-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
ஒவ்வோராண்டும் ஜூன் 28ஆம் நாள் உலக ஏழைகள் தினம் மேற்கொள்ளப்படுகிறது. ஏழைகளின் நலன் பேண வேண்டும்; அவர்களை நேசிக்க வேண்டும்; அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே அந்நாள் நினைவுகூரப்படுவதற்கான நோக்கம். ஏழைகளை நேசிப்பது குறித்து இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்திகள் ஏராளம்.
ஏழைகளின் சிறப்பையும் மேன்மையையும் முதலில் அறிந்துகொண்டால்தான் அவர்களைப் பற்றிய நமது பார்வை மாறும். ஏழைகளை இழிவாகவும் கேவலமாகவும் நோக்குவது பெரும்பாலான செல்வர்களின் இயல்பாகவே உள்ளது. ஆனால் அவர்களின் மேன்மை குறித்து அறிந்தவர்கள் அவ்வாறு கருதுவதில்லை. ஏழைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்திகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
"சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின்மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறினால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக ஹாரிஸா பின் வஹ்ப் அல்ஃகுஸாஈ (ரளி) அறிவிக்கின்றார். (நூல்: புகாரீ: 4918)
மக்களின் பார்வையில் பலவீனமானவர்களும் ஏழைகளும்தாம் சொர்க்கவாசிகள் என்பதிலிருந்து அவர்களின் மேன்மையைப் புரிந்துகொள்ளலாம். அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணி, ஐவேளை தொழுது, அவனிடமே தம் தேவைகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்ற கொள்கையோடு வாழ்பவர்கள். பிறரிடம் கையேந்தத் துணிய மாட்டார்கள். ஏழ்மையையும் வறுமையையும் பிறரிடம் முறையிடாமல் இறையிடமே முறையிட்டு, சோகத்தை மறைத்துக்கொண்டு வாழ்பவர்கள். அவர்கள்தாம் ஏழைகள்; அவர்கள்தாம் பலவீனர்கள்.
ஒரு தடவை, ஒரு (செல்)வர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். தோழர்கள், "இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களுள் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். தோழர்கள், "இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும்விட) இந்த ஏழையே மேலானவர்'' எனக் கூறினார்கள். (நூல்: புகாரீ: 5091)
வசதியானவர்கள், செல்வர்கள், பணக்காரர்கள் இப்பூமி முழுவதும் நிரம்பி இருப்பதைவிட ஓர் ஏழை சிறந்தவர் என்றால், ஏழைகளின் மதிப்பையும் கண்ணியத்தையும் எந்த அளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) உயர்த்திப் பிடிக்கின்றார்கள் பாருங்கள். நாம் கேவலமாகக் கருதும் ஏழைகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பார்வையில் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை உற்று நோக்க வேண்டும். அவர்களை நாம் நேசிக்க வேண்டும்.
ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! என்னை ஏழையாக வாழச் செய்வாயாக. ஏழையாக மரணிக்கச் செய்வாயாக. மறுமை நாளில் ஏழைகளின் கூட்டத்திலேயே என்னை எழுப்புவாயாக'' என்று பிரார்த்தனை செய்தார்கள். அப்போது அவர்களின் அருகிலிருந்த ஆயிஷா (ரளி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏன் (இவ்வாறு பிரார்த்தனை செய்தீர்கள்)?'' என்று வினவினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஏழைகள், செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்னரே சொர்க்கத்தினுள் நுழைந்துவிடுவார்கள். ஆயிஷா! ஏழைக்குப் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் கொடுக்காமல் திருப்பி அனுப்பாதே. ஆயிஷா! ஏழைகளை நேசிப்பாயாக. உனக்கு அருகில் அவர்களுக்கு இடமளிப்பாயாக. அவ்வாறாயின் மறுமை நாளில் அல்லாஹ் தனக்கு அருகில் உனக்கு இடமளிப்பான்'' என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2275)
ஆக ஏழையாக இருக்க நபி (ஸல்) அவர்கள் விரும்பியது, செல்வர்களைவிட ஏழைகள் நாற்பதாண்டுகள் முன்னரே சொர்க்கத்தினுள் நுழைந்துவிடுவார்கள் என்பதுதான். சொர்க்கத்தினுள் நுழைவதுதான் ஒவ்வொரு முஸ்லிமின் உயர் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பதை இதனுள் நபியவர்கள் உள்ளடக்கியுள்ளார்கள். ஏழைகளை நேசித்தல், அவர்களோடு நெருக்கமாக இருத்தல், தேவைப்பட்டால் அவர்களுக்குப் பொருளாதார உதவி செய்தல் ஆகிய நற்செயல்களால் ஒருவர் அல்லாஹ்வின் உவப்பையும் அல்லாஹ்வின் தூதரின் அன்பையும் பெற முடியும். அதன் காரணமாகச் சொர்க்கத்தினுள் நுழைய முடியும் என்பதை அறிகின்றோம். "ஏழை முஸ்லிம்கள் தம்மிலுள்ள செல்வர்களைவிட அரை நாள் முன்னரே சொர்க்கத்தினுள் நுழைந்துவிடுவார்கள். அ(ரை நாள் என்ப)து ஐநூறு ஆண்டுகளாகும்'' என்று மற்றொரு நபிமொழி கூறுகின்றது. (திர்மிதீ: 2277)
ஏழைகளை எவ்வாறு நேசிப்பது? அவர்களுக்குத் தேவையான வாழ்வியல் உதவிகளைச் செய்வதன்மூலம்தான் அவர்கள்மீதான அன்பையும் நேசத்தையும் வெளிப்படுத்த முடியும். மிகவும் அடிமட்டமான குடும்பத்தில் பிறந்து, இதுவரை திருமணம் முடிக்கப்படாமல் இளமைக் காலத்தை வெறுமனே கடத்திக்கொண்டிருக்கும் ஏழைப் பெண்கள் பலர் உள்ளனர். அவர்களை இனம் கண்டு, தேடிப்பிடித்து, அவர்களுக்குரிய வாழ்க்கைத் துணையோடு இன்புற்று இல்வாழ்க்கையைத் தொடர செல்வர்கள் தம்மால் இயன்ற பொருளாதார உதவிகளைச் செய்து அவர்களின் திருமணத்தை நடத்திவைக்க வேண்டும். இதுதான் அச்செல்வர்கள் தம் மறுமை வாழ்விற்காக இவ்வுலகில் செய்யும் நிரந்தர முதலீடாகும்.
இது குறித்த செய்தியைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: உங்களுள் எவருக்கும் வாழ்க்கைத்துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுடைய வறுமையை நீக்கிவிடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (24: 32)
செல்வர் ஒருவர் தம் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்கின்றபோது அத்தோடு ஓர் ஏழைப் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைத்தால் அதுதான் அவர் தம் மறுமை வாழ்விற்காகச் செய்யும் மிகச் சிறந்த முதலீடாகும். எத்தனையோ கன்னிப் பெண்கள் பருவமடைந்து பல ஆண்டுகளாகியும் திருமணம் முடிக்கப் பெறாமல் முதிர்கன்னிகளாகவே இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து திருமணம் செய்துவைப்பது ஒவ்வொரு செல்வரின் கடமையாகும். ஒவ்வொரு மஹல்லா நிர்வாகத்தாரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
எத்தனையோ ஏழைகள் மருத்துவமனைகளில் நோயோடு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அறுவைச் சிகிச்சைக்குப் பணமில்லாமல் நிர்க்கதி நிலையில், யாராவது உதவி செய்வாரா எனக் காத்திருக்கின்றார்கள். மருத்துவமனைகளுக்குச் சென்று அத்தகையோரை நேரடியாகச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளைச் செய்து, அவர்களின் நல்வாழ்வுக்கு உதவுவதே அல்லாஹ்வின் திருப்தியையும் உவப்பையும் பெற்றுத்தரும் அறச் செயலாகும்.
எத்தனையோ ஏழை மாணவர்கள் பொருளாதார நெருக்கடியாலும் கடன் கொடுத்து உதவாததாலும் தம் மேற்படிப்பைத் தொடரமுடியாமல் தவிக்கின்றார்கள்; சிலர் படிப்பையே விட்டுவிடுகின்றார்கள். இவ்வாறான மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களின் கல்விக்காக உதவுவது தொடர்படியான தர்மமாகும். இப்படிப் பல்வேறு வகைகளில் ஏழைகளுக்கு உதவி செய்வதன்மூலம்தான் அவர்களை நேசிக்க வேண்டும். அதனால் நாம் அல்லாஹ்வின் அன்பைப் பெற முடியும். அவ்வாறான உதவிகளைச் செய்து அல்லாஹ்வின் அன்பைப் பெற முயல்வோமாக.
==================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக