ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

சினிமா ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பயங்கரவாத மாயை

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம், மதீனா மஸ்ஜித், பட்டினம்பாக்கம், சென்னை.-28

 

வெளியில் பார்ப்பதைத் திரையிலும் பார்க்கலாம்; வெளியில் பார்க்கத் தகாததைத் திரையிலும் பார்க்கக்கூடாது என்பதே சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் ஆகும். சினிமா என்பது ஓர் ஊடகம். அவ்வளவுதான். அதன்மூலம் மக்கள் மனதில் நன்மையை விதைப்பதும் தீமையை விதைப்பதும் அவரவரின் எண்ணத்திற்கேற்ற வெளிப்பாடு. நல்லெண்ணம் கொண்டு மக்கள் நலன் நாடுவோர் நன்மையைக் கொண்டு செல்கின்றனர்; தீய எண்ணம் கொண்டோர் அதன்மூலம் தீமையை விதைத்துக் கொண்டிருக்கின்றனர். கத்தி நன்மையா, தீமையா என்று கேட்டால் அதனைப் பயன்படுத்துவதை வைத்துதான் அதற்கான விடையைச் சொல்ல முடியும். மாறாக, பொத்தாம் பொதுவாக, ‘அது தீமை’ என்று சொல்லிவிட முடியாது. அதுபோலவே சினிமாவும் அமைந்துள்ளது. மக்களின் அளவற்ற விருப்பத்தால் இது ஊடகத் துறையில் முக்கிய இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

 

அதேநேரத்தில் ஓர் ஊடகத்தைப் பிறர் எவ்வாறு பயன்படுத்துகின்றார்களோ அதே விதத்தில்தான் முஸ்லிம்களாகிய நாமும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த ஊடகத்தை நல்வழியில் எவ்வாறு நாம் பயன்படுத்த இயலும் என்பதை யூகித்துணர்ந்து, அதை நோக்கித் திருப்ப வேண்டும். அதற்காகத்தான்  படைத்தோன் அல்லாஹ் நமக்குப் பகுத்தறிவை வழங்கியுள்ளான். வழிகாட்ட வான்மறையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளும் உள்ளன. அவற்றை மைல்கல்லாகக் கொண்டு நன்மையை நோக்கி மக்களை இழுக்கும் விதத்தில் இந்த சினிமா ஊடகத்தைப் பயன்படுத்த வேண்டும்.

 

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சமூக விழிப்புணர்வு, பகுத்தறிவை ஊட்டுதல், மூடப்பழக்கங்களை முறியடித்தல், மதுவின் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வரலாற்றைப் பதிவு செய்தல் உள்ளிட்ட எத்தனையெத்தனையோ நல்ல கருத்துகள்மூலம் மக்கள் மனதை மாற்றிச் செம்மைப்படுத்தும் வகையிலான திரைப்படங்கள் வெளிவந்தன. மக்கள் அவற்றைப் பார்த்துப் பொழுதுபோக்கியதோடு நல்ல கருத்துகளையும் தெரிந்துகொண்டனர்.

 

அதன் பின்னர் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சினிமா தயாரிக்கப்படலானது. அப்போது தொடங்கி இன்று வரை அது மிகப்பெரிய அளவிலான ஒரு வியாபாரமாகிவிட்டது. வியாபாரம் என்று வந்துவிட்டால் மோசடி என்பதும் அதனைத் தொற்றிக்கொண்டு வந்துவிடும். மோசடி என்பதற்கு முகம் தெரியாது. யாரை வேண்டுமானாலும் அது மோசடியால் வஞ்சிக்கும். அதனால்தான் இந்த இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட முஸ்லிம்களையே தேசத் துரோகிகளாகக் காட்டத் தொடங்கிவிட்டனர் அந்த மோசடிக்காரர்கள்.

 

சினிமா என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த ஊடகம் ஆகும். அது மக்களின் மனதில் நேரடியாகச் சென்று ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அது இன்றைக்கு மக்களோடு இரண்டறக் கலந்துவிட்டது. அது அவர்களின் பொழுதுபோக்கு மட்டுமில்லை; வாழ்க்கையாகவே மாறிப்போய்விட்டது. இதை நன்றாக அறிந்துகொண்ட யூதர்கள்  ஆங்காங்கே உள்ள திரைப்பட இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பணத்தை அள்ளிக் கொடுத்து, முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான தவறான மாயப் பிம்பத்தை மக்கள் மனதில் உருவாக்கும் விதத்தில் கதையை அமைக்க வலைவீசினார்கள். அந்த மாய வலைக்குள் விழுந்தவர்கள்தாம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் அவர்கள்மீது வெறுப்புணர்வைத் தூண்டுமுகமாகவும் திரைப்படங்களை உருவாக்கினார்கள்.

 

தமிழ்நாட்டைப் பொருத்த வரை முதன் முதலாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு ரோஜா எனும் திரைப்படம் வெளியானது. அதில் காஷ்மீர் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டினார். அதுதான் தொடக்கம். அதன்பிறகு ஒருவருக்குப்பின் ஒருவராகப் பல்வேறு இயக்குநர்கள் முஸ்லிம்களுக்கெதிரான திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்கள். அந்த வரிசையில் 2013ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த விஸ்வரூபம் எனும் திரைப்படம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குரலாகத் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தன. அதன் பயனாக அதிலிருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டன. இருந்தாலும் அந்தத் திரைப்படம் மக்கள் மனங்களில் முஸ்லிம்கள் குறித்த ஒரு தவறான பிம்பத்தைப் பதியத்தான் செய்தது. 

 

Innocence of Muslims எனும் தலைப்பில் முன்னோட்டம் வெளியாகி, அதன்பின்  The innocent Prophet எனும் பெயரில் திரைப்படமாக வெளிவந்து, உலக முஸ்லிம்கள் அனைவரும் தம் உயிரைவிட மேலாக மதித்துப் பின்பற்றி வருகின்ற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொச்சைப்படுத்தியது; உலக முஸ்லிம்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பியது. ஆக, அவர்களின் நோக்கம் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களையும் சொச்சைப்படுத்த வேண்டும். அனைவரும் அவர்களை வெறுக்க வேண்டும் என்பதேயாகும்.

 

இதன் பின்னணி நோக்கம் என்னவென்றால், உலக அளவில் மக்களை அழிவுக்குள்ளாக்குவதும் அதன்மூலம்  வியாபாரம் செய்வதும்தான். அழிவு என்பது மக்களை நேரடியாக அழித்தல், சமுதாயச் சீர்கேட்டை ஏற்படுத்தி அதன்மூலம் அழித்தல் என இரண்டும் அடங்கும். இவ்வுலகை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என யூதர்கள் எண்ணுகிறார்களோ அதற்கேற்பக் கட்டமைக்க முனைகிறார்கள்.

 

திரைப்படத்தின் மூலம், வன்முறையைத் தூண்டுதல், சமுதாயச் சீர்கேட்டை உண்டுபண்ணுதல், குடும்பத்தைச் சிதைத்தல், ஆடம்பரப் பொருள்களை விரும்பச் செய்தல், நாணத்தை நீக்குதல், உறவுகளைச் சிதைத்தல், சின்னச்சின்ன விஷயங்களுக்காகக் கொலை செய்யத் தூண்டுதல், பாலியல் வன்புணர்வு செய்தல் உள்ளிட்ட பல வகையான கேடுகளைக் காட்சியாகக் காட்டி மக்கள் மனதைக் கெடுத்து, தாம் விரும்பிய கருத்தைத் திணிக்க முயல்கின்றார்கள். தாம் காட்டுவதுதான் நாகரிகம், பண்பாடு என்ற சிந்தையை ஊட்டுகின்றார்கள். 

 

எல்லாமே அவர்களுக்கு வியாபாரம்தான். வன்முறையைத் தூண்டுவதன்மூலம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருள்கள் வியாபாரம், சிறுவர்களின் மனதைக் கவர்வதன்மூலம் விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்தல் (கேம்ஸ்)குறிப்பிட்ட அலைவரிசைகளைப் பார்க்கத் தூண்டி வியாபாரம், பெண்களைக் கவர்ச்சியாகவும் அழகாகவும் அரைகுறை ஆடைகளுடன் காட்டுவதன்மூலம் ஆடைகள், அழகு சாதனப் பொருள்களின் வியாபாரம், மது குடித்தல், சிகரெட் பிடித்தல் போன்ற காட்சிகளைத் தவறாது ஒவ்வொரு திரைப்படத்திலும் காட்டுவதன்மூலம் மது, சிகரெட் வியாபாரம் என ஒவ்வொன்றிலும் வியாபாரத் தந்திரம் மறைந்துள்ளது. ஏனென்றால் இவை அனைத்தையும் தயாரிப்பது அவர்கள்தாம். 

 

திரைப்படங்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவதன்மூலம் புதிதாக யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையை உண்டுபண்ணுவது மற்றொரு தந்திரம். ஏன்? முஸ்லிம்கள் மது குடிப்பதில்லை; போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதில்லை; வட்டிக்குக் கடன் வாங்குவதில்லை; பெண்கள் புர்கா அணிவதால் அவர்கள் அழகுசாதனப் பொருள்களையோ அரைகுறை ஆடைகளையோ  வாங்கி அலங்கரித்துக்கொண்டு வீதியில் உலா வருவதில்லை; இதனால் அவர்களின் வியாபாரம் கொழிப்பதில்லை. ஆகவேதான் முஸ்லிம்கள்மீது அவர்களுக்கு எந்தவித விருப்பமுமில்லை. அவர்களைப் பொருத்த வரை முஸ்லிம்களை அவர்களின் வியாபாரத்திற்கு ஒரு தடைக்கல்லாகத்தான் எண்ணுகின்றார்கள்.

 

தற்போது இந்தியாவில் இருபத்தைந்து கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உள்ளனர். இஸ்லாமிய மார்க்கத்தைப் புரிந்துகொண்டு, அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இன்னும் ஐம்பது கோடிப் பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் நிலைமை என்னாகும்? அங்கெல்லாம் மதுக்கடைகள் மூடப்படும்; அழகு சாதனப் பொருள்கள், கவர்ச்சியான ஆடைகளின் வியாபாரம் படுத்துக்கொள்ளும்; விபச்சாரத் தொழில் நசிந்துபோகும்; வட்டிக் கடைகள் வழக்கொழிந்துபோகும்; பீடி, சிகரெட், புகையிலை, பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் மறைந்துபோகும். சமூகம் தூய்மையடைந்து விடுவதால் சமுதாயச் சீர்கேட்டை உண்டுபண்ணுகின்ற எந்த வியாபாரமும் முஸ்லிம்கள் மத்தியில் நடைபெறாது. இவற்றையெல்லாம் அவர்கள் விரும்புவார்களா?

 

சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாது” என்ற இறைக்கட்டளையையும் மீறி, தம் சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் மீன்பிடித்தவர்கள்தாமே இந்த யூதர்கள்? அவர்கள் தம் வியாபாரம்  நொடித்துப் போகுமாறு விட்டுவிடுவார்களா? தம் வியாபாரத்திற்கு எதிராக உள்ள எவரையும் வளரத்தான் விடுவார்களா?

 

இந்தத் திரைப்படங்களின் தாக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சரியாக அறியாதோரின் மனங்களில்  அவர்களைப் பற்றிய தவறான பிம்பத்தைப் பதிவு செய்துவிட்டது. இதனால் முஸ்லிம்கள் உண்மையிலேயே தீவிரவாதிகள்தாம் என்ற மனஓட்டத்திற்கு அவர்களைத் தள்ளிவிட்டது. ஆதலால் அம்மக்கள் முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடுவதில்லை; அவர்களோடு இயல்பாகப் பழகுவதில்லை; நட்புகொள்வதில்லை; அண்டைவீட்டினராக இருக்க விரும்புவதில்லை. இன்னும் ஒருபடி மேலேபோய், அண்ணன்-தம்பிகளாக, மாமன்-மச்சான்களாகப் பழகிவந்தோரும் அவர்களைத் தவறான எண்ணத்தோடும் நம்பிக்கையின்மையோடும் பார்க்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டது. அது மட்டுமன்று, அவர்களை யாராவது அடித்தாலும் ஓடிவந்து தடுப்பதில்லை. அவர்கள் எவ்வகையில் பாதிக்கப்பட்டாலும் கைகொடுப்பதில்லை. இதனால் பிற சமயச் சகோதரர்களைவிட்டு விலகியே வாழ வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் இன்றைய முஸ்லிம்கள்.

 

இவ்வாறு தீய எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் தாக்கம் அப்போது தோன்றி, குறிப்பிட்ட சில நாள்களோடு முடிந்துபோய்விடுவதில்லை. அந்தத் தவறான கருத்தை அடுத்தடுத்த தலைமுறை வரை கொண்டு போய்ச் சேர்ப்பதில் முனைப்போடு செயல்படுகின்றார்கள். ஆம்! தொலைக்காட்சி அலைவரிசைகளில் அந்த நச்சுக் கருத்தைக் கொண்டுள்ள திரைப்படங்களை அவ்வப்போது ஒளிபரப்புகின்றார்கள். அதைக் காணும் பிஞ்சு உள்ளங்களில் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான பிம்பம் பதிந்துபோய்விடுகிறது. அது மட்டுமின்றி, யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதால் அவை காலந்தோறும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வேலையைச் செவ்வனே செய்துகொண்டே இருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

 

1995ஆம் ஆண்டு வெளியான பம்பாய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கிவிஷயகாந்த் நடிப்பில் வெளியான நரசிம்மா உள்ளிட்ட பல திரைப்படங்கள், அர்ஷுன் நடித்துள்ள பல திரைப்படங்கள் முதலியவை முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி, அவர்களைத் தீவிரவாதிகளாகவும் சமூக விரோதிகளாகவும் நாட்டுப்பற்று இல்லாதவர்களாகவும் கடத்தல்காரர்களாகவும் தவறாகச் சித்திரிப்பதைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றன. இந்தப்போக்கு நிறுத்தப்படாவிட்டால் இவ்வுலகில் அமைதி திரும்பாது; வன்முறை தொடர்ந்துகொண்டே இருக்கும். அதைச் செய்வோர் முஸ்லிம்கள் அல்லர். ஏனென்றால், “பாதையில் இடர்தரும் பொருள்களை அகற்றுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்த பொய்யாமொழியை முஸ்லிம்கள் தம் அன்றாட வாழ்வில் பின்பற்றி வருவதால் அவர்கள் யாருக்கும் எந்த இடையூறும் செய்ய மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்களின் எதிரிகள் வன்முறைச் செயல்களைத் தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். அவற்றைச் செய்துமுடித்ததும் முஸ்லிம்கள்மீது பழி போடுவார்கள்; அவர்கள் கைது செய்யப்படுவார்கள்; சிறைக்குள் வைத்துச் சித்திரவதை செய்யப்படுவார்கள். திரைப்படங்களால் தவறான கருத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கின்ற மக்கள் அதை உண்மையென நம்புவார்கள். இது ஒரு தொடர்கதையாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

 

உலக அளவில் அந்தந்த நாட்டு மொழிகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உலக மக்கள் அனைவரின் மனதிலும் ஒரே நேரத்தில் இஸ்லாத்திற்கெதிரான கருத்தை விதைக்கும் வேலையை யூதர்கள் தொடர்ந்து மறைமுகமாகவே செய்துகொண்டிருக்கின்றார்கள். காட்சி ஊடகம் மட்டுமின்றி, அச்சு ஊடகத்தின் மூலமாகவும் இஸ்லாத்திற்கு முரணான செய்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு நயமான நயவஞ்சகப் பேச்சாளர்கள்மூலமும் தவறான கருத்தை விதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கான தீர்வு என்னவென்றால் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் கொள்கைக் கோட்பாடுகளையும் திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நயமாக நவின்ற பொய்யாமொழிகளையும் சகோதரச் சமுதாய மக்களுக்கு எவ்வகையிலேனும் தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு நாம் நடத்துகின்ற இஸ்லாம் சார்ந்த சொற்பொழிவுகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும். மேலும் நாம் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டு, காட்சி ஊடகத்தையும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மனங்களில் உள்ள தவறான மனப்பான்மையை மாற்ற முடியும்.  

===============================











திங்கள், 18 ஆகஸ்ட், 2025

படித்த முதிர்கன்னிகள்

     

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கால் நூற்றாண்டுக்குமுன் இருந்ததைவிடத் தற்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் கல்விசார் விழிப்புணர்வு பரவலாகவே உள்ளது. ஆண்கள்-பெண்கள் என இருசாராரும் உயர்கல்வி பயின்று உயர்வடைகிறார்கள். இளங்கலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், இளம்முனைவர், முனைவர் பட்டம் வரை பெறுகின்றார்கள். இது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது. இந்நிலை மேன்மேலும் விரிவடைய வேண்டும். ஆனால் ஒன்றைப் பெறுகின்ற அவர்கள் மற்றொன்றை இழக்கின்றார்களே என்பதை நினைத்துத்தான் நமக்குப் பெருங்கவலையாக இருக்கிறது.

 

நம் வாழ்க்கையில் இளமைக் காலம் என்பது மிகக் குறுகிய காலமே ஆகும். அதைத் தவற விட்டுவிட்டால் மீண்டும் அதைப் பெற முடியாது. இளைஞர்களும் இளைஞிகளும் ஒரு பக்கம் படிப்பு, படிப்பு என்று முன்னேறுகிறார்கள்; மறுபக்கம் அவர்கள் தம் இல்வாழ்க்கையைத் தொலைக்கின்றார்கள். பெண்களுக்கான திருமண வயது 18 என்று இருக்கும்போது 25 வயதை எட்டிய பின்னரும் திருமணம் செய்துகொள்ளாமல் படிப்பு, பணி என்பதிலேயே தம் இளமைக் காலத்தின் ஒரு பகுதியை இழந்துவிடுகின்றார்கள். 25 வயதில் திருமணத்திற்காக மாப்பிள்ளை தேடத் தொடங்கும்போது பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பற்பல ஒப்பீடுகள் செய்வதிலேயே 27 வயதை அடைந்துவிடுகின்றார்கள்.

 

பிறகு ஒரு மாப்பிள்ளை வந்தால் வயது பொருத்தமாக இல்லை என்கிறார்கள். பின்னர் மற்றொருவரைக் காட்டினால் வேலை பொருத்தமாக இல்லை என்கிறார்கள். பிறகு மற்றொரு மாப்பிள்ளையைக் காட்டினால் சம்பளம் குறைவாக இருக்கிறது என்கிறார்கள். அதாவது மணப்பெண்  ஒரு பெரும் நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருக்கிறாள். அவள் மாதந்தோறும் வாங்கும் சம்பளத்தைவிட மாப்பிள்ளையின் சம்பளம் குறைவாக உள்ளதால் அந்த மாப்பிள்ளை நிராகரிக்கப்படுகிறார். இப்படியே பொருத்தம் பார்த்து, நிராகரிப்பதிலேயே சில ஆண்டுகள் கழிந்துவிடுகின்றன. இப்போது பெண்ணின் வயது முப்பதை எட்டிவிட்டது. எனக்குத் தெரிந்து, படித்துப் பற்பல பட்டங்களை வாங்கிய பெண்கள் சிலர் 35 வயதை எட்டியும் தகுந்த மணாளர் கிடைக்காததால் இல்வாழ்க்கைக்குள் நுழைய முடியாமல் தவிக்கின்றார்கள்.

 

பிள்ளைப்பேறு: தாமதமான திருமணத்தால் பிள்ளைப்பேறு எளிதாகக் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள் சிலருக்குக் குழந்தைப்பேறு கிடைக்காமலேயே போய்விடுகின்றது. வேறு சிலர் குழந்தை பாக்கியத்திற்காகச் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களை நாடுகின்றார்கள். அவர்களுள் சிலர் தத்தமது கணவரின் அணுக்களை ஊசிமூலம் உட்செலுத்தி குழந்தையைப் பெற்றுக்கொள்கின்றார்கள். சிலருக்குக் கணவரின் அணுக்களின் வீரியம் குறைந்துவிடுவதால் அதில் குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் இல்லாதபோது பிற ஆடவரின் அணுக்களைக் கருப்பைக்குள் செலுத்தி குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். இவ்வாறு சிலர் இஸ்லாம் தடைவிதித்துள்ள வழியில் குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் துணிந்துவிடுகின்றார்கள்.

 

மனநிம்மதியின்மை: நம் சமுதாயத்தில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதால் ஆணும் பெண்ணும் படித்து, பணிக்குச் செல்லும் நல்வாய்ப்பைப் பெறுகின்றார்கள். பல்வேறு நிபந்தனைகளுக்குப்பின் இளமை முதிர்ந்த வயதில் இல்வாழ்க்கைக்குள் நுழைந்த தம்பதியர் இருவரும் தம்மைப் பற்றி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, மறு வாரத்திலிருந்து தம்பதியர் இருவரும் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிடுகின்றார்கள். இவ்வாறு தம்பதியர் இருவரும் வேலைக்குச் செல்லும் இல்லங்களில் அவ்விருவருமே நிம்மதியிழக்கின்றார்கள். அதை அவர்களே ஒத்துக்கொள்கின்றார்கள். சிலரின் வீடுகளில் கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் வேலைக்குச் சென்று ஒரே நேரத்தில் வீடு திரும்புகின்றார்கள். இத்தகையோரின் வீடுகளில் சிக்கல்கள் குறைவாகவே இருக்கும். ஆனால் கணவன் ஒரு நேரத்திலும் மனைவி மற்றொரு நேரத்திலும் பணிக்குச் செல்லும் இல்லங்களில் இல்லறச் சிக்கல்கள் மிகுதியாக இருக்கும்.

 

ஓர் ஆண் பகலெல்லாம் பணியாற்றிவிட்டு, ஓய்வெடுப்பதற்காக வீட்டிற்கு வந்தால், அவனை வரவேற்கவோ, அன்பான வார்த்தைகளால் மனதிற்கு இதமாக அவனோடு பேசிக்கொண்டிருக்கவோ, அன்போடு இரவு உணவைப் பரிமாறவோ மனைவி இருப்பதில்லை. மாறாக அவள் சில மணி நேரங்கள் தாமதமாக வருவாள் அல்லது இரவுப் பணிக்குச் சென்றிருப்பாள். இத்தகைய பரிதாபமான சூழ்நிலையும் சிலபல வீடுகளில் இருக்கவே செய்கின்றன.

 

அல்லாஹ் திருக்குர்ஆனில், “நீங்கள் (உங்கள்) மனைவியரிடம் மனஅமைதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவர்களை உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் அவன் ஏற்படுத்தியிருப்பதும் அவனுடைய சான்றுகளுள் அடங்கும்” (30: 21) என்று கூறுகின்றான். பணிக்குச் சென்று பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாகி, மனஅமைதியைத் தேடி வீட்டிற்கு வருகிறபோது, அவனுக்கு மனநிம்மதியைத் தர அங்கு மனைவி இல்லாததால் ஆண் விரக்தியடைகின்றான்; நிம்மதியிழக்கின்றான்.

 

மனைவியைக் காக்கும் பொறுப்பு: ஓர் ஆண் தன் மனைவியைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால்தான் அவன் குடும்பத் தலைவனாகிறான். அவன் உழைத்துச் சம்பாதித்து, தன் மனைவி, பிள்ளைகள், வயதான பெற்றோர் ஆகியோரைக் காக்க வேண்டிய பொறுப்பு அவனுக்குத்தான் உண்டு. அதனால்தான், “அப்பெண்களைவிட ஆண்களுக்கு ஒரு படி உயர்வு உண்டு” (2: 228) என்று அல்லாஹ் கூறுகின்றான். அதற்கான காரணத்தையும் அல்லாஹ் மற்றொரு வசனத்தில் சொல்கின்றான்: “ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனென்றால் அவர்களுள் ஒருவரைவிட மற்றொருவரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான்; மேலும் அவர்(ஆண்)கள் தம் பொருளாதாரத்திலிருந்து அவர் (பெண்)களுக்குச் செலவுசெய்கின்றார்கள் (4: 36).

 

ஆனால் தற்காலத்தில் மனைவியே சம்பாதிக்கத் தொடங்கிவிட்டதால் கணவனைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை அவளுக்கு இல்லை. அதனால் அவனை உயர்வாக மதிக்க வேண்டிய நிலையிலிருந்து அவள் சற்றே விலகிவிடுகின்றாள். ஆகவே ஒரு பெண் தன் இல்லற வாழ்வில் சில இன்பங்களையும் மகிழ்ச்சிகளையும் இழக்கின்றாள் என்பதை நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.

 

பெண்கள் படித்திருப்பதால் வேலைக்குச் செல்கின்றார்கள். அதில் என்ன தவறு? என்று கேட்கலாம். அதில் தவறேதும் இல்லை. தாராளமாகச் செல்லட்டும். ஆனால் பெண்கள் தம் உடல்நிலைக்கேற்பவும் இல்லற வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கும் விதத்திலும் வேலையை அமைத்துக்கொண்டால் நலமாக இருக்குமே என்றுதான் சொல்கிறோம். பெண்கள் மட்டுமே பணியாற்றக்கூடிய இடங்களிலும், பெண்கள் மட்டுமே செம்மையாகச் செய்ய முடியும் என்பன போன்ற பணிகளையும் தேர்வு செய்துகொண்டால் அது அவர்களுக்குச் சாதகமாக அமையும். மாறாக, படித்திருப்பதால் கால்சென்டர்களிலும் இரவு நேரப் பணிகளிலும் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏன் வந்தது?

 

இஸ்லாம் பெண்களை இராணிகளைப் போல் வீட்டில் இருந்துகொண்டு நிம்மதியாக வாழ வழிகாட்டுகின்றது; வீட்டினுள் சுதந்திரமாக வாழச் சொல்கிறது; உழைத்துப் பொருளீட்டிக் குடும்பத்தைக் காக்கவேண்டும் என்ற பொறுப்பை-பெரும் சுமையை அவர்கள்மீது சுமத்தவில்லை. எனவே எத்தனையோ பெண்கள் தம் வீடுகளில் இராணியைப் போல் நன்றாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அதை ஏற்றுக்கொள்ளாத படித்த பெண்களே, ஊடகத்தின் வலிமையால் திணிக்கப்பட்ட கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு, வீட்டைவிட்டுப் புறப்பட்டுப் பணியிடங்களுக்குச் சென்று, அங்கு இரவு பகலாக வேலைசெய்துவிட்டு, வீட்டிற்கு வந்து, அங்கும் வேலைசெய்துகொண்டு, இரட்டைச் சுமைகளைச் சுமக்கின்றார்கள். அல்லது பணிப்பெண்களை நியமித்துக்கொண்டு, தாம் தம் கணவருக்கு அன்போடு பரிமாற வேண்டிய தருணங்களை அவர்களுக்கு விட்டுக்கொடுத்துவிடுகின்றார்கள்.

 

பணிக்குச் சென்று கசப்பான அனுபவங்களைப் பெற்ற பெண்கள் சிலர், தம் மகன்களுக்குத் திருமணம் ஆனதும் தம் மருமகள்களைப் பணிக்குச் செல்ல வேண்டாமெனத் தடுத்து, வீட்டிலேயே தங்கி, வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்ளச் சொல்கின்றார்கள். தாம் பட்ட சிரமங்களைத் தம் மருமகள் பட வேண்டாம் என்ற நல்லெண்ணமும், தம் மகன் தன் மனைவியோடு மகிழ்ச்சியாக வாழட்டும் என்ற பாசச் சிந்தனையுமே அதற்கான காரணமாகும்.

 

ஆக பெண்கள் உயர்கல்வி படிப்பதும் பணிக்குச் செல்வதும் ஒரு வகையில் முன்னேற்றமாகத் தெரிந்தாலும் மற்றொரு வகையில் அதனுள் இருசாராருக்குமான இழப்பும் அடங்கியிருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மேலும் அத்தகைய பெண்களுள் பெரும்பாலோரின் இல்வாழ்வில் நிம்மதியின்மையும் விரக்தியும் அடங்கியே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

உயர்படிப்பின் காரணமாகவும் பணியின் காரணமாகவும் பெண்கள் முதிர்கன்னிகளாகக் காலத்தைக் கழித்துவிட்டுத் தாமதமாகவே இல்லற வாழ்க்கைக்குள் நுழைகின்றார்கள். அதன்பின் அதனுள் தம்மை முழுமையாக இணைத்துக்கொள்ள இயலாமல் இல்வாழ்வின் சுகத்தையும் இன்பத்தையும் இழந்து நிம்மதியற்று வாழ்கின்றார்கள் என்பதே பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களின் நிலை.

 

தீர்வு: கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் படித்துப் பட்டம்பெற்று, பணிக்குச் செல்லும் பெண்கள் தமக்குக் கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தம் படிப்போடும் பணியோடும் சம்பளத்தோடும் ஒப்பிட்டு நோக்காமல், மார்க்கப்பற்றுள்ள மணாளர் கிடைத்தால் மனத்திருப்தியோடு மணந்துகொள்ளத் தயாராவது ஒன்றே இதற்கான தீர்வாகும். மேலும் தமக்கு உகந்த பணியாக இருந்தால் மட்டும் அதை ஏற்றுக்கொண்டு பணியாற்றுவது அல்லது இயன்ற வரை இல்லத்தில் இருந்துகொண்டே பணியாற்றுவது என்ற முடிவுக்கு வருவது இல்லையேல் வீட்டுவேலைகளை மட்டும் கவனித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து தம் கணவருக்கும் மனநிம்மதியைக் கொடுப்பதெனத் தீர்மானித்துக்கொள்வதும்தான் இச்சிக்கல்களுக்கான தீர்வாகும். 

 

மேலும் பெண்கள் தம் இளங்கலைப் படிப்பை முடித்த உடனேயே அவர்களுக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட வேண்டியது பெற்றோரின் கடமையாகும். அவர்கள் விரும்பினால் திருமணத்திற்குப்பின்  மேற்படிப்பைத் தொடரலாம். பின்னர் தேவைப்பட்டால், தம்பதியர் தமக்குள் முடிவுசெய்துகொண்டு பெண்கள் பணிக்குச் செல்லலாம். அதனால் தம்பதியரிடையே சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ஆக இல்லற வாழ்க்கை பாதிக்கப்படாமல் முடிவெடுத்துக்கொள்வது பெண்களின் கையில்தான் உள்ளது. படித்த பெண் பரந்த சிந்தனையோடு எடுக்கும் முடிவு தன் கணவருக்கும் தன் பிள்ளைகளுக்கும்  சாதகமாக அமைவதோடு தனக்கும் எவ்விதச் சிரமமும் இல்லாத வகையில் அமைய வேண்டும். அதுவே சமுதாயக் கவலைகொண்டோரின் எதிர்பார்ப்பாகும்.

=============================








திங்கள், 11 ஆகஸ்ட், 2025

நாணத்தைத் தொலைத்தவர்கள்

 

        

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28  

 

 நீ வெட்கத்தை இழந்துவிட்டால், நீ விரும்பியதைச் செய்துகொள் (புகாரீ: 3483) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். வெட்கம் என்பது ஓர் உயர்பண்பாகும். அது பாவங்களிலிருந்து தடுக்கின்ற கேடயமாகும். அது இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும். எனவே அத்தகைய உயர்பண்பை நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைய மனிதர்கள் பலர் தம் வெட்கத்தை இழந்துவிட்ட காரணத்தால்தான் அசிங்கமான செயல்களையெல்லாம் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

 

சமூக ஊடக மோகம்: இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, தாம் விரும்பியதையெல்லாம் விரும்பியபடி செய்கிறார்கள்.   ஆண்-பெண் இருபாலரும் தம்மை மக்கள் மன்றத்தில் மதிப்பு மிக்கோராகக் காட்டுவதற்காக விதவிதமாகத் தற்படங்கள் (செல்ஃபீ) எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள்; பரவவிடுகின்றார்கள். அதன் ‘விருப்ப’ங்களை (லைக்) எண்ணியெண்ணி மகிழ்கிறார்கள்.

 

முஸ்லிம் பெண்பிள்ளைகள் தம் அழகைப் பிற ஆடவர்க்குக் காட்டாமல் அடக்கத்தோடும் ஒடுக்கத்தோடும் இருக்க வேண்டும் என்ற மார்க்க நெறிமுறைகளை மறந்துவிட்டார்கள். தாம் விரும்பியதையெல்லாம் விருப்பப்படி செய்கிறார்கள். பெற்றோரிடம் இது பற்றிக் கேட்டால், “என் மகள் ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை; அவளுக்கு எல்லாம் தெரியும்; அவள் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்” என்கின்றனர்.

 

அந்தரங்கம் எதுவும் இல்லை: சில வீடுகளில் திருமண நிகழ்வு மாபெரும் திருவிழாவைப் போன்று நடக்கிறது. ஏராளமான பொருளாதாரம்  வீணடிக்கப்படுகிறது. திருமண மேடைக்கு வரும்போது மணப்பெண் ஆடிக்கொண்டே வருகிறாள். அவளோடு சேர்ந்து மற்ற பெண்களும் ஆடுகின்றார்கள். பின்னர் மணமேடையில் ஆடுகின்றார்கள். இசையும் நடனமும் ஒருங்கே அரங்கேறுகின்றன. திருமண நிகழ்வு தொடங்கியதிலிருந்து முதலிரவு அறைக்குச் செல்கின்ற வரை தம்பதியர் இருவரின் செயல்களையும் வீடியோ பதிவு செய்துகொண்டே இருக்கிறது. மற்றொரு பக்கம் கேமரா படம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. அந்தரங்கம் என்று எதுவும் இல்லை. எல்லாவற்றையும் சமூக வலைத்தளங்களில் படம் போட்டுக் காட்டிவிடுகின்றார்கள்.

 

பாட்டரங்குகளில் சிறுவர்-சிறுமியர்: நம் சமுதாயப் பெண்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறுங்காணொலி வெளியிட வேண்டுமென்பதற்காக நாள்தோறும் தம்மை அலங்கரித்துக்கொண்டு, தம் அழகைப் பொதுவெளியில் விருந்து படைக்கின்றார்கள். பெற்றோர் சிலர் தம் பிள்ளைகளைப் பாட்டரங்குகளில் பாட வைத்து, அதைப் பார்த்து இரசித்துக்கொண்டிருக்கின்றார்கள். அச்சிறுவர்-சிறுமியர் பாடும் பாடல்கள் திரைப்படங்களில் காதலன்-காதலி இணைந்து பாடியவை. காதல் உணர்வுகளைத் தூண்டும் பாடல்களைத் தம்முடைய சிறுவயதுப் பிள்ளை பாடுகிறாளே என்ற எந்தவித வெட்க உணர்வும் இன்றிக் கேட்டு மகிழ்கின்றார்கள். திருக்குர்ஆனைத் தஜ்வீதுடன் ஓத வேண்டிய பிள்ளைகள் இவ்வாறு தடம் மாறிப் போவதற்குப் பெற்றோரே முதற்காரணம்.

 

மட்டமான குணங்களைக் கொண்ட மார்க்க அறிஞர்கள்: மற்றொரு புறம், பெரும் பெரும் பதவிகளில் உள்ளோர்கூடச் சின்னப் பிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றார்கள். பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் அறியப்படுகின்ற மார்க்க அறிஞர்கள் சிலர் அருவருக்கத்தக்க செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். பிறர் பணியாற்றக்கூடிய இடங்களில் தாம் நுழைந்துகொண்டு அதிகாரம் செலுத்துவது, ஏற்கெனவே அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கின்ற இமாமை நீக்க முயல்வது, தாம் தலைமைப் பொறுப்பை ஏற்க முனைவது, ஒருவனைத் தனக்குப் பிடிக்கவில்லையென்றால் அவனைப் பற்றிய தவறான பிம்பத்தை எல்லோரிடமும் பரப்புவது, சமூக ஊடகங்களில் வெளியிடுவது உள்ளிட்ட கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இவையெல்லாம் நாம் பயின்றிருக்கக்கூடிய மார்க்கக் கல்விக்கு எதிரானது என்பதை உணர்வதில்லை.

 

சிலர் பள்ளிவாசல்கள்தோறும் சென்று மத்ரஸா நடத்துவதாகச் சொல்லி வசூல் செய்கின்றார்கள். அதையே அவர்கள் தம் பிழைப்பாக வைத்துள்ளார்கள். “யாருக்காக வசூல் செய்கின்றீர்கள், உங்கள் மத்ரஸா எங்குள்ளது, அதன் நிர்வாகிகள் யார்” என்றெல்லாம் விசாரித்து, உண்மை வெளிப்படும்போது, வெட்கமின்றிக் கடந்து செல்கின்றார்கள். அத்தோடு அச்செயலை நிறுத்துவதில்லை. வேறு ஊருக்குச் சென்று தம் வசூல் வேட்டையைத் தொடர்கின்றார்கள்.

 

பிச்சைத்தொழில் செய்வோர்: கடந்த காலங்களில் பிச்சையெடுப்போர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது பெருநகரங்களில் கோவில், தேவாலயம், பள்ளிவாசல், மக்கள் கூடுமிடங்கள், போக்குவரத்து சிக்னல்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பிச்சையெடுப்போர் மிகுந்து காணப்படுகின்றார்கள். கை நீட்டிக் கேட்கக் கூச்சப்பட்ட காலம் மாறி, அதிகாரத்தோடு பிச்சை கேட்கும் காலமிது. மூன்று காரணங்களுக்காக மட்டுமே யாசகம் கேட்கலாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய செய்தியை ஒவ்வொருவரும் தம் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்:

 

கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “தர்மப் பொருள்கள் நம்மிடம் வரும்வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

 

கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரின் ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதை)ப் பெறுகின்றவரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும்.

 

மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டுச் செல்வங்களை இழந்தவர். அவர் "வாழ்க்கையின் அடிப்படையை' அல்லது 'வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைந்துகொள்ளும் வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன்வந்து "இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்" என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் 'வாழ்க்கையின் அடிப்படையை அல்லது 'வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும்.

 

கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார். (சுனன் அபூதாவூத்: 1397)

 

போலி வசூலர்கள்: பள்ளிவாசல்கள்தோறும் ஐவேளைத் தொழுகையில் பெரும்பாலும் பொருளாதாரத் தேவை-வசூல் குறித்த அறிவிப்பு இல்லாமல் இருப்பதில்லை. திருமணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அறிவிப்புகள் அவ்வப்போது செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தொழுகை முடிந்த கையோடு-தாமதமாக வந்தோர் எழுந்து தொழுதுகொண்டிருக்கிறபோது அவர்களின் தொழுகைக்கு இடையூறாக இருக்கும் என்பதைப் பொருட்படுத்தாமல்-  “குமர் காரியமாக வந்துள்ளோம்; தாராளமாக உதவி செய்யுங்கள்” என்று உரத்த குரலில் அறிவிப்புச் செய்வோருக்கு எந்தவிதக் கூச்ச உணர்வும் இருப்பதில்லை. இத்தகைய வசூலர்களுள் பலர் போலியானவர்கள் என்பதே உண்மை.

 

கையூட்டுப் பெறுவோர்: பெரும் பெரும் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் மாதந்தோறும் உரிய வகையில் ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதோடு, கடமையை நிறைவேற்ற மக்களிடம் கையூட்டுப் பெறுவது குறித்து சிறிதளவும் நாணம்  இல்லை. ‘சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரி’ என்ற போர்வையில் கல்லூரிகளை நடத்துவோர் அரசாங்கத்தில் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் அக்கல்லூரியில் பேராசிரியராகச் சேரும் ஒவ்வொருவரிடமிருந்தும் பல இலட்சங்கள் கையூட்டாகப் பெற்றுக்கொள்கின்றார்கள். கையூட்டு பெற்று, தடை செய்யப்பட்ட உணவைச் சாப்பிடுகிறோமே என்ற எந்த நெருடலும் அவர்களுக்கு இல்லை. அந்தப் பணத்தில்தான் தன் மனைவிக்கு நகை வாங்கிக் கொடுக்கிறோம் என்ற உறுத்தலும் அவர்களுக்கு இருப்பதில்லை. மேலும் தன் கணவன் நேர்மையற்ற முறையில், தகாத வழியில் சம்பாதித்த பணத்தில்தான் தனக்கு நகை வாங்கிக் கொடுக்கின்றான் என்ற நெருடலின்றி அதை மகிழ்ச்சியோடு அணிந்துகொள்கின்ற மனைவிக்கு எந்த நாண உணர்வும் இல்லை.

 

மது அருந்துவோர்: அக்கம் பக்கத்து வீட்டார்கள் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்களே என்ற உறுத்தலின்றி நாள்தோறும் மது அருந்திவிட்டுத் தெருவோரம் படுத்து உருண்டுகொண்டிருப்போர் நாணத்தைத் தொலைத்தவர்கள். தம்மால் தம் குடும்பத்திலுள்ள மனைவி, பிள்ளைகள், பெற்றோர் உள்பட அனைவரும் மரியாதையை இழக்க வேண்டியுள்ளதே என்ற எந்த உறுத்தலுமின்றி நாள்தோறும் மதுக் கடைக்குச் சென்று வாங்கிக் குடிக்கின்றார்கள். உழைத்துச் சம்பாதித்த பொருளாதாரத்தைக் குடும்பத்திற்காகச் செலவு செய்யாமல் குடித்தே அழிக்கின்ற எத்தனையோ முஸ்லிம் சகோதரர்கள் இந்நிலத்திற்குமேல் உலாவிக்கொண்டிருக்கின்றார்கள்.

 

மேற்கண்ட பற்பல இழிசெயல்களைச் செய்வோர் ஒவ்வொரு துறையிலும் இருக்கின்றார்கள். சாதி, மதப் பேதமின்றி எல்லாத் தளங்களிலும் இருக்கின்றார்கள். இருப்பினும் இக்காலத்திலும் வெட்க உணர்வோடும் இறையச்சத்தோடும் வாழ்வோர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களின் பொருட்டே உயர்ந்தோன் அல்லாஹ் இந்நிலத்தில் மழையைப் பொழியச் செய்கின்றான்; புவியில் பயிர்களை விளையச் செய்கின்றான். ‘தொல்லுலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’ எனும் மூதுரைக்கேற்ப இவ்வுலகு இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

ஆகவே ‘வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளை’ என்ற நபிமொழிக்கேற்ப நாம் வெட்க உணர்வுள்ளவர்களாகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும் இறுதி வரை வாழ இறைவன் அருள்வதோடு, நம் சந்ததிகளையும் அவ்வாறே வாழச் செய்வானாக.

==========================