-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ.,எம்.ஃபில்.,பிஎச்.டி.
பொறுப்பாசிரியர் இனிய திசைகள் மாத இதழ்,
இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28
வக்ஃப் என்பது அல்லாஹ்விற்காக ஒருவர் நிரந்தரமான நன்மையை நாடிச் செய்கின்ற தர்மம் ஆகும். “மூலச் சொத்தை அப்படியே வைத்துக்கொண்டு அதன் பயன்களை மக்களுக்குக் கொடுப்பதே” அதன் வரைவிலக்கணம் ஆகும். அதாவது மூலச் சொத்தை அழித்து விடாமல் பாதுகாப்பதோடு, அதன்மூலம் கிடைக்கின்ற பயன்களை மக்களுக்கு வழங்குவதே அதன் நோக்கமாகும்.
வக்ஃப் குறித்த சட்டத் தெளிவின்மை ஒருபுறம்; அதைத் தவறாகப் பயன்படுத்திவிடுவோமோ என்ற அச்சம் மறுபுறம். இவையே முஸ்லிம்கள் வக்ஃப் சொத்தின் மூலம் இதுவரை உரிய முறையில் பயன்பெறாததற்குக் காரணமாகும். முஸ்லிம்கள் பலர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் இருந்தும் அவர்களுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை. அரசாங்கமும் அவ்வளவாகச் செய்யவில்லை. வக்ஃப் வாரியமும் வீரியமாகச் செயல்பட்டுத் திட்டங்களைத் தீட்டவில்லை. அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய உவப்பிற்காகவே பணியாற்றுகின்ற ஆலிம்கள், முஅத்தின்கள், அரபுக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோரின் நலனைப் பேணும் வகையில் அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவுமில்லை.
வக்ஃப் சொத்துகளை எப்படிக் கையாள வேண்டும் என்ற சட்டம் தெரியாததால்தான் நம் முன்னோர்கள் அதன் பயன்களை ஏழை மக்களுக்கு உரிய முறையில் வழங்காமல் சென்றுவிட்டார்கள் எனலாம். இனிவரும் காலங்களிலாவது அதன் பயன்களை ஏழைகளுக்கும் அல்லாஹ்வின் பாதையில் அவனது பணிகளை ஆற்றக்கூடியோருக்கும் வழங்கிட அதன் பொறுப்பாளர்கள் முன்வர வேண்டும்.
நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து செலவு செய்கின்ற வரை நீங்கள் நன்மையைப்பெற முடியாது (3: 92) என்ற இறைவசனம் இறங்கிய பின், அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு தமக்கு மிகவும் விருப்பமான பைருஹா எனும் தோட்டத்தை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்ய அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, விஷயத்தைக் கூறினார். அவரது தர்மத்தை ஏற்றுக்கொண்ட நபியவர்கள், அதை உம்முடைய உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடுவீராக என்று கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே என்று சொல்லிவிட்டு, தம் உறவினர்களுக்கும் சிற்றப்பா பிள்ளைகளுக்கும் அதனைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்.
அதாவது மேற்கண்ட இறைவசனம் இறங்கியவுடன் அதைச் செயல்படுத்துமுகமாக முதன்முதலாகச் செயல்பட்டவர் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்தாம். அவரைத் தொடர்ந்து நபித்தோழர்கள் பலர் இந்த இறைவசனத்திற்கேற்பத் தம் செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள் என்பது வரலாறு. செல்வம் உடைய யாரும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்காமல் இருந்ததில்லை.
வக்ஃபின் சட்டங்கள்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு கைபரில் ("ஃதம்ஃக்' என்னும்) ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. ஆகவே, அதை நான் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலைத் தர்மம் செய்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.
அவ்வாறே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் "அதை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாக வழங்கக் கூடாது; வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது" என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், பயணிகளுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர், அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தமக்கென்று) சேகரித்து வைக்காமல், படாடோபமாகச் செலவிடாமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்). (புகாரீ: 2737)
மேற்கண்ட ஹதீஸில் வக்ஃப் சொத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு உள்ளது. அதாவது மூலச் சொத்தை விற்கக் கூடாது; அன்பளிப்புச் செய்யக்கூடாது; அதை மற்றவர் தம் வாரிசுச் சொத்தாகவும் ஆக்கிக்கொள்ளக்கூடாது. யாரெல்லாம் அனுபவிக்கலாம் என்ற தெளிவும் உள்ளது. ஏழைகள், உறவினர்கள், அடிமைகள், அல்லாஹ்வின் பாதையில் பணியாற்றுவோர், பயணிகள், விருந்தாளிகள் முதலானோர் அனுபவிக்க அனுமதியுண்டு என அறிகிறோம்.
மூலச் சொத்தை அப்படியே வைத்துக்கொண்டு அதன் பயன்களை எவ்வாறு ஏழை முஸ்லிம்களை அனுபவிக்கச் செய்யலாம்? வக்ஃப் செய்யப்பட்ட நிலத்தில் வீடுகள், கடைகள் ஆகியவற்றைக் கட்டி, குறைவான வாடகைக்கு விடலாம். குறைவான வாடகையில் உள்ளோர் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, எங்கேனும் ஓரிடத்தை வாங்கி, அங்கு ஒரு புதிய வீட்டைக் கட்டிக்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. அதன்பின் அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து விடுவார்கள். பிறகு அவ்வீட்டில் மற்றொருவர் குடிபுகுவார். இப்படி அதன் பயன்கள் நீடித்துக்கொண்டே போகும்.
நிலத்தைக் குத்தகைக்கு விடுதல், வாடகைக்கு விடுதல், விவசாயம் செய்தல், முதலான வகைகளில் வருகின்ற வருமானத்தில் ஏழை முஸ்லிம் பெண்களுக்குத் திருமண உதவி, கல்வி உதவி உள்ளிட்ட உதவிகளைச் செய்யலாம். கைம்பெண்கள், முதியோர், ஆதரவற்றோர் உள்ளிட்டோருக்கு மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கலாம்; நம் பெண்களுக்குத் தையல் பயிற்சி உள்ளிட்ட சுயதொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்கி, அதன்மூலம் பொருளாதார ரீதியில் அவர்கள் முன்னேற ஏற்பாடு செய்யலாம். ஆக நாம் எந்த முறையில் அதைப் பயன்படுத்தினாலும் வக்ஃப் செய்தோருக்கு அதன் நன்மைகள் சென்றுகொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பள்ளிக்கூடங்கள், மத்ரஸாக்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், நூல்நிலையங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டி மக்களுக்கான சேவைகளைச் செய்யலாம். இவ்வாறு எண்ணற்ற நற்பணிகளை வக்ஃப் சொத்துகள் மூலம் செய்யலாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. எனவே இனிவரும் காலங்களிலாவது வக்ஃப் சொத்துகளை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்ற தெளிவான சிந்தனையோடு, நம் சமுதாயத்தைச் சார்ந்த ஏழைகளுக்கு என்னால் இயன்ற வரை உதவுவேன் என்ற எண்ணத்தோடு அதன் பொறுப்பாளர்கள் செயல்பட வல்லோன் அல்லாஹ் நல்வாய்ப்பை நல்குவானாக.
=====================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக