சனி, 19 ஜூன், 2021

வேண்டாம் தொடர்பிலா விஷயம்

வேண்டாம் தொடர்பிலா விஷயம் 
அரபி: டாக்டர் அப்துர் ரஹ்மான் அல்அரீஃபீ-இஸ்தம்திஉ பி ஹயாத்திக்க
தமிழில்: டாக்டர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி-வாழ்க்கையை அனுபவி
------------

முஸ்லிமான ஒருவருடைய நற்குணங்களுள் ஒன்று அவருக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது ஆகும். உண்மையும் தூய்மையும் கொண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருவாயிலிருந்து இதை நீ கேட்பது எவ்வளவு அழகானது! ஆம், "ஒருவன் தனக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது நல்லது.''

மக்கள், தமக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் குறுக்கிடுவதன்மூலம் உன்னைக் கவலைப்படுத்துகின்ற தொந்தரவு கொடுக்கின்ற எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்கள் உன்னுடைய கைக்கடிகாரத்தைக் கவனிக்கின்றபோது,  "நீ இதை எவ்வளவுக்கு வாங்கினாய்?'' என்று கேட்டு உன்னைக் கவலைப்படுத்துகிறார்கள்.

"இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று நீ கூறுகிறாய். அதன்பின் அவர்கள், "அன்பளிப்பா? யாரிடமிருந்து?'' என்று கேட்கலாம். "ஒரு நண்பரிடமிருந்து'' என்று நீ கூறுகிறாய்.

"பல்கலைக் கழகத்திலுள்ள உன்னுடைய நண்பரா? அல்லது உன்னுடைய வசிப்பிடத்தில் இருப்பவரா?அல்லது வேறு எங்கிருப்பவர்?'' என்று அவர் தொடரலாம். "ஆம், பல்கலைக்கழகத்தில் உள்ள என்னுடைய நண்பர்'' என்று நீ பதிலளிக்கிறாய். "சரி, ஆனால் என்ன தருணம்?'' என்று அவர் வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்.

"ஆம். பல்கலைக்கழக நாள்களில் ஒரு தருணம்'' என்று நீ பதிலளிக்கிறாய்.  அவர் அதன் பின், "சரி, ஆனால் குறிப்பாக என்ன தருணம்? பட்டமளிப்பா? அல்லது நீ சுற்றுலா சென்றிருந்தபோதா? அல்லது வேறு ஏதாவது தருணமா?'' என்று கேட்கிறார். 

அவர் உன்னிடம் முற்றிலும் மதிப்பற்ற விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கேட்கிறார். அல்லாஹ்வின்மீது ஆணையாக, நான் உன்னிடம் கேட்கிறேன். நீ அவரிடம், "உனக்குத் தொடர்பில்லாத விஷயத்தில் தலையிடாதே'' என்று சத்தமாகக் கூறத் தோன்றுகிறதல்லவா?  அவர் உன்னிடம் சங்கடம் நிறைந்த கேள்விகளைப் பகிரங்கமாகக் கேட்பதன் மூலம் உன்னைத் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளினால் இன்னும் மோசமாக இருக்குமல்லவா?

ஒருமுறை நான் என்னுடைய நண்பர்களுடன் ஒரு கூட்டத்தில் இருந்ததை நினைவுகூர்கிறேன். மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு என்னுடைய நண்பர்களுள் ஒருவருடைய கைப்பேசி ஒலித்தது. 

அவர் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார். அவர் கைப்பேசியில் "ஆம்'' என்று பதிலளித்தார். எதிர்முனையில் அவருடைய மனைவி  திட்டிக்கொண்டிருந்தார். "ஹலோ நீ எங்கிருக்கிறாய், கழுதையே?''  அவருடைய குரல் மிகவும் கணீரென்றிருந்ததால் அவர்களுடைய உரையாடலை நன்றாகக் கேட்க முடிந்தது.  "நான் நன்றாக இருக்கிறேன்; அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பானாக'' என்று அவன் கூறினான். அவன் அவளிடம் அவளுடைய குடும்பத்தாரிடம் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி தந்துவிட்டு எங்களுடன் தங்கிவிட்டதைப்போல காணப்பட்டது. 

அவனுடைய மனைவி உண்மையாகவே கோபமாக இருந்தாள். "அல்லாஹ் உன்னைப் பாதுகாக்கமாட்டானாக;  நான் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிற சமயத்தில் நீ உன்னுடைய நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறாயா?... நீ ஓர் எருமை!'' என்றெல்லாம் அவள் கூறினாள்.
 
"அல்லாஹ் உன்மீது அன்பு காட்டுவானாக;  நான் இஷாவிற்குப் பிறகு உன்னிடம் வருகிறேன்'' என்று கூறினான்.

அவனுடைய பேச்சு அவளுடைய பேச்சுடன் சரியாக ஒத்துப் போகவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அவன் தன்னைத்தானே தர்மசங்கடத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு பேசிக்கொண்டிருந்தான் என்பதை அதன் பிறகு புரிந்துகொண்டேன்.

அவன் தன்னுடைய அழைப்பைப் பேசி முடித்தான்.  நான் அவர்கள் இருப்பதைப் பார்த்து, அவர்களுள் யாராவது அவனிடம், "கைப்பேசியில் யார்? உன்னிடமிருந்து அவர் என்ன வேண்டுகிறார்? அந்த உரையாடலுக்குப் பிறகு உன்னுடைய முகம் ஏன் மாறியது?'' என்று கேட்பார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அல்லாஹ் அவன்மீது கருணை காட்டினான். எவரும் தமக்குத் தொடர்பில்லாத விஷயத்தில் தலையிடவில்லை.

இதேபோன்று, நீ ஒரு நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றால், அவரிடம் அவருடைய நோயைப் பற்றிக்கேள். அவர், "அல்ஹம்து லில்லாஹ், பெரிதாக ஒன்றுமில்லை; சிறிய நோய்தான்'' என்று சந்தேகமாகப் பதிலளிக்கலாம். அதற்கு அவரிடம் நீ, "நான் வருந்துகிறேன்; உங்களுடைய இந்த வாக்கியம் நான் கேட்ட கேள்விக்கு வெளிப்படையான பதில் இல்லையே. உண்மையில் என்ன வியாதி? தயவு செய்து எனக்கு அதைத் தெளிவுபடுத்துங்கள்'' என்றெல்லாம் விவரமான கேள்விகளை விடாப்பிடியாகக் கேட்பதன் மூலம் அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதே. அவரைச் சங்கடப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

முஸ்லிமான ஒருவருடைய நற்குணங்களுள் ஒன்று அவருக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது ஆகும். நான் சொல்ல முனைவது என்னவென்றால், "எனக்கு மூலம் இருக்கிறது'' அல்லது "எனக்கு அந்தரங்க இடத்தில் காயம் இருக்கிறது'' என்று அவர் உன்னிடம் சொல்வதற்காக உண்மையில் நீ காத்துக் கொண்டிருக்கிறாயா?  நீண்ட நேரம் அவர் உன்னிடம் மறைவான பதில் அளித்தால், அவரிடம் விவரங்களைக் கேட்பதற்கு எந்த அவசியமுமில்லை. நோயாளியிடம் அவருடைய நோயைப் பற்றிக் கேள்வி கேட்கக்கூடாது என்று நான் கூறவில்லை. நான் கூறுவது என்னவென்றால் ஒருவர் மற்றவருடைய நோயைப் பற்றி விவரமான கேள்விகளைக் கேட்கக் கூடாது என்றுதான் கூறுகிறேன். 

இதைப் பற்றி மற்றோர் உதாரணம். அதாவது ஒரு மக்கள் கூட்டத்தில் அனைவரின் முன்னால் ஒருவர் ஒரு மாணவனை அழைத்து சத்தமாக, "அஹ்மதே நீ தேர்வாகிவிட்டாயா?'' என்று கேட்கிறார். அஹ்மத் "ஆம்'' என்று கூறுகிறான். "எத்தனை சதவிகிதம்? என்ன தரம்?'' என்று கேட்கிறார்.

அவர் உண்மையாகவே அவனைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால், அவன் தனிமையில் இருக்கும்போது அவர் அவனிடம், "என்ன சதவிகிதம்? ஏன் நீ மறுபார்வைக்கு முறையிடவில்லை? ஏன் நீ இந்தப் பல்கலைக்கழகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை?'' போன்ற விவரங்களைக்  கேட்டிருக்கலாம். பொதுவெளியில் எல்லோரின் முன்னிலையில் கேட்பதற்கு அவசியம் இல்லை. 
அவர் உண்மையாகவே அவனுக்கு உதவி செய்வதற்குத் தயாராக இருந்தால், அவர் அவனைத் தன்னுடன் அழைத்துச்சென்று அவர் கேட்க விரும்பியதைப் பற்றி அவனிடம் கேட்டிருப்பார். ஆனால்  தம்முடைய இழுக்கான கேள்விகளைப் பொது இடத்தில் வெளிப்படுத்துகின்றார். எனவே அது மெய்யான அக்கறை இல்லை!

"முஸ்லிமான ஒருவருடைய நற்குணங்களுள் ஒன்று அவருக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது ஆகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். 

இருப்பினும், கவனமாக இரு. ஒரு விஷயத்தை அதைவிடப் பெரிதாக்கி விட வேண்டாம். ஒரு முறை நான் மதீனாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் பல சொற்பொழிவுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். எனவே நான் ஓர் அன்பான இளைஞன் தன்னுடன் என் இரண்டு மகன்களான அப்துர் ரஹ்மானையும் இப்ராஹீமையும் அழைத்துச் செல்ல ஒத்துக்கொண்டேன். அஸருக்குப் பிறகு அங்கு குர்ஆன் மனனம் செய்யும் அமர்வும் அல்லது கோடைக்கால பொழுதுபோக்கு அமர்வும் நடைபெறுவதால் இஷாவிற்குப் பிறகுதான் அவர்களைத் திரும்ப அழைத்துவந்தான்.

அப்துர் ரஹ்மான் உடைய வயது பத்து. அந்த இளைஞன் உன் தாயின் பெயர் என்ன? உன்னுடைய வீடு எங்கு உள்ளது? உனக்கு எத்தனை சகோதரர்கள்? உங்களுடைய தந்தை உங்களுக்குச் செலவுசெய்ய எவ்வளவு பணம் கொடுப்பார்? போன்று தேவையற்ற கேள்விகளைக் கேட்கலாம் என்று நான் பயந்தேன்.

அதனால் நான் அப்துர் ரஹ்மானிடம் எச்சரித்துக் கூறினேன். அவர் உன்னிடம் தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்டால் அவரிடம், "முஸ்லிமான ஒருவருடைய நற்குணங்களுள் ஒன்று அவருக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது ஆகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் என்று சொல்.  நான் அவனிடம் அந்த நபிமொழியை அவன் மனனம் செய்யும் வரை திரும்பத் திரும்பக் கூறினேன்.

அப்துர் ரஹ்மானும் அவனுடைய சகோதரனும் காரில் அந்த இளைஞனுடன் அமர்ந்திருந்தார்கள். அப்துர் ரஹ்மான் அந்நேரத்தில் மிகவும் பதற்றமாகவும் மரியாதையாகவும் இருந்தான். அந்த இளைஞன் அன்போடு, "அல்லாஹ் உங்களுடைய வாழ்க்கையை நீடிக்கச் செய்வானாக, அப்துர் ரஹ்மானே'' என்று கூறினான். அதற்கு அப்துர் ரஹ்மான் "அல்லாஹ் உங்களுடைய வாழ்க்கையையும் நீடிக்கச் செய்வானாக'' என்று பதிலளித்தான். 

அந்த அப்பாவி இளைஞன் சூழ்நிலையை மகிழ்ச்சியாக்குவதற்காக "இன்று, ஷேக் ஏதாவது சொற்பொழிவு நிகழ்த்துகின்றாரா?'' என்று கேட்டான். அப்போது அப்துர் ரஹ்மான் அந்த நபிமொழியை நினைவூட்ட முயற்சித்தான்; ஆனால் அவனுடைய நினைவில் அது தங்கவில்லை. எனவே அவன் சத்தமாக,  "உங்களுக்குத் தொடர்பில்லாத விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்'' என்று கூறினான்.

 
உடனே அந்த இளைஞன், "நான் அவருடைய சொற்பொழிவில் கலந்துகொண்டு பயனடைய விரும்பினேன்; அதனால்தான் கேட்டேன்'' என்றான். தான் அறிவாளியாகச் செயல்பட முயல்கிறோம் என்று அப்துர் ரஹ்மான் தெரிந்துகொண்டான் என்பதை அறிந்துகொண்ட அந்த இளைஞன், அதே பதிலையே, "நான் என்ன நினைத்தேன் என்றால்...'' என்று மீண்டும் கூறினான். 

ஆனால் மறுபடியும் அப்துர் ரஹ்மான், "இல்லை! உங்களுக்குத் தொடர்பில்லாத விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்!'' என்று கத்தினான். நான் திரும்பி வருகின்ற வரை அவர்கள் அந்த நிலையிலேயே இருந்தார்கள். அப்துர் ரஹ்மான் என்னிடம் அந்த முழுக் கதையையும் பெருமிதமாகக் கூறினான். அதைக் கேட்டு நான் சிரித்துவிட்டு, மறுபடியும் நான் சொன்னதைப் பற்றி அவனுக்கு விளக்கமாகக் கூறினேன்.    
==================

கருத்துகள் இல்லை: