-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
பிஎச்.டி.
கொடுப்போரைவிடப் பெறுவோரே
நம்முள் பெரும்பாலோர் உள்னனர். ஆனால் பெறுவதைவிடக் கொடுப்பதில்தான் மகிழ்ச்சி நிறைந்துள்ளது
என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. எனவேதான் கொடுப்போரைவிடப் பெறுவோர்
நிறைந்துள்ளனர். பிறரிடமிருந்து எதையாவது பெறுவதிலேயே குறியாக உள்ளனர். உறவினர்கள்
கொடுக்கமாட்டார்களா,
மருமகள் வீட்டிலிருந்து கொடுக்கமாட்டார்களா, அண்டை வீட்டார் கொடுக்கமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டே
இருக்கின்றார்கள்.
அத்தகையோர் அதை அப்படியே
மாற்றி யோசிக்கலாமே?
உறவினர்களுக்குக் கொடுக்க வேண்டும்; அண்டை வீட்டாருக்குக் கொடுக்க வேண்டும்; நம் மஹல்லாவில் உள்ள
ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்;
மார்க்கப் பணியாற்றுவோருக்குக் கொடுக்க
வேண்டும்;
கடன்பட்டோருக்குக் கொடுக்க வேண்டும்; பொருளாதார நெருக்கடியால் திருமணம் செய்ய முடியாமல் காத்திருப்போருக்குக் கொடுக்க வேண்டும்; கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் ஏழ்மையில் வாடுவோருக்குக் கொடுக்க
வேண்டும் எனப் பட்டியல் போட்டு உதவி செய்ய முன்வரலாம்.
எதைக் கொடுப்பது:
பொருளாதார வசதியுடையோர் தம் பணத்தால் பிறருக்கு உதவிசெய்வார்கள்; தர்மம் செய்வார்கள். அதன்மூலம் நன்மையை ஈட்டிக்கொள்வார்கள். ஆனால்
பொருளாதார வசதி இல்லாதோர் எப்படிக் கொடுப்பது, எதைக் கொடுப்பது? அதற்கும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
வழிகாட்டியுள்ளார்கள். உழைத்துச் சம்பாதித்துத் தானும் உண்டு, பிறருக்கும் கொடுக்க வேண்டும். உடல் வலிமையுள்ளோர் தம் உடலால் உதவ
வேண்டும். அறிவு வலிமையுடையோர் தம் அறிவைப் பயன்படுத்திப் பிறருக்கு உதவ
வேண்டும். ஆரோக்கியமான இளைஞர்கள் தம் குருதி கொடுத்து உதவ வேண்டும். ஆக
பிறருக்குக் கொடுக்க,
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று உள்ளது. யாருக்கு எது இயலுமோ அதை அவர் கொடுக்கட்டும்.
இது குறித்த நபிமொழி ஒன்று
திர்மிதீ நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. “உன் சகோதரனின் முகத்தைப் பார்த்துப்
புன்னகை செய்வதும் நீ செய்யும் தர்மம் ஆகும். நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதும் தர்மம் ஆகும். திக்குத் தெரியாத பகுதியில் (தடுமாறும்)
ஒருவருக்கு வழிகாட்டுவதும் நீ செய்யும் தர்மம் ஆகும். கண்பார்வையற்ற ஒருவரைக்
கவனிப்பதும் நீ செய்யும் தர்மம் ஆகும். நடைபாதையில் கிடக்கும் கல், முள்,
எலும்பு ஆகியவற்றை அகற்றுவதும் நீ செய்யும்
தர்மம் ஆகும். உனது வாளியிலுள்ள தண்ணீரை உன் சகோதரனின் வாளியில் ஊற்றிக்கொடுப்பதும் நீ செய்யும்
தர்மம் ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ:
1879)
ஒவ்வொரு நற்செயலும் தர்மம்
ஆகும் (புகாரீ: 6026).
இந்த நபிமொழியின் அடிப்படையில் பிறருக்கு
உதவுதல்,
பிறரைத் தம் வாகனத்தில் ஏற்றிக்கொள்ளுதல், பிறரின் சுமையைச் சுமந்து செல்லல், பிறரின் சுமையை அவர்தம்
தலையில் தூக்கிவைத்துவிடுதல்,
சுமைகளை வண்டியில் ஏற்றிவிடுதல், கல்வி கற்பித்தல்,
விளையாடக் கற்பித்தல், தொழில்களைக் கற்பித்தல்,
வழிதெரியாதோருக்கு விழியாய் இருந்து
வழிகாட்டுதல்,
பார்வையற்றோர் தேர்வெழுத எழுத்தராகச்
(ஸ்க்ரைப்) செயல்படுதல்,
முகவரி தெரியாதோருக்கு முகவரி கூறி
வழிகாட்டுதல்,
பிறரின் வாளியில் அல்லது குடத்தில் தண்ணீர்
இறைத்து ஊற்றுதல்,
எழுதத் தெரியாதோருக்கு எழுதிக் கொடுத்தல், விண்ணப்படிவங்கள் பூர்த்தி செய்யத் தெரியாதோருக்கு அதைப் பூர்த்தி
செய்துகொடுத்தல் உள்ளிட்டவை அறச் செயல்களே ஆகும்.
“ஒவ்வொரு முஸ்லிம்மீதும் தர்மம் (செய்ய வேண்டிய
கடமை) உள்ளது” (புகாரீ: 1445)
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள
செய்தி ஒவ்வொருவரையும் தற்சார்புள்ளவராக வாழத் தூண்டுகிறது. பிறரிடம் கையேந்தாமல்
சுயமரியாதையுடன் வாழப் பழக்குகிறது. அவ்வாறு தம்மிடம் பொருளாதார வசதியில்லாதவர் தம் சுயமுயற்சியால்
உழைத்துப் பொருளீட்டித் தாமும் உண்டு, பிறருக்கும் வழங்க
வேண்டுமென்கிறது. அதற்கும் இயலாவிட்டால் நன்மையை ஏவு என்கிறது. இது எல்லோருக்கும்
மிக எளிதானது. பிறர் தவறான வழியில் செல்வது கண்டு, ‘நமக்கென்ன’ என்று
இருந்துவிடாமல் பிறர் நலம் நாட வேண்டும் என்ற அடிப்படையில், ‘தொழுகச் செல்,
தர்மம் செய், ஏழைக்கு உதவு, பசித்தோருக்கு உணவளி’ என்று பிறருக்குச் சொல்லலாம். அதன் மூலம் ஒருவர்
நன்மையை ஈட்டிக்கொள்ளலாம். சரி,
அதற்கும் இயலவில்லை; பிறரை ஏவும் அளவிற்குத் துணிவில்லை என்றால் யாருக்கும் தீமை செய்யாமல் இரு.
அதுவே உனக்கு நன்மைதான் என்று நபியவர்கள் வழிகாட்டுகின்றார்கள்.
ஆக ஒருவர் தம்மால் இயன்றதைப்
பிறருக்குக் கொடுத்துதவ வேண்டும் என்று நபியவர்கள் தூண்டுகின்றார்கள். ஒருவர்
பிறருக்குக் கொடுக்கத் தொடங்கிவிட்டால் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்க
மாட்டார். அதனால் பிறரிடம் தேவையாவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். அதனால்தான் பிறருக்குக் கொடு என்று நபியவர்கள்
கட்டளையிடுகின்றார்கள். கொடுப்பதுதான் நம்மை மேம்படுத்திக்கொள்ளும் வழியாகும்.
பிறரை மகிழ்வித்தல்: இந்தத்
தலைப்பைப் பார்த்தவுடன் பலரும் எண்ணுவது, நகைச்சுவை (ஜோக்) சொல்லிச்
சிரிக்க வைத்தல் என்பதைத்தான். இஸ்லாமிய மார்க்கம் அதைச் சொல்லவில்லை. மாறாக நாம்
உழைத்து இல்லாதோருக்கு வழங்குகிறபோது, அதைப் பெறுவோர் மகிழ்வர்; நாம் உழைத்த பணத்தில் ஆடையற்றோருக்கு ஆடை வாங்கிக் கொடுக்கும்போது அதைப்
பெறுவோர் மகிழ்வர்;
நாம் உழைத்த பணத்தில் பிறருக்கு உணவு வாங்கிக்
கொடுக்கும்போது அதைப் பெறுவோர் மகிழ்வர். அந்த மகிழ்ச்சியைத்தான் நாம் பிறரிடம்
கொண்டுவர வேண்டும்.
இது குறித்த நபிமொழியைப்
பாருங்கள். உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களிடம்,
“எந்தச் செயல்கள் மிகச் சிறந்தவை?” என்று கேட்கப்பட்டது. “ஓர் இறைநம்பிக்கையாளருக்கு (முஃமினுக்கு) மகிழ்ச்சி
அளிப்பதே சிறந்த செயல்களில் ஒன்றாகும். அதாவது, அவனுடைய பசியைத் தீர்க்க நீ
அவனுக்கு உணவூட்டுவது,
அல்லது அவன் நிர்வாணத்தை (உடை இல்லாத நிலையை)
நீ ஆடையிட்டு மறைப்பது,
அல்லது அவனுடைய தேவையை நீ நிறைவேற்றிக்
கொடுப்பது” என்று கூறினார்கள். (முஅஜமுல் அவ்ஸத்: 5081)
ஆக நம்மால் இயன்றதைப்
பிறருக்குக் கொடுப்பதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. இதனால்தான், “(பெறுவதற்காகத்) தாழ்ந்த கையைவிட (வழங்குவதற்காக) உயர்ந்த கையே மேலானது”
என்று கூறினார்கள். நாம் பிறருக்குக் கொடுப்பதன் மூலம் நம் கை மேலே இருக்கிறது.
நம் கை மேலோங்குவதைப்போல் நம் வாழ்க்கையும் மேலோங்கும். எனவே நம்மால் இயன்றதைக்
கொடுத்துக்கொண்டே இருப்போம். வாழ்வில் உயர்வடைவோம்.
=================







