ஞாயிறு, 23 அக்டோபர், 2022

உணவு வழங்குவோம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி

உலகிலுள்ள மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உணவு இன்றியமையாத் தேவையாகும். உணவின்றி யாரும் உயிர் வாழ முடியாது. அத்தகைய உணவைப் பாதுகாப்பதும் உரிய முறையில் பிறருக்கு அதைப் பகிர்ந்தளிப்பதும் நம் கடமையாகும். உரிய முறையில் அதை எளிதாக வாங்குவதற்கேற்ற சூழலை உண்டாக்குவது அரசின் கடமையாகும். அதேநேரத்தில் பணம் கொடுத்து உணவுப் பொருளை வாங்க முடியாத ஏழைகளுக்கு அதை இலவசமாக வழங்குவதும் அரசின் கடமையே ஆகும்.


உலகிலுள்ள அனைவருக்கும் உணவு தயாராகவே உள்ளது. அதைப் பெறும் வழிகளை ஆட்சியாளர்கள் முறையாகச் செய்வதில்லை என்பதே பலருக்கு உணவு கிடைக்காமைக்கான பெருங்காரணமாகும். விவசாயிகள் நெல்லையும் கோதுமையையும் மக்களின் தேவைக்கு மிகுதியாகவே உற்பத்தி செய்து, கொண்டு வந்து சேர்க்கின்றார்கள். ஆனால் அரசு அவற்றை உரிய முறையில்  கிடங்குகளில் பாதுகாப்பதில்லை. இடப்பற்றாக்குறையால் அவை கிடங்குகளுக்கு வெளியே கிடந்து, மழையாலும் வெள்ளத்தாலும் சீரழிகின்றன. ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய உணவுப்பொருள் ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கால் கிடைக்காமல் போய்விடுகின்றது. இறுதியில் அவர்கள் இரவில் பசியோடு உறங்கச் செல்கின்றார்கள்.


ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நிறுவப்பட்ட தினத்தை நினைவுகூரும் விதத்தில் ஒவ்வோராண்டும் உலக உணவு தினம் அக்டோபர் 16ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.  இதன் நோக்கம் உணவு குறித்தும் அதனைப் பாதுகாப்பது குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் நாம் உண்கின்ற உணவுபோக எஞ்சியதைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். உணவை வீணாக்கக்கூடாது. உணவகங்களிலும் திருமண நிகழ்வுகளிலும்  பல்வேறு வகையான உணவுகள் பரிமாறப்படுவதால், அங்கெல்லாம் பெரும்பாலான உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன. அவையெல்லாம் ஏழைகளுக்குச் சேரவேண்டியவை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.


கலப்படமற்ற, தூய்மையான உணவு உலகில் பெரும்பாலோருக்குக் கிடைப்பதில்லை. உலக மக்கள்தொகையின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு உணவே கிடைப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் உணவுப் பாதுகாப்பு நாள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பட்டினிச் சாவு இன்றி மக்களை வாழச் செய்வதற்கான முயற்சியை உலகின் பெரும்பாலான ஆட்சியாளர்கள் இதுவரை எடுக்க முயலவில்லை. இந்த உணவுப் பாதுகாப்பு நாளிலேனும் அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு செயல்பட்டால் உணவு எல்லோருக்கும் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.





படைத்தோன் அல்லாஹ் இப்புவிவாழ் மக்களுக்கு உணவு வழங்குவதோடு, ஏழைகளுக்கு உணவு வழங்குமாறு உலகப் பொதுமறையான திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான். செல்வர்கள் தம்மிடமுள்ள மிகையான செல்வத்தைத் தமக்குரியவையாக மட்டும் கருதாமல் அதிலிருந்து ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று கட்டளையிடுகின்றான். ஒருபுறம் அரசு ஏழைகளுக்கு உணவிற்கான உதவி செய்வதோடு, மறுபுறம் செல்வர்கள் தம் செல்வத்தைத் தாராளமாக ஏழைகளுக்குச் செலவு செய்யத் தொடங்கிவிட்டால் ஏழ்மையும் உணவுப் பற்றாக்குறையும் தீர்ந்துவிடும்.


படைத்த இறைவன் ஏழைகளுக்கு உணவு வழங்குமாறு மக்களுக்குக் கட்டளையிடுவதோடு சில குற்றவியல் தண்டனைகளுக்குப் பரிகாரமாக உணவு வழங்குவதை அமைத்துள்ளான் என்பது கவனிக்கத்தக்கது.


எவரேனும் தம் மனைவியைத் தம் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், மீண்டும் அவளோடு சேர்ந்துவாழ விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டிக்கொள்வதற்கு முன்னதாகவே அதற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்தப் பரிகாரம் மூவிதங்களுள் ஏதேனும் ஒன்றாக அமையலாம். 1. ஓர் அடிமையை விடுதலை செய்தல், 2. இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்றல், 3. அறுபது ஏழைகளுக்கு உணவளித்தல்.  இது குறித்துப் பின்வருமாறு திருக்குர்ஆன் பேசுகிறது.


(மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்... (விடுதலை செய்யக்கூடிய அடிமை) கிடைக்கப்பெறாவிட்டால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னதாகவே, (அவர்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்கட்டும். (இவ்வாறு நோன்பு நோற்க) ஆற்றல் பெறாதவர் அறுபது ஏழைகளுக்கு (நடுநிலையான) உணவளிக்கட்டும். (58: 3-4)


அடுத்து, ஒருவர் தாம் செய்த சத்தியத்தை நிறைவேற்ற முடியாமல் போனால், அல்லது செய்த சத்தியத்தை முறித்துவிட்டால் அவர் மூவிதங்களுள் ஏதேனும் ஒருவிதத்தில் அதற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும். 1. பத்து ஏழைகளுக்கு உணவளித்தல்2. பத்து ஏழைகளுக்கு உடை வழங்குதல்3. ஓர் அடிமையை விடுதலை செய்தல். இம்மூன்றில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வசதி இல்லாவிட்டால் அவர் மூன்று நாள்கள் நோன்பு நோற்க வேண்டும். ஆக இதில் இறைவன் ஏழைகளுக்கு உணவு வழங்குவதையே முன்னிலைப்படுத்தியுள்ளான். இது குறித்துப் பின்வருமாறு திருக்குர்ஆன் பேசுகிறது.

 

அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்துவரும் உணவில் நடுநிலையான உணவைப் பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்; அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (பரிகாரமாகக் கொடுக்கக்கூடிய இவற்றுள் எதனையும்) அவர் பெற்றுக்கொள்ளவில்லையெனில் அவர் மூன்று நாள்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். (5: 89)


இதுபோலவே ஹஜ்ஜில் இஹ்ராம் அணிந்தவர் வேட்டையாடினால் அவர் அதற்கான பரிகாரம் செய்தாக வேண்டும். அதிலும் ஏழைகளுக்கு உணவளித்தலை (5: 95) இறைவன் கூறியுள்ளான். மேலும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க இயலாதவர் அதற்கான பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளித்தலையே (2: 184)

 கூறியுள்ளான். இவ்வாறு பல்வேறு குற்றச் செயல்களுக்கான பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளித்தலை இறைவன் முன்னிலைப்படுத்தியுள்ளான். இதிலிருந்து ஏழைகளின் உணவிற்கு இறைவன் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளான் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

   



தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 என்பது உணவுக்கான உரிமைச் சட்டமாகும். நாட்டின்  மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்திய நாடாளுமன்றச் சட்டமாகும். இச்சட்டம் செயல்பாட்டில் இருந்தும் உரிய முறையில் ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள் கிடைக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இன்றும் பலர் உரிய முறையில் உணவுப் பொருள்கள் கிடைக்கப் பெறாமல் மிகவும் சிரமப்படுகின்றார்கள். அதற்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.


இப்புவியில் வாழும் ஏழைகளுக்கு உணவு கொடுத்து உதவி செய்கின்ற நல்லவர்களை இறைவன் விரும்புகின்றான். அவர்களைப் பாராட்டிப் பேசியுள்ளான். திருக்குர்ஆனைப் புரட்டுகின்றபோது  அதில் 76ஆம் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனத்தைக் காணலாம். அவர்கள் அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், கைதிகளுக்கும் உணவளித்து வந்தனர். (தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேயன்றி, உங்களிடம் நாம் யாதொரு கூலியையோ (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ நாடவில்லை'' (என்றும் கூறிவந்தனர்). (76: 8-9)


இந்த வசனத்தின் அடிப்படையில்தான் இறைவன்மீது நம்பிக்கைகொண்ட முஸ்லிம் இளைஞர்கள் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின் காரணத்தால் மக்கள் உணவின்றித் தவித்தபோது சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்கினார்கள். இதைக் கடந்த காலங்களில் பல்வேறு சமயத்தைச் சார்ந்தோர் நேரடியாகக் கண்டு அனுபவித்தார்கள். இத்தகைய சமூகத் தொண்டையும் மனிதநேயத்தையுமே இஸ்லாம் போதிக்கின்றது. 


ஆக "தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்'' என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் ஏழைகளுக்கு உணவு வழங்குவதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதாவது: மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்; (பசித்தோருக்கு) உணவளியுங்கள்; மக்கள் உறங்கும் (வைகறை) நேரத்தில் தொழுங்கள்; நல்லவிதமாகச் சொர்க்கத்தில் நுழையுங்கள். (திர்மிதீ: 2485)


இந்த நபிமொழியின் அடிப்படையில் நாம் ஏழைகளுக்கும் இயலாதோருக்கும் உணவளித்து அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுச் சொர்க்கத்தில் நுழைவோம்.

===================

கருத்துகள் இல்லை: