ஞாயிறு, 12 ஜூலை, 2009

பெரும் எதிர்பார்ப்புகள்

ஒரு நாள் மாலை என்னுடைய முதல் பிரசவப் பரிசோதனையைச் செய்துகொண்டேன். அது ரமழானுடைய கடைசி இரவு. நான் என்னுடைய பரிசோதனையின் முடிவுக்காக காத்திருந்தபோது என் உடல் என்னையறியாமல் நடுங்கத் தொடங்கியது. நான் அதை மிகச் சிரமமாகக் கருதினேன். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, நேரம் நெருங்க நெருங்க நான் அதை மிகுந்த ஆவலுடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்த்திருந்தேன். அதேநேரத்தில் எதிர்மறையான நினைவுகளுடனும் கவலையுடனும் நான் காணப்பட்டேன்.

நான் தாயாகப் போகின்ற எண்ணம் என்னை மகிழ்ச்சியில் மூழ்கடித்தது. புதிதாக மணமுடிக்கப்பட்ட தம்பதிகள், தொடக்கத்தில் சில காலம் மட்டும் தனித்து விடப்படுவர். பின்னர் நம்முடைய பொறுப்புகள் நம்மை முழுமையான மாற்றத்தில் ஆழ்த்திவிடும். மேலும், தாய்மையை அடைகின்ற அப்பருவத்தில் உடற்கூறில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்.

எனினும் அந்நேரத்தில் என்னுடைய எதிர்மறையான முடிவைத் தரும். எப்போது எனக்குக் குழந்தை பிறக்கும் என்பதைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நான் தாய்மைப்பேற்றின் சுமையைக் கருதியும் அதன் தாங்கமுடியாத வேதனையைப் பற்றியும் கவலையடையவில்லை. இருப்பினும் அந்த எண்ணம் என்னைச் சிரமப்படுத்தியது. பரிசோதனையின் முடிவுக்கான எதிர்பார்ப்பு என்னைத் தொலைத்துவிட்டது, பாடாய்ப்படுத்திவிட்டது.

நான் அதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த வண்ணம் தஹஜ்ஜுத் தொழுகைக்காக என்னுடைய அறையை நோக்கி நடந்தேன். அந்த நேரத்தில் என் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அது உனக்குப் புதிராகத் தோன்றினாலும் எனக்கு அது தோன்றவே செய்தது. அதாவது, அந்த இடத்திற்கு வந்தது மிகச் சரியானதே என்று நான் நம்புகிறேன். மிகச் சிறந்த தாயாக ஆவது மட்டும் என்னுடைய நோக்கமில்லை. மாறாக, மகத்துவமும் மேன்மையும் மிக்க அல்லாஹ்வை வணங்குவதே என்னுடைய தலையாய நோக்கமாகும். நான் மணமுடிக்கப்பட்டவளாகவோ தனியாகவோ தாயாகவோ மலடியாகவோ- எந்த நிலையில் இருந்தாலும் நான் எனைப் படைத்த இறைவனை வணங்குவதே என் தலையாய கடமையும் நோக்கமும் ஆகும். எனவேதான், இருள் சூழ்ந்திருந்த என் அறைக்குள் நான் தொழுது முடித்தபின் இறைவா! என்னை நீ திருப்திகொள்வாயாக! உன் அன்பைப் பெறத்தக்க இறையச்சமுள்ள வாழ்க்கையை எனக்குக் கொடுப்பாயாக! இரவும் பகலும் உன்னை மட்டுமே முழுமையாக வணங்கக்கூடிய பாக்கியத்தைத் தருவாயாக! என்று கேட்டேன்.

பின்னர் என்னுடைய பிரசவப் பரிசோதனையின் முடிவைப் பெறுவதற்காக விரைந்தேன். ஏனெனில், இப்போது அதற்கான நேரம் நெருங்கிவிட்டது. அதோ என்னுடைய பரிசோதனையின் முடிவு நேர்மறையாகவே அமைந்துவிட்டது.

அதைக் கண்டு நான் அடைந்த பேரானந்தத்திற்கு அளவே இல்லை. திருமணத்தின் முந்தைய வாரங்களில் எனக்குள் படர்ந்திருந்த பெருங்கவலையும் பீதியும் சட்டென மறைந்துவிட்டது. அல்ஹம்து லில்லாஹ். என்னே அல்லாஹ்வின் கருணை! நான் எப்போதும் சொல்வதுண்டு: அதாவது, நான் குழந்தைப் பாக்கியத்தைப் பெற்றால் இம்ரானின் மனைவி தம்முடைய குழந்தை மர்யம் (அலைஹஸ் ஸலாம்) அவர்களை எதிர்பார்த்திருந்தபோது சொன்ன வார்த்தைகளையும் அவர்கள் செய்த துஆவையும் நானும் செய்வேன். அல்லாஹ்விற்கு நன்றி சொல்ல அவர்கள் செய்த அந்த துஆவே எனக்கு மிகச் சிறந்த வழியாகத் தோன்றியது.

“என் இறைவா! நிச்சயமாக என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்துகொண்டேன். ஆகவே (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுபவனாகவும் யாவையும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய்.” (3: 35) என்று அவர் பிரார்த்தனை செய்ததைப் போல நானும் பிரார்த்தனை செய்யவே நாடினேன்.

பிறகு, மற்றொரு கவலை என்னைப் பற்றிக் கொண்டது. அந்தக் கரு ஆரோக்கியமாக இருக்குமா? பிரசவிக்கச் சிறந்த இடம் எது? பிரசவத்திற்குச் சில மாதங்களுக்கு முன்பே நாம் பயணிக்க வேண்டுமா? அல்லது சில வாரங்களுக்கு முன்பு செல்ல வேண்டுமா? இவ்வாறு என்னுடைய பற்பல எண்ணங்களும் சிந்தனைகளும் முடிவுறவே இல்லை. இறுதியில் பெரும்பயம் என்னைக் கவ்விக்கொண்டது. அப்போதுதான் எதிர்பாராவிதமாக எனக்கு (மாதாந்திர) உதிரம் சொட்டத் தொடங்கிவிட்டது. என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் உணரத் தொடங்கினேன். அதாவது “எத்துணை இலட்சம் மக்கள், அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களின் உடலுறுப்புகள் தன்னிச்சையாகவே இயங்கிக்கொண்டிருக்கின்றன.” என்னுடைய கருச்சிதைந்துவிடாமல் இருக்க நான் என்னால் இயன்றதைச் செய்ய விரும்பினேன். இருப்பினும் என்னால் அதைத் தடுக்க முடியவில்லை. ஆகவே நான் உதவியற்றவளாகவும் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவளாகவும் ஆகிவிட்டேன்.

ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய உடல் உறுப்புகளின் கட்டளைப்படி இயங்க, நடக்க, பேச மற்றும் செய்ய முனைகிறோம். உடல் உறுப்புகளுடைய கட்டுப்பாட்டின் இந்த மாயையில் நம்முடைய ஒவ்வோர் உறுப்பின் இயக்கமும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நிகழ்கிறது என்பதை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம். நாம் பெற்றோராகின்றபோது (அல்லது பெற்றோராகின்ற வாய்ப்பு வழங்கப்படுகின்ற போது) சற்றுக் கூடுதலாகவே நாம் கட்டுப்பாட்டின் மாயையில் சிக்கிக்கொள்கின்றோம். அதாவது, என்னமோ நாம்தாம் அந்தக் குழந்தைக்கு உயிர்கொடுத்து, நாமே உடையளித்து, நாமே உணவளித்து, நாமே வளர்ப்பதைப்போல் எண்ணிக்கொள்கின்றோம். மேலும் அந்தக் குழந்தையை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அதனுடைய விதியைத் தீர்மானிக்க முனைகின்றோம்.
எவ்வளவு இறையச்சமுடையவராக இருந்தாலும் பரவாயில்லை. நான் மர்யமின் தாய் செய்த உன்னதமான பிரார்த்தனையை உணர்ந்துகொண்டுவிட்டேன். எந்தச் சூழ்நிலையில் அவர்கள் அந்தப் பிரார்த்தனையைச் செய்திருப்பார்கள் என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. நான் இப்போது ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக எண்ணுகின்றேன். அதனாலேயே இதற்குரிய தகுதியுடையவளாக ஆகிவிட்டேன். எனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது, எனக்குள் ஒரு சிந்தனைக் கீற்றை உண்டுபண்ணிவிட்டது. அதாவது, அல்லாஹ் ஒருவனே உயிர்கொடுக்கின்றான். அவன் ஒருவனே இறப்பிற்குக் காரணமாகின்றான்.

இவை அனைத்தும் அவனிடமிருந்தே நிகழ்கின்றன. இவை அனைத்தும்-ஆரம்பம் முதல் இறுதி வரை- அவனுடைய ஒரு சோதனையே. பெற்றோராகுதல் என்பதும் ஒரு சோதனையே. குழந்தைகள் எவ்வாறு படிப்படியாக வளர்ச்சி பெற்று வெளியே வருகின்றன என்பது முக்கியமில்லை. மாறாக, இது நம்முடைய மனத்தூய்மைக்கு (இக்லாஸ்) ஏற்படுகின்ற தொடர்படியான சோதனையாகும். கருவுருதல் என்பது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த நடைபெறுகின்ற ஒரு சோதனையே ஆகும். அல்லாஹ்வின் பாதுகாவல் மீது நம்பிக்கை வைக்கின்ற சோதனையாகும். அல்லாஹ்வின் அருளை அடைவதற்கான ஒரு சோதனையாகும். மேலும் கருச்சிதைவு என்பது அல்லாஹ்வின் முழுமையான ஆற்றலையும் வலிமையையும் அறிந்துகொள்ள உதவுகின்ற வழியாகும்.

பெற்றோராகுதலைப் பற்றி நீ இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால் எத்தனையோ பெற்றோர் தம் பிள்ளைகளிடம் காட்டுகின்ற மரியாதை மாறும். எத்தனையோ பேர்களுடைய எதிர்மறையான எண்ணம் நேர்மறையாக மாறும். அவர்களின் பிள்ளைகள் மூலம் ஏற்படுகின்ற எத்தனையோ ஏமாற்றங்கள் மகிழ்ச்சியாக மாறும். அவர்களின் எத்தனையோ கோபங்கள் பொறுமை நிலையை அடையும். இந்த எண்ணம் புதியதொரு தோற்றத்தை மட்டும் காட்டவில்லை. சரியான மரியாதையையும் கொண்டுவருகிறது. இது எல்லாப் பெற்றோரும் கண்டிப்பாக உணர்கின்ற மனவழுத்தத்தைப் போக்குகின்றது. இவ்வுலகப் பொருள்கள் உம்முடைய குழந்தைகளை அன்பற்றவர்களாக மாற்றிவிடுவதற்கு நீ பொறுப்பாளி கிடையாது. மாறாக, உன் குழந்தைக்காக நீ செய்வதில் சிறந்தது. அல்லாஹ்வைத் திருப்திபடுத்துவதிலும் அவனுடைய அன்பைப் பெறுவதிலும் மிகக் கவனமாகத் தொடர்வதுதான். எனவே, நீ பெற்றோராவதற்கு அவனுடைய அன்பையே கேள். நீ உன்னுடைய குழந்தைகளோடு கொண்டிருக்கின்ற தொடர்புகளில் அல்லாஹ்வை அஞ்சியவளாகவும் எச்சரிக்கையானவளாகவும் நடந்துகொள். அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் உன் குழந்தைகள் பெறவேண்டும் என்பதற்காக நீ உன்னுடைய செயல்பாடுகளைச் செம்மைப்படுத்திக்கொள்.

உண்மையான நோக்கத்திலும் பெற்றோராகுதல் எனும் சோதனையிலும் நாம் இந்த ஒழுக்க நெறியையும் நம்பிக்கையையும் இழந்துவிட்டதாகவே கருதுகிறோம். எனவேதான் பெற்றௌருக்குக் கடுந்துயரமும் பிள்ளைகளுக்குத் தாங்க முடியாத நெஞ்சுவலியும் ஏற்படுகின்றது. ஆகவேதான், குர்ஆன் மற்றொரு கோணத்தில் இதைக் கூறுகின்றது. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்துகொண்டிருப்ப(து ஆணா பெண்ணா என்ப)தையும் அல்லாஹ் நன்கறிகின்றான். கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் சமயம்) சுருங்குவதையும் (பிரசவிக்கும்போது) அவை விரிவடைவதையும் அவன் அறிகின்றான். (கர்ப்பங்களிலுள்ள) ஒவ்வொன்றிலும் (அக்கர்ப்பங்களில் தங்கியிருக்க வேண்டிய காலம் ஆகியவை) அவனிடம் குறிப்பிடப்பட்டே இருக்கின்றன. (13: 08) இவ்வசனத்தின் மூலம் உண்மையான அர்த்தத்தையும் மர்யம் (அலை) மற்றும்; அவர்களுடைய தாயாரின் நன்றி செலுத்துதலையும் என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. முழுமனதோடு இந்த முடிவுக்கு வருவது நம்முடைய பணிவாகும். நான் என் இறைவனுடைய பாத்திரம்தான். அதுவே என்னுடைய கண்ணியம். அதுவே என்னுடைய குறிக்கோள். நான் என்னுடைய மனிதத்தன்மையைப் பற்றிப்பிடிக்கின்றேன்.

((மூலம்: "ஜுமுஆ" ஆங்கில மாத இதழ்: ஜைனபுகான் ,தமிழாக்கம்: நூ.அ.ஹா.))

கருத்துகள் இல்லை: