==============
நூல் : அருள் வடிவானவர்
ஆசிரியர் : மவ்லவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி
பக்கங்கள்: 224
விலை: 150 ரூ
வெளியீடு :
சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டித் தெரு,
மண்ணடி,
சென்னை-1
தொடர்புக்கு: 98409 77758
====================
இந்நூலுக்கு நான் எழுதிய வாழ்த்துரை இதோ...
வாழ்த்துரை
எல்லாப் புகழும் அளவற்ற அன்பாளன் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும் அன்பும் ஏக இறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும்
அவர்களின் குடும்பத்தார், உற்ற தோழர்கள் ஆகிய
அனைவர்மீதும் உண்டாவதாக.
மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி, ஓர் அரபி நூலைத் தழுவி
எழுதிய ‘அருள் வடிவானவர்’ எனும் நூல் என் பார்வைக்கு
வந்தது. அந்நூலைப் பிழைதிருத்தம் செய்து தருமாறு ஜனாப் முஹம்மது ஜகரிய்யா ஸாஹிப் கேட்டுக்கொண்டார். நூலைப் புரட்டிப் பார்த்தேன். வாசிக்க வாசிக்க அதன் நடையும் போங்கும் என்னை வெகுவாக ஈர்த்தன.
பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், இந்நூலை ஒரு வித்தியாசமான
நடையில் எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. தெளிந்த நீரோடை போன்ற நடை வாசகர்களைப் படிக்கத் தூண்டும்; தமிழார்வலர்களை நூலைக்
கீழே வைக்க விடாது. ஏற்கெனவே கேள்விப்பட்ட நபிமொழிகளாக இருந்தாலும் அவற்றை எடுத்துச் சொல்லும் முறை புதிது. சடைவை ஏற்படுத்தாத விதத்தில், அரபி வார்த்தைகள் கலவாத தூய தமிழ்நடையில் அமைக்கப்பட்டுள்ளது
இந்நூல்.
மனித வாழ்க்கையின்
ஒவ்வொரு கட்டத்திலும் ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிடம் எந்த அளவிற்கு
அன்போடும் கருணையோடும் நடந்துகொண்டார்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளை முன்வைக்கிறார் நூலாசிரியர். பொதுவாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித இனத்தின் ஒவ்வொரு சாராரிடமும் மிகுந்த அன்போடும் பரிவோடும் நடந்துகொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். ஏழைகள், அடிமைகள், அநாதைகள், சிறுவர்-சிறுமியர் என எல்லோரிடமும் அவர்கள் அன்பாக நடந்துகொண்டது இறைவன் அவர்களை அகிலத்திற்கோர் அருட்கொடையாக அனுப்பியதே காரணம்.
“(நபியே) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருந்தால் உங்களிடமிருந்து
அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்” (3: 159) என்று கூறுகின்றான்.
ஆக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அனைத்து வகையான மக்களிடமும் அன்போடும் பரிவோடும்
நடந்துகொண்டது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடையே அன்றி வேறில்லை. அல்லாஹ் தன்னுடைய அடியாரான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, தான் விரும்பியவாறு படைத்து, பல்வேறு குணங்களைக் கொண்ட பல்வகை மனிதர்கள் பற்பல கோணங்களில் இழைக்கின்ற துன்பங்களையும் இன்னல்களையும் சகித்துக்கொள்ளும் விதத்தில் தன்
தூதராக அனுப்பினான்; எவ்வளவு துன்பங்களையும் தாங்கிக்கொள்ளும் மனத்திட்பம் கொண்டவராகவும் கொண்ட கொள்கையில் உறுதிமிக்கவராகவும் திகழச்
செய்தான். தேவைப்பட்டபோது அவர்களைப் பாராட்டினான்; நேரம் பார்த்துக் கண்டித்தான்; சமயம் பார்த்து ஆறுதல் கூறினான்; சொல்லொணாத் துன்பங்களைக் கண்டு துவண்டுபோன நேரத்தில் தேற்றினான். இப்படி எல்லாவற்றையும் அல்லாஹ்வே செய்தான். தான் எப்படி விரும்பினானோ அப்படியெல்லாம்
நபியவர்கள் நடந்துகொண்டதால்தான், அவன் அவர்களைத் தன்
அன்பராக (ஹபீபுல்லாஹ்) ஆக்கிக்கொண்டான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
அருள்வடிவான வாழ்க்கையைப் படிக்கின்றபோது நாமும் அவர்களைப்போல் நம்மால் இயன்ற வரை பிறரிடம் அன்போடும் பரிவோடும் நடந்துகொள்ள முயல வேண்டுமென உறுதிபூண வேண்டும். தொழிற்புரட்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் மிகுந்த இன்றைய அறிவியல் யுகத்தில், மனிதன் எவ்வளவுதான் முன்னேறிச் சென்றாலும் அவனது மனத்தில் அன்பு எனும் உணர்வு வறண்டுபோய்க் காணப்படுகிறது. பெற்ற பிள்ளைகள்மீது அன்பில்லாததால் ஒரு தாய் தன் பிள்ளைகளையே கொலைசெய்கிறாள்; ஈன்றெடுத்த தாய்மீது அன்பில்லாததால் தனயனே தன் தாயைக் கொலை செய்கிறான்; தந்தையைக் கொலை செய்கிறான்; ஒன்றாகக் கட்டிலில் உறவாடிய கணவன்மீது அன்பில்லாததால் மனைவி தன் கணவனையே கொலை செய்கிறாள்; கணவன் தன் மனைவியையே எரித்துக் கொலை செய்கிறான்; காதலி உடன்படவில்லையென்பதால் அவள்மீது அமிலத்தை ஊற்றுகிறான். இவ்வாறு எல்லாவிதமான உறவுகளிலும் அன்பின்மை காணப்படுகிறது.
இத்தகைய தருணத்தில் ஒருவர்மீது அன்புகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
அன்பான வாழ்க்கையைப் படித்தால், கற்றுக்கொள்ளலாம். அதற்கு இந்நூல் துணைபுரிகிறது. நிபந்தனையற்ற, இறைவனுக்கான அன்பே நீடித்து
நிலைக்கும். அத்தகைய பேரன்பை நாம் முதன்முதலாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது காட்ட வேண்டும். பின்னர் நம் குடும்ப உறுப்பினர்கள்மீது காட்ட வேண்டும். ஈன்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்மீது காட்ட வேண்டும். பெற்றெடுத்த பிள்ளைகள்மீது காட்ட வேண்டும்.
இன்னபிற மனிதர்கள்மீதும் அனைவர்மீதும் அன்பு காட்ட வேண்டும். இந்த அன்புதான் நம்மை ஈருலகிலும் இதயங்களை இணைக்கக்கூடியது என்பதை
நினைவில் கொள்வோம்.
இந்நூலாசிரியர் இதுபோல் இன்னும் எண்ணற்ற நூல்களைப் படைக்க ஏக இறைவன் அருள்புரிவானாக.
அன்புடன்
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
மணலி, சென்னை-68
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக