பணி நிறைவு பெற்ற டிஐஜி ஏ.பீ. முஹம்மது அலீ அவர்கள், தமது ஓய்வான நேரத்தில் சமுதாய முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆர்வத்திலும் அக்கறையிலும் அவ்வப்போது சமுதாயச் சிந்தனையையும் உணர்வுகளையும் தூண்டும் விதமான கட்டுரைகளை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது. அவர் எழுதிய பல கட்டுரைகள் இனிய திசைகள் மாத இதழிலும் வெளிவந்துள்ளன.
சமுதாயத்தில் புரையோடிப்போய்க் கிடக்கின்ற பழக்கங்கள், அறியாமைகள், மூடப்பழக்கங்கள் முதலானவற்றைக் கண்டித்தும் இயக்க வெறியர்களைக் கடிந்தும் கட்டுரைகள் எழுதுவது அவரது வழக்கம். அத்தோடு மாற வேண்டிய நம் சமுதாயம், எவ்வித உணர்வுமின்றி அப்படியே சென்று கொண்டிருப்பது குறித்து மனம் வருந்தி எழுதியவையும் இந்நூலினுள் உள்ளன.
சமுதாய முன்னேற்றம் குறித்துச் சிறிதும் அக்கறையின்றிச் சுயநலப்போக்கோடு செயல்படும் இயக்கங்களைக் கண்டிக்கிறார். பிரிந்து கிடக்கும் நம் சமுதாய மக்களை ஒன்றிணைப்பதற்கான எந்த முயற்சியும் செய்யாமல், மேன்மேலும் சமுதாயத்தைக் கூறுபோடும் செயல்களில் ஈடுபடும் இயக்கங்களைச் சாடுகிறார். இப்படிச் சமுதாயக் கவலைமிக்க கட்டுரைகளை ஒருங்கிணைத்து, “சமுதாயச் சிந்தனை அதிர்வலைகள்” எனும் பெயரில் வெளியிட்டுள்ளார்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள திரைப்பட இயக்குநர் மு. அமீர் குறிப்பிடுவதைப்போல், “ஓர் எழுத்தாளனுக்குரிய நடையோ, சொல்லழகோ, இலாவகமோ இல்லாதிருந்தும் இக்கட்டுரைகள் சலிப்பைத் தரவில்லை” என்பதை இந்நூலைப் படிக்கும்போது உணர்ந்துகொள்ளலாம்.
பயனுள்ள இந்நூலை வாங்கி வாசித்துத்தான் பாருங்களேன்!
நூல்: சமுதாயச் சிந்தனை அதிர்வலைகள்
ஆசிரியர்: டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலீ பிஎச்.டி., ஐ,பீ.எஸ். (ஓ)
பக்கங்கள்: 104
விலை: ரூ. 50
வெளியீடு: ஆயிஷா பதிப்பகம்
இராயப்பேட்டை, சென்னை-14
தொடர்புக்கு: 044-28486878, 94440 42213
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
30 06 2019 (26 10 1440)
========================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக