வியாழன், 24 ஏப்ரல், 2025

ஸஹர் உணவு ஏற்பாடு தேவையா?


 

அல்லாஹ்வின் பெருங்கருணையால் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று தராவீஹ் உள்ளிட்ட தொழுகைகளைத் தொழுது நன்மைகளை ஈட்டியுள்ளோம். அல்ஹம்து லில்லாஹ். இந்நேரத்தில் பள்ளி நிர்வாகிகளும் சமுதாயத் தலைவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய சில செய்திகள் இருக்கின்றன. அவை குறித்துச் சிந்தித்து உரிய முடிவுகளை வருங்காலங்களில் எடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.

 

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ரமளான் மாதத்தில் சிரமமின்றி நோன்பு நோற்க ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. சில மஹல்லாக்களில் மாதம் முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சில மஹல்லாக்களில் கடைசிப் பத்து நாள்களில் மட்டும் ஏற்பாடு செய்யப்படுகிறது. நோன்பாளிகளுக்கு ஸஹர் உணவு ஏற்பாடு செய்தல் நன்மைக்குரிய செயல்தான் என்பதில் சந்தேகமில்லை.

 

ஆனால் அதன் நோக்கம் என்னவென்பதை நம்முள் பலர் புரிந்துகொள்ளவே இல்லை. சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்படுவதன் நோக்கம், பல்வேறு ஊர்களிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் தொழிலுக்காகவும் கல்விக்காகவும் வந்து தங்கியுள்ள முஸ்லிம் சகோதரர்கள் பலர் உணவகங்களில்தான் சாப்பிட்டு வருகின்றார்கள். ஸஹர் நேரத்தில் உணவகங்கள் பெரும்பாலும் திறந்திருப்பதில்லை. எனவே அவர்கள் பயன்பெறுவதற்காகவே பெருநகரங்களில் மட்டும் தொடக்கக் காலத்தில் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் அது இன்று பேரூர்கள் முதல் சிற்றூர்கள் வரை எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.

 

பெருவணிக நிறுவனங்களோ தொழிற்சாலைகளோ இல்லாத முஸ்லிம் ஊர்களில்கூட ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘அந்த மஹல்லாவில் செய்கின்றார்கள்; நாம் ஏன் செய்யக்கூடாது’ என்ற போட்டி மனப்பான்மையால் ஒவ்வொரு மஹல்லாவிலும் இதற்கான ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கு வந்து சாப்பிடுபவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள்; வசதியுள்ளவர்கள். அப்படி இருக்கும்போது இந்த ஏற்பாடு தேவையா?

 

நம்முடைய பொருளாதாரமெல்லாம் உணவுத் துறையிலேயே செலவழிந்துவிடுகிறது. நாம் கல்விக்காகச் செலவு செய்வது மிக மிகக் குறைவு. அதனால்தான் நாம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளோம் என்பதை மிகுந்த வருத்தத்தோடு இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன்.

 

இந்த ஸஹர் உணவுக்காக வசூல் செய்யப்படும்போது, பலர் தம் ஸகாத் பணத்தைக் கொடுத்துவிடுகின்றார்கள். ஏழைகள் மட்டுமே பயன்பெற வேண்டிய ஸகாத் பணத்தில் ஊர் மக்கள் அனைவரும் சாப்பிடுகின்றார்கள். ஆகவே ஏழைகள் பாதிக்கப்படுகின்றார்கள். ஸகாத் உரிய முறையில் ஏழைகளை அடைவதில்லை. நம்முள் பலர் அவர்களுக்குக் கொடுக்கின்ற அஞ்சும் பத்தும் ஸகாத் இல்லை. நாம் உரிய முறையில் கணக்கிட்டு அதனை முழுமையாக அவர்களுக்கு வழங்குவதுதான் ஸகாத் ஆகும். 

 

 ஸஹர் உணவு ஏற்பாடு செய்வதில் பள்ளி நிர்வாகிகள் காட்டுகிற ஆர்வத்தில் ஒரு பகுதியேனும், அந்தந்த மஹல்லாவைச் சார்ந்த பள்ளிவாசல்களில் பைத்துல் மால் ஏற்படுத்தி, அதன்மூலம் ஸகாத்தை வசூல் செய்து, அந்த மஹல்லாவில் உள்ள ஏழைகள் கணக்கிடப்பட்டு, அவர்களின் தேவையறிந்து அவர்களுக்கு அத்தொகையைப் பங்கிட்டுக் கொடுப்பதில் காட்டுவதில்லையே ஏன்?

 

ஒவ்வொரு மஹல்லாவிலும் பைத்துல்மால் உருவாக்கப்பட்டு, ஸகாத் வழங்கத் தகுதியானோரிடமிருந்து அதை வசூல் செய்து, அதைப் பெறத் தகுதியுடையோருக்கு அது வழங்கப்படுகின்றபோதுதான் நம் சமுதாயத்தில் வறுமை அகலும். மேலும் பைத்துல்மால் மூலம் கல்வி உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தலாம். நன்றாகப் படிக்கின்ற  ஏழை மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குக் கல்வி உதவி வழங்கலாம். இதையெல்லாம் நிறைவேற்றாமல் வெறுமனே ஸஹர் உணவு ஏற்பாடு செய்வதால், பள்ளித் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தம் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றியவர்களாக ஆக முடியாது.

 

உங்களுள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்; உங்களுள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பைக் குறித்து விசாரணை செய்யப்படுவார்” (புகாரீ: 7138) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நினைவில் நிறுத்தி, எதிர்காலத்தில் மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தவும் பைத்துல்மால் மூலம் ஸகாத்தை வசூல் செய்து ஏழைகளுக்கு வழங்கவும் முயலுங்கள்.          

-நூ. அப்துல் ஹாதி பாகவி

====================





திங்கள், 21 ஏப்ரல், 2025

மதிப்பை அகற்றிவிட்டால்...

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

 

மனிதர்கள்மீது நாம் மதிப்பு வைத்திருப்பதால்தான் நாம் அவர்களை மதிக்கிறோம்; உயர்வாக எண்ணுகிறோம். அதுபோலவே நாம் பயன்படுத்துகிற பொருள்களின் மதிப்பை உணர்ந்துள்ளதால்தான் அவற்றை நாம் கவனமாகப் பாதுகாக்கிறோம். நாம் ஏற்கெனவே மதித்து மரியாதை செலுத்திவந்த யாரேனும் ஒரு மனிதர்மீதான மதிப்பும் உயர்வும் நம் மனத்திலிருந்து அகன்றுவிட்டால், அல்லது பிறரால் அகற்றப்பட்டுவிட்டால் அவரை நாம் மதிக்கமாட்டோம்; அவரை உயர்வாகக் கருதமாட்டோம். அத்தகைய வேலையைத்தான் பலர் செய்துகொண்டிருக்கின்றார்கள்; ஊடகங்களும் அந்த வேலையைத்தான் தொடர்ந்து செய்துவருகின்றன.

 

தாய்-தந்தை இருவரும் மரியாதைக்குரியவர்கள்; மதிப்புக்குரியவர்கள் என்ற புரிதல்தான் நம்மை அவர்களுக்கு மரியாதை செலுத்தத் தூண்டுகிறது. அந்த மதிப்பும் உயர்வும் நம் மனங்களில் இருக்கின்ற வரை நாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தத் தவறமாட்டோம். அவர்களின் பேச்சுக்கு மாறு செய்யமாட்டோம். எப்போது அவர்கள்மீதான மதிப்பும் உயர்வும் நம் மனத்தை விட்டு அகன்றுவிடுமோ அப்போது அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்த மாட்டோம் என்பது மட்டுமல்ல அவர்களை உரிய முறையில் கவனித்துக்கொள்ளவும் மாட்டோம்.

 

அத்தகைய வேலையைத்தான் இன்றைய காட்சி ஊடகங்கள் செய்துவருகின்றன. தாய்-தந்தையை அவமரியாதையாக நடத்துதல், கேலி கிண்டல் செய்தல், அவர்களுடைய பேச்சைக் கேட்டு நடக்காமல் எதிர்வாதம் செய்தல் முதலான காட்சிகள் அடிக்கடி தொலைக்காட்சியில் திரையிடப்படுகின்றன. அவற்றைப் பார்க்கின்ற இன்றைய இளம் வயதினர் அக்காட்சிகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டு செயல்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

 

அந்தக் காட்சிகளை உள்வாங்கிக்கொண்டு அப்படியே செயல்படக்கூடியவர்கள், “தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது” என்ற நபிமொழியையோ, “தந்தை சொர்க்கத்தின் நடுக்கதவு” என்ற நபிமொழியையோ நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அந்த நினைவு உள்ளோர் மட்டுமே தாய்-தந்தையின் உயர்வையும் மதிப்பையும் உணர்ந்து செயல்படுகின்றார்கள். மாறாக காட்சி ஊடகங்களின் கருத்து வலைக்குள் சிக்குண்டவர்கள் பெற்றோரின் மேன்மையையும் சிறப்பையும் அறியாதிருக்கின்றார்கள்.

 

பெற்றோர் மதிப்புமிக்கவர்கள் என்பதால்தான் அவர்களுக்காகப் பிள்ளைகள் பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் பணிக்கின்றான்: “இறைவா! நான் சிறுபிள்ளையாக இருந்தபோது அன்புகாட்டி என்னை வளர்த்ததைப் போல நீ அவ்விருவர்மீது அன்புகாட்டுவாயாக.” (17: 23) ஆகவே பிள்ளைகள் ஒவ்வொருவரும் தம் பெற்றோரை மதிப்பதும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதும் கட்டாயமாகும். 

 

ஒருவர்மீது நாம் வைத்துள்ள மதிப்புதான் நாம் அவருக்கு மரியாதை செலுத்துவதற்கான காரணமாகும். அந்த மதிப்பை நம் உள்ளத்திலிருந்து உருவி எடுத்துவிட்டால் அவரைக் கேவலமாகக் கருதக்கூடிய மனநிலைக்கு நாம் வந்துவிடுவோம். எனவே நாம் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டுமெனில் அவர் குறித்த நன்மதிப்பு நம் உள்ளத்தில் எப்போதும் ஆழமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

அதே மதிப்புதான் நம் உறவினர்கள் குறித்தும் நம் மனத்தில் நிலைத்திருக்க வேண்டும். நம்முடைய மாமா, மாமி, அத்தை, பெரியம்மா, சின்னம்மா, சித்தி, பெரியத்தா, சின்னத்தா, மச்சான், மச்சி, மைத்துனன், மைத்துனி முதலான உறவினர்கள்மீது உயர்வும் மதிப்பும் இருப்பதால்தான் நாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை வரவேற்று உபசரிக்கவும் செய்கிறோம். அந்த மதிப்பை நம் உள்ளத்திலிருந்து அகற்றிவிட்டால் உறவினர்கள் யாரையும் நாம் மதிக்க மாட்டோம்; யாருக்கும் மரியாதை செலுத்தமாட்டோம். இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் எல்லாம் செயற்கைத்தனமாகவே மாறிவிட்டது. மதிக்க வேண்டியோர் மதிக்க வேண்டியோரை உளப்பூர்வமாக மதிப்பதில்லைகொடுப்போர் மனமுவந்து கொடுப்பதில்லை.

 

ஆசிரியர் மீதான அச்ச உணர்வும் மதிப்பும்தான் நம்மை அவர்களுக்கு மரியாதை செலுத்தத் தூண்டுகின்றன. மாணவ-மாணவியரின் உள்ளத்திலிருந்து அதை அகற்றிவிட்டால், ஆசிரியர்களும் மற்ற மனிதர்களைப்போலத்தான்.  அதாவது அவர்களை அம்மாணவர்கள் மதிக்க மாட்டார்கள்; மரியாதை செலுத்தமாட்டார்கள். அதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தாம். ஆம்! ஒருவர்மீது மரியாதை இருக்கின்ற வரைதான் அவர் சொல்வதைக் கேட்கத் தோன்றும்.  ஆசிரியர் மீதான மரியாதை அகன்றுவிட்டால் அவர் சொல்வதைக் கேட்கத் தோன்றாது; அவர் நடத்தும் பாடங்களைக் கூர்ந்து கவனிக்கத் தோன்றாது. அதனால் அவர்கள் கல்வியில் வீழ்ச்சியடையத் தொடங்கிவிடுவார்கள்.

 

ஆசிரியர் மீதான மதிப்பு நம் உள்ளத்தில் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களின் உயர்வையும் மதிப்பையும் குறித்துச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இன்றைய காட்சி ஊடகங்கள் பள்ளிக்கூட ஆசிரியர்களையும் கல்லூரிப் பேராசிரியர்களையும் மாணவர்கள் கேலி  செய்வதைப் போன்ற காட்சிகளை அடிக்கடி காட்டுகின்றன. அதனால் அந்தக் காட்சிகள் மாணவ, மாணவியரின் உள்ளத்தில் பதிந்துபோய்விடுகின்றன. எனவே அவர்கள் மீதான மரியாதை குறைந்துவிடுவதைக் காண்கிறோம். இத்தகைய தருணத்தில் ஆசிரியர்களின் மீதான மதிப்பை ஏற்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும். இல்லையேல் தம் பிள்ளைகள் கல்வியில் வீழ்ச்சியடைவார்கள் என்பதை அவர்கள் தம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

 

ஒரு முதலாளி மீதுள்ள உயர்மதிப்புதான் ஒரு தொழிலாளியை உழைக்கத் தூண்டுகிறது; அவரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடக் காரணமாக அமைகிறது. அவர்மீதான உயர்மதிப்பு அகன்றுவிட்டால், அவருக்குத் தொழிலாளி மரியாதை செலுத்த மாட்டான். அவருடைய முன்னேற்றத்திற்காக அவன் உழைக்க மாட்டான். அவர் எப்படிப்போனால் நமக்கென்ன என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். முதலாளி-தொழிலாளி இடையே உள்ள அன்பும் மரியாதையும் குறைந்துவிடும்; அல்லது  அறவே இல்லாது போய்விடும்.

 

கணவர் மீதான உயர்மதிப்புதான் ஒரு மனைவியைத் தன் கணவருக்கு மரியாதை செலுத்தத் தூண்டுகிறது.   அந்த உயர்மதிப்பின் காரணமாகவே அவள் தன் கணவருக்காக அல்லும் பகலும் பணிவிடை செய்கிறாள்அவருடைய துணிகளைத் துவைத்து, மடித்து வைக்கிறாள். சுவையான உணவு சமைத்துக் கொடுக்கிறாள். இன்னும் ஏராளமான பணிகளைச் செய்கிறாள். அவர்மீதான அந்த உயர்மதிப்பும் அன்பும் மனைவியின் உள்ளத்திலிருந்து அகன்றுவிட்டால் இவ்வாறெல்லாம் செய்வாளா?

 

இல்வாழ்வின் இன்பத்தையும் குடும்ப உறவையும் உடைப்பதற்காகவே செயல்பட்டு வருகிற ஊடகங்கள், ‘குடும்ப  வாழ்க்கையே சலிப்பைத் தரக்கூடியது’ என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதன் காட்சிகளால் ஈர்க்கப்பட்டுள்ள பெண்கள், திருமணமாகி  ஆறு மாதங்களில் மணவிலக்கு கேட்டு நிற்கின்றார்கள்.

 

ஆண்களை(ப் பெண்களைவிட) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்கள்) தங்கள் பொருள்களை(ப் பெண்களுக்கு)ச் செலவு செய்வதாலும் ஆண்கள்தாம் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்” (4: 34) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். மேலும் “ஆண்களுக்குப் பெண்களைவிட ஒரு படி உயர்வு இருக்கிறது” (2: 228) என்றும் அவன் கூறுகின்றான். இந்த இறைவசனங்களை உணர்ந்த பெண்கள் தம் கணவருக்குக் கட்டுப்பட்டு, அவருக்கு மரியாதை செலுத்தி, தம் குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்கள். இந்த இறைவசனங்களைப் படிக்காதோர் அல்லது படித்தும் செயல்படுத்தாதோர் தம் கணவரோடு சண்டை போட்டுக்கொண்டு, குடும்ப வாழ்க்கையை முறித்துக்கொண்டு தன்னந்தனியாக வாழ்கின்றார்கள். ஆக கணவர்மீது உயர்மதிப்பு இருக்கின்ற வரைதான் குடும்ப வாழ்க்கை சீராக நகரும். இல்லையேல் அது குலைந்துவிடும் என்பதை இன்றைய பெண்கள் நேரடியாக உணரலாம்.

 

ஒரு பெண்ணைச் சந்தித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உனக்குக் கணவர் இருக்கின்றாரா” என்று வினவ, “ஆம்” என்று அப்பெண் கூறுகிறாள். அப்படியெனில், “நீ அவரிடம் எப்படி நடந்துகொள்கிறாய்” என்று கேட்க, “என்னால் இயலாததைத் தவிர வேறெதையும் நான் அவருக்கு மிச்சம் வைப்பதில்லை” என்று கூறுகிறாள். “நீ அவரிடம் எந்த இடத்தில் இருக்கிறாய் என்பதைக் கவனித்துக்கொள். ஏனென்றால் அவர்தாம் உன்னுடைய சொர்க்கமும் நரகமும் ஆவார்” என்று கூறுகிறார்கள். (முஸ்னது அஹ்மத்: 19003) தன்னுடைய கணவர்தாம் தன்னுடைய சொர்க்கம் என்று எண்ணுகின்ற பெண் தன் கணவரிடம் நல்ல முறையில் நடந்துகொள்கிறாள். மற்ற பெண்கள்தாம் தம் கணவரிடம் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களே தம் கணவர் பற்றிய உயர்மதிப்பை உணராதவர்கள்.

   

ஒவ்வொன்றின்மீதும் உள்ள உயர்மதிப்புதான் நாம் அவற்றை மதிக்கக் காரணமாக அமைகிறது. அந்த வகையில் நாம் திருக்குர்ஆனை மதிக்கிறோம். அதை அல்லாஹ்வின் உயர்வேத நூலாக மக்கள் கருதுகிறார்கள்; எனவே அதை அவர்கள் மதித்துப்போற்றுகின்றார்கள்; நாள்தோறும் அதை ஓதிவருகின்றார்கள்; அதைக் கண்ணியத்துடன் பார்க்கின்றார்கள். அதைத் தொடவேண்டுமென்றால் அங்கத்தூய்மை (உளூ) செய்துவிட்டுத் தொடுகின்றார்கள்.

 

அந்த மதிப்பையும் மரியாதையையும் குலைக்கும்வண்ணம், “அது பிற நூல்களைப் போன்ற ஒரு நூல்தான்” என்று குறுமதியாளர்கள் சிலர் கூறுவதால், அந்தக் கருத்தை உள்வாங்கிக்கொண்ட இளைஞர்கள் சிலர் அதைத் தூய்மையின்றித் தொடுவதும் மரியாதையின்றித் தொடுவதும் நிகழ்கிறது. “அதைத் தூய்மையானவர்கள் அன்றித் தொடமாட்டார்கள்” (56: 79) என்ற இறைவசனம் அதை உயர்த்தி நிற்கச் செய்துள்ளது. அந்த உயர்மதிப்பைக் குறைக்கும் நோக்கில், அந்த இறைவசனம் ‘வானிலுள்ள லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும் மூலப் புத்தகத்தைக் குறிக்கிறது; இந்தக் குர்ஆனை அது குறிக்கவில்லை’ என்கின்றார்கள்.

 

அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை மதிப்பது இறையச்சத்தின் ஒரு பகுதி என்று திருக்குர்ஆன் (22: 32) கூறுகிறது. திருக்குர்ஆன், கஅபா, ஹஜ்ருல் அஸ்வத், ஸஃபா-மர்வா, குர்பானி ஒட்டகம் உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களாகும். எனவே அவற்றை மதிப்பது நம் கடமையாகும்.

 

மூத்தோரை மதிப்பதும் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிற பாடமாகும். பெற்றோருக்கு வயதானதும் அவர்களை ஒருபுறமாக ஒதுக்கிவைத்துவிடுகின்றார்கள். சாலையில், வீதியில், மஹல்லாவில் பார்க்கின்ற எத்தனையோ முதியோரை நம்முள் பலர் மதிப்பதில்லை. அவர்கள் பேசினால் அவர்களுடைய பேச்சை, ஆலோசனையை, கருத்துகளைக் கேட்பதில்லை; அல்லது ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே முதியோர் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தியை நம் மனத்தில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்: “ஓர் இளைஞர் ஒரு முதியவரை அவரது வயதுக்காகக் கண்ணியப்படுத்தினால், அந்த இளைஞரின் முதுமையில் அவரைக் கண்ணியப்படுத்துகின்ற ஒருவரை அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 1945/ 2022) இதில் அந்த இளைஞருக்கு மரியாதை கிடைப்பது ஒருபுறம் இருப்பதோடு அவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதும் இதனுள் மறைந்துள்ளது.   

 

ஆகவே அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை மதிப்பதோடு ஒவ்வொரு மனிதரையும் மதித்துப் போற்றுகின்ற பண்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.

====================================









வெள்ளி, 18 ஏப்ரல், 2025

தந்தையின் சிறப்பு / The superiority of father/ நூ. அப்துல் ஹாதி பாகவி




தந்தையின் சிறப்பு     
The superiority of father  

 -முனைவர் மௌலவி 
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.  
இமாம் 
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்   
 சென்னை-28   

18/ 04 /  2025    
 19/  10 / 1446


வியாழன், 17 ஏப்ரல், 2025

கூட்டாக முயல்வோம்!

 

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

முஸ்லிம்களின் வழிபாடுகளுள் ஒவ்வொன்றும் கூட்டாகச் செய்வதாகத்தான் அமைந்துள்ளது. அதையே அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் விரும்புகின்றனர். “தனித்துத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழும் தொழுகைக்கு இருபத்தைந்து மடங்கு நன்மை உண்டு” என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால்தான் நாம் எப்போதும் கூட்டாகத் தொழுகையை நிறைவேற்றுகிறோம். அதுபோலவே நோன்பு நோற்று, கூட்டாக நோன்பு துறக்கின்றோம்; பன்னாட்டு மக்களோடு  இணைந்து கூட்டாக ஹஜ் செய்கின்றோம்.

 

அந்த அடிப்படையில் கூட்டாக ஸகாத்தை வழங்கினால் நம் சமுதாயத்தில் பரவியுள்ள வறுமையைக் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் நீக்கிவிடலாம். அத்தோடு பல்வேறு பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். முதலில்  ஒவ்வொரு மஹல்லாவிலும் ஒரு கணக்கெடுப்பு நடத்தி, ஸகாத் வழங்குவோர், ஸகாத்தைப் பெறுவோர் யார் யார் என்ற பட்டியலைத் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் பைத்துல்மால் ஒன்றை அந்தந்த மஹல்லாவில் அல்லது நான்கைந்து மஹல்லாவிற்கு ஒன்று எனும் விதத்தில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஸகாத் வழங்குவோரிடமிருந்து அதை வசூலித்து, ஸகாத் பெறத் தகுதியுடையோருக்கு அதைப் பங்கிட்டுக் கொடுத்துவிட வேண்டும். அல்லது ஒவ்வோராண்டும் அந்தந்த மஹல்லாவிலுள்ள நான்கு ஏழைகளைத் தேர்வு செய்து அவர்கள் ஏதேனும் தொழில் தொடங்குவதற்கு அப்பணத்தைக் கொடுக்கலாம். அல்லது அந்த நிர்வாகமே அவர்களுக்குக் கடைவைத்துக் கொடுக்கலாம். அதனால் அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் ஒவ்வொருவரும் ஸகாத் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்துவிடுவார்கள்.

 

அவ்வாறே வசூலிக்கின்ற ஸகாத் தொகை மூலம் அந்தந்த மஹல்லாவிலுள்ள நன்கு படிக்கும் ஏழை மாணவ-மாணவிகளைத் தேர்வு செய்து அவர்கள் விரும்புகின்ற உயர்படிப்புகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கினால்,  திறமை இருந்தும் உயர்கல்வி படிக்க வாய்ப்பில்லாத மாணவ-மாணவியர் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு துறையிலும் நன்கு படிக்கின்ற இரண்டு மாணவ-மாணவியரைத் தேர்வு செய்து உயர்கல்வி-தொழிற்கல்வி பயில வாய்ப்பளிக்கலாம். இதனால் நம் சமுதாயத்தில் படித்தோர் எண்ணிக்கை உயர்வதோடு அவர்களின் வாழ்க்கைத்தரமும் உயரும். அவர்களுடைய சந்ததிகளும் படித்தவர்களாக மாறுவார்கள். 

 

பொருளாதாரத்தில் முஸ்லிம்கள் முன்னேறப் பல்வேறு திட்டங்கள் உள்ளன. தொழுகையில் ஒன்றிணைகிற நாம் நம்முடைய மற்ற செயல்பாடுகளிலும் ஒன்றிணைந்தால் பல்வேறு வழிகளில் நாம் சாதிக்கலாம். நாம் அதைக் கடைப்பிடிக்கத் தவறியதால்தான் இன்று முஸ்லிம்கள் பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்கள். பலர் தம் அவசரத் தேவைக்காக யாரிடமாவது வட்டிக்குப் பணம் வாங்குகின்றார்கள். இறுதியில் அதைத் திருப்பிச் செலுத்த இயலாமல் தவிக்கின்றார்கள்.

 

ஒவ்வொரு மஹல்லாவிலும் பைத்துல்மால் உருவாக்கிவிட்டால் அதன்மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தலாம். செல்வர்கள் ஒன்றுகூடி, தம்மால் இயன்ற அளவு பணத்தை வழங்கி, ஒரு பைத்துல்மால் உருவாக்கி, அந்த நிதியிலிருந்து தேவையுடையோருக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்து உதவலாம். ஒவ்வொரு மஹல்லாவின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கூட்டுறவு வங்கியைத் தொடங்கி, சிறுசேமிப்பின் மூலம் பணத்தைச் சேர்க்கலாம். அதன் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, தொழில் நிறுவனங்களில் அதை முதலீடு செய்து இலாபம் ஈட்டலாம். அந்த இலாபப் பங்கை முதலீட்டாளர்களுக்கு (சேமிப்பாளர்களுக்கு)ப் பிரித்து வழங்கலாம். அல்லது கூட்டாகச் சேர்ந்து தொழில் தொடங்கலாம். அதில் வருகின்ற இலாபத்தைச் சேமிப்பாளர்களுக்கு வழங்கலாம்.

 

சிறு சிறு தொழில்களைச் செய்துகொண்டிருக்கின்ற இளைஞர்கள், தள்ளுவண்டியில், நடைபாதைகளில் கடைவைத்துக்கொண்டு சிரமப்படுகின்ற இளைஞர்கள் ஆகியோர் பத்துப் பத்துப் பேர்களாக ஒன்றிணைந்து, பெரிய அளவில் தொழில் செய்ய முன்வரலாம். அவர்களுள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை முதலீடாகப் போட்டு, ஒன்றிணைந்து உழைக்கும்போது அந்தத் தொழில் நன்றாக வளர்ச்சியடைவதோடு மிகுந்த இலாபத்தையும் அவர்கள் ஈட்டலாம். அவர்கள் தமக்கு மத்தியில் இலாபத்தைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளலாம். அத்தோடு பலருக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கலாம்.

 

ஒரு வார்டு (Ward)க்கு உட்பட்ட பகுதியில் எத்தனைப் பள்ளிவாசல்கள் இருக்கின்றனவோ அத்தனைப் பள்ளிவாசல்களின் தலைவர்களும் ஒன்றிணைந்து ஆலோசனை செய்து, தம் மஹல்லாவிற்குள் தகுதியான ஒரு வேட்பாளரை ஏகமனதாகத் தேர்வுசெய்து அவரை அந்த வார்டு தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடச் செய்யலாம். அனைவரும் அவருக்கே வாக்களிக்குமாறு வெள்ளிக்கிழமை அறிவிப்புச் செய்யலாம். இதனால் அவர் வெற்றி பெற்று மக்கள் சேவையாற்றலாம். நம் சமுதாயத்திற்கு எதிராக ஏதேனும் இடையூறு ஏற்பட்டால்  அதை அவர்மூலம் தடுத்து நிறுத்தலாம். இதெல்லாம் நம்முடைய கூட்டுமுயற்சியாலும் அல்லாஹ்வுக்காகவே நாம் செயல்படுகின்றோம் என்ற மாசற்ற எண்ணத்தாலுமே சாத்தியமாகும்.

 

தற்போது முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நம்முடைய எதிர்ப்பைக் காட்ட, ஒவ்வோர் இயக்கமும் தனித்தனியாகப் போராடுவதைவிட நாம் அனைவரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பின் அல்லது குறிப்பிட்ட நாளில் அந்தந்த ஊர்களில், மாவட்டத் தலைநகரங்களில், ஒன்றுகூடிப் போராடினால் அதன் தாக்கம் மிகப்பெரிதாக இருக்கும். அரசையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும். அதன்பின் அதற்கொரு தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.

 

ஈதுல் அள்ஹா-தியாகத் திருநாள் அன்று நம்முள் பெரும்பாலோர் தத்தம் குடும்பங்களில் ஒன்று அல்லது  ஒன்றுக்கு மேற்பட்ட ஆடுகளை அல்லாஹ்விற்காக அறுத்துப் பலியிடுகின்றனர். ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான இறைச்சியை-மூன்றில் ஒரு பங்கை அல்லது அதைவிடக் குறைவாக எடுத்துக்கொண்டு எஞ்சியுள்ளதை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றனர். அவ்வாறு கொடுக்கும்போது  சில குடும்பங்களுக்கு மட்டும் பலரின் வாயிலாக மிகுதியான இறைச்சி சேர்ந்துவிடுகின்றது; வேறு சில குடும்பங்களுக்கு அறவே இறைச்சி கிடைக்காமல் போவதும் உண்டு.

 

மிகுதியான இறைச்சி கிடைக்கப் பெற்றோர், அவ்வளவு இறைச்சிகளையும் பாதுகாத்து வைக்க, குளிர்சாதனப் பெட்டியில் போதிய இடமில்லாததால், அதில் ஒரு பகுதியை வீணாக்கிவிடுகின்றனர். இதைத் தவிர்க்க, கூட்டு முயற்சி செய்தால் எல்லோருக்கும் சமஅளவில் குர்பானி இறைச்சி கிடைக்கும்படி செய்யலாம்.

 

ஒரு மஹல்லாவில் 500 குடும்பங்கள் என்று வைத்துக்கொண்டால் அதில் குறைந்தபட்சம் 200 குடும்பத்தினராவது குர்பானி கொடுப்போராக இருப்பார்கள். நூறு குடும்பத்தினர் கூட்டுக் குர்பானி கொடுப்போராக இருக்கலாம்.  ஏழைகளாகவோ, குர்பானி கொடுக்க வாய்ப்பில்லாதவராகவோ இருப்போரை மட்டும் கணக்கெடுத்துக்கொண்டு ஒரு பட்டியல் தயார் செய்துகொள்ள வேண்டும்.

 

குர்பானி கொடுப்போர் தமக்குத் தேவையான இறைச்சியை எடுத்துக்கொண்டு, ஏழைகளுக்கான பங்கை அந்த மஹல்லாவிலுள்ள பள்ளிவாசலில் ஒப்படைத்துவிட வேண்டும். ஒவ்வொருவரும் 10 அல்லது 15 கிலோ இறைச்சியை வழங்குகின்றார்கள் என்றால் ஏறத்தாழ 3000 கிலோ இறைச்சி சேர்ந்துவிடும். அதைச் சரியான விகிதத்தில் பைகளில் போட்டு, ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளபடி அந்த மஹல்லாவாழ் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கினால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தாராளமாகக் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் எல்லோருக்கும் குர்பானி இறைச்சி கிடைக்குமல்லவா?

     

இவ்வாறு நாம் செய்கின்ற பல்வேறு கூட்டு முயற்சிகள்மூலம் நாமும் பயனடைந்து பிறரையும் பயன்பெறச் செய்யலாம். இதுதான் கூட்டு முயற்சியின் பயனாகும். இனி வரும் காலங்களில் இத்தகைய கூட்டு முயற்சிகள்தாம் முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். ஆகவே தொழுகையில் மட்டுமின்றி எல்லாவற்றிலும் கூட்டு முயற்சி செய்து நமக்கான முன்னேற்றத்தை நோக்கி நாம் அனைவரும் நகர்வோம்.

======================









ஞாயிறு, 13 ஏப்ரல், 2025