புதன், 17 செப்டம்பர், 2014

இருதார மணம் ஷரீஅத்திற்கு எதிரானதா?


            -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

            உங்களுக்குப் பிடித்த பெண்களுள் இருவரையோ மூவரையோ நால்வரையோ மணமுடித்துக்கொள்ளுங்கள். (4: 3) ஒருவன் ஏதோ காரணத்திற்காக இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவனை இச்சமுதாயம் செய்யும் பரிகாசமும் கேலியும் கிண்டலும் கொஞ்ச நஞ்சமல்ல. இதோ போறானே, இவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன்; இவனுக்கு ஒன்னு இருக்கும்போதே ரெண்டாவது கேக்குதா?;  ஒன்னே வெச்சே கஞ்சி ஊத்த முடியல, இதுல ரெண்டாவது வேறயா?- இவை போன்ற கேலிப் பேச்சுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைதான் ஷரீஅத்படி இரண்டாம் திருமணம் முடித்த ஓர் ஆண் மகனுக்கு இருக்கிறது.

விபச்சாரம் செய்தவனைக்கூட இச்சமுதாயம் மன்னித்துவிடுகிறது. ஆனால் இரண்டாம் தாரமாக ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டால் அது ஷரீஅத்திற்கே எதிரானதைப் போன்ற, அருவருக்கத்தக்க செயலைச் செய்துவிட்டதைப் போன்ற முரண்பாடான தோற்றத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது இச்சமுதாயம்.

திருமணம் என்பது ஓர் ஆணுக்கான தேவை. சிலரின் தேவை ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கலாம். அதற்கான தீர்வை இஸ்லாம் கூறியிருக்கின்றது. அதை அவர் பயன்படுத்திக்கொள்ளும்போது அவரைக் குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி, ஒருவனுக்கு ஒருத்தி என்பது கிடையாது. மாறாக ஒருவனுக்கு ஒன்று முதல் நான்கு வரை எனச் சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. நான்கிற்கு மேல் சென்றால்தான் பழிக்க வேண்டும்; இகழ வேண்டும்; தண்டிக்க வேண்டும். அதேநேரத்தில் ஒரு பெண்ணைப் பொறுத்தமட்டில் ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைப்பாட்டைத்தான் இஸ்லாம் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நாம் பன்முகக் கலாச்சார மக்களோடு இணைந்து வாழ்வதால், நமக்குக் கொடையாக வழங்கப்பட்டுள்ள இஸ்லாமியப் பண்பாடுகளையும் சட்டங்களையும் பின்பற்றச் சங்கடப் படுகின்றோம்; வெட்கப்படுகின்றோம். இஸ்லாமியப் பண்பாடுகள், சட்டங்கள், நெறிமுறைகள் ஆகியவற்றின் பயன்களை நாமே புரியாமல் இருக்கின்றோம்; புரிந்தோர் பிறருக்கு அதன் நன்மைகளைப் புரிய வைக்காமல் அமைதியாக இருக்கின்றோம். அதனால்தான் நாம் பல்வேறு சிக்கல்களுக்குள் சிக்குண்டதோடு அவற்றிலிருந்து மீள வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றோம் என்பது நிதர்சன உண்மை.

ஒருத்தி இருக்கவே இரண்டாவதாக ஒருத்தியை மணமுடிப்பது ஷரீஅத்திற்கு எதிரானதைப் போன்ற தோற்றம் புரையோடிப் போயிருப்பதால்தான் நீண்ட காலம் வாரிசே இல்லாத் தம்பதிகளாகச் சிலர் வாழ்வதை நாம் காணமுடிகின்றது. இறுதி வரை வாரிசே இல்லாமல் அத்தம்பதிகள் இறந்தும் விடுகின்றனர். இந்நிலைக்கு ஆட்பட்ட ஓர் ஆண் தன் முதல் மனைவி மூலம் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாவிட்டால் மற்றொரு பெண்ணை மனைவியாக்கிக்கொண்டு அவள்மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துக்கொள்ள வழிகாட்டுகிறது இஸ்லாம். ஆனால் அத்தகைய ஒருவர் வேறொரு பெண்ணை மணமுடிக்க முன்வந்தால், அது அவ்வளவு எளிதன்று. ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வேற்று மதக் கலாச்சாரத்தில் மூழ்கிப்போயிருக்கிறது இஸ்லாமியச் சமுதாயம். அப்படியே அவர் மணமுடிக்க வேண்டுமென்றால் முதல் மனைவியை மணவிலக்குச் செய்ய வேண்டும்; அல்லது அவள் இறந்தபின் அவர் மணந்துகொள்ளலாம். இது தவிர வேறு வழியே இல்லை.

ஒரு மனைவியோடு வாழ்கின்ற ஒருவன், தன் மனைவியிடம் எத்தனையோ குறைகளைக் காணலாம். இல்வாழ்வில் நாட்டமின்மை, குழந்தைகள் பெற்றுக்கொள்ள விருப்பமின்மை, இரத்தசோகை, சர்க்கரை நோய் போன்ற தீராத நோய்கள் உள்ளிட்ட எத்தனையோ குறைபாடுகளைக் காணலாம்.  ஆனால் அவன் பெருந்தன்மையோடு அந்த மனைவியோடு வெறுமனே வாழ்ந்துகொண்டு, வேறொரு பெண்ணையும் மணந்து கொள்ளலாம் என எண்ணுகின்றான். இவ்வளவு காலம் தன்னோடு வாழ்ந்தவளைத் திடீரென ஏன் மணவிலக்குச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு  இரண்டாம் தாரமாக ஒருத்தியை மணந்துகொள்ள நாட்டம் கொள்கின்றான். ஆனால் இத்தகைய இளைஞனுக்கு இச்சமுதாயம் அவ்வளவு எளிதில் பெண் கொடுத்துவிடாது. ஏன், ஒரு கைம்பெண்ணோ, மணமுறிவு பெற்றவளோகூட அவ்வளவு எளிதில் முன்வருவதில்லை; வாழ்க்கையைப் பங்குபோட்டுக்கொண்டு விட்டுக் கொடுத்து வாழ எப்பெண்ணும் முற்படுவதில்லை. மேலும் ஷரீஅத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. 

ஒருவனுக்கு ஒருத்தி இருக்கவே இரண்டாம் தாரமாக மற்றொருத்தியை மணந்துகொள்வதற்கான இயல்பான சூழ்நிலை சமுதாயத்தில் இல்லாததால்தான், அதிகமான மணமுறிவுகள் (தலாக்) நிகழ்கின்றன. ஆம், தன் மனைவி அடிக்கடி சண்டைபோடுகிறாள்; அடிக்கடி கோபப்படுகின்றாள்இத்தகைய ஏதோ காரணத்திற்காகத் தன் மனைவியைப் பிடிக்கவில்லை. சரி, அதைப் பொறுத்துக்கொண்டு வேறொரு பெண்ணையும் மணந்துகொண்டு வாழலாம் என்று நினைத்தால் இச்சமுதாயம் பெண் கொடுக்காது. மாறாக, ஏளனம் செய்யும்; ச்சீ எனத் துப்பும். அதற்காக இவளை மணவிலக்குச் செய்துவிடுவதுதான் ஒரே வழி. அப்போதுதான் நாம் வேறொரு பெண்ணை மணந்துகொள்ள முடியும் எனத் தீர்மானித்துவிடுகின்றான். அதனால்தான் மணவிலக்குகளும் மணமுறிவுகளும் தொடர்கின்றன.

மணவாழ்க்கையை இழந்த பெண்கள், எவ்விதப் பொறுமையுமின்றி மணவாழ்க்கையை முறித்துக்கொண்ட ஆண்களை விரும்புவர். ஆனால் தன் மனைவியின் குறைகளைப் பொறுத்துக்கொண்டு பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் வாழ்கின்ற ஓர் ஆண், இரண்டாம் தாரமாக மற்றொரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள முன்வந்தால் அவனைக் கேலியும் கிண்டலும் செய்வர்; எள்ளிநகையாடுவர்; புறக்கணிப்பர்.

இன்னும் சற்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு, மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, எதிர்பாராவிதமாக இல்வாழ்வை இடையிலேயே இழந்துவிட்ட பல பெண்கள் இச்சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள்கூட ஓர் ஆடவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட முன்வருவதில்லை. தனக்கும் தன் குழந்தைகளுக்கும் ஒரு காப்பாளனாக இருக்கட்டுமே என்ற எண்ணமில்லை. தனக்கெனத் தனியாக ஒருவன் வேண்டும்; அவனுக்கு ஏற்கெனவே மனைவி இருக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் திருமணத் தகவலுக்கான வலைத்தளங்களில் பதிவு செய்து வைக்கின்றார்கள் பன்முகக் கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்ட  இம்மங்கையர்.

ஒருவன் நல்லதொரு நிறுவனத்தில் பணியாற்றுகின்றான்; கை நிறையச் சம்பாதிக்கின்றான்ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை வைத்து வாழ்க்கை நடத்த முடியும்; உடல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எந்தக் குறையுமில்லை. இத்தகைய ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட இச்சமுதாயத்தில் ஒரு பெண் உண்டா? ஒரு விதவைப் பெண்ணாவது முன்வருவாளா? வாழ்க்கையில் கையறு நிலையில் உள்ள, குழந்தையோடு மணவாழ்க்கையை இழந்துவிட்ட மங்கையாவது அவனை ஏற்றுக்கொள்வாளா?

ஒருவன் ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக மணமுடித்துக்கொள்ள அவன் உடல்ரீதியாகத் தகுதியானவனா என்பதைத்தான் முதலாவதாக நோக்க வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியாகத் தகுதியானவனா என்ற கோணத்தில் உற்று நோக்குவது சமுதாயத்தின் அறியாமையேயாகும். ஏனெனில் இவ்வுலகில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் உணவு கொடுக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் கையிலுள்ளது. அது குறித்துக் கவலை கொள்ள வேண்டிய தேவையே இல்லை. அல்லாஹ்  திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாமே அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கின்றோம்.   (17: 31) உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. அவை (வாழ்ந்து) இருக்குமிடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். (11: 06) ஒருத்தி இருக்கும்போது இரண்டாவதாக மற்றொருத்தியைத் தாரமாக்கிக் கொள்பவனுக்கு அதற்கேற்றாற்போல் உணவு வழங்குவது இறைவனின் பொறுப்பு. மேலும், நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு உணவு கொடுக்க முடியாமல்தான் அவளுக்குத் திருமணம் செய்துகொடுக்கின்றீர்களா? இல்லையே!
திருமணம் பாலுணர்வின் வடிகால் என்று எண்ணுவதைத் தவிர, ஒருவன் ஒரு பெண்ணை மணந்துகொள்வதன்மூலம் வேறு எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. அவ்விருவரும் நிறைவேற்ற வேண்டிய எத்தனையோ சமுதாயப் பொறுப்புகள் இருக்கின்றன; அவ்விருவரும் இணைந்து சாதிக்க வேண்டியவை இருக்கின்றன. ஒருவன் தன் மனைவியரோடு இணைந்து சமுதாயச் சேவைகள் செய்யவோ, இயலாத மக்களுக்கு உதவிகள் செய்யவோ, மார்க்கப் பிரச்சாரம் செய்யவோ, மார்க்கச் சட்டங்களைப் போதிக்கவோ விரும்பலாம். இவற்றையெல்லாம் யாரும் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திப்பதே இல்லை; திருமணம் என்றவுடன் சிந்தையில் முந்திக்கொண்டு வந்து நிற்கும் ஒன்றை மட்டும் நினைத்துக்கொண்டிருப்பதே நம்முள் பலரின் வாடிக்கை. அதனால்தான்  ஒருவன் இரண்டாம் தாரமாக ஒருத்தியை மணந்துகொண்டான் என்று கேள்விப்பட்டதும் ஏளனம் செய்யத் தொடங்கிவிடுகின்றார்கள்.

ஷரீஅத் சட்டப்படி இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட முன்வராத பெண்கள் அல்லது தம் மகளை இரண்டாம் தாரமாக மணமுடித்துக் கொடுக்க முன்வராத பெற்றோர், "இச்சமுதாயத்தில் வரதட்சணை மிகுந்துவிட்டது; இளைஞர்கள் வரதட்சணை வாங்கிக்கொண்டுதான் மணமுடிக்கின்றார்கள்'' என்று பேசுவது எவ்வகையில் நியாயம்? மக்கள் ஷரீஅத் சட்டங்களைப் பின்பற்றி வாழ முனையாதபோது, சமுதாயத்தில் தமக்கெதிரான பழக்கவழக்கங்கள் உண்டாகத்தான் செய்யும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது அவர்களுக்குப் பாதகமாக அமையும்போதுதான் அதன் வலியையும் வேதனையையும் அவர்கள் உணர்வார்கள்.

இளவயதில் வாழ்க்கையை இழந்தவள்; பிள்ளையைப் பெற்றுக்கொண்டு இளவயதில் கணவனை இழந்தவள்; பிள்ளையின்றி வாழ்க்கையை இழந்து முப்பது வயதைத் தாண்டிவிட்டவள்; வாழ்க்கையை இழந்து, பிள்ளைகளை வைத்துக்கொண்டு பணிக்குச் செல்பவள்; பணிக்குச் செல்லாமல் கையறு நிலையில் இரண்டு, மூன்று குழந்தைகளோடு தாய் வீட்டில் வாழ்க்கையை வெறுமனே கழித்துக்கொண்டிருப்பவள்-இப்படிப் பல்வேறு நிலைகளில் நம் சமுதாயப் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் எதிர்காலம் சீரும் சிறப்புமாக அமைய ஷரீஅத் தெளிவான, எளிய வழியைக் காட்டியிருக்கின்றது.

எனவே தம் வாழ்க்கை இம்மையில் இஸ்லாமிய மார்க்கச் சட்டப்படி அமைய வேண்டும் என்ற நாட்டமுள்ள பெண்கள் பிற மதக் கலாச்சாரப் பழக்கவழக்கங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தன்னை மணக்க வரும் ஆடவனுக்கு, தான் எத்தனையாவது தாரம் என்று பாராமல், தன்னை இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாழ அனுமதிப்பானா என்ற கோணத்தில் மட்டும் பார்த்து மணந்துகொள்ள முன்வாருங்கள். அல்லாஹ்விற்காகவும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்காகவும் விட்டுக் கொடுத்து, பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள். இங்ஙனம் செயல்பட்டால் உங்களின் இம்மை-மறுமை வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
===============