புதன், 15 ஜூலை, 2009

ஆபத்தைத் தரும் "ஆஸ்பெஸ்டாஸ்"



தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் "ஆஸ்பெஸ்டாஸ்" எனப்படும் கல்நார் ஓடுகளால் வேயப்பட்டு, அவை மாணவர்கள், ஆசிரியர்களின் உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக உள்ளன.
ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதோடு, மனிதர்களின் உடல் நலத்துக்கும் தீங்கு விளைவிப்பவை என்பதால், உலக நாடுகள் பலவற்றிலும் இந்த ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகளின் பயன்பாட்டுக்குப் பெரிதும் எதிர்ப்பு உள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரி டாக்டர் ராபர்ட்
ராஜையா கூறுகையில், "கல்நாரில் கிரைசோடைல், அமோசைட், குரோசிடோலைட் என்ற மூன்று வகைகள் இருந்தாலும் கட்டடங்களின் மேற்கூரை கட்ட கிரைசோடைல் என்ற கல்நார் வகையே பயன்படுகிறது.

ஆஸ்பெஸ்டாஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமின்றி, அதன் அருகில் வசிப்பவர்கள்கூட, அதன் தூசியை சுவாசிப்பதால் ""நியூமோக்கோனியாஸிஸ்'' என்ற சுவாசக் கோளாறு நோய் அவர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது.
ஆஸ்பெஸ்டாஸ் கூரை மூலம் வெளிவிடப்படும் தூசியானது, மி.மி.க்கும் குறைவாகவே உள்ளதால் அதை சுவாசிக்கும் போது, நுரையீரல்களில் தங்கி விடும். நீண்ட காலம் கழித்து இவை நுரையீரல் திசுக்களில் தழும்பை ஏற்படுத்தும். இதனால் நுரையீரலில் தசைப் பெருக்கம் ஏற்பட்டு மூச்சுத் திணறலும், ஆக்ஸிஜன் குறைபாடும் ஏற்படும். ஆஸ்பெஸ்டாஸின் நச்சுத்தூசியைத் தொடர்ந்து சுவாசிப்பதால் நுரையீரல் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்றார் அவர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.லாசர் கூறுகையில், "ஆஸ்பெஸ்டாஸ் மூலம் சுற்றுச்சூழல் பெரிதும் மாசடைகிறது. இதனால், ஆஸ்பெஸ்டாஸ் தயாரிப்புக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடை உள்ளது என்றார்.
ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகளில்தான் இந்த பாதிப்பு அதிகம் என்றாலும், ஆஸ்பெஸ்டாஸ் கூரையின்கீழ் படிக்கும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் இந்த பாதிப்பு ஓரளவு உண்டு எனலாம். இதனால் சுவாசித்தலில் குறைபாடும், தோல் சம்பந்தப்பட்ட நோயும் வர வாய்ப்புகள் உண்டு' என்றார் அவர்.
நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை: