திங்கள், 23 மார்ச், 2026

உன்னால் இயன்றதைக் கொடு!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கொடுப்போரைவிடப் பெறுவோரே நம்முள் பெரும்பாலோர் உள்னனர். ஆனால் பெறுவதைவிடக்  கொடுப்பதில்தான் மகிழ்ச்சி நிறைந்துள்ளது என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. எனவேதான் கொடுப்போரைவிடப் பெறுவோர் நிறைந்துள்ளனர். பிறரிடமிருந்து எதையாவது பெறுவதிலேயே குறியாக உள்ளனர். உறவினர்கள் கொடுக்கமாட்டார்களா, மருமகள் வீட்டிலிருந்து கொடுக்கமாட்டார்களா, அண்டை வீட்டார் கொடுக்கமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

 

 

அத்தகையோர் அதை அப்படியே மாற்றி யோசிக்கலாமே? உறவினர்களுக்குக் கொடுக்க வேண்டும்; அண்டை வீட்டாருக்குக் கொடுக்க வேண்டும்; நம் மஹல்லாவில் உள்ள ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்; மார்க்கப் பணியாற்றுவோருக்குக் கொடுக்க வேண்டும்; கடன்பட்டோருக்குக் கொடுக்க வேண்டும்; பொருளாதார நெருக்கடியால் திருமணம் செய்ய முடியாமல்  காத்திருப்போருக்குக் கொடுக்க வேண்டும்; கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் ஏழ்மையில் வாடுவோருக்குக் கொடுக்க வேண்டும் எனப் பட்டியல் போட்டு உதவி செய்ய முன்வரலாம்.

 

 

எதைக் கொடுப்பது: பொருளாதார வசதியுடையோர் தம் பணத்தால் பிறருக்கு உதவிசெய்வார்கள்; தர்மம் செய்வார்கள். அதன்மூலம் நன்மையை ஈட்டிக்கொள்வார்கள். ஆனால் பொருளாதார வசதி இல்லாதோர் எப்படிக் கொடுப்பது, எதைக் கொடுப்பது? அதற்கும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டியுள்ளார்கள். உழைத்துச் சம்பாதித்துத் தானும் உண்டு, பிறருக்கும் கொடுக்க வேண்டும். உடல் வலிமையுள்ளோர் தம் உடலால் உதவ வேண்டும். அறிவு வலிமையுடையோர் தம் அறிவைப் பயன்படுத்திப் பிறருக்கு உதவ வேண்டும். ஆரோக்கியமான இளைஞர்கள் தம் குருதி கொடுத்து உதவ வேண்டும். ஆக பிறருக்குக் கொடுக்க, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று உள்ளது.  யாருக்கு எது இயலுமோ அதை அவர் கொடுக்கட்டும்.

 

 

இது குறித்த நபிமொழி ஒன்று திர்மிதீ நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. “உன் சகோதரனின் முகத்தைப் பார்த்துப் புன்னகை செய்வதும் நீ செய்யும் தர்மம் ஆகும். நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதும் தர்மம் ஆகும். திக்குத் தெரியாத பகுதியில் (தடுமாறும்) ஒருவருக்கு வழிகாட்டுவதும் நீ செய்யும் தர்மம் ஆகும். கண்பார்வையற்ற ஒருவரைக் கவனிப்பதும் நீ செய்யும் தர்மம் ஆகும். நடைபாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு ஆகியவற்றை அகற்றுவதும் நீ செய்யும் தர்மம் ஆகும். உனது வாளியிலுள்ள தண்ணீரை உன் சகோதரனின்  வாளியில் ஊற்றிக்கொடுப்பதும் நீ செய்யும் தர்மம் ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 1879)

 

 

 

ஒவ்வொரு நற்செயலும் தர்மம் ஆகும் (புகாரீ: 6026). இந்த நபிமொழியின் அடிப்படையில் பிறருக்கு உதவுதல், பிறரைத் தம் வாகனத்தில் ஏற்றிக்கொள்ளுதல், பிறரின் சுமையைச் சுமந்து செல்லல், பிறரின் சுமையை அவர்தம் தலையில் தூக்கிவைத்துவிடுதல், சுமைகளை வண்டியில் ஏற்றிவிடுதல், கல்வி கற்பித்தல், விளையாடக் கற்பித்தல், தொழில்களைக் கற்பித்தல், வழிதெரியாதோருக்கு விழியாய் இருந்து வழிகாட்டுதல், பார்வையற்றோர் தேர்வெழுத எழுத்தராகச் (ஸ்க்ரைப்) செயல்படுதல், முகவரி தெரியாதோருக்கு முகவரி கூறி வழிகாட்டுதல், பிறரின் வாளியில் அல்லது குடத்தில் தண்ணீர் இறைத்து ஊற்றுதல், எழுதத் தெரியாதோருக்கு எழுதிக் கொடுத்தல், விண்ணப்படிவங்கள் பூர்த்தி செய்யத் தெரியாதோருக்கு அதைப் பூர்த்தி செய்துகொடுத்தல் உள்ளிட்டவை அறச் செயல்களே ஆகும்.

 

 

ஒவ்வொரு முஸ்லிம்மீதும் தர்மம் (செய்ய வேண்டிய கடமை) உள்ளது” (புகாரீ: 1445) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி ஒவ்வொருவரையும் தற்சார்புள்ளவராக வாழத் தூண்டுகிறது. பிறரிடம் கையேந்தாமல் சுயமரியாதையுடன் வாழப் பழக்குகிறது. அவ்வாறு தம்மிடம்  பொருளாதார வசதியில்லாதவர் தம் சுயமுயற்சியால் உழைத்துப் பொருளீட்டித் தாமும் உண்டு, பிறருக்கும் வழங்க வேண்டுமென்கிறது. அதற்கும் இயலாவிட்டால் நன்மையை ஏவு என்கிறது. இது எல்லோருக்கும் மிக எளிதானது. பிறர் தவறான வழியில் செல்வது கண்டு, ‘நமக்கென்ன’ என்று இருந்துவிடாமல் பிறர் நலம் நாட வேண்டும் என்ற அடிப்படையில், ‘தொழுகச் செல், தர்மம் செய், ஏழைக்கு உதவு, பசித்தோருக்கு உணவளி’ என்று பிறருக்குச் சொல்லலாம். அதன் மூலம் ஒருவர் நன்மையை ஈட்டிக்கொள்ளலாம். சரி, அதற்கும் இயலவில்லை; பிறரை ஏவும் அளவிற்குத் துணிவில்லை என்றால் யாருக்கும் தீமை செய்யாமல் இரு. அதுவே உனக்கு நன்மைதான் என்று நபியவர்கள் வழிகாட்டுகின்றார்கள்.

 

 

ஆக ஒருவர் தம்மால் இயன்றதைப் பிறருக்குக் கொடுத்துதவ வேண்டும் என்று நபியவர்கள் தூண்டுகின்றார்கள். ஒருவர் பிறருக்குக் கொடுக்கத் தொடங்கிவிட்டால் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டார். அதனால் பிறரிடம் தேவையாவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். அதனால்தான்  பிறருக்குக் கொடு என்று நபியவர்கள் கட்டளையிடுகின்றார்கள். கொடுப்பதுதான் நம்மை மேம்படுத்திக்கொள்ளும் வழியாகும்.

 

 

பிறரை மகிழ்வித்தல்: இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் பலரும் எண்ணுவது, நகைச்சுவை (ஜோக்) சொல்லிச் சிரிக்க வைத்தல் என்பதைத்தான். இஸ்லாமிய மார்க்கம் அதைச் சொல்லவில்லை. மாறாக நாம் உழைத்து இல்லாதோருக்கு வழங்குகிறபோது, அதைப் பெறுவோர் மகிழ்வர்; நாம் உழைத்த பணத்தில் ஆடையற்றோருக்கு ஆடை வாங்கிக் கொடுக்கும்போது அதைப் பெறுவோர் மகிழ்வர்; நாம் உழைத்த பணத்தில் பிறருக்கு உணவு வாங்கிக் கொடுக்கும்போது அதைப் பெறுவோர் மகிழ்வர். அந்த மகிழ்ச்சியைத்தான் நாம் பிறரிடம் கொண்டுவர வேண்டும்.

 

 

இது குறித்த நபிமொழியைப் பாருங்கள். உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “எந்தச் செயல்கள் மிகச் சிறந்தவை?” என்று கேட்கப்பட்டது. “ஓர் இறைநம்பிக்கையாளருக்கு (முஃமினுக்கு) மகிழ்ச்சி அளிப்பதே சிறந்த செயல்களில் ஒன்றாகும். அதாவது, அவனுடைய பசியைத் தீர்க்க நீ அவனுக்கு உணவூட்டுவது, அல்லது அவன் நிர்வாணத்தை (உடை இல்லாத நிலையை) நீ ஆடையிட்டு மறைப்பது, அல்லது அவனுடைய தேவையை நீ நிறைவேற்றிக் கொடுப்பது” என்று கூறினார்கள். (முஅஜமுல் அவ்ஸத்: 5081)

 

 

ஆக நம்மால் இயன்றதைப் பிறருக்குக் கொடுப்பதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. இதனால்தான், “(பெறுவதற்காகத்) தாழ்ந்த கையைவிட (வழங்குவதற்காக) உயர்ந்த கையே மேலானது” என்று கூறினார்கள். நாம் பிறருக்குக் கொடுப்பதன் மூலம் நம் கை மேலே இருக்கிறது. நம் கை மேலோங்குவதைப்போல் நம் வாழ்க்கையும் மேலோங்கும். எனவே நம்மால் இயன்றதைக் கொடுத்துக்கொண்டே இருப்போம். வாழ்வில் உயர்வடைவோம்.

=================

 




 


ஒழுக்கம் கைவிடேல்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. 


‘நல்ல நெறிகளைப் பின்பற்றி நடப்பதே ஒழுக்கம்’ என்று ஒழுக்கத்திற்கு வரையறை செய்யப்படுகிறது.  ஒழுக்கம் குறித்து எல்லாச் சமயங்களும் வேத நூல்களும் தமிழ் இலக்கிய நூல்களும் கூறியுள்ளன. நம் முன்னோர்கள்  ஒழுக்கத்தோடும் சுய கட்டுப்பாட்டோடும் வாழ்ந்து வந்தார்கள். தற்காலத்தில் நம்மைச் சுற்றி, ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்ட செயல்களே அதிகம் அரங்கேறுகின்றன. ஒழுக்கம் தவறியோர் நம்மைச் சுற்றிப் பலர் வாழ்கின்றார்கள். இதனைக் காணும்போது, ‘நாமும் அப்படி வாழ்ந்தால் என்ன தவறு’ என்ற மனநிலை நம்முள் சிலருக்கு ஏற்படலாம். இத்தகைய தடுமாற்ற நிலை ஏற்படும்போதுதான், ‘நான் ஒருபோதும் ஒழுக்கம் தவற மாட்டேன்’ என்று நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.



ஒழுக்கம் பேணுவதன் முதற்படி, நாணம் பேணுவதுதான். அந்த நாணம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. நாணமில்லாப் பெண்களும் ஆண்களும் பெருகி வருகிறார்கள். ‘ஒழுக்கம்’ என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, ஆடையொழுக்கம்தான். அதில் ஆண்களும் பெண்களும் நாணம் துறந்த ஆடைகளையே அணிகின்றார்கள். அதையெல்லாம் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மாறாக அத்தகைய அறிவுரை கூறுவோரைப் பரிதாபமாகவும் பரிகாசமாகவும் பார்க்கின்றார்கள். இதுவே இன்றைய பெரும்பாலான இளைஞர்கள்-இளைஞிகளின் நிலையாகும்.



அணிகின்ற ஆடையிலேயே ஒழுக்கம் தவறுகின்றபோது, பிறகு அதைத் தாண்டியுள்ள பல்வேறு ஒழுக்கங்களை எவ்வாறு அவர்கள் பின்பற்றுவார்கள்? பெரியோரை மதித்தல், சிறியோரிடம் அன்பு காட்டுதல், பெற்றோரின் பேச்சைக் கேட்டல், ஆசிரியருக்கு மரியாதை செலுத்துதல், குப்பைகளைத் தெருவில் வீசாமல் குப்பைத் தொட்டியில் அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் போடுதல், போக்குவரத்து விதிகளை மதித்தல், நியாய விலைக் கடையில் வரிசை முறையைப் பேணுதல் முதலான பல்வேறு ஒழுக்கங்கள் உள்ளன.


 

உயர் பதவியில் உள்ள ஒருவர், தம் அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில்  அரசு மதுக்கடையில் மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறியபின் வீதியில் புரண்டால் அவரது மதிப்பு என்னாகும்? ஒருவர் தாம் பணியாற்றுகிற அரசு அலுவலகத்தில் கையூட்டு பெற்றதற்காகப் பலர் முன்னிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டால் அவரது மதிப்பு என்னாகும்? வாங்கிய கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்தாததால் கடன்கொடுத்தவர் அவர் வீட்டின்முன் பலர் முன்னிலையில் கூச்சலிட்டுச் சண்டையிட்டால் அவரது மதிப்பு என்னாகும்? வீட்டு வாடகையை உரிய முறையில் கொடுக்காததால் வீட்டின் உரிமையாளர் அங்கு வந்து தகாத வார்த்தைகளைக் கூறினால் அவரது மதிப்பு என்னாகும்?  



மது அருந்துதல் ஓர் ஒழுக்கக்கேடான செயல் ஆகும். அதனால் உயர்பதவியில்ய உள்ளவன்கூடத் தன் மதிப்பை இழக்கின்றான். புகைபிடித்தல், பான்பராக் போன்ற  போதைப் பாக்குகளை மெல்லுதல் இவையெல்லாம் ஒழுங்கீனமாகும். இப்பழக்கம் உள்ளவரின் வாயிலிருந்து எப்போதும் துர்வாடை வீசும். அத்தகையவரிடம் பிறர் அண்மி வந்து பேசச் சங்கடப்படுவார்கள். மேலும் ஒருவர் தம் பேராசையால் குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கையூட்டு வாங்குவது ஒரு வகையான ஒழுங்கீனமாகும். கடன் வாங்கினால் உரிய முறையில் திரும்பச் செலுத்துவதுதான் ஒழுக்கமுடையோர் செய்யும் செயலாகும். உரிய முறையில் செலுத்தாமல் இழுத்தடிப்பதோ, ஏமாற்ற நினைப்பதோ ஒழுங்கீனமாகும். வீட்டு வாடகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுத்துவிடுவதுதான் ஒழுக்கமுடையோரின் பண்பாகும்.


     

ஒழுக்கம் என்பது சுயகட்டுப்பாடு ஆகும். ஒவ்வொருவரும் தமக்கெனச் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். பொய் பேசாமை, வாக்குறுதி மீறாமை, கையூட்டு பெறாமை உள்ளிட்டவை அதில் அடங்கும். சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இதைப் பார்க்கின்ற இளவயதினர் தாமும் இப்படி நடந்துகொண்டால்  என்ன என்ற சிந்தனைக்கு வந்துவிடக் கூடாது. மாறாக ‘மக்கள் பலர் வரம்பு மீறினாலும் நான் என்றென்றும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவனாகவே இருப்பேன்’ என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.



ஒழுக்கம்தான் ஒருவரை உயர்த்தும்; உயர் பதவிகளைக் கொடுக்கும்; மக்களிடம் மரியாதையைப் பெற்றுத் தரும்; நண்பர்கள், உறவினர்கள், சமூக மக்கள் ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்றுத்தரும்.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒழுக்கமுடையவர்களாக இருந்ததால்தான் அவர்களை ‘அல்அமீன் - நம்பிக்கைக்குரியவர்’ என்று மக்கள் அழைத்தனர். அவர்களை நம்பி பலர் தம் பணத்தைக்  கொடுத்து வைத்தனர். அவற்றையெல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டுத்தான் நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்றார்கள். ஆக நம்முடைய ஒழுக்கத்தால்தான் மக்களுக்கு நம்மீதான நம்பகத்தன்மை உண்டாகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. 



ஒழுக்கமில்லா வாழ்க்கை பற்பல தீமைகளைக் கொண்டுவரும். நம்பிக்கை இழப்பு, அவமதிப்பு, சமூகப் புறக்கணிப்பு முதலானவை ஏற்படும். யாரும் அத்தகையவரை மதிக்க மாட்டார்கள்; அவரிடம்  ஆலோசனை கேட்க மாட்டார்கள்; யாரும் உதவி கேட்க மாட்டார்கள்; கனிவோடு பேச மாட்டார்கள்; சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவராகவே வாழ்வார். ஒழுக்கம் தவறினால் எல்லாம் தவறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


நமக்குள் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள நல்ல சூழலில் இருப்பது அவசியம். நல்ல நண்பர்களோடு சேர்தல், நல்ல நல்ல நூல்களை வாசித்தல், மூத்தோரின் அறிவுரையைக் கேட்குதல், நேரத்தை மதித்து அதற்கான அட்டவணையைப் பின்பற்றுதல், சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தல், எதிலும் பொறுப்புணர்வோடு இருத்தல் முதலானவை  ஒழுக்கத்தை மேன்மேலும் வளர்க்கும்.



இஸ்லாமிய மார்க்கம் ஒழுக்கத்தையே முதன்மையாகப் போதிக்கிறது. ஆசிரியரை மதித்தல், மூத்தோரை மதித்தல், வெட்கம் பேணுதல், பார்வையைப் பேணுதல் உள்ளிட்ட ஏராளமான ஒழுக்கங்களைப் போதிக்கிறது. ஒழுக்கத்தின் உறைவிடமாகத் திகழ்ந்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, “நிச்சயமாக நீர் உயர்ந்த ஒழுக்கத்தில் உள்ளீர்” (68: 4) என்று அல்லாஹ் கூறுகின்றான். இதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையே ஒழுக்கமான வாழ்க்கைக்கு முன்னோடியாக உள்ளது. அதையே முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றார்கள்.


  

ஒழுக்கத்தைப் பேணும் மனிதர் சமூகத்தில் நல்ல குடிமகனாக, நீதியை நிலைநாட்டுபவராக, மனித உள்ளங்களைச் சீர்திருத்துபவராக, அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவராக, அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்பவராக, எல்லோரையும் மதிப்பவராகத் திகழ்வார். “நல்லொழுக்கத்தை நிறைவு செய்யவே நான் அனுப்பப்பட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ஆகவே ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் நல்வழியைப் பின்பற்றி நடந்தால் அவர் மிகுந்த ஒழுக்கமுடையவராக மாறிவிடுவார். 



உண்மை பேசுதல், பொறுமையை மேற்கொள்ளுதல், பணிவாக இருத்தல், பிறர்மீது இரக்கம் காட்டுதல், பிறரின் குற்றங்குறைகளை மறைத்தல், பிறரின் தொல்லைகளைச் சகித்துக்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்தும் ஒழுக்க வாழ்க்கையை மேற்கொள்வோர் கடைப்பிடிக்கும் நற்குணங்கள் ஆகும்.  ஆக ஒழுக்கமான வாழ்க்கை பல்வேறு நற்பண்புகளை நம்முள் தோற்றுவிக்கிறது. 




கொடுத்த வாக்கை நிறைவேற்றல், சொன்ன நேரத்திற்குச் சென்றடைதல், நம் செல்பேசியில் பிறரின் அழைப்பைத் தவறவிட்டிருந்தால் அவரை அழைத்துப் பேசுதல், வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தால் அதற்குப் பதிலுரைத்தல், விளக்கம் கேட்டிருந்தால் விளக்கமளித்தல், தெரியாதவற்றைத் ‘தெரியாது’ என்று சொல்லல், விருந்துக்கு அழைத்திருந்தால் அதில் கலந்துகொள்ளுதல் இவை அனைத்தும் ஒழுக்கம் சார்ந்தவையே ஆகும். 



ஆக இன்றைய நவீன உலகில் பலர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அத்தகையோரைப் பார்க்கின்ற நமக்கு, ‘நாமும் அவர்களைப் போல் ஆகிவிடலாமா’ என்ற சிந்தனை வராமல் நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வதே நம்மை மேன்மேலும் உயர்த்தும். வெட்க உணர்வின்றி ஆடவரும் பெண்டிரும் வாழும் இக்காலத்தில் நாம் ஒழுக்கத்தைப் பேணி வாழ்வது அல்லாஹ்வின் அன்பைப் பெறவும் அவனுடைய தூதரின் அன்பைப் பெறுவதற்காகவும்தான் என்பதை நினைவில் கொண்டு, ‘ஒருபோதும் ஒழுக்கம் கைவிடேன்’  என்று உறுதிமொழியேற்று வாழ்வோம்.

====================================







நீதியின் பக்கம் நிற்போம்!

  


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

மனித வாழ்வு சீராகவும் செம்மையாகவும் நீடிக்கவே உயர்ந்தோன் அல்லாஹ் விதிமுறைகளையும் சட்டங்களையும்  அமைத்தான். அச்சட்டங்களையும் விதிமுறைகளையும் பேணி நடக்கின்ற வரை யாருக்கும் எத்தீங்கும் ஏற்படாது.  மனித வாழ்க்கை சீராகவும் ஒழுக்கமாகவும் சென்றுகொண்டிருக்கும். அச்சட்டங்களை மனிதர்கள் மீறும்போது பிறருக்குத் தீங்கும் துன்பமும் ஏற்படும். எனவே நாம் விதிமுறைகளைப் பேணி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

 

சான்றாக, போக்குவரத்து விதிகளை நாம் சற்று உற்று நோக்கலாம். சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால் வாகனத்தை நிறுத்த வேண்டும்; பச்சை விளக்கு ஒளிர்ந்தால் வாகனத்தைச் செலுத்த வேண்டும். இது சாதாரண விதிதான். இதைப் பின்பற்றி நாம் வாகனத்தை இயக்கினால் நமக்கோ பிறருக்கோ எந்த விபத்துமின்றி நாம் பயணிக்கலாம்.  அந்த விதிகளை நாம் மீறும்போது நமக்கும் பிறருக்கும் விபத்து ஏற்படலாம். அல்லது நம்மைப் பார்த்துப் பிறரும் அந்த விதிகளை மதிக்காமல் வாகனத்தை இயக்க முற்படலாம். பின்னர் சிறிது நேரத்தில் எதிரெதிர்த் திசையில் செல்ல வேண்டியோர் தம் வாகனத்தை இயக்க முற்படுவார்கள்; அதனால் அங்குப் போக்குவரத்துச் சீர்குலைவு ஏற்படும். அதைச் சரிசெய்ய நீண்ட நேரம் ஆகும். ஆக விதிகளைப் பின்பற்றாததால் எத்தனைப் பேருக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதைப் பாருங்கள்.

 

 

இதைப் போலவே ஒவ்வொன்றிலும் விதிகள், சட்டங்கள் உள்ளன. மனித வாழ்க்கைக்கு ஏராளமான சட்டங்கள் உள்ளன. மனிதனைப் படைத்த அல்லாஹ், அவனுடைய சீரான வாழ்க்கைக்குச் சில சட்டவிதிகளை வகுத்துள்ளான். எல்லோரும் நேர்மையாக, நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றான். அநியாயம் செய்வோரைக் கண்டிக்கின்றான்; எச்சரிக்கிறான். நீதியாக நடந்துகொள்வோரை அல்லாஹ் நேசிப்பதாகத் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: “நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.”  (49: 9)

 

 

நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நீதியையும் நேர்மையையும் பின்பற்றி வாழும்போது அந்த வாழ்க்கை மனதுக்கு இதமாகவும் மகிழ்வாகவும் இருக்கும். அதேநேரத்தில் நாம் நம்முடைய செயல்பாடுகளில் நீதியைப் பின்பற்றாமல்  அநீதியாகச் செயல்படுகிறபோது, அது நம் மனதை வாட்டும். நம் மகிழ்ச்சியைச் சிதைக்கும். பிறரின் துன்பத்திற்கும் காரணமாகும். எனவே நாம் எப்போதும் நீதியின் பக்கமே நிற்க வேண்டும். அதுவே நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும். அத்தகையோருக்குத்தான் அல்லாஹ் உயர்வைக் கொடுக்கின்றான்.

 

 

எப்போது மனிதன் சட்டத்தை மீறி, நீதி பிறழ்கிறான்? ஒன்றை அவசரமாகப் பெறத் துடிக்கும்போதும், பிறரின் அன்பைப் பெற வேண்டும் என்று எண்ணும்போதும், தன்னுடைய பலத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கும்போதும், தன்னுடைய உறவினருக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்று கருதும்போதும், பணத்தைச் சம்பாதிக்க நினைக்கும்போதும், பிறர்மீது பகை இருக்கும்போதும் ஒருவன் எல்லை மீறுகின்றான்; வரம்பை உடைக்க முனைகிறான்; நீதியோடு செயல்பட மறுக்கிறான்; அநியாயமாக அதைப் பெறத் துடிக்கிறான்.

 

 

அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்காக நீதியாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள பகைமை அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டா திருக்கட்டும். (எவ்வளவுதான் பகைமை இருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. (5: 8)

 

 

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியின் மீதே உறுதியாக நிலைத்து இருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் தாய், தந்தைக்கோ உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தபோதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காகச் சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராயினும் ஏழையாயினும் (உண்மையையே கூறுங்கள். ஏனென்றால்) அல்லாஹ் அவ்விருவருக்குமே (உதவி செய்ய) மிகத் தகுதியானவன். ஆகவே, நீங்கள் (உங்கள்) மனவிருப்பங்களைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்! (4: 135)

 

 

நண்பர், உறவினர், எதிரி என்ற எந்தப் பாகுபாடுமின்றி நீதி செலுத்த வேண்டும். அனைவரையும் ஒரே பார்வையில்  பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செயல்பட்டார்கள். அதனால்தான் மக்ஸூமி குலத்தைச் சார்ந்த உயர்குடிப் பெண் ஃபாத்திமா திருடி விட்டாள்.  அவளுடைய கையை வெட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  ஆணையிட்டுவிட்டார்கள். அதை எப்படியாவது தடுத்த நிறுத்த வேண்டும் என அக்குலத்தைச் சார்ந்தோர் தீர்மானித்தார்கள். அதற்காக நபியவர்களிடம் பரிந்துபேச ஒருவரைத் தேடினார்கள். அவர்களிடம் இது குறித்துப் பேச யார் தகுதியானவர் என்று ஆலோசனை செய்தார்கள். உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களே தகுதியானவர் என்று முடிவெடுத்து அவரை நபியவர்களிடம் அனுப்பினார்கள். அவர் நபியவர்களிடம்  அது குறித்துப் பேசியபோது, “அல்லாஹ்வின் தண்டனைகளுள் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்’’ என்று நபியவர்கள் சினம் கொண்டு கூறினார்கள்.

 

 

உங்களுக்கு முன் இருந்த சமூகங்கள் அழிந்ததற்குக் காரணம் என்ன தெரியுமா? உயர்குலத்தவர் திருடினால் விட்டுவிடுவார்கள், பலவீனர்கள் திருடினால் தண்டிப்பார்கள்.” பிறகு “முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே திருடினாலும் நான் அவளது கையைத் துண்டிப்பேன்” என்று சொன்னார்கள். (புகாரீ: 3475) இதன்மூலம் “சட்டத்தின்முன் அனைவரும் சமம்; இதுதான் நீதி” என்பதை  நபியவர்கள் விளக்கியுள்ளார்கள்.

 

 

இதுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிலைப்பாடு. இத்தகைய நீதியைத்தான் அவர்கள் போதித்தார்கள். அதன்படியே செயல்பட்டார்கள். அதை இந்தச் சமுதாய மக்கள் பின்பற்றினால் வெற்றிபெறுவார்கள் என்பது திண்ணம். மாறாக பெரிய இடம், வேண்டியவர், செல்வர், குலப்பெருமை மிக்கவர், நம்ம ஊர்க்காரர் முதலான காரணங்களை முன்வைத்து, விதிகள் மீறப்படும்போது சமநீதி இறந்துபோய்விடுகிறது. அதனால் பலவீனர்கள் பாதிக்கப்படுவார்கள்; ஏழைகளுக்கு நீதி எட்டாக் கனியாகிவிடும். பதவி, பணம் இவற்றைக் காட்டி ஆசையூட்டி நீதியை வளைப்போர் உள்ளனர்.

 

 

அவற்றிற்கு மயங்காதோரை பயம் காட்டி மிரட்டி நீதியை வளைக்கப்பார்ப்பார்கள். இதுதான் தொன்று தொட்டு வம்பர்கள் கடைப்பிடிக்கும் உத்தி. ஆனால் இவற்றிற்கெல்லாம் மயங்காதோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள்தாம் நீதியாளர்கள். அவர்கள் ஈருலகிலும் வெற்றிபெற்றவர்கள்.

 

 

 

தற்காலத்தில் எத்தனையோ நீதிபதிகளைப் பார்க்கிறோம். அவர்களுள் பெரும்பாலோர் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு, நீதிக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிவிட்டுத் தம் ஓய்வுக்குப் பின் உயர்பதவிகளை அடைந்துகொள்வதைப் பார்க்கின்றோம். வேறு சிலர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, நீதியைப் புறக்கணித்து, அநியாயத் தீர்ப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள். வேறு சிலர் அரசியல்வாதிகளின் மிரட்டலுக்குப் பணிந்து தீர்ப்பை மாற்றிக் கூறுகின்றார்கள். அதேநேரத்தில் பணம், பதவி, பயம் எதற்கும் இசைந்துவிடாமல் நீதியை மட்டுமே  நிலைநாட்டுவோரும் உள்ளனர். அந்த வரிசையில் உள்ளவர்தாம், முன்னாள் முதல்வர் ஷெயலலிதாவுக்கு, அவரது குற்றத்திற்கான தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா ஆவார். இவர்போன்ற துணிச்சலான நீதிபதிகள் நாடெங்கும், உலகெங்கும் இருந்தால் குற்றம் செய்வோர் அஞ்சுவர். அது மட்டுமின்றி, மக்கள் யாவரும் மகிழ்ச்சியோடு வாழ்வர்.

 

 

விதிகளைப் பின்பற்றி நீதியோடு நடக்கின்ற நம்மைச் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்; சிலர் நம்மை வசைபாடலாம்; சிலர் நம்மை வெறுக்கலாம். ஆனால் அதுதான் நமக்கு மனஅமைதியையும் நிம்மதியையும் தரும். நீதியை வழுவாது கடைப்பிடிக்கின்ற நம்மால் பலர் பயனடைவார்கள்; தூரத்திலிருந்து நம்மை வாழ்த்திக்கொண்டிருப்பார்கள்; வேறு சிலர் நமக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பார்கள்; சிலர் நம்மைப் பற்றிப் பிறரிடம் நல்லவிதமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். இத்தகைய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்தான் இம்மையிலும் மறுமையிலும் நமக்குப் பயன்தரும்.

 

 

நாம் நீதியைக் கடைப்பிடிக்கும்போது எதிரிகளும் நம்மை மதிக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால், நம்மை நாடி வருவார்கள். அத்தகைய நிலையைத்தான் நபியவர்களின் வாழ்வில் காண்கின்றோம். நபியவர்களின் நீதி குறித்து எதிரிகளும் நன்கு அறிவர். அதனால்தான் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அதற்கான சான்றுகள் ஏராளம் உள்ளன. படிப்பினைக்காக ஒரு நிகழ்வைக் காணலாம்.

 

 

அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவில் ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் நடந்த நிகழ்வு. ஒரு நாள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் யூதன் ஒருவனுக்கும் இடையே ஒரு கவசம் குறித்துத் தகராறு ஏற்பட்டது. “இந்தக் கவசம் என்னுடையது” என்று அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறினார். அதை அந்த யூதன் மறுத்து, “இல்லை, இது என்னுடையது” என்றான். அலீ அவர்களோ நபியவர்களின் உறவினர். இஸ்லாமிய அரசின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் ஆவார். அந்த யூதனோ முஸ்லிமல்லாத ஒருவன்; அரசின் எதிர் தரப்பைச் சேர்ந்தவன். இருப்பினும் அந்த யூதன் நேராக நபியவர்களிடமே நீதிக்காக வந்தான். நபியவர்கள் மனிதர்களின் முகங்களைப் பார்க்காமல் நீதியை நிலைநாட்டுவார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. நபியவர்கள், அலீ அவர்களிடம், “உங்களிடம் சாட்சி உள்ளதா?” என்று கேட்க, அலீ ரளியல்லாஹு அன்ஹு, “இல்லை” எனச் சொன்னார். அப்போது நபியவர்கள், “சாட்சி இல்லாத நிலையில், இந்தக் கவசம் யூதனுக்கே உரியது” எனத் தீர்ப்புக் கூறினார்கள்.

 

 

நபியவர்கள் தமது உறவினருக்கு ஆதரவாகச் சிறிதளவுகூடச் செயல்படவில்லை. இந்தத் தீர்ப்பைக் கேட்ட, அந்த யூதன் அதிர்ச்சியடைந்தான். “இது உண்மையான நீதிதான்! ஒரு நபி; ஓர் ஆட்சியாளர், தம் உறவினருக்கு எதிராக எனக்கு ஆதரவாகத் தீர்ப்புச் சொல்கிறார் என்றால் இது உண்மையான மார்க்கமே!” என்று கூறி, அவன் அந்த இடத்திலேயே இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டான். இதுதான் நீதியின் வெற்றி.

 

 

இன்றைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையெத்தனை தீர்ப்புகள்? அத்தனையும் அநியாயமான தீர்ப்புகள். ஏற்கெனவே நூறு ஆண்டுகளுக்கு முன்னரே முடித்து வைக்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிராகவும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் இன்றைய நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களெல்லாம் நீதிக்குத் தலை வணங்காமல் வேறு யாருக்கோ தலை வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களால் இச்சமுதாயத்திற்கு மிகப்பெரும் கேடுதான் விளையும்.

 

 

மறுமை விசாரணை நாளில் எல்லோரும் தம் தீர்ப்பிற்காகக் காத்திருப்பார்கள். விசாரணை தொடங்கும் அந்நேரத்தில் எல்லோரும் கட்டாந்தரையில் கடும் வெப்பத்தில் நின்றுகொண்டிருப்பார்கள். அவ்வேளையில் அல்லாஹ்வின் ஆசனத்தின் (அர்ஷ்) நிழலைத் தவிர வேறு நிழலே இருக்காது. அத்தகைய நிழலில் அல்லாஹ் ஏழு வகையினருக்கு நிழல் கொடுப்பான். அவர்களுள் ஒருவர் நீதிமிக்க ஆட்சியாளர் ஆவார். (புகாரீ: 666) இதுதான் நீதியாளர்களுக்கு அல்லாஹ் வழங்கும் கண்ணியமாகும்.

 

 

இளைஞர்களே, நீங்கள் நீதியைக் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டிய இடம் நீதிமன்றமோ சட்டமன்றங்களோ இல்லை. மாறாக உங்கள் மனசாட்சியிடம்தான். ஆம்! நம் மனதுதான் நமக்கான நீதிமன்றம் (கோர்ட்). நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற ஒவ்வொருவரிடமும் நீதியோடு நடந்துகொண்டால் நம் மனம் அமைதியடையும்; நாமும் மகிழ்ச்சியடையலாம்; நம்மைச் சுற்றியுள்ளோரும் மகிழ்ச்சியடைவர்.

==================