதற்கு அப்பாற்பட்டதுதான். அக்கடமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தன்னைப் படைத்த இறைவனுக்கு அஞ்சி, தொழுகை வரிசையில் நிற்கின்றான் என்றால் அதைப் பார்த்து அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான். என்னுடைய அடியான் நான் இட்ட கட்டளையைச் செவ்வனே நிறைவேற்ற நின்றுவிட்டான்; நான் இட்ட கட்டளைக்குப் பணிந்துவிட்டான் என்று கருதிச் சிரிக்கிறான்; உவகை கொள்கிறான்.

அது மட்டுமல்ல, முதல் மனிதரைப் படைத்து அவருக்குச் சிரம் பணியக் கட்டளையிடப்பட்டபோது அவருக்குப் பணிய மறுத்த ஜைத்தான் உன்னுடைய நல்லடியார்களைத் தவிர மற்ற அனைவரையும் நான் வழிகெடுப்பேன் என்று அறைகூவல் விட்டுவிட்டு வந்தானே அவனுடைய அறைகூவல், ஒருவன் தொழுகை வரிசையில் நின்று அல்லாஹ்வை வழிபட முற்படும்போது தோற்றுப்போய்விடுகிறது. அதை எண்ணியும் அல்லாஹ் மகிழ்ச்சியடையலாம்.

இரண்டாவது நடு இரவில் தொழுகின்ற மனிதரைக் கண்டு சிரிக்கின்றான். மற்றவர்களெல்லாம் துயில்கொள்ளும் நடுநிசியில் இவன் மட்டும் எனையஞ்சித் தன் தூக்கத்தைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை வழிபடுகின்றானே என்று நினைத்தும் ஜைத்தானின் அறைகூவலைத் தோற்கடிக்கச் செய்துவிட்டானே என்று கருதியும் சிரிக்கிறான்; உவகை கொள்கிறான்.

நடுநிசியில் தொழுவது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாவது: மக்களே! (சலாம் எனும்) முகமனைப் பரப்புங்கள்; (பசித்தோருக்கு) உணவளியுங்கள்; மக்கள் உறங்கும்போது (நடுநிசி) இரவில் தொழுங்கள்; (இவற்றைச் செய்தால்) அமைதியான முறையில் சொர்க்கத்தில் நுழைவீர்கள். (திர்மிதீ: 2409) ஆகவே நடுநிசியில் தொழுவது அல்லாஹ்வின் அன்பிற்கும் அருளுக்கும் உரியதாகும்.

மூன்றாவது, போர்க்களத்தில் போராடுகின்ற மனிதர். இது பொதுவாகச் சொல்லப்பட்டாலும், படையினர் ஓடிவிட்ட பிறகும் அஞ்சாமல் கடைசி வரை போராடுகின்ற மனிதரையே குறிக்கிறது. தம் உயிரையும் துச்சமாகக் கருதி அல்லாஹ்விற்காக இறுதி வரை போராடுகின்ற ஒற்றை மனிதரைக் கண்டு அல்லாஹ் சிரிக்கிறான். ஜைத்தானின் அறைகூவல் தோற்றுப்போய்விட்டதை எண்ணி அல்லாஹ் மகிழ்ச்சி கொள்கிறான்.

மூன்று கண்களை நரகம் தீண்டாது. 1. அல்லாஹ்வின் பாதையில் பறிகொடுக்கப்பட்ட கண், 2. அல்லாஹ்வின் பாதையில் பாதுகாப்பு வழங்கிய கண், 3. அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்தத்ரக், 2430)

அல்லாஹ்வின் பாதையில் பறிகொடுக்கப்பட்ட கண் என்பது, அல்லாஹ்வின் பாதையில் எதிரிகளை எதிர்த்துப் போராடும்போது, எதிரிகளால் இழந்த கண். நபிகளார் காலத்தில் பல போர்கள் நடந்தன. அப்போது நபித்தோழர்கள் இஸ்லாமிய அறப்போரில் கலந்துகொண்டு தம் உடைமைகளை இழந்ததோடு தம் உயிர்களையும் இழந்தார்கள். அவர்களுள் சிலர் தம் உறுப்புகளை இழந்தார்கள். அதுபோன்று இழந்த உறுப்புகளுள் ஒன்றாகக் கண் இருந்தால் அக்கண்ணுக்கு உரிமையாளரை நரக நெருப்புத் தீண்டாது. இக்காலத்திலும் இஸ்லாமிய எதிரிகளால் முஸ்லிம்களின் உடலுறுப்புகள் சிதைக்கப்படுகின்றன; முஸ்லிம்கள் வெட்டப்படுகின்றார்கள். இத்தகைய முஸ்லிம்களுக்கும் நபிகளாரின் இக்கூற்று பொருந்தும்.

அல்லாஹ்வின் பாதையில் பாதுகாப்பு வழங்கிய கண். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்காகப் போருக்குச் செல்லும்போது இரவு நேரத்தில் சிலரைப் பாதுகாப்பிற்காக நிறுத்துவார்கள். அவர்கள் இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் தம் படையினரைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். தம் தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்த அந்தக் கண்களையுடையவர்களை நரக நெருப்புத் தீண்டாது.

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண். அல்லாஹ்வின் பயத்தாலும் அச்சத்தாலும் அவனுடைய தண்டனையைப் பயந்து அழுத கண்களை நரக நெருப்புத் தீண்டாது. மேற்கண்ட இரண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மட்டும் கிடைக்கப்பெற்ற வாய்ப்பு. சில நாடு, நகரங்களில் முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கு இக்காலத்திலும் அந்த வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் மூன்றாவது வாய்ப்பு மறுமை நாள் வரை உள்ள எல்லா முஸ்லிம்களுக்கும் கிடைக்கச் சாத்தியமுள்ளது. அல்லாஹ்வின் அச்சத்தால் ஒவ்வொருவரும் அழுகலாம். அதன்மூலம் நம் கண்களை நரக நெருப்பின் தீண்டுதலைவிட்டுத் தற்காத்துக் கொள்ளலாம்.

நான் அறிந்த அளவிற்கு நீங்கள் அறிந்திருந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 4621)  எனவே நாம் அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்து அவனை நினைத்து அழுதால் நம் கண்கள் நரக நெருப்பைவிட்டுப் பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய நற்பாக்கியத்தை உயர்ந்தோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.