திங்கள், 10 ஜனவரி, 2022

தற்காப்புப் பணி செய்வோம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒவ்வொரு மதத்தினரும் தத்தம் மதத்தைப் பாதுகாக்கப் பல்வேறு வழிகளில் பாடுபடுகின்றார்கள். பிரச்சாரத்தின் மூலம் மதத்தைப் பரப்புதல், புத்தகங்களை வெளியிடுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், பிறருக்கு உதவி செய்து மக்களைத் தம் மதத்திற்கு ஈர்த்தல் உள்ளிட்ட எத்தனையோ உத்திகளைக் கையாள்கிறார்கள்.

 

தற்காலத்தில் இந்துக்கள் தம் மதத்தாரைத் தக்க வைத்துக்கொள்ள எல்லாத் தளங்களிலும் தம் மதத்தைச் சார்ந்தவர்களையே நியமிக்க வழிவகை செய்கிறார்கள். நீதித்துறை, காவல்துறை, பத்திரிகைத் துறை, அரசு சார்ந்த, அரசு சாராத துறைகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர்.

 

கிறிஸ்தவர்கள் தம் மதத்தைப் பரப்புவதற்கான எல்லா வழிகளையும் கையாள்கிறார்கள். கல்வித்துறை, மருத்துவத் துறை ஆகியவற்றில் கால்பதித்து, அவற்றின்மூலம் தம் மதத்தைப் பரப்பிவருகின்றார்கள். தம் மதத்தைப் பரப்புவதற்காக ஏராளமான பொருளாதாரத்தைச் செலவு செய்துவருகின்றார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களைக் குறிவைத்து, அவர்களுக்கு உதவிகள் செய்து, “இவற்றையெல்லாம் கர்த்தரின் பெயராலேயே செய்கிறோம்; கர்த்தரே உங்களுக்குக் கொடுக்கிறார் என்று நம்பவைத்து, அவர்களைத் தம் மதத்தின் பக்கம் கவர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

ஆனால் முஸ்லிம்கள் தம் மார்க்கத்தைக் காக்க என்ன செய்ய வேண்டும்? நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் எனும் அழைப்புப் பணி ஒரு பக்கம் இருந்தாலும், எல்லா முஸ்லிம்களும் செய்ய வேண்டிய பாதுகாப்புப் பணி ஒன்று உள்ளது. அது எப்படி இருக்க வேண்டும் என்பதை நபியவர்களே சொல்கிறார்கள். 

 

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை (உளூ) முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இதுதான் (தற்காப்புக்காக) ஆயத்தமாக இருப்பதாகும் என்று கூறினார்கள். (முஸ்லிம்: 421)

 

இந்த நபிமொழி ஊன்றிக் கவனிக்கத்தக்கது. இதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. மனம் விரும்பாத பொழுதுகளிலும் உளூவைப் பூரணமாகச் செய்தல், மஸ்ஜிதை நோக்கி மிகுதியாக நடந்து செல்லல், தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருத்தல் ஆகியவற்றை நபியவர்கள் கூறியுள்ளார்கள். அதுதான் தற்காப்பிற்காக ஆயத்தமாக இருத்தல் என்றும் கூறியுள்ளார்கள்.

 

எதிரிகளிடமிருந்து மக்களைக் காக்க எவ்வாறு ஒரு இராணுவப் படையினர் குதிரைப் படைகளையும் ஆயுதங்களையும் ஆயத்தமாக வைத்திருப்பார்களோ அதுபோல் முஸ்லிம்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு தற்காத்துக்கொள்ள அவர்கள் செய்ய வேண்டிய செயல்கள் மூன்று என்பதே இதில் கூறப்பட்டுள்ள செய்தியாகும்.

 

இம்மூன்றிலும் ஒரு தற்காப்புப் படையினருக்கு வேண்டிய பயிற்சி இருக்கிறது. இதை ஒவ்வொரு முஸ்லிமும் கடைப்பிடித்தால் ஒவ்வொருவருமே தற்காப்புப் படையினராக மாறிவிடலாம். ஆம்! பல்வேறு சிரமங்களைச் சகித்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் பூரணமாக உளூ செய்து பழகியவன் சகிப்புத்தன்மை கொண்டவனாக ஆகிவிடுவான். மஸ்ஜிதுக்கு நீண்ட தூரம் ஒவ்வொரு நாளும் ஐவேளை நடந்து சென்று பழகியவன், நடைப் பயிற்சி பெற்றவனாகத் திகழ்கிறான். ஒரு தொழுகைக்குப்பின் மற்றொரு தொழுகையை எதிர்பார்த்துப் பழகியவன், காத்திருக்கப் பழகிக்கொள்கிறான். இவை அனைத்தும் அவன் எதிரிகளை எதிர்கொள்ளத் தேவையான திறன்களையும் ஆற்றல்களையும் அவனுள் வளர்த்துவிடுகின்றன.

 

போர்க்களத்தில் எதிரிகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகளை ஒரு முஸ்லிம் ஒவ்வொரு நாளும் ஐவேளை செய்கிறான். இதனால் அவன் எதிரிகளை எதிர்கொள்ளத்தக்க வகையில் மனத்துணிவு பெற்றுவிடுகின்றான். இந்தத் துணிவையும் மனத்திட்பத்தையும் வளர்ப்பவையே மேற்கண்ட மூன்று செயல்கள். எனவே நம்முள் ஒவ்வொருவரும் இம்மூன்று செயல்களையும் இடைவிடாமல் செய்துவர வேண்டும்.

 

போருக்குத் தேவையான ஆற்றல்களையும் தேவையான குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக்கொள்வதன்மூலம்  எதிரிகளை அச்சமடையச் செய்யலாம் என்ற கருத்தை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் முன்வைக்கிறான்:

 

அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், இலாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்குச் சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) ஆயத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். இவர்களன்றி (எதிரிகளுள்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம்...) (8: 60)

 

ஒரு தொழுகைக்குப்பின் மற்றொரு தொழுகையை எதிர்பார்த்திருத்தல் என்பது எப்போதும் இறைவனுக்குக் கட்டுப்படத் தயார்நிலையில் இருப்பதைக் குறிக்கிறது. எதிரிகள் எப்போது வருவார்கள் என்று நேரம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அவர்கள் எந்த நேரத்திலும் வரலாம். எனவே எப்போதும் விழிப்புணர்வோடு காத்திருக்க வேண்டும் என்ற பயிற்சி இதில் அடங்கியுள்ளது. ஆக நபியவர்கள் கூறியுள்ள இம்மூன்றையும் நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தால் நாம் தற்காப்புப் படைக்குத் தயாராகிவிட்டோம் என்று பொருள்.

 

எந்த முன்னேற்பாடுமின்றி இல்லங்களில் துயில்கொண்டிருந்தால் எதிரிகள் நம்மை எளிதில் தாக்கிவிட்டுச் சென்றுவிடுவார்கள். எனவே எப்போதும் விழிப்புணர்வோடு இருப்பதற்கான வழிமுறையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத் தந்துள்ளார்கள். அவ்வழிமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டியது நம் கடமையாகும்.

 

இன்றைய முஸ்லிம்களுள் பெரும்பாலோர் இம்மூன்றையும் தவறவிட்டவர்களாகவே இருக்கின்றனர். பிறகெப்படி  நம்மை நாம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்? நாம் அதிகாலையில் துயிலெழுந்து மஸ்ஜிதுகளில் கூட்டாகத் தொழுதுவிட்டு இல்லங்களுக்குத் திரும்புவதே எதிரிகள் நம்மைப் பார்த்து அஞ்சுவதற்கான வழிகளுள் ஒன்றாகும். மாறாக நாம் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதைக் கைவிட்டோம். அதனால் நாம் எதிரிகளைக் கண்டு அஞ்சிக்கொண்டிருக்கிறோம். நாம் மஸ்ஜிதுகளை நோக்கி நடக்க மறந்தோம். இதோ கடற்கரைகளிலும் விளையாட்டுத் திடல்களிலும் பூங்காக்களிலும் நடைப்பயிற்சி (வாக்கிங்) மேற்கொள்கிறோம். அடுத்த தொழுகை எப்போதென்று காத்திருக்க மறந்தோம். எனவே எத்தனையோ தருணங்களில் நாம் எவ்வளவோ நேரம் எங்கெங்கோ காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

 

இஸ்லாமிய மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் நாம் பாதுகாக்க நினைத்தால் முதலில் நாம் எல்லோரும் அதிகாலைத் தொழுகையை மஸ்ஜிதுகளில் கூட்டாகத் தொழுவதைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆம்! ஒருவர் ஐவேளைத் தொழுகையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால் அவரிடம் நேர மேலாண்மை, விழிப்புணர்வு, துணிவு, சகிப்புத்தன்மை, இறையச்சம், நேர்மை, பிறர்மீது அன்புசெலுத்துதல் உள்ளிட்ட எல்லா வகையான நற்குணங்களும் வந்துவிடும். காரணம் ஐவேளைத் தொழுகைக்கு அத்தகைய ஆற்றல் உண்டு. அது அவனை மாற்றிவிடும்.

 

அதிலும் குறிப்பாக அதிகாலை நேரத்தில் ஒருவர் தம் தூக்கத்தைக் கலைத்துவிட்டு, துயிலெழுந்து, இரவெல்லாம் பனிகொட்டிய தண்ணீரில் உடலுறுப்புகளைப் பூரணமாகச் சுத்தம்செய்து, தம்மைப் படைத்த இறைவனைத் தொழுகிறார் என்றால் அவருள் பதிந்துள்ள இறையச்சத்தை யாராவது சந்தேகிக்க முடியுமா? சிரமங்களைச் சகித்துக்கொள்ளும் பேராற்றலை இது வளர்க்கிறது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?

 

 

 

ஒவ்வொரு பருவத்திலும் ஃபஜ்ர் உள்ளிட்ட தொழுகைகளின் நேரங்கள் மாறி மாறி வருகின்றன என்பதை நாம் அறிவோம். ஆண்டு முழுவதும் ஒரு மணி நேரம் கூடுவதும் குறைவதுமாக மாறி மாறி வந்தபோதிலும் அந்த நேரத்தைக் கவனித்து, விழிப்புணர்வோடு இருந்து அந்தந்த நேரத்தில் கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டு   இறைக்கடமையை நிறைவேற்றுகிற ஒருவர் நேர மேலாண்மையில் எவ்வளவு சிறந்து விளங்குவார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

தொழாத ஒருவனிடம் 10 மணிக்கு வாருங்கள்; சந்திக்கலாம் என்று நீங்கள் சொன்னால், அவர் 11 மணிக்குப் பிறகுதான் வருவார். ஆனால் தொழக்கூடிய ஒருவரிடம், “10 மணிக்கு வாருங்கள்; சந்திக்கலாம் என்று கூறினால், அவர் அதேநேரத்திற்குச் சரியாக வருவார். நீங்கள் வேண்டுமானால் சோதித்துப் பார்க்கலாம். இதனால்தான்தொழுபவர் நேர மேலாண்மையைப் பேணுபவர் என்று சொல்கிறேன். அது மட்டுமல்ல, யாருக்கேனும் வாக்குறுதி கொடுத்தால் அதைச் சரியாக நிறைவேற்றுவார். அத்தகைய நற்பண்பையும் அது வளர்க்கிறது.

 

அல்லாஹ் அல்அன்ஃபால் அத்தியாயத்தில், குதிரைகளையும் ஏனைய ஆற்றல்களையும் இயன்ற அளவிற்குத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், அவற்றைப் பார்க்கின்ற எதிரிகளின் உள்ளங்களில் அச்சம் ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றான். அதுபோலவே நாம் ஐவேளைத் தொழுகையை மஸ்ஜிதுகளில் கூட்டாக நிறைவேற்றி வரும்போது, நாம் ஒவ்வொரு தடவையும் கூட்டாகப் போவதையும் வருவதையும் பார்க்கின்ற எதிரிகளின் உள்ளங்களில் தானாக ஒருவித அச்சம்  உருவாகிவிடும். அதுவே நம்மையும் நம் சமுதாயத்தையும் பாதுகாக்க நாம் செய்கின்ற தற்காப்புப் பணியாகும்.

 

இனி வரும் காலங்களிலாவது இந்தப் பேருண்மையைப் புரிந்துகொண்டு ஒவ்வொரு தொழுகையையும் நாம் அனைவரும் மஸ்ஜிதுகளுக்குச் சென்று நிறைவேற்ற முயல்வோம். ஃபஜ்ர் தொழுகையை நான் ஒருபோதும் மஸ்ஜிதில் நிறைவேற்றுவதைக் கைவிட மாட்டேன் என்று உறுதியேற்போம்.  

=======================

கருத்துகள் இல்லை: