-------------------------------------
அன்புச் சகோதரர் மௌலவி
எம்.ஒய். அப்துர் ரஹ்மான் பாகவி தம் ஆசிரியர்கள் குறித்து எழுதிய நூல் அண்மையில் வெளியிடப்பட்டது.
நூல் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மாணவர் ஒவ்வொருவரும் இந்நூலைப் படித்தபின், தம் ஆசிரியரை எவ்வாறு கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதையும்
எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதையும் இந்நூலிலிருந்து கற்றுக்கொள்ளலாம். என்னைக் குறித்தும்
ஒரு செய்தி இந்நூலினுள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே.
நூல் விவரம்:
நூல்: சிற்பிகளைச்
செதுக்கிய வைரங்கள்
நூலாசிரியர்: மௌலவி
எம்.ஒய். அப்துர் ரஹ்மான் பாகவி
பக்கங்கள்: 260
விலை: ரூ. 250/-
தொடர்புக்கு:
97890 95748, 82483 94817
------------------------------------------------------------------------
நான் இந்நூலுக்கு
எழுதிய அணிந்துரை உங்கள் பார்வைக்கு...
=================================================
அணிந்துரை
ஆசிரியரை மதிப்போம்
முனைவர் மௌலவி நூ.
அப்துல் ஹாதி பாகவி
இமாம் மதீனா பள்ளிவாசல்,
பட்டினம்பாக்கம், சென்னை
பொறுப்பாசிரியர் இனிய
திசைகள் மாத இதழ்
எழுதுகோலால் எழுத்தைக்
கற்பித்த ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும்! ஏகனின் இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார், தோழர்கள் அனைவர்மீதும் ஏகனின் அருளும் அன்பும் கருணையும் உண்டாவதாக!
அன்புச் சகோதரர் எம்.ஒய்.
அப்துர் ரஹ்மான் பாகவி, தாம் தொகுத்துள்ள
“சிற்பிகளைச் செதுக்கிய வைரங்கள்” எனும் நூலை என்னிடம் கொடுத்து அணிந்துரை தருமாறு
கேட்டுக்கொண்டார். நூலைத் திறந்து ஒவ்வொரு பக்கமாகப் படித்துப் பார்த்தேன். அவர் புலனக்
குழுவில் (வாட்ஸ்அப்) எழுதியிருந்தபோதே நான் அந்த ஆக்கங்களைப் படித்துள்ளேன்.
நான் அல்பாக்கியாத்துஸ்
ஸாலிஹாத் அரபுப் பல்கலைக் கழகத்தில் பட்ட வகுப்பு இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த
காலத்திலிருந்து இவரோடு பழக்கமுண்டு. இவருடைய ஆசிரியர்களாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள
பெரும்பாலோர் எனக்கும் ஆசிரியர்களே ஆவர். அந்த வகையில் இவர் புகழ்ந்து போற்றும் ஆசிரியர்களை
நானும் புகழ்வதாகவே உணர்கிறேன்.
“படித்துக்கொடுக்கின்ற ஆசிரியருக்கும் படிக்கின்ற புத்தகத்திற்கும் மரியாதை கொடு”
என்று நான் என்னுடைய மாணவர்களுக்குச் சொல்வதுண்டு. படித்துக்கொடுக்கின்ற ஆசிரியரை உரிய
முறையில் மதித்தால்தான் அவர் கற்பிக்கின்ற பாடத்தின்மீது ஓர் ஈர்ப்பு ஏற்படும். மரியாதை
இல்லையேல் அவர் கற்பிக்கின்ற பாடத்தில் ஆர்வம் ஏற்படாது. அதனால் இழப்பு அந்த மாணவருக்குத்தான்.
எனவேதான் ஆசிரியரை மதி என்பேன்.
அந்த வகையில் இந்நூலைத்
தொகுத்துள்ள சகோதரர் எம்.ஒய். அப்துர் ரஹ்மான் பாகவி, தம் ஆசிரியர்கள்மீது
எந்த அளவிற்கு மரியாதை வைத்துள்ளார் என்பதை இந்நூலை வாசிக்கின்ற ஒவ்வொருவரும்
உணர்ந்துகொள்வார். அந்த அளவிற்கு உயரிய மதிப்பும்
மரியாதையும் இருப்பதால்தான், அவர்கள் தம் பாடவேளைகளில்
சொன்ன ஒவ்வொரு தகவலையும் பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் நினைவில் கொண்டுவந்து அவரால்
எழுத முடிந்துள்ளது.
இவர் பதிவுசெய்துள்ள
குறிப்புகளும் தகவல்களும் அந்த ஆசிரியர்களிடம் பயின்ற பிற மாணவர்களுக்கு மகிழ்ச்சியை
ஏற்படுத்தவல்லவை. நம்மால் எழுத இயலாததை இவர் எழுதியுள்ளாரே என்றெண்ணி மகிழ்ச்சியடைவார்கள்.
மேலும் இவை தற்போது பயின்று வருகின்ற மாணவர்களின் சிந்தனைக்குரியவை; நாமும் நம் ஆசிரியர்களிடம் எவ்வாறெல்லாம் பயில வேண்டும்
என்ற உந்துதலை ஏற்படுத்தவல்லவை.
இந்நூலினுள் பதிவு
செய்யப்பட்டுள்ள ‘சிப்பிக்குள் முத்து’ எனும் ஆக்கம் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனெனில் நான் அல்பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்தில் காலடி வைத்த தருணத்தில், தன்னந்தனியாகவே உள்ளே நுழைந்தேன். அங்கு என்னைச்
சேர்த்துவிட என்னுடன் யாரும் இல்லை. “என்னப்பா! தனியா வந்திருக்க? போய், உன் அத்தாவ கூட்டிட்டு வா” என்று கல்லூரி முதல்வர் பீ.எஸ்.பீ. ஹள்ரத் அவர்கள் கூற,
அருகிலிருந்த ஹெச். கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள்,
“ஓதணும்னு ஆர்வத்தோட வந்திருக்கான்.
சேர்த்துக்கங்க ஹஸ்ரத். இன் ஷாஅல்லாஹ் நல்லா வருவான்” என்று கூறி, பரிந்துரை செய்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு என்னைச்
சேர்த்துக்கொண்டார்கள்.
நான் பாக்கியாத்தில்
பயின்ற காலத்திலேயே எழுத்துப் பணியைத் தொடங்கி, சில மாத இதழ்களுக்குக் கட்டுரை எழுதி அனுப்பி வந்தேன். அவற்றுள்
ஓர் இதழ்தான் அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமிய மாத இதழ். அதில் ‘கணவனும் மனைவியும்’ எனும் தலைப்பில்
தொடர் கட்டுரை எழுதிவந்தேன். அந்தத் தொடர் கட்டுரையைப் படித்த ஒரு வாசகி, என் கட்டுரையைப் பாராட்டி எழுதியிருந்தார். அதைப்
படித்த என் ஆசிரியத் தந்தை கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள், இந்நூலாசிரியரிடம் அதைக் காட்டிப் படிக்கச் சொல்லியுள்ளார்கள்.
அப்போது ஹள்ரத் அவர்கள் என்னைப் பாராட்டிப் பேசியதை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
அதைப் படித்தபோது, என் ஆசிரியர் மனம்
மகிழும் விதத்தில் நான் வளர்ந்து வந்ததை எண்ணி, மகிழ்ந்துகொண்டேன். மேலும் அதையே என் ஆசிரியருக்குச் செய்த கைம்மாறாகக்
கருதிக்கொண்டேன்.
இந்நூலைப் படிக்கின்ற
யாராயினும், தம்முடைய ஆசிரியரோடு
அவருக்கு இருந்த தொடர்பும் நெருக்கமும் புரிய வரும். அதை அவர் எழுத்து வடிவில் சொல்லாதவராக
இருக்கலாம். ஆனால் அவர் மனத்தில் அவர்தம் ஆசிரியரின் நினைவு எழவே செய்யும். அதன்படி
எனக்கும் என் ஆசிரியர்களுக்கும் இடையே ஏற்பட்ட அனுபவங்கள் சிலவற்றை மலரும் நினைவுகளாக
இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் இறுதியாண்டு புகாரீ வகுப்பறையில்
ஒரு நாள் நடந்த நிகழ்விது. ஆசிரியர் மர்ஹூம்
மௌலானா ஹெச். கமாலுத்தீன் பாகவி அவர்கள், ஹதீஸ் பாடம் நடத்துகின்றபோது மாணவர்களின் புரிதலுக்காக,
உலக நடைமுறை விஷயங்களையும் உதாரணமாகக் கூறுவது வழக்கம்.
அதுபோன்று ஒரு நாள், “ஒருவர் மரணித்தபின்
மூன்று அவனைப் பின்தொடர்கின்றன. இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டும் அவனோடு இருந்துவிடுகிறது.
அவனது சொத்து, குடும்பம்,
நல்லறங்கள்.....:: எனும் நபிமொழியை நடத்தினார்கள்.
அப்போது திடீரென அவர்களது
சிந்தனையில் ஒரு கவிஞனின் கவிதை அரைகுறையாக நினைவில் வர, மாணவர்களைப் பார்த்து அதைப் பாடச் சொன்னார்கள். உடனே மாணவர்கள்
நான்கைந்து பேர் ஒரேநேரத்தில் அக்கவிதையைப் பாடினார்கள்.
“ஏய், ஏய், நிறுத்து, நிறுத்து. ஒருத்தன் பாடு” என்று கூற, நான்தான் அக்கவிதை வரிகளைப் பாடினேன்.
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
இக்கவிதை வரிகளைக்
கேட்டபின், “அக்கவிஞனுக்கு மட்டும்
இந்த ஹதீஸ் தெரிந்திருந்தால் இப்படிப் பாடியிருக்க மாட்டான். கடைசி வரை வரப்போவது அவனுடைய
நல் அமல்கள்தானே?” என்றார்கள்.
நான் மூன்றாம் ஆண்டு
பாக்கியாத்தில் ஓதிக்கொண்டிருந்தபோது அந்நஃபாயிஸுல் இர்தளிய்யா எனும் நூலை மர்ஹூம்
மௌலானா முஹம்மது இல்யாஸ் பாகவி அவர்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். இலக்கண,
இலக்கிய விதிகளைத் தம்மால் இயன்ற வரை மாணவர்களுக்குப்
புரிய வைப்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வார்கள்.
தஷ்பீஹ் (உவமானம், உவமேயம்) குறித்த பாடத்தில் இஸ்த்திஆரா தக்யீலிய்யா (கற்பனையை
இரவல் வாங்குதல்) என்று ஒரு வகை உண்டு. அதாவது இதில் தனித்தனிப் பொருள்களைக் காண முடியும்.
அவை ஒன்றிணைந்த ஓர் உருவத்தைக் காணமுடியாது.
"எத்தனையோ தாயத்துகள்
போட்டும் எதுவும் பயனளிக்கவில்லை. (எல்லாவற்றையும் தாண்டி) மரணம் தன் கோரநகத்தைப் பதித்துவிட்டது"
எனும் கவிஞரின் கற்பனை வரிகளைச் சான்றாகக் காட்டியிருப்பார் நூலாசிரியர்.
1. மரணித்தவரைக் காணலாம்.
2. வனவிலங்கின் கோர நகத்தையும்
காணலாம். ஆனால் மரணத்தையே ஒரு வனவிலங்காகக் கற்பனை செய்துள்ளார் கவிஞர். அதைக் காண
முடியாது.
இதை முதல் நாள் நடத்திவிட்டு,
மறுநாள் வகுப்பறைக்கு வந்து, நேற்று நடத்திய பாடம் புரிந்ததா? என்று கேட்டுவிட்டு, மறுபடியும் அதை விளக்கிக்கூறத் தொடங்கினார்கள்.
அப்போது அவர்கள் செல்லும்
வழியில் எங்கிருந்தோ காதில் விழுந்த கவிதை வரி ஒன்றை மேற்கோள் காட்டி அப்பாடத்தை விளக்கிக்
கூறினார்கள். அக்கவிதை வரி இதுதான்.
‘ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்...’ இதில் ரெக்கையைப் பார்க்கலாம். சைக்கிளையும்
பார்க்கலாம். ஆனால் ரெக்கை முளைத்த சைக்கிளைப் பார்க்க முடியாது. இதுதான் இஸ்த்திஆரா
தஃக்யீலிய்யா என்று கூறி விளக்கினார்கள்.
ஆக, பாக்கியாத்தின் ஆசிரியப் பெருந்தகைகள் மாணவர்களுக்குப்
பாடத்தைப் புரிய வைக்க மேற்கொண்ட முயற்சிகளும் அக்கறைகளும் இன்றும் என் மனத்தில் பசுமையாகப்
பதிந்துள்ளதை இங்கு பதிவுசெய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இன்னும் பற்பல ஆசிரியர்கள்
சொன்ன அரிய கருத்துகளும் அவர்கள் குறித்த நினைவுகளும் நம் நினைவகத்தில் தேங்கிக் கிடக்கின்றன.
ஆக ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை செலுத்துவதும், மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி ஆசிரியர்கள் மனமுவந்து துஆ
செய்வதும் கல்விப் பரவல் சீராக நடைபெறுவதற்கு வழிவகுக்கும். ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்வதும்
ஊக்கப்படுத்துவதும் தொடர்ந்து தொய்வின்றிக் கல்விப்பணியாற்ற பக்கபலமாக அமையும் என்பது
திண்ணம்.
அந்த வகையில் சகோதரர் எம்.ஒய். அப்துர் ரஹ்மான் பாகவி தொகுத்துள்ள இந்நூல் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்குமுரியது. இவர் இன்னும் பற்பல நூல்களை இச்சமுதாயத்திற்கு வழங்கிட வாழ்த்துகிறேன்; இறைவனிடம் இருகரமேந்திப் பிரார்த்தனை செய்கிறேன். ஏக இறைவன் அல்லாஹ் எல்லோருக்கும் பயனுள்ள நூலாக இதை ஆக்குவானாக.
அன்புடன்
முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி
பாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக