வியாழன், 23 ஜூலை, 2009
அனைத்து வயதினருக்கும் அஞ்சல்வழிக் கல்வி
ஆங்கிலக் கல்வியின் மோகத்தால் பீடிக்கப்பட்டுள்ள பெற்றோர் பலர் தம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மெட்ரிகுலேஷன் ஆங்கிலோ இந்தியன், சி.பி.எஸ்.இ பள்ளிகளின் கொள்ளைக் கட்டணம், பிள்ளைகளின் முதுகில் புத்தகச் சுமை, ஆட்டோ, வேன் கட்டணம், பல்வேறு பெயர்களில் கூடுதல் கட்டணம், சீருடை, கூடுதல் புத்தகங்கள், இடுப்பு வார், காலணி என பணத்தைச செலவழிப்பதால் பெற்றோர்கள் சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆனால், இவை எதுவும் இல்லாமல் பள்ளிகளுக்குச் செல்லாமலே பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்த ஆங்கில வழிக் கல்வியைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க முடியும். அதற்கு மத்திய அரசு 1990 ஆம் ஆண்டு இயற்றிய சட்டத்தின்படி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங் (தேசிய திறந்தவெளிக் கல்விப் பயிலகம்)என்ற அமைப்பு சத்தமின்றி இயங்கி வருகிறது. அஞ்சல் மூலம் டிகிரி படிப்பதைப்போல் அஞ்சல் மூலம் பள்ளிப் படிப்பை வழங்கும் நிறுவனம்தான் இது.
இந்நிறுவனம் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய ஐந்து நிலைகளில் படிப்பை வழங்குகிறது. அந்தந்த வயதுச் சான்றிதழைக் காட்டிப் பதிவு செய்து கொண்டால்போதும். இந்நிறுவனம் தேவையான பாடப்பிரிவுகளில் கற்பித்து. தேர்வு நடத்தி. சான்றிதழ் வழங்குகிறது. இச்சான்றிதழ் நாடு முழுவதும் சட்டப்படி செல்லத்தக்கது. போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்க முடியும்.
இதன் தலைமை அலுவலகம் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது. நாடு முழுவதும் கிளை அலுவலகங்கள் உள்ளன. மாணவர்களுக்குப் பாடங்களை கற்பிப்பதற்கு 1500 க்கும் மேற்பட்ட படிப்பகங்கள் உள்ளன. இதில், சேரும் மாணவர்களுக்கு வார நாட்கள், வார இறுதி நாட்கள் என இரண்டு விதங்களில் வகுப்புகள் நடைபெறும்.
தமிழகத்தில் 27 பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னையில், சி.பி.இராமசாமி அய்யர் ஃபவுண்டேஷன், மியாசி மெட்ரிகுலேஷன், ஆவடி கேந்திரிய வித்யாலயா ஆகிய இடங்களில் இந்த வகுப்புகள் நடக்கின்றன. மிக மிகச் சொற்பக் கட்டணத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பை முடித்துச் சான்றிதழ் பெற முடியும். ஆங்கிலம், உர்தூ வழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் தேர்வு எழுத முடியும்.
10, 12 ஆம் வகுப்புகளுக்குக் குறைந்தபட்சம் ஐந்து பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். கூடுதலாக நமக்குப் பிடித்த இரண்டு பாடங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். 10ஆம் வகுப்புக்கு ஐந்து பாடங்களுக்கும் மொத்தக் கட்டணம் 1000 ரூபாய். மாணவிகளுக்கு 750 ரூபாய் மட்டுமே.
மேலும் விபரங்களுக்கு: www.nos.org (நன்றி : மக்கள் ரிப்போர்ட் )
லேபிள்கள்:
அஞ்சல்வழிக் கல்வி,
மக்கள் ரிப்போர்ட்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக