புதன், 19 மார்ச், 2025

விளம்பர மோகம்

 விளம்பர மோகம்

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.


ஒருவர் தம்முடைய தயாரிப்புப் பொருளை மக்கள் மத்தியில் பெருமளவில் விற்பனை செய்ய விளம்பரம் உதவியாக உள்ளது. தம்முடைய தரமான பொருளை மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கவே தொடக்கத்தில் விளம்பரத்தைத் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் காலப்போக்கில் தரமற்ற பொருள்களையும் விளம்பரத்தின் மூலம் விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். தற்போது விளம்பரத்தில் காட்டப்படுகிற பெரும்பாலான பொருள்கள் தரமற்றவையாகவும் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பவையாகவுமே உள்ளன. 


அவற்றை வாங்கக்கூடிய நுகர்வோர் இவை தரமானவையா, உடலுக்கு ஆரோக்கியமானவையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதைவிட இது ஒரு ரூபாய் குறைவாக இருக்கிறதா என்றுதான் பார்க்கின்றனர். ‘அந்த நடிகை சொல்லிவிட்டாரே’ நன்றாகத்தான் இருக்கும்; ‘அந்த நடிகர் சொல்லிவிட்டாரே’ அப்படியென்றால் நன்றாகத்தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். காலப்போக்கில் அதன் பாதிப்பு தெரிய வரும்போதுதான், அந்தப் பொருள் எவ்வளவு மட்டமானது; எவ்வளவு தரமற்றது என்பதை உணர்கின்றார்கள்.


அதுபோலவே பிள்ளைகள் தொலைக்காட்சியில் காணுகின்ற விளம்பரங்களால் ஈர்க்கப்படுகின்றனர்.  அதனால் குறிப்பிட்ட அப்பொருள்களைத் தம் பெற்றோரிடம் கேட்கின்றார்கள். எவ்வித மறுப்புமின்றி அதை அப்படியே அவர்கள் தம் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றார்கள். தம் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு உகந்ததா, ஆரோக்கியமானதா, ஊட்டச்சத்து மிக்கதா என்று எதையும் பார்ப்பதில்லை; எதைப் பற்றியும் சிந்திக்க நேரமில்லை. கடைசியில் பிள்ளை நோய்வாய்ப்பட்டுப் படுக்கும்போதுதான் சிந்திக்கவே தொடங்குகின்றார்கள். ‘உங்கள் பிள்ளைக்கு நீங்கள் என்ன வாங்கிக் கொடுத்தீர்கள்’ என்று மருத்துவர் கேட்கும்போது, லேஸ், குர்குரே உள்ளிட்ட உப்பு கலந்த தின்பண்டங்களைக் கூறுவார்கள். அந்தத் தின்பண்டங்கள்தாம் உங்கள் குழந்தைக்குச் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று டயாலிஸிஸ் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டன என்று மருத்துவர்கள் சொல்லும்போது, தலையில் சம்மட்டியால் அடித்ததைப்போல் உணர்வார்கள். 


ஆக உணவுப் பொருள்கள் மட்டுமின்றி, நாம் பயன்படுத்தும் அத்தனைப் பொருள்களையும் ஏதாவது ஒரு நிறுவனம் செய்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டுத்தான் நம்முள் பெரும்பாலோர் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். வெளிப்பயன்பாடு உள்ள பொருள்கள் எதை வாங்கினாலும் அதன் மூலம் அவ்வளவாக நமக்குப் பாதிப்பு இருக்காது; பணம் மட்டுமே வீணாகும். ஆனால் உண்பொருள்களாக இருந்தால் பணம் வீணாவதோடு நம் உடலும் சேர்ந்து வீணாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


இன்று பரபரப்பான உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வீட்டில் ஆற அமரச் சமைத்து, நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை. கடையில் ஆயத்தநிலையில் கிடைக்கும் பொருள்களைத்தான் வாங்கிச் சமைத்து சாப்பிட்டு வருகிறோம். அவற்றுள் முக்கியமாகப் பாக்கெட் இட்லி மாவு இடம்பெறுகிறது. இன்று இதை வாங்காத குடும்பங்களே இல்லை என்ற அளவிற்குப் பெரும்பாலோர் வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அது எந்த அளவிற்கு உடலுக்குக் கேடு என்பதை இன்றைய ஆண்களும் பெண்களும் விரைவில் உணர்வார்கள். அதுவரை அதன் விற்பனை கொடிகட்டிப் பறக்கும். அபரிமிதமான வேதிப் பொருள்கள் (கெமிக்கல்), சீக்கிரம் புளிக்காமல் இருக்க அதனுள் இடப்படும் தனிப்பட்ட வேதிப் பொருள் என அதன் இயல்பு நிலையே முற்றிலும் மாறிப்போய்விடுகிறது. அதனால் அது உடலுக்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பது உறுதி. மக்களின் சோம்பேறித்தனமே இந்த நிலைக்கு முழுமுதற்காரணமாகும். 


வீட்டுமனை விற்பனை, தொகுப்பு வீடுகள் விற்பனை, கல்லூரியில் சேர்க்கை, உம்ரா உள்ளிட்ட புனிதப் பயணங்கள், பணம் முதலீடு செய்தல், எளிதாகக் கடன் பெறுதல் உள்ளிட்ட அத்தனையும் விளம்பரம் மூலமாகவே நம்மை அடைகின்றன. அந்த விளம்பர வலைக்குள் சிக்குண்டு தம் பணத்தை இழந்தோரின் கதைகளை நாம் அன்றாடம் படித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். இருந்தாலும் ‘பட்டால்தான் புத்திவரும்’ என்பதற்கேற்ப நாம் யாரிடமாவது ஏமாறுகிற வரை நாம் தெளிவடைவதில்லை. 


‘மிகக் குறைந்த பணத்தில் உம்ரா செய்யலாம்’ என்று பரபரப்பான விளம்பரம் செய்து, பலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, கூட்டிச் சென்று, மக்கா அல்லது மதீனாவில் நிர்க்கதியாகத் தவிக்க விடுகின்ற மோசடி நிறுவனங்கள் உள்ளன. ஆஹா, ஓஹோவென விளம்பரம் செய்து, ‘இரட்டைக் கல்வியை வழங்குகிறோம்’ என்று வாக்களித்ததால், அதில் மயங்கி, தம் மகளைச் சேர்த்தவர், பிறகு சில ஆண்டுகளில் அவையெல்லாம் வெற்று விளம்பரங்களே எனத் தெரியவந்ததும், அண்மையில் சமூக ஊடகங்களில் அந்தக் கல்லூரி குறித்த எதார்த்த நிலையைக் குரல் செய்தி மூலம் பரப்பினார். அதைக் கேட்டுப் பலர் அதிர்ச்சியுற்றனர். 


இது ஒருபுறம் என்றால், புதிதாக ஒரு மத்ரஸாவோ கடையோ தொடங்குவோர் பிரபலமான ஒருவரின் முகத்தைத் தேடுகின்றார்கள். தேடிப் பிடித்து, அவரை முன்னிலைப்படுத்தி மத்ரஸா அல்லது கடையைத் திறந்துவிடுகின்றார்கள். அவருடைய புகழ் இருக்கின்ற வரை அதுவும் நல்லமுறையில் போய்க்கொண்டிருக்கும். திடீரென அவர்மீது ஓர் அவதூறு அல்லது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதன் காரணமாக அவரது புகழ் மங்கும்போது அந்தக் கல்வி நிறுவனங்களும் கடைகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. 


ஒருவர் தம் தனிப்பட்ட திறமையால், ஆற்றலால் புகழ்பெற்றவராக இருக்கிறார் என்பதால் ஆளாளுக்கு ‘எங்கள் கல்லூரியின் முதல்வர் இன்னவர்’ என்று குறிப்பிட்ட ஒருவரின் பெயரை முன்னிலைப்படுத்தித் தம் கல்வி நிறுவனங்களை அல்லது தொழில் நிறுவனங்களை இயக்குகின்றார்கள்; அவரின் பெயரை வைத்தே விளம்பரங்கள் செய்கின்றார்கள். அதனால் பெருமளவில் ஈர்க்கப்படுகிற பெற்றோர் தம் பிள்ளைகளை அங்கு வந்து சேர்க்கின்றார்கள்; நுகர்வோர் அந்த நிறுவனங்களை நோக்கிப் படையெடுக்கின்றார்கள்; பொருள்களை வாங்குகின்றார்கள். அதனால் அந்த நிறுவனத்தார் பணம் குவிக்கின்றார்கள். நாளடைவில் அவரின் புகழ் மங்கும்போது அந்த நிறுவனங்கள் காணாமல் போய்விடுகின்றன; அந்தக் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்படுகின்றன.


ஜுன்துப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகத்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன். (புகாரீ: 6499) 


நம்முள் சிலர் தம்முடைய முகம் எல்லா இடங்களிலும் தெரிய வேண்டும்; எல்லோருக்கும் அறிமுகமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நற்பணிகளில் ஈடுபடுகின்றனர். அதைப் பார்ப்போர் அவரின் செயல்பாடுகளைப் புகழ்கின்றார்கள்; போற்றுகின்றார்கள். இவையெல்லாம் இவ்வுலகோடு முடிந்துபோய்விடும். அல்லாஹ்விடம் எந்த நன்மையும் தமக்குக் கிடைக்காது என்பதை அவர்கள் உணர்வதில்லை. எனவேதான், ‘சிறிய  ஷிர்க்கை-இணைவைத்தலை நான் அஞ்சுகிறேன்’ என்று நபியவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள், ‘சிறிய  ஷிர்க் என்றால் என்ன’ என்று கேட்டார்கள். ‘அதுதான் முகத்துதி’ என்று கூறினார்கள். அதாவது பிறர் தம்மைப் புகழ வேண்டும் என்பதற்காகவே ஒருவர் நற்செயல்களைச் செய்தால், அதற்கான பிரதிபலன் இங்கேயே அவருக்குக் கொடுக்கப்பட்டு விடும்; மறுமையில் அவருக்கு ஒன்றும் கிடைக்காது. எனவே நாம் இத்தகைய இழிசெயலை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 


மக்களே! இன்றும் சிறு, குறு வியாபாரிகள் நகரங்களிலும் சிற்றூர்களிலும் நல்லெண்ணத்தோடு, மக்களின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, தம்முடைய தயாரிப்புகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். அத்தகையோரின் தயாரிப்புகளைத் தேடிப்பிடித்து வாங்குங்கள். அவர்கள் தம் பொருள்கள் குறித்து அவ்வளவாக விளம்பரம் செய்வதில்லை. வாய்வழிச் செய்திகளாகத்தான் நம்மை அவை அடையும்.


இன்றும் மாசில்லா மனத்தோடு இறைஉவப்பை மட்டுமே நாடி மத்ரஸாக்களையும் பள்ளிக்கூடங்களையும் நடத்தி வருகின்ற நல்லடியார்கள் இருக்கின்றார்கள். அந்த மத்ரஸாக்களையும் பள்ளிக்கூடங்களையும் தேடிப் பிடித்து அதில் உங்கள் பிள்ளைகளைச் சேருங்கள். மாறாக விளம்பரங்களைக் கண்டு ஏமாற்றமடையாதீர்கள். நல்ல பொருள்களுக்கும் நல்ல மனிதர்களுக்கும் விளம்பரம் தேவையில்லை. குறிப்பாக இறைஉவப்பை மட்டுமே நாடும் நல்லோர் தம்மை விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை. 


கடைசியாக ஒரு வார்த்தை, இன்று நூறாண்டுகளைக் கடந்து உயர்ந்தோங்கி நிற்கும் சிலபல மத்ரஸாக்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அனைத்தும் மாசற்ற மனங்கொண்டோரால் தோற்றுவிக்கப்பட்டவையாகும். ஆகவேதான் இன்று வரை அவை நிலைத்து நிற்கின்றன. அவற்றில் மாணவர்கள் சேர்ந்து பயின்றுகொண்டிருக்கின்றார்கள். எனவே நாம் தொடங்குகின்ற எதுவானாலும் அது மாசற்ற மனத்தோடு இறைஉவப்பை நாடியே இருக்க வேண்டும். அதுதான் இறுதி வரை நிலைக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவோம். 

==============

கருத்துகள் இல்லை: