-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி
பாகவி
அதன்பின் வடசென்னையில்
புதிதாகத் தொடங்கப்பட்ட மகளிர் அரபுக் கல்லூரிக்கு உஸ்தாத் தேவை என்ற செய்தியை அவர்தம்
உஸ்தாத் அன்வர் மூலம் அறிந்து, அங்கு சென்றார். அங்கு
உஸ்தாதாகப் பணி செய்துகொண்டே எம்.ஃபில். படிப்பைத் தொடர்ந்தார். அந்த அரபுக் கல்லூரியில்
பணியாற்றிக்கொண்டிருந்தபோது அதன் அருகில்
அமைந்திருந்த பள்ளிவாசல் இமாம் ஹபீப், அஹத் உஸ்தாதிடம், “வண்ணாரப்பேட்டையில் உள்ள மஸ்ஜிதுக்கு இமாம் தேவைப்படுகிறது. நீங்க போறீங்களா?”
என்று கேட்க, சரியென ஒப்புக்கொண்டு அந்த மஸ்ஜிதுக்குச் சென்றார்.
இப்போது இரண்டு இடங்களிலும்
பணி செய்வதால், இரட்டைச் சம்பளம்
பெற்றுவந்தார். அதன் பிறகுதான் அவருடைய சின்னம்மாவிடம் சொல்லிப் பெண் பார்க்கச் சொன்னார்.
அவரோ யார் அதிகமாகச் சீதனம் கொடுப்பாங்க என்பதிலேயே கவனம் செலுத்தி, காலத்தை நீட்டித்துக்கொண்டே சென்றார். அதே நேரத்தில்
சென்னையிலேயே முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்து, இங்குள்ள நண்பர்களிடமும் சொல்லிவைத்தார். அந்த
வகையில் நண்பர் ஜியாவிடமும் சொல்லிவைத்திருந்தார். இறுதியில் அவர்தாம் ஒரு பெண்ணின்
போட்டோவைக் காட்டி, அவருடைய முகவரியையும்
கொடுத்தார்.
இச்செய்தியைத் தம்மோடு
நெருக்கமாகப் பழகுகிற, அந்த அரபுக் கல்லூரியின்
செயலாளர் இப்ராஹீமிடம் சொன்னார். அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, “பெண்வீட்டில் பேச நாங்க வாறோம்” என்று கூறி மறுநாள்
தம் மனைவியையும் அழைத்துக்கொண்டு வந்தார். குறிப்பிட்ட ஏரியாவை அடைந்து, பெண்வீட்டில் நுழைந்தார்கள். பெண்ணைப் பார்த்தார்கள்.
பிறகு அந்தப் பெண்தான் என்று முடிவு செய்து, நிச்சயதார்த்தத் தேதியைக் குறித்தார்கள்.
அஹதுடைய நிச்சயதார்த்த
நிகழ்வுக்கு அவருடைய ஊரிலிருந்து அவர்தம் தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் எல்லோரும் வந்தார்கள். நிச்சயதார்த்த
நிகழ்வில் திருமணத் தேதி முடிவானது. திருமணத் தேதி முடிவானதும் அங்கு வந்திருந்த பெண்ணுடைய
மாமா ஹஸன், உடனடியாகத் தொலைபேசியில்
தொடர்புகொண்டு அவருக்குத் தெரிந்த திருமண மண்டபம் ஒன்றை முன்பதிவுசெய்துவிட்டார்.
மேல்தளத்தில் ஆண்கள்
அமர்ந்து திருமணத் தேதியை முடிவுசெய்ய, கீழ்த்தளத்தில் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அங்கு அஹதுடைய சின்னம்மா,
“பொண்ணுக்கு எத்தனை பவுன்
போடுவாங்க? என்று அண்டைவீட்டில்
குடியிருந்த ஆபிதாவிடம் இரகசியமாக விசாரிக்க, “ஐந்தாறு பவுன் போடுவாங்க” என்று அவர் யதார்த்தமாகக்
கூறிவிட்டார்.
அதைக் கேட்ட அவருக்குத்
தூக்கிவாரிப் போட்டது. “என் மகனுக்கு 25 பவுன்
போட்டு கட்டிக்கொடுக்க எங்க ஊர்ல ஆள் இருக்கும்போது நான் ஏன் இந்தப் பொண்ணெ கட்டணும்?
நான் உடனே இந்த நிச்சயத்தை
நிறுத்தப்போறேன். ஊர் ஒலகத்துல பொண்ணா இல்லெ?” என்று சண்டைபோட ஆரம்பித்துவிட்டார். அந்த நேரத்தில்
அங்கு இருந்த அஹதுடைய மம்மாணி அவரை ஆசுவாசப்படுத்தி, அமைதிப்படுத்தினார்.
“நம்ம அஹதுக்கு இதுவெல்லாம் தெரியாதா என்ன? அவர் எதுவும் வேண்டாம்ணு சொல்லித்தானே இந்தப் பொண்ணெத்
திருமணம் செய்யச் சம்மதித்திருக்கிறார்? பிறகு எத்தனெ பவுன் போட்டா உங்களுக்கென்ன? அவங்க பொண்ணுக்கு அவங்க கையில இருக்கிறதெ போடுறாங்க.
இதுக்குப் போயி நாம சண்டைபோட்டா நல்லாவா இருக்கும்? எல்லாம் நல்லபடியா முடியட்டும்; அமைதியா இருங்க” என்றார்.
இந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த,
பெண்ணுடைய சின்னம்மா,
“ஆமா, மாப்பிள்ளை நோ டிமாண்ட் (எந்த எதிர்பார்ப்பும்
இல்லை)ன்னு தம்மோட பயோடேட்டாவுல எழுதியிருந்ததால்தான் எங்க அக்கா இந்த மாப்பிள்ளையெ
தேர்ந்தெடுத்தாங்க”ன்னு சொன்னார்.
“பிறகென்ன? நம்ம அஹது,
எந்தச் சீதனமும் வேண்டாம்ணு
கல்யாணம் பண்றது நமக்குத்தானே கௌரவம்?” என்று அவருடைய மம்மாணி மீண்டும் அழுத்தமாகச் சொன்னார்.
பிறகு எல்லாம் நல்லவிதமாக
முடிந்து எல்லோரும் ஊருக்குத் திரும்பினர். அஹது அவர்களையெல்லாம் வழியனுப்பிவைத்துவிட்டு,
தம்முடைய பள்ளியை நோக்கி
அஸர் தொழவைக்க விரைந்தார்.
அஹத் சென்னையிலேயே
பெண் பார்த்ததற்கான காரணம், பள்ளிவாசல் பணியில்
இருக்கும்போது, நாம் அடிக்கடி ஊருக்குப்
போக முடியாது. விடுமுறைப் பிரச்சனை வரும். உள்ளூரிலேயே திருமணம் செய்துவிட்டால் அடிக்கடி ஊருக்குப் போக வேண்டிய தேவை ஏற்படாது
என்று எண்ணியதே ஆகும்.
பிறகு குறிப்பிட்ட
தேதியில் திருமணம் நடந்தேறியது. புதுமணத் தம்பதிகளாக இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்த
இருவரும் சில பல மேடு பள்ளங்களைக் கடந்து, அனுபவப்பட்டு, பக்குவப்பட்டு அமைதியான
நிலைக்கு வர சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அதுவரை ஒருவரையொருவர் புரிந்துகொள்வதிலேயே காலம்
கடந்துவிட்டது. இருப்பினும் பெரிய அளவில் பிரச்சனை ஏதும் இல்லை.
***
திருமணம் முடிந்து
ஒரு குழந்தை பிறந்தது. அந்நேரத்தில் மகளிர் அரபுக் கல்லூரியை விட்டு விலகிச் செல்ல
வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளானார். அங்கிருந்த ஹபீப் இமாம் இவர்மீது கொள்கைரீதியான
எதிர்க்கருத்துகளைச் சொல்லி, இவர்மீது ஒரு தவறான
பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார். அதை அப்படியே மனத்தில் வைத்துக்கொண்டு, ஒரு சந்தர்ப்பத்தில் அஹத் உஸ்தாதை மிகக் கடுமையாக
அந்த மூத்த உஸ்தாத் திட்டிவிட்டார். அதன் காரணமாகவே அவர் அங்கிருந்து விலகிச் செல்ல
நேரிட்டது.
அங்கிருந்த மாணவிகள்
பலர் அஹத் உஸ்தாதைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். “நீங்க பாடம் நடத்துவது எங்களுக்கு எளிதாகப் புரிந்தது;
வகுப்பு கலகலப்பாக இருந்தது.
இனி அதுவெல்லாம் எங்களுக்குக் கிடைக்காது” என்று தம் சோகத்தைப் பகிர்ந்துகொண்டனர். “நீங்களே வந்துடுங்க உஸ்தாத்” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள்.
“நான் இருந்தபோது எப்படி ஆர்வமாகப் படித்தீர்களோ, அதே ஆர்வம் சற்றும் குறையாமல் படியுங்கள். நீங்கள்
படிப்பது தீன் கல்வி. எனவே அதில் எந்தவித அலட்சியமோ சோம்பேறித்தனமோ காட்டக்கூடாது” என்று அறிவுரை கூறினார்.
அவரின் அறிவுரையை ஏற்று, நன்றாகப் படித்த மாணவிகள்
பலர் ஆங்காங்கே உஸ்தாதாகப் பணியாற்றுகின்றார்கள். அவர்களுள் ஒரு மாணவியான கரீமா அக்கல்லூரியிலேயே
முதல்வராகப் பணியாற்றுகிறார்.
திருமணமாகி முதல்
குழந்தை பிறந்த சமயத்தில், மே ஒன்றாம் நாள் உழைப்பாளர்
தினத்தில் பள்ளியின் செயலாளர் அஹமது, அஹத் இமாமைப் பள்ளியைவிட்டுத் திடீரென நீக்கிவிட்டார். என்ன காரணம்? ரபீஉல் அவ்வல் மாதத்தில் மவ்லூது ஓதும்போது,
உள்பள்ளியில் பூப்பந்தல் போட்டு,
பணத்தை விரயம் செய்வார் செயலாளர்
அஹமது. அதைப் பார்த்து அஹத் இமாம் வருத்தமடைவார். ஒரு நாள் அவரிடம், “அஹமது பாய், பணத்தை இப்படி இஸ்ராஃப் (விரயம்) செய்யலாமா?
இந்தப் பணத்தை ஏழைகள் யாருக்கேனும்
தர்மம் செய்யலாமே?” என்று கேட்டுவிட்டார்.
அதை அப்படியே மனதில்
வைத்துக்கொண்டு, அவரை அனுப்பிவைத்த
ஹபீப் இமாமிடம், “நீங்க அனுப்பிவைத்த
இமாம் என்னைப் பார்த்து இப்படிக் கேட்கிறார். நீங்க இதையெல்லாம் கேக்கமாட்டீங்களா?”
என்று கேட்க, “ஆம்! அவருடைய கொள்கைகள் பற்றி எனக்குச் சரியாகத்
தெரியவில்லை; இப்போதுதான் அவரைப்
பற்றி முழுமையாகத் தெரிகிறது. இன் ஷாஅல்லாஹ் பேசுவோம்” என்றார்.
பிறகு செயலாளர் அஹ்மது,
பள்ளியின் தலைவரிடம்,
“நான் பூமாலை போட்டதை வைத்துக்கொண்டு,
‘நீங்க ஏன் ஷிர்க் செய்யிறீங்க’ன்னு இமாம் கேட்டுட்டார்.
இனி இவர் நம் பள்ளிக்கு ஒத்துவரமாட்டார்” என்று காரசாரமாகப் பேசி, தம்முடைய பேச்சுக்கு வலு சேர்ப்பதற்காகச் சில பொய்களையும்
சேர்த்துக்கொண்டார். அதன்பின்னர்தான் அவர்
நீக்கப்பட்டார்.
மகளிர் அரபுக் கல்லூரியிலிருந்து
விலகிவிட்டார். பள்ளிவாசலிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டார். இப்போது அவர் வாழ்வாதாரத்திற்கு
என்ன செய்வார்? தாருல் உலூம் தேவ்பந்தில்
படித்த காலத்தில் பழகிய நண்பரான அமீன் என்பவரைத் தொடர்புகொண்டு தம் நிலையை அவரிடம்
எடுத்துச் சொன்னார். அவர் அஹதை ஒரு நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு மொழிபெயர்ப்புப் பணியில் சேர்த்துவிட்டார்.
அது ஒரு தஃவா சென்டர். அங்கு பல்வேறு நூல்கள் வெளியிடப்படுகின்றன.
அஹதுக்கு மொழிபெயர்ப்பு
செய்யத் தெரியும் என்றாலும், அதைத் தொழில்ரீதியாக,
ஒரு பணியாகச் செய்து அனுபவமில்லை.
இருப்பினும் அந்த சென்டரின் உரிமையாளர் கொடுத்த அரபி நூலின் ஒரு பக்கத்தை உரிய முறையில்
தெளிவாக மொழிபெயர்ப்புச் செய்துகாட்டினார். அதைப் படித்துப் பார்த்துவிட்டு,
அவரைப் பாராட்டினார். “இதுவரை இந்த அளவிற்கு யாரும் மொழிபெயர்க்கவில்லை.
மாஷாஅல்லாஹ். பாரக்கல்லாஹ்” என்று கூறி, துஆ செய்துவிட்டு, அவரை அந்தப் பணிக்காக நியமித்தார். அவருக்கு ஆங்கிலமும்
தெரியும் என்பதால், முதன்முதலாக ஓர் ஆங்கில
நூலை அவரிடம் கொடுத்தார். முதல் முயற்சி என்பதால் தப்பும் தவறுமாகத்தான் செய்துமுடித்தார்.
இருந்தாலும் அதை அப்படியே
ஏற்றுக்கொண்டு, அங்கு பணியாற்றிவந்த
அலீ என்பவரிடம், அதைச் சரிசெய்யும்
பொறுப்பை ஒப்படைத்தார் சென்டரின் உரிமையாளர். அவர் அந்நூலைச் சரிசெய்து, பிழைகளைக் களைந்து, செம்மைப்படுத்தினார். பிறகு அந்நூல் வெளியிடப்பட்டது.
‘தமிழாக்கம் செய்தவர்’ எனும் இடத்தில் அப்துல்
அஹத் எனும் தம்முடைய பெயரைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவருடைய பெயரைத் தாங்கி
வந்த முதல் நூல் அதுதான். அந்த நூலை அச்சில் பார்த்தபிறகுதான் அவருக்கு அந்தத் துறையில்
ஆர்வமே மேலோங்கியது. அடுத்தடுத்த நூல்களை மிகுந்த ஆர்வத்தோடும் சுறுசுறுப்போடும்
செய்யத் தொடங்கினார்.
அதன்பிறகு இல்லறம்
தொடர்பான ஆங்கில நூல் ஒன்றைத் தமிழாக்கம் செய்துமுடித்தார்.
மேலும் சில நூல்களைத்
தமிழாக்கம் செய்தார். அந்நிலையில் அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.
அதாவது அந்த தஃவா சென்டரின் உரிமையாளர் உமருக்கு ஓர் அழைப்பு வந்தது. ஷார்ஜாவிலுள்ள
ஒரு தஃவா சென்டரில் தமிழாக்கம் செய்ய ஆள் தேவை. உங்களிடம் யாராவது இருக்கின்றாரா என்று
உஸ்தாத் ஒருவர் கேட்டார். அப்போதுதான் உமர் தம்மிடம் பணியாற்றிவருகின்ற அப்துல் அஹத்
என்பவரை அவரிடம் அறிமுகப்படுத்தினார். இவர் நல்லவிதமாகத் தமிழாக்கம் செய்வார்;
அரபி, ஆங்கிலம், தமிழ் மூன்றும் நன்கு தெரிந்தவர் என்று புகழ்ந்து
கூறினார். சரியென ஒப்புக்கொண்டு, அவருடைய பாஸ்போர்ட்
நகல், பட்டம் பெற்ற சான்றிதழ்களின்
நகல்கள் ஆகியவற்றை ஈமெயிலில் அனுப்பிவையுங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க அவை அந்த
தஃவா சென்டரிலிருந்தே அனுப்பிவைக்கப்பட்டன.
***
விசா வந்தபின்,
விமானப் பயணச் சீட்டிற்கான
பணத்தை ஏற்பாடு செய்ய அஹத் முயன்றார். யாரும் கடன் கொடுப்பதாகத் தெரியவில்லை. இறுதியில்
தமது இருசக்கர வாகனத்தை, அவர் தம் மஹல்லாவில்
குடியிருந்த முஹ்ஸின் என்பவரிடம் பாதி விலைக்கு விற்பனை செய்து, விமானப் பயணச் சீட்டை
வாங்கினார். மனைவியிடம் செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டு எஞ்சியதை வங்கிக் கணக்கில்
போட்டு வைத்தார். பின்னர் குறிப்பிட்ட நாளில் ஷார்ஜா நோக்கிப் பறந்தார்.
அங்கு சென்ற அவர்,
அந்த தஃவா சென்டரில் வழங்கிய
கையடக்கச் சிற்றேடுகளைத் தமிழாக்கம் செய்து அவற்றை வலைதளத்தில் பதிவுசெய்தார். அதுதான்
அவருடைய அன்றாடப் பணி. அவரிடம் மூவாயிரம் திர்ஹம் சம்பளம் என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள்.
ஆனால் அவருக்கு அங்கு வழங்கப்பட்டதோ ஆயிரம் திர்ஹம் மட்டுமே. எனவே விசிட்டிங் விசாவில்
சென்ற அவர், அதைப் புதுப்பிக்காமலேயே
தாயகம் திரும்பி வந்துவிட்டார். மீண்டும் அங்கு
செல்லவில்லை.
பொதுவாக அஹதுக்கு
அயல்நாட்டில் பணி செய்வது பிடிக்காது. பிறர் அங்கு பணி செய்வதைக்கூட விமர்சித்துக்
கட்டுரைகளெல்லாம் எழுதியுள்ளார். “திருமணம் செய்த சில
வாரங்களில், மனைவியைத் தனியாக
விட்டுவிட்டு, கணவன் அயல்நாடு சென்றுவிடுகின்றான்.
அங்கு அவன் மட்டும் தனியாக இருந்துகொண்டு பணியாற்றுவதோடு, வெயிலிலும் பனியிலும் அவதிப்படுகிறான். இங்கு இவள்
மட்டும் தனியாக இருந்துகொண்டு அவதிப்படுகிறாள். இது சரியில்லையே” என்று அவர் அடிக்கடி
கூறுவதுண்டு. கணவன்-மனைவி இருவரும் அயல்நாட்டில் குடும்பத்தோடு இருந்தால் எந்தப் பிரச்சனையுமில்லை.
ஆனால் மனைவி உள்நாட்டிலும் கணவன் வெளிநாட்டிலும் இருந்துகொண்டு, பணம் சம்பாதித்து என்ன செய்யப் போகின்றார்கள்?
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு,
பணத்தை வைத்துக்கொண்டு என்ன
செய்யப்போகின்றார்கள் என்று அவர் கேட்பதுண்டு.
ஷார்ஜாவிலிருந்து
வந்த பிறகு, சென்னையில் உள்ள ஸலஃபி
மர்கஸில் இமாமாகப் பணியில் சேர்ந்தார். அஹதுக்கு எழுதவும் தெரியும் என்பதால் அங்கிருந்து
வெளிவருகின்ற ஒரு மாதப் பத்திரிகையின் ஆக்கங்களைத் திருத்தவும் தட்டச்சு செய்யவும்
அவரைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அங்கு நான்கு மாதங்கள் மட்டுமே பணியாற்றினார். அதன்
கொள்கைகள் பிடிக்காததால் அங்கிருந்து விலகிவிட்டார்.
***
பின்னர் ‘கலமுல் மில்லத்’ என்று அறியப்படுகிற தம்முடைய உஸ்தாதை நேரடியாகச்
சந்தித்துத் தம்முடைய பணிக்காகச் சொல்லிவைத்தார். “சரி தம்பி! நான் சொல்கிறேன்” என்று கூறி அனுப்பிவைத்தார்.
உஸ்தாதிடம் தம்முடைய செல்பேசி எண்ணைக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து விடைபெற்றார். ஒரு வாரம் கழித்து,
உஸ்தாதிடமிருந்து அழைப்பு
வந்தது. உஸ்தாதின் அழைப்பின்படி மறுநாள் அவரை நேரடியாகச் சந்திக்கச் சென்றார்.
“தம்பி வாப்பா! என்று மாணவரை வரவேற்று, அங்கு அமர்ந்திருந்த ஒருவரிடம், “இவர்தாம் அப்துல் அஹத். மொழிபெயர்ப்புப் பணியில் அனுபவம் உள்ளவர். இவர்தாம் நீங்கள்
தொடங்கப்போகின்ற மூமினா பதிப்பகத்திற்கான மொழிபெயர்ப்பாளர்” என்று தம் மாணவரை
அறிமுகப்படுத்தினார். பின்னர் அவ்விருவரும் பேசி, ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டனர். அதன்பின்
உஸ்தாத், “நீ செய்ய வேண்டிய
நூல் இதுதான் தம்பி” என்று கூறி ஒரு வரலாற்று நூலைக் காட்டினார். அந்த
நூலைப் பார்க்கவே பிரமாண்டமாக இருந்தது. ஏனென்றால் அது பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைக்
கொண்டிருந்தது. ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்கள் உடையதாக இருந்தது.
“என்னப்பா தம்பி! நூலைப் பார்த்ததும் மலைத்துப் போயிட்டெ? இது போன்ற நூல்தான் மக்களுக்கு ரொம்பப் பயனுள்ளதா
இருக்கும்பா. அதனாலதான் இந்த நூலை நான் தேர்வுசெஞ்சேன்; இந்த நூலை நீ செஞ்சு முடிச்சா, நீயும் வரலாற்றுல இடம்பெறுவாய்” என்று ஆர்வத்தைத்
தூண்டினார் உஸ்தாத். “இப்போதைக்கு நீ மட்டும்
செய்யிப்பா, பிறகு வேண்டுமானால்
வேறொருத்தரைச் சேத்துக்கலாம்” என்றார் உஸ்தாத்.
“சரி உஸ்தாத்” என்று ஒப்புதல் கூறினார் அஹத். பிறகு உஸ்தாத் முன்னிலையிலேயே சம்பளம், விடுமுறை, போனஸ், அலுவல் நேரம் என எல்லாவற்றையும் பேசிக்கொண்டனர்.
பேசியபடி இன் ஷாஅல்லாஹ் செயல்படுவதாக அஹத் வாக்குறுதி கொடுத்தார்.
(தொடரும்)