-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
ஷரீஅத்தில் ஒரு விஷயம் அனுமதிக்கப்பட்டிருக்க, அதைச் செயல்படுத்தாமல் தங்களுக்கிடையே வேரூன்றியிருக்கின்ற பழக்க வழக்கங்களையும் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளையும் பின்பற்றுவதற்கு முன்னுரிமை வழங்குகின்றார்கள். இதுதான் இன்றைய பெரும்பாலான மக்களின் நிலைப்பாடு. இதற்கான காரணம் இஸ்லாமிய மக்கள் ஷரீஅத்திற்குள் இன்னும் முழுமையாக நுழையாததே ஆகும்.
சிலர் குறைபாடுள்ள பெண்பிள்ளைகளைத் திருமணம் செய்துகொடுத்து விடுகின்றார்கள். திருமணம் செய்கின்றபோது அதைச் சொல்லாமல் மறைத்துவிடுகின்றார்கள். “ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு திருமணத்தை முடி” என்ற தவறான பழமொழியைப் பின்பற்றுபவர்கள் அதிகம். சிலர் குறைபாடுள்ள ஆண்களுக்குத் திருமணம் செய்துவைத்து விடுகின்றார்கள். இத்தகைய வாழ்க்கைக்குள் மாட்டிக்கொண்ட ஆண் அல்லது பெண் தன் திருமணப் பந்தத்திலிருந்து விலகி அவ்வளவு எளிதாக மற்றொரு திருமணத்தைச் செய்துகொள்ள முடிவதில்லை. ஏனென்றால் இரண்டாம் திருமணம் அவ்வளவு எளிதானது கிடையாது. நடைமுறைச் சிக்கல்கள் நிறையவே உள்ளன. இதனால் நிறைய ஆண்களும் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்மை அல்லது பெண்மைக் குறைபாடு உள்ளவர்கள் தம் குறையை உணர்ந்து விட்டுக்கொடுத்து மற்றொரு திருமணம் செய்துகொள்வதற்கு வழிவிடுவதில்லை. இது ஒருபுறம். மற்றொரு புறத்தில், அத்தகைய பெண்கள் இரண்டாம் திருமணத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டாலும், அந்த ஆணுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட எந்தப் பெண்ணும் முன்வருவதில்லை.
நண்பர் ஒருவர் நற்பண்புள்ள தொழுகையாளி; நல்ல வசதியுடையவர். அவரது மனைவிக்குத் தாம்பத்திய உறவில் விருப்பம் இல்லை. அந்தப் பெண், தன்னை தலாக் விட்டுவிடாமல், வேறொரு பெண்ணைத் தாங்கள் மணமுடித்துக்கொள்ளுங்கள் என்று கூறி, அனுமதிக் கடிதமும் எழுதிக்கொடுத்துவிட்டார். அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு ஈராண்டுகளுக்கு மேலாக அவர் பெண் தேடி வருகிறார். யாரும் முன்வரவில்லை. ஏற்கெனவே மனைவி உள்ளவருக்கு எப்படிப் பெண் கொடுக்க முடியும் என்று எல்லோரும் பின்வாங்குகிறார்கள். முதல் மனைவிக்குரிய வாழ்வாதாரத்தையும் இனி வரக்கூடியவளுக்குச் செலவழிக்கத் தேவையான பொருளாதாரத்தையும் பெற்றிருந்தும், சமுதாயம் முதல் மனைவி குறித்த கேள்வியையே கேட்டுக்கொண்டிருக்கிறது. தக்க காரணத்தைக் கூறிய பின்னரும் தள்ளியே நிற்கிறது. ஷரீஅத்தில் அனுமதி இருந்தும் சமூகத்தில் அனுமதி இல்லை என்பதைப்போல்தான் தெரிகிறது.
நபியவர்களின் மனைவி சவ்தா பின்த் ஸம்ஆ (ரளி) அவர்கள், மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். தம்மை நபியவர்கள் விவாகரத்துச் செய்துவிடுவார்களோ என்று சவ்தா அம்மையார் பயந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குரிய நாளை நான் ஆயிஷாவுக்குக் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறினார். மற்றொரு தகவலின்படி, “என்னை விவாகரத்துச் செய்ய வேண்டாம். நான் உங்கள் மனைவியாக இருந்தால் அதுவே எனக்குப் போதுமானதாகும். எனக்குரிய நாளை நான் ஆயிஷாவுக்குக் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறினார். நபியவர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். அப்போதுதான் இவ்வசனம் இறங்கியது: “தன் கணவரிடமிருந்து பிணக்கை அல்லது புறக்கணித்தலை ஒரு பெண் அஞ்சுவாளாயின், அவ்விருவரும் தங்களுக்கிடையில் சமாதானம் செய்துகொள்வது அவர்கள்மீது குற்றமாகாது; சமாதானமே மிகச் சிறந்ததாகும்...” (4: 128)
அதாவது கணவர்மூலம் தனக்குக் கிடைக்கக்கூடிய சிலவற்றை விட்டுக்கொடுத்து, ‘மனைவி’ என்ற மரியாதையைத் தக்கவைத்துக்கொள்வதுதான் சமாதானமாகும். இத்தகைய விட்டுக்கொடுத்தல்கள் பெண்களிடையே மிக அரிதாகவே காணப்படுகிறது. முதல் மனைவியின் இல்லற விருப்பமின்மை, குழந்தையின்மை, தீராநோய் உள்ளிட்ட காரணங்களால் இரண்டாம் திருமணம் செய்ய விரும்புகின்ற ஆண்களை, “நீ உன் முதல் மனைவியைத் தலாக் விட்டுவிட்டு வா. பிறகு பார்க்கலாம்” எனும் தோரணையில் பேசுவது நியாயமா? அதுதான் நபிவழியா?
பெண்களைப் பொறுத்த வரை, உடல்ரீதியாக மிகவும் பலவீனமானவர்கள். குறிப்பிட்ட வயதோடு தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாமல் போய்விடும். ஆனால் சில பெண்களுக்கு அது மிக விரைவிலேயே ஏற்பட வாய்ப்புண்டு. அத்தகைய தருணத்தில் அந்தப் பெண்ணை மணமுடித்த ஆண் பாதிக்கப்படுகின்றான்.
அவ்விருவருக்கும் பிறந்த குழந்தைகள்
இருப்பார்கள். அவர்களின் நலனைப் பொருட்படுத்தாமல் உடனடியாக அவளைத் தலாக் விட்டுவிட
முடியாது. அதே நேரத்தில் அவன் தன் வாழ்க்கையையும் இழக்க முடியாது. இத்தகைய
இக்கட்டான தருணத்தில்தான் இஸ்லாம் ஓர் அழகிய வழியைச் சொல்கிறது. அதாவது முதல்
மனைவியை வைத்துக்கொண்டே மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்குகிறது.
இந்த அனுமதியை வைத்துக்கொண்டு ஷரீஅத் முறைப்படி மற்றொரு திருமணம் செய்து கொண்டு வாழ எண்ணுகின்ற ஆண்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் இல்லை. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற பிற சமுதாயக் கலாச்சாரத்தையும் கொள்கையையும் பின்பற்றுகிற சமுதாயமாக நம் முஸ்லிம் சமுதாயம் மாறிப்போய்விட்டது. அதனால் இங்கு ஷரீஅத் முறைப்படியான அனுமதி இருந்தும் அதனைக் கடைப்பிடித்து வாழ்வதற்கான வழியுமில்லை; சூழ்நிலையும் இல்லை.
இந்த அனுமதியை வைத்துக்கொண்டு ஷரீஅத் முறைப்படி மற்றொரு திருமணம் செய்து கொண்டு வாழ எண்ணுகின்ற ஆண்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் இல்லை. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற பிற சமுதாயக் கலாச்சாரத்தையும் கொள்கையையும் பின்பற்றுகிற சமுதாயமாக நம் முஸ்லிம் சமுதாயம் மாறிப்போய்விட்டது. அதனால் இங்கு ஷரீஅத் முறைப்படியான அனுமதி இருந்தும் அதனைக் கடைப்பிடித்து வாழ்வதற்கான வழியுமில்லை; சூழ்நிலையும் இல்லை.
“அப்படியென்றால் நான் பொய் சொல்லித்தான் திருமணம் செய்ய வேண்டுமா? அல்லது முதல் மனைவியைத் தலாக் விட்டுவிட்டு, அவளை நிர்க்கதியான நிலைக்குத் தள்ளிவிட்டுத்தான் நான் மற்றொரு பெண்ணை மணக்க வேண்டுமா? இதற்குத் தீர்வே இல்லையா?” என்று கேட்கிறார் நண்பர். என்னிடம் பதில் இல்லை.
நீண்ட காலம் ஒருவருக்கொருவர் இணைபிரியாமல் அன்போடு வாழ்ந்து வருகின்ற தம்பதிகள். அவர்களுக்கு நீண்ட காலமாகியும் பிள்ளை இல்லை. தனக்கொரு வாரிசு வேண்டும் என்றெண்ணி, முதல் மனைவியின் இசைவோடு மற்றொரு பெண்ணை மணந்துகொள்ள முடிவு செய்கிறார். பெண் தேடுகிறார். அவரும் அதே பிரச்சனையைத்தான் எதிர்கொள்கிறார். “முதலில் ஒருத்தி இருக்கும்போது இரண்டாம் தாரமாக எனது மகளைத் தரமாட்டேன்” என்று பெற்றோரும், “இரண்டாம் தாரமாக நான் வாழ்க்கைப்பட மாட்டேன்” என்று பெண்களும் சொல்லும் நிலைதான் ஏற்பட்டது. நீண்ட காலம் தம்மோடு வாழ்ந்தவளைப் பிரித்துவிட்டுத்தான் அவர் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமா? சமுதாயமே சிந்திக்கட்டும்.
இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக இரண்டாம் திருமணம் செய்ய முற்படும் ஆண்களுக்குத் தோல்விதான். இதனை முன்னிட்டே நம் சமுதாயத்தில் தலாக் பரவியுள்ளது என்றால் அது மிகையன்று. திருமணம் மட்டுமல்ல, இதுபோன்ற பல்வேறு விஷயங்களில் ஷரீஅத்திற்கு இரண்டாம் இடம்தான். இந்தச் சமுதாயம் பழக்க வழக்கங்களுக்கும் பிற சமுதாயக் கொள்கைகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. சமுதாயம் பழிக்குமோ, கேலி பேசுமோ என்பதை எண்ணி அஞ்சுகிறார்களே தவிர, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அனுமதித்ததை நாம் ஏன் செயல்படுத்தக் கூடாது என்ற உணர்வு எழவில்லை.
ஐம்பது வயதான ஒருவரின் மனைவி இறந்துவிட்டாள். அவர் இரண்டாம் திருமணம் செய்ய முற்பட்டார். அவ்வாறு அவர் முயற்சி செய்தபோது அவருடைய பிள்ளைகளே அதைத் தடுக்கின்றார்கள். “பேரன், பேத்தி எடுத்தாச்சு. இந்த வயசுல கல்யாணம் தேவையா?” என்று பிள்ளைகளும் உறவினர்களும் அசிங்கமாகப் பேசுகிற நிலைதான் நீடிக்கிறது. தந்தை இறந்துவிட்டால் அதில் குறிப்பிட்ட ஒரு பங்கு புதிதாக வருபவளுக்குச் சென்றுவிடுமே என்று அஞ்சுவதால்தான் தந்தையின் திருமணத்தைப் பிள்ளைகள் தடுக்கின்றார்கள். ஐம்பது வயதில் மனைவியை இழந்த அவர், சமுதாயத்தின் பழிச் சொல்லுக்கு அஞ்சி, பிள்ளைகளின் மிரட்டல்களுக்குப் அடங்கி, இருபது முதல் முப்பது வருடங்கள் தனிக்கட்டையாகவே வாழவேண்டும். அதுதான் இச்சமுதாயத்தின் இன்றைய நிலை. விதிவிலக்காக நல்ல பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். தம் தந்தையை நன்றாகக் கவனித்துக்கொள்ள ஒரு பெண் துணை தேவை என்பதை உணர்ந்த பிள்ளைகள் அவர்களே முன்னின்று தம் தந்தைக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். இது அரிதிலும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வாகும்.
அதுபோலவே ஒரு பெண்ணின் கணவர் மிகச் சொற்ப வயதிலேயே இறந்துவிட்டார். அப்பெண்ணுக்கு முப்பது வயதுதான். இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவள் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்றால் அதற்கான வழி மிக இறுக்கமாகவும் நெருக்கடியாகவுமே காணப்படுகிறது. முதல் திருமணம் செய்யவே நிறையச் செலவு செய்ய வேண்டியுள்ளது. இரண்டாம் திருமணம் என்றால் அதற்கான எதிர்பார்ப்பு மிகுதியாகத்தான் உள்ளது.
சிலர், “பெண்ணை மட்டும்
அனுப்புங்கள். பிள்ளைகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என்கிறார்கள். அதனால் பிள்ளைகளைப் பிரிந்து ஒரு திருமணம்
தேவையா என்ற எண்ணத்திலேயே மறுமணம் செய்துகொள்ளாமல் தம் வாழ்க்கையை வெறுமனே
கழித்துவிடுகின்றார்கள் கைம்பெண்கள் பலர்.
ஆக, நம் சமுதாயத்தில் நடைமுறைப் பழக்க வழக்கங்களுக்கும் பிற சமுதாயப் பழக்க வழக்கங்களுக்கும்தான் முன்னுரிமை உள்ளதே தவிர, ஷரீஅத்திற்கு இரண்டாம் இடம்தான். இத்தகைய நிலை எப்போது மாறும்?
“இறைநம்பிக்கை
கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்” (2: 208) எனும் இறைவனின் வாக்கிற்கேற்ப நாம் அனைவரும் இஸ்லாமிய
மார்க்கத்தினுள் முழுமையாக நுழைய வேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அனுமதித்த
செயல்களை நடைமுறைப்படுத்துவதில் யாருடைய பழிச் சொல்லுக்கும் அஞ்ச மாட்டோம் என்ற
முடிவுக்கு வர வேண்டும். அப்போதுதான் இவைபோன்ற சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு
கிடைக்கும்.
======================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக