புதன், 27 மே, 2020

மாபெரும் சேவையாளர் மறைந்தார்




----------------------------------------------
அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் ரஹ்மானி ஹழ்ரத் அவர்கள் இன்று (27 05 2020 ) அதிகாலை நான்கு மணிக்கு இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டு மறுமை வாழ்வை நோக்கி மீளாப்பயணம் மேற்கொண்டார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.)

ஹழ்ரத் அவர்களின் மார்க்கச் சேவை அனைவரும் அறிந்ததே. சென்னை மண்ணடியில் அமைந்துள்ள ரியாழுள் ஹுதா மத்ரஸா மூலம் நூற்றுக்கணக்கான ஹாபிழ்களை உருவாக்கிய பெருமை அவர்களையே சாரும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மக்தப் பாடத்திட்டத்தில் உள்ள ரவ்லாத்துல் ஜன்னாத் எனும் ஐந்து நூல்கள் ஹழ்ரத் அவர்களின் முயற்சியில் உருவானதாகும். அதை இங்லீஷ் மீடியம் உள்ள பள்ளிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தில் கொண்டுவரவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அதை மொழியாக்கம் செய்யும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். ஈராண்டுகளாகத் தொடர் முயற்சி செய்து இந்த ரமழானில்தான் முடித்தேன். மிகச் சீக்கிரமாகவே அது பாடத்திட்டத்தில் வரவேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். அதற்குள் அவர் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார் எனும் பேரிடியான செய்தியைச் சீரணிக்க முடியவில்லை.

அதற்கு முன்பாக புலூகுஸ் ஸஆதா எனும் அரபி நூலைத் தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளேன். அதுவும் மிக விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன். இன் ஷாஅல்லாஹ்.

எல்லோருடனும் மிக அன்பாகப் பழகக்கூடிய அன்பாளர்; பண்பாளர். எல்லா ஆலிம்களாலும் மதிக்கப்படக்கூடிய மாண்பாளர். இன்று நம்மைவிட்டுப் பிரிந்துள்ளார்.
நாம் அனைவரும் அவரின் மறுமை வாழ்வு ஜன்னத்துல் பிர்தௌசில் அமைய துஆ செய்வோம்.   
அல்லாஹ் அவர்தம் சேவைகளையும் நல்லறங்களையும் ஏற்றுக்கொள்வானாக.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
27 05 2020  03 10 1441





கருத்துகள் இல்லை: