செவ்வாய், 12 ஜனவரி, 2021

இன்பமும் துன்பமும் சமமே

இன்பமும் துன்பமும் சமமே!   
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இரவு பகலைப்போல் ஒன்றன்பின் ஒன்றாக மாறி மாறி வருகின்றன. இது இயற்கையின் அமைப்பு; இறைவனின் நியதி. இந்த இயற்கை அமைப்பை யாராலும் மாற்ற முடியாது. அதாவது எப்போதும் இன்பமே அனுபவிக்குமாறு அல்லது எப்போதும் துன்பமே அனுபவிக்குமாறு செய்ய முடியாது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி இன்பம்-துன்பம் மாறி மாறி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வரவே செய்யும். ஆனால் எதுவும் நீடித்து நிலைத்திருக்காது. இன்று மகிழ்ச்சியாக உள்ளவன் நாளை கவலைகொண்டவனாக இருக்கலாம்; இன்று கவலையாக உள்ளவன் நாளை மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். 


மகிழ்ச்சி வருகின்றபோது அதை அனுபவிக்கின்ற மனிதன், துன்பம் வருகின்றபோது அதை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தத்தளிக்கிறான்; திண்டாடுகிறான்; சோர்ந்து போகிறான்; வாழ்க்கையே முடிந்து போனதைப்போல் உணர்கின்றான். நெருக்கடி வந்து நெருக்குகின்றபோது நெக்குருகிப் போகின்றான். துணிவை இழந்து கோழையாகிவிடுகிறான்; நம்பிக்கையை இழந்து அவநம்பிக்கைக்குள்ளாகிறான். சிலவேளை தன்னையே மாய்த்துக்கொள்ளும் கெடுமுடிவெடுக்கிறான். இதுவே இன்று நாம் காணும் மிகுந்துவிட்ட தற்கொலை மரணங்களுக்கான காரணம்.


சாதாரண மனநிலைகொண்டவர்கள், நடுநிலையான மனநிலை கொண்டவர்கள், உறுதியான திடநம்பிக்கை கொண்டவர்கள் ஆகிய மூவகை மனிதர்கள் இருக்கின்றார்கள். சாதாரண மனநிலை உடையோர்தாம் சின்னச் சின்னத் துன்பங்களையும் சங்கடங்களையும் மலைபோல் கருதி, அதிலிருந்து மீளவே முடியாது என்றெண்ணித் தம்மையே மாய்த்துக் கொள்கின்றனர். நடுநிலையான மனநிலையுடையோர் இன்பம் வரும்போது அனுபவிக்கவும் துன்பம் வரும்போது சோர்ந்துபோகவும் செய்வார்கள். பின்னர் மீண்டும் இன்பம் வரும்போது அத்துன்பத்திலிருந்து மீண்டு வருவார்கள். 


ஆனால் இறைவன்மீது திடநம்பிக்கை உடையவர்களை இன்பமோ துன்பமோ இலாபமோ நட்டமோ வெற்றியோ தோல்வியோ எதுவும் அவர்களின் உள்ளத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அவர்களுக்கு இரண்டும் ஒன்றாகவே தோன்றும். ஏனென்றால் அவர்கள் தம் இறைவன்மீது திடநம்பிக்கை கொண்டவர்கள். துன்பத்தைக் கொடுத்த இறைவன் அதை நீக்கவும் ஆற்றலுடையவன் என்பதைத் தெளிவாக அறிந்தவர்கள். 


“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்பதைத் திடமாக நம்பியிருக்கின்றார்கள். இரண்டுமே இறைவன் புறத்திலிருந்துதான் வரமுடியும் என்பதைத் தெளிவாக அறிந்திருக்கிறார்கள். எனவே இன்பத்தைக் கொடுத்தவனே துன்பத்தையும் கொடுத்தான். அதனால் இன்பத்தை மகிழ்ச்சியோடு அனுபவித்ததைப்போலவே துன்பத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வதுதான் அவன் அல்லாஹ்வின் அடிமை என்பதற்கான அடையாளமாகும். ஓர் அடிமைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று அவனுடைய உரிமையாளனுக்கு நன்றாகவே தெரியும் என்றெல்லாம் விளங்கியவர்கள். ஆகவே இரண்டு நிலைகளிலும் சமமாகவே காட்சியளிப்பார்கள் திடநம்பிக்கையுடையோர்.

 இன்பம் வரும்போது மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்க மாட்டார்கள்; துன்பம் வாட்டும்போது கூனிக் குறுகி, துவண்டுபோய் மூலையில் உட்கார்ந்துவிடவும் மாட்டார்கள்.
(நபியே!) அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீங்கிழைத்தால், அதனை நீக்குபவர் அவனையன்றி வேறெவருமில்லை. உங்களுக்கு யாதொரு நன்மையை அவன் கொடுத்தாலும் (அதைத் தடுத்துவிடக்கூடியவன் எவனும் இல்லை.) அவன் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். (6: 17) 


அல்லாஹ் கூறியுள்ள இந்த இறைவசனத்தின்மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். எனவே எந்தத் துன்பமும் அவர்களை நிலைகுலையச் செய்துவிட முடியாது. அதேபோல் எந்த இன்பமும் அவர்களைத் துள்ளிக் குதிக்கச் செய்துவிட முடியாது. ஏனெனில், “திண்ணமாகத் துன்பத்திற்குப்பின் இன்பம்; திண்ணமாகத் துன்பத்திற்குப் பின் இன்பம்” (94: 5-6) என்று அல்லாஹ் கூறியுள்ளதை நினைவில் கொண்டவர்கள் அவர்கள். 

 
இறைநேசர் அப்துல் காதிர் ஜீலானீ ரஹிமஹுல்லாஹ் மிகப்பெரிய வணிகர் ஆவார். இறைதியானத்திலும் இறைவழிபாட்டிலும் மிகுதியாக ஈடுபட்ட அதேநேரத்தில் வணிகத்திற்கும் சிறிதளவு நேரம் ஒதுக்கிச் சிறப்பாக அதைக் கவனித்து வந்தார். அப்போது கப்பலில் சரக்குகளை ஏற்றுவதும் உரியவர்களுக்கு அனுப்புவதுமான ஏற்றுமதி இறக்குமதியும் செய்துவந்தார். அப்போது ஒரு தடவை இவர் ஏற்றி அனுப்பிய கப்பல் வணிகச் சரக்குகளுடன் கடலில் மூழ்கிவிட்டதாக இவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அச்செய்தி கேட்டு எந்தக் கலக்கமும் பதற்றமுமின்றி அமைதியாக இருந்தார். சற்றுநேரம் கழித்து, “மூழ்கியது உங்களது கப்பல் இல்லை. உங்கள் கப்பல் பாதுகாப்பாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. அச்செய்தி கேட்ட அவர் எந்த ஆரவாரமோ குதூகலமோ இன்றி அமைதியாகக் காணப்பட்டார். இரண்டு செய்திகள் இரண்டு விதமாகக் கூறப்பட்டபோதும் தம் மனத்தில் எவ்வித மாற்றமுமின்றி இயல்பாக, நடுநிலையாக இருந்ததைக் கண்டு மக்கள் வியப்புற்றனர். 


“உங்கள் கப்பல் மூழ்கிவிட்டது என்று கூறப்பட்டபோதும் அமைதியாக இருந்தீர்; பாதுகாப்பாக உள்ளது என்று கூறப்பட்டபோதும் அமைதியாக இருந்தீரே? அது எப்படி?” என்று மக்கள் வினவினார்கள். “அது எவ்வாறெனில், அப்பொருளின் மதிப்பு என் உள்ளத்திற்குள் சென்றுவிடாமல் என் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி வைத்துள்ளேன்” என்றார்களாம். 


அதாவது உலகில் நடைபெறும் மாற்றங்களுக்கேற்ப நம் உள்ளத்தை மாற்றிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீதான வலுவான நம்பிக்கையால் நம் உள்ளத்தைத் திடமாக வைத்துக்கொண்டால் எந்தத் துன்பமோ இன்பமோ நம் உள்ளத்தில் எவ்வித மாற்றத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அவ்வாறு உள்ளத்தைத் திடமாக வைத்துக்கொண்டால் நாம் பல்வேறு தோல்விகளையும் துன்பங்களையும் மிக எளிதாகக் கடந்து சென்றுவிடலாம். 


இன்றைய இளைஞர்கள் சின்னச் சின்னச் சங்கடங்களையும் தோல்விகளையும் சகித்துக்கொள்ள முடியாமல் தம்மையே மாய்த்துக்கொள்ளும் பரிதாப நிலையைக் காண முடிகிறது. அதேநேரத்தில் மகிழ்ச்சியான தருணங்களில் அதை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியாமல் கண்மூடித்தனமாகக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் கண்மூடித்தனமான கொண்டாட்டங்கள் இறுதியில் ஏதாவது விபத்தில் முடிகின்றன.

 
நண்பர் ஒருவருக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமணக் கொண்டாட்டம், புத்தாண்டுக் கொண்டாட்டம், காதலர் தினக் கொண்டாட்டம், நண்பர்கள் தினக் கொண்டாட்டம் முதலான கொண்டாட்டங்களில் கண்மூடித்தனமாக ஈடுபடுகின்றார்கள். திருமணக் கொண்டாட்டத்தில், நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி, அந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடுகிறார்கள். கேக்கை வெட்டி, அதன்மீதுள்ள கிரீமை மாப்பிள்ளையின் முகத்தில் அப்பி விளையாடுகிறார்கள்; கேக் துண்டுகளை மாப்பிள்ளைமீது வீசுகின்றார்கள்; வண்ண வண்ண அலங்காரத் துகள்களை அவன்மீது தெறிக்க விடுகின்றார்கள்; ஒரே கூச்சலும் கூப்பாடுமாய், பார்ப்போரை ‘சீ’ என முகம் சுழிக்கச் செய்கிறார்கள். சில இடங்களில் அதுவே தள்ளுமுள்ளு ஏற்படவும் கைகலப்பு ஏற்படவும் வழிவகுத்துவிடுகிறது. இப்படித்தான் அவர்களின் கொண்டாட்டங்கள் இருக்கின்றன. 


புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு அதில் என்ன இருக்கிறது? யாராவது ஏதாவது சாதனை படைத்துவிட்டாரா? புத்தாண்டு அன்று வழமைக்கு மாறாக 25 மணி நேரம் வருகிறதா? ஒன்றும் இல்லாததற்கு ஒரு கொண்டாட்டம் தேவையா? ஆனால் அந்தக் கொண்டாட்டத்தை மற்றவர்கள் பார்த்து மகிழுமாறு செய்யலாமே? அதுவும் இல்லை. கண்மூடித்தனமான கொண்டாட்டம். பைக்கில் அசுர வேகத்தில் பாய்வது என்ன வகை கொண்டாட்டம்? சாலையில் செல்வோருக்கு இடைஞ்சல் செய்வது என்ன வகை கொண்டாட்டம்? கூச்சலும் கூப்பாடும் போடுவது என்ன வகை கொண்டாட்டம்? அளவுக்கு மீறி மது அருந்திவிட்டு, சாலையில் அலம்பல் செய்வதும் வாகனங்களைக் கொண்டு மோதுவதும் என்ன வகை கொண்டாட்டம்? இவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் யாருக்கு என்ன இலாபம்? வணிகர்களுக்கு வேண்டுமானால் இலாபம் இருக்கலாம். மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. 

  
தறிகெட்ட இளைஞர்களின் கண்மூடித்தனமான கொண்டாட்டங்களால் எதிர்பாராவிதமாக உண்டாகிற விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு, அதனால் அவர்களின் பெற்றோர் அடையும் வேதனைதான் மிச்சம். அவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தால் யாருக்கும் எப்பயனும் இல்லை. ஆக இதுபோன்றே இளைஞர்களின் ஒவ்வொரு கொண்டாட்டமும் சோகத்திலும் துக்கத்திலும் முடிகிறது. மகிழ்ச்சியை எவ்வாறு பகிர்ந்துகொள்வது, எவ்வாறு வெளிப்படுத்துவது என்றெல்லாம் அவர்களுக்கு வழிகாட்ட யாருமில்லை. இத்தகைய இளைஞர்களுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் விழிபிதுங்கி மூலையில் அமர்ந்துவிடுவார்கள். ஆக இன்பமும் துன்பமும் அவர்களின் உள்ளத்தில் சொல்லமுடியாத பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன.


ஏழைகளைச் சந்தித்து அவர்களின் பசிதீர உதவுதல், அநாதை இல்லங்களுக்குச் சென்று அங்குள்ள பிள்ளைகளுக்கு உணவளித்தல், சாலையோர முதியவர்களுக்கு உதவுதல், பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுத்தல், ஆடையற்றோருக்கு ஆடை வாங்கிக் கொடுத்தல், மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல், புத்தாண்டை முன்னிட்டு அன்னதானம் செய்தல், இரத்த தான முகாம் நடத்துதல், ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவுதல் உள்ளிட்ட எத்தனையெத்தனையோ நல்லறங்கள் செய்வதற்கான வழிகள் இருந்தும் அவற்றையெல்லாம் பெரும்பாலோர் செய்வதில்லை. ஏனென்றால் அத்தகைய நல்லற வழிகளை ஊடகங்கள் அவ்வளவாகக் காட்டுவதில்லை. 

   
மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்த வேண்டும், எது மகிழ்ச்சி என்று தெரியவில்லை. பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கும் விதத்திலும் பலவீனமான இதயமுடையோர் பயந்துபோகிற விதத்திலும்தான் அவர்களின் கொண்டாட்டங்கள் உள்ளன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் திரைப்படக் காட்சிகள் என்றால் மிகையில்லை. அவைதாம் அவர்களின் முன்மாதிரி. அதில் காணும் காட்சிகள் அவர்களின் மனதுக்குள் ஊடுருவிவிட்டதால், அவற்றை அப்படியே அவர்கள் செய்து காட்டுகிறார்கள்.

 
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்/ துன்பம் உறுதல் இலன். (629) “இன்பம் வரும்போது மகிழ்ச்சியால் கூத்தாடாத ஒருவன் தனக்கு வரும் துன்பத்தைப் பொருட்படுத்த மாட்டான்” என்று தமிழ்ப் புலவர் கூறுகிறார். 

 
ஆக இன்பம் வந்தால் ஆடுவதும் இல்லை; துன்பம் வந்தால் சோர்ந்து விடுவதும் இல்லை. இரண்டும் வாழ்க்கையின் நியதிகள் என்ற இயல்பு நிலைக்கு வந்துவிடுகின்றான் சமநிலை மனதுடைய மனிதன். அத்தகையவன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அனுபவித்து வாழ்கிறான். எனவே நாமும் இரண்டையும் சமமாகவே கருதி இரு நிலைகளிலும் எல்லை மீறாமல் மனநிலை மாறாமல் வாழப் பழகுவோம். 


-மனாருல் ஹுதா ஜனவரி: 2021
====================

கருத்துகள் இல்லை: