புதன், 10 நவம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 13)



கஅபாவை நிர்மாணித்தல்


பின்னர், அவர் தம் குடும்பத்தினரைச் சந்திக்காமல் நீண்ட காலம் வரை தங்கிவிட்டார். அதன் பிறகு ஒரு தடவை அவர்களிடம் வந்தார். அப்போது, இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் ஊற்று அருகே இருந்த அடர்ந்த நிழல் தரக்கூடிய மரத்தின்கீழ் தம்முடைய அம்பைத் தீட்டிக்கொண்டிருந்தார். அவர் தம்முடைய தந்தையைக் கண்டவுடன் அவரை நோக்கி எழுந்துசென்று வரவேற்றார். பின்னர், தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொண்டனர். அதன் பின்னர், இஸ்மாயீலே! திண்ணமாக அல்லாஹ் எனக்கு ஒரு பணியை ஏவியுள்ளான் என்று கூறினார். (அப்படியா யின்)உம்முடைய இறைவன் ஏவிய விசயத்தைச் செய்து முடிப்பீர்! என்று மகன் கூறினார். நீர் எனக்கு ஓர் உதவிசெய்வீரா? என்று அவர் தம் மகனிடம் கேட்டார். நான் உமக்கு உதவிசெய்வேன் என்று மகன் கூறினார். திண்ணமாக அல்லாஹ், இங்கு ஓர் இறையில்லத்தைக் கட்டுமாறு என்னை ஏவியுள்ளான் என்று கூறிவிட்டு, அதனைச் சுற்றியிருந்த உயர்ந்த ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார்.
அதன் பிறகு, அவ்விருவரும் இறையாலயத்திற்கான அடித்தளத்தை நிறுவினர். இஸ்மாயீல் நபி கற்களை எடுத்துவர, அவருடைய தந்தை இப்ராஹீம் நபி கட்டடத்தைக் கட்டினார். இறுதியில், கட்டடம் உயர்ந்துவிட்டது. (மகாமு இப்ராஹீம் எனும்) அந்தக் கல்லைக்கொண்டு வந்து, அவருக்காக வைத்தார். அவர் அதன் மீது ஏறி நின்றுகொண்டு கட்டடத்தைக் கட்டினார். இஸ்மாயீல் அவருக்கு உதவியாகக் கற்களை எடுத்துக்கொடுத்தார். அப்போது அவ்விருவரும் கூறினர்: எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக! திண்ணமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய். (2: 127)


அவ்விருவரும் அதைக் கட்டத் தொடங்கி, அதைச் சுற்றிவந்தபோது அவ்விருவரும் கூறினார்கள்: எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! திண்ணமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய் (2: 127) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


இப்ராஹீமுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே நடைபெற்ற நிகழ்வுகளெல்லாம் நடந்து முடிந்தன. அதன் பின்னர், அவர் தம் மகன் இஸ்மாயீலையும் இஸ்மாயீலின் தாயையும் (ஒரு வெட்டவெளியை நோக்கி) அழைத்துச் சென்றார். அவர்களிடம் ஒரு குடுவை இருந்தது. அதில் தண்ணீர் இருந்தது. அதன்பின் நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார்கள். (நூல்: புகாரீ)1


விருத்தசேதனம் செய்தல்


தவ்ராத் வேதத்தையுடையவர்கள் கூறியுள்ளனர்: நிச்சயமாக அல்லாஹ், இப்ராஹீமிடம் தம் மகன் இஸ்மாயீலுக்கும் அவருடன் இருந்த எல்லா அடிமைகளுக்கும் மற்றவர்களுக்கும் விருத்தசேதனம் செய்யுமாறு ஏவினான். எனவே, அவர் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தார். இது அவருடைய 99 ஆம் வயது முடிவுற்றபின் நிகழ்ந்ததாகும். அந்நேரத்தில் இஸ்மாயீல் நபியின் வயது 13 ஆகும். இது, அவருடைய குடும்பத்தினர் அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் செய்த செயலாகும். இதை அவர் கடமை என்ற அடிப்படையில்தான் செய்தார். இதனால்தான் அறிஞர்கள், இது ஆண்கள் மீது கடமை (வாஜிபு) என்று கூறியுள்ளனர். இது பற்றி விளக்கமாக அதற்குரிய இடத்தில் பின்னர் கூறப்படும். இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் எண்பதாம் வயதில் கட்டைகளைச் செதுக்கக்கூடிய கருவியால் (கதூம்-வாய்ச்சி) விருத்தசேதனம் செய்துகொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)2


சில அறிவிப்புகளில் பின்வருகின்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன: இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் எண்பதாம் வயதுக்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார். அவர் கட்டைகளைச் செதுக்கக்கூடிய கருவியால் (கதூம்-வாய்ச்சியால்) விருத்தசேதனம் செய்துகொண்டார். (நூல்: முஸ்னத் அஹ்மத்) இங்கு இடம்பெற்றுள்ள `கதூம் எனும் சொல் ஒரு கருவியின் பெயரைக் குறிக்கிறது. அது ஓர் இடத்தின் பெயர் என்றும் கூறப்படுகிறது. மேற்கண்ட நபிமொழியில் இடம்பெற்றுள்ள `எண்பது வயது எனும் வார்த்தை அதைவிட அதிக வயது என்பதற்கு முரண் இல்லை. அல்லாஹ்வே நன்கறிந்தவன். அவருடைய மரணம் குறித்த நபிமொழியில் இது பற்றிய விளக்கத்தைக் காணலாம். இப்ராஹீம் நபி, தம்முடைய நூற்று இருபதாம் வயதில் விருத்தசேதனம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)


அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபியா?


அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்ற வரலாறு மேலே எவ்விடத்திலும் கூறப்படவில்லை. அதேநேரத்தில் இப்ராஹீம் நபி தம் மகனார் இஸ்மாயீலைத் தேடி மூன்று தடவைதான் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் முதலாவது தடவை, ஹாஜிருடைய மரணத்திற்குப் பிறகு இஸ்மாயீல் நபி திருமணம் செய்துகொண்ட பின்னர் சந்திக்க வந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில், இஸ்மாயீல் நபியின் குழந்தைப் பருவம் முதல் அவருடைய வாலிபப் பருவம் வரை அவர்களுடைய (மனைவி, மகன்) நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலே, அவர்களைச் சந்திக்காமலே எப்படி அவர் விட்டிருப்பார்? அவருக்கு நிலம் (எளிதில் பயணம் செய்யத்தக்க வகையில்) சுருக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அவர் அவர்களைச் சந்திக்கச் சென்றால், புராக் வாகனத்தில்தான் பயணம் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, அவருடைய மகனும் மனைவியும் உச்சக்கட்டத் தேவையில் இருந்தநிலையில் அவர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் அவர் எப்படிப் பின்தங்கியிருப்பார்? மேற்கண்ட தகவல்களை வைத்துக்கொண்டு இப்ராஹீம் நபி பற்றி இவை போன்ற கேள்விகளை கேட்கத் தோன்றுகிறது.
ஆகவே, மேற்கண்ட தகவல்களுள் சில கட்டுக்கதைகளும் மர்ஃபூஉ ஹதீஸ்களோடு வேறு சில வார்த்தைகளைச் சேர்த்து அலங்கரிக்கப்பட்டவையுமே ஆகும். அதில் அறுக்கப்பட்டவரின் வரலாறு கூறப்படவில்லை. ஆனால், அஸ்ஸாஃப்ஃபாத் அத்தியாயத்தில் உள்ளபடி, அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்பதற்கு நாம் ஆதாரம் காட்டியிருக்கிறோம். இது மிகவும் சரியான வரலாறு ஆகும். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்) 


அறுக்கப்பட்டவரின் வரலாறு


* மேலும், அவர் கூறினார்: திண்ணமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; அவன் எனக்கு நல்வழியைக் காண்பிப்பான். என்னுடைய இறைவா! நீ எனக்கு நல்லோர்களிலிருந்து (ஒரு சந்ததியை) அளிப்பாயாக! (என்று பிரார்த்தனை செய்தார்). எனவே, நாம் அவருக்கு சகிப்புத் தன்மையுடைய (இஸ்மாயீல் எனும்) ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறினோம்.


பின், (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய வயதை அடைந்தபோது அவர், என்னருமை மகனே! நான் உன்னை திண்ணமாக அறுத்துப் பலியிடுவதாகக் கனவுகண்டேன். இதைப் பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! என்று கூறினார். (அதற்கு மகன்) கூறினார்: என்னருமைத் தந்தையே! நீர் ஏவப்பட்டபடியே செய்வீர். அல்லாஹ் நாடினால்- என்னை நீர் பொறுமையாளர்களுள் உள்ளவராகவே காண்பீர். ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, அவர் (இப்ராஹீம்) அவரை (இஸ்மாயீலைப்) பலியிட முகங்குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை இப்ராஹீமே! என்று அழைத்தோம்.


திண்ணமாக, நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்திவிட்டீர்; நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலிகொடுக்கிறோம். இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக்கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும், அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு நினைவூட்டுதலை) விட்டுவைத்தோம். இப்ராஹீம் மீது சாந்தி உண்டாவதாக! இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலிகொடுக்கிறோம். நிச்சயமாக அவர் இறைநம்பிக்கையாளர்களான நம் அடியார்களுள் உள்ளவர். நல்லோர்களிலுள்ள நபியாக இஸ்ஹாக்கை அவருக்கு (மகனாகத் தருவதாக) நாம் நற்செய்தி கூறினோம்.


நாம் அவர்மீதும், இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம். மேலும், அவ்விருவருடைய சந்ததியருள் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; தமக்குத்தாமே பகிரங்கமாக அநியாயம் செய்துகொள்வோரும் இருக்கின்றனர். (37: 99-113)


இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை


இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்முடைய நாட்டைவிட்டுத் துறந்து சென்றபோது, அவர் தம் இறைவனிடம், தமக்கு ஒரு நல்ல குழந்தையை வழங்குமாறு பிரார்த்தனை செய்தார் என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே, அவர் பிரார்த்தனை செய்த தற்கு இணங்க, பொறுமைமிக்க ஆண் குழந்தையைத் தருவதாக அவன் அவருக்கு நற்செய்தி கூறினான். அவர்தாம் இமாயீல் ஆவார். ஏனெனில், இப்ராஹீம் நபியின் எண்பத்து ஆறாம் அகவையில் பிறந்த முதல் குழந்தையே இமாயீல் (அலை) அவர்கள்தாம். மார்க்க அறிஞர்கள் மத்தியில் இதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஏனெனில் அவர்தாம் இப்ராஹீம் நபியின் முதற் குழந்தை.




----------------அடிக்குறிப்பு------------------------


1) மேற்கண்ட ஹதீஸ்கள் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் கருத்துகளாகும். அவற்றுள் சில மர்ஃபூஉ நிலையில் உள்ளன. மேலும், அவற்றுள் சில `ஹரீப் தரத்தில் உள்ளன. இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியவற்றுள் சில இஸ்ராயீலிய்யா-கட்டுக்கதைகளைச் சார்ந்தவை ஆகும். அதில் ஒன்று, (இப்ராஹீம் நபி இறையாலயத்தைக் கட்டிய)அப்போது இஸ்மாயீல் பால்குடிப் பாலகராக இருந்தார் என்பது ஆகும்.


2 ) அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ள இதே நபிமொழி `முஸ்லிம் நூலிலும் இடம்பெற்றுள்ளது.



அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

கருத்துகள் இல்லை: