வியாழன், 18 ஏப்ரல், 2019

கட்டுப்படுவோம்; வெற்றிபெறுவோம்!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.


யாரும் யாருக்கும் கட்டுப்படாத நிலை பெருகிவருகிறது. கட்டுப்படுவது அடிமைத்தனம் என்ற கருத்து போதிக்கப்படுகிறது; திரைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தப்படுகிறது; தொலைக்காட்சித் தொடர்கள்மூலம் பரப்பப்படுகிறது. இது சமுதாய, குடும்ப, நாட்டு நலனுக்கு உகந்ததல்ல. 


பிள்ளைகள் தம் பெற்றோருக்குக் கட்டுப்படுவதும், மாணவர்கள் தம் ஆசிரியருக்குக் கட்டுப்படுவதும் சிறியோர் பெரியோருக்குக் கட்டுப்படுவதும், மனைவி தன் கணவனுக்குக் கட்டுப்படுவதும் சமுதாயம் சீராக இயங்க உதவும். அவர்கள் தம் கட்டுப்பாட்டை மீறி, எல்லை தாண்டிப் போகும்போது சமுதாயச் சீர்கேடுகள் பெருகும். அதுதான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


பெற்றோருக்குக் கட்டுப்பட வேண்டிய பிள்ளைகள், அவர்களுக்குக் கட்டுப்படாமல் அவர்கள் கூறும் அறிவுரையைக் கேளாமல், தம் விருப்பப்படியும் எண்ணப்படியும் செயல்படுவதால் கூடா நட்பு, வேண்டாப் பழக்கங்கள், தீராப் பிரச்சினைகள் எல்லாம் சூழ்ந்துகொள்கின்றன. இளவயதிலேயே அவர்கள் ஒரு சிக்கலான வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இது ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானதாகும். 


மாணவர்கள் தம் இளமைப்பருவத்தில், கற்கும் காலத்தில் தம் ஆசிரியர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதால் அவர்கள் தம் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள முடியும். அவர்கள் கூறும் அறவுரைகளைக் கேட்டு, அதன்படி செயல்படும்போது அவர்கள் தம் வாழ்க்கையைச் செவ்வனே கட்டமைத்துக்கொள்ள முடியும். ஆசிரியர்களின் அறவுரைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னின்று வழிகாட்டும். அதேநேரத்தில் ஆசிரியர்கள்மீதான மதிப்பும் மரியாதையும் மாணவர்களின் மனத்திலிருந்து மாணவப்பருவத்திலேயே அகன்றுவிடும்போது அவர்களின் மதிப்புமிக்க அறவுரைகள் மாணவர்களின் காதுக்கு ஏறா.


அதனால் அவர்கள் தம் வாழ்க்கையில் அவ்வப்போது எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் பிரச்சனைகளையும் எப்படி எதிர்கொள்வது என்ற வழிமுறை தெரியாமல், வழிகாட்ட ஆளின்றி மனஅழுத்தத்திற்கு ஆட்பட்டு அல்லாடுவார்கள்; சிலர் தற்கொலை செய்துகொள்ள முனைவார்கள். இதுவே இன்றைய எதார்த்த நிலை. 

ஒவ்வோர் ஊருக்கும் ஜமாஅத் தலைவர் ஒருவர் இருப்பார். அவருக்கு அவ்வூர் மக்கள் கட்டுப்பட்டு வாழ்கின்றபோது எந்தப் பிரச்சனையுமின்றி, நிம்மதியாக வாழலாம். ஊர்க்கட்டுப்பாட்டை மீறி, ஊர்த் தலைவருக்குக் கட்டுப்படாமல் வாழத் துணிந்துவிட்டால், நன்மை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தேவையற்ற இயக்கங்கள் ஊருக்குள் நுழையும். மக்கள் இரண்டாகப் பிரிவார்கள். நானா, நீயா என்ற போட்டி ஏற்படும்; பின்னர் பிளவுகள் ஏற்பட்டு, இரண்டு நான்காகும்; நான்கு எட்டாகும். ஒரே ஊரில் இரண்டு நாள்களில் பெருநாள் தொழுகை நடைபெறும். காலப்போக்கில் மக்களின் நிம்மதியான வாழ்க்கை பறிபோகும். இதுவும் இன்றைய எதார்த்த நிலை. 
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்ற வசனம் கவனத்தில் கொள்ளத்தக்கது. 


இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவனுடைய தூதருக்கும் உங்களுள் அதிகாரம் உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள். (4: 59) ஒரு ஜமாஅத்தினரைக் கட்டுப்படுத்துகின்ற ஊர்த்தலைவருக்குக் கட்டுப்பட்டு நடந்திருந்தால், ஒரு குடையின் கீழ் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்றிருந்தால், நமது மதிப்பும் மரியாதையும் பிற அரசியல் கட்சிகளின் பார்வையில் இவ்வளவு தரம் தாழ்ந்து போயிருக்காது. 


நம்முடைய ஒற்றுமையின்மையும் கட்டுப்பாடின்மையும் நம்மை அரசியல் அநாதைகளாகத் தள்ளிவிட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் தொகுதிகளில்கூட முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களை நிறுத்தி, வெற்றிகொள்ள முடியும் என்ற எண்ணம் எப்படி வளர்ந்தது? நம்மில் தலைமைக்குக் கட்டுப்படாத நிலை மேலோங்கிவிட்டது என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்


ஓர் ஆணுக்கு மனைவியாக உள்ளவள் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அடிமைத்தனம் என்று போதிக்கப்படுகிறது. அது அடிமைத்தனம் அல்ல. குடும்பம் சீராக இயங்க  இறைவன் காட்டிய வழிமுறை. பெண்ணின் அமைதியும் பணிவும் கணவனின் மகிழ்வுக்குக் காரணமாகும். கணவன் மகிழ்ச்சியாக இருந்தால் அவனைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவனுடைய உழைப்பு மேன்மேலும் கூடும். இதனைச் சிதைக்கவே இன்றைய காட்சி ஊடகங்கள் சதிசெய்கின்றன. அவர்களின் சதி வலையில் சிக்கிக்கொண்ட பெண்கள்தாம் தம் கணவருக்குக் கட்டுப்பட்டு வாழ்வதை வெறுக்கத் தொடங்குகிறாள். அதனால் அவளுக்கு இம்மை-மறுமை ஈருலக வாழ்க்கையும் இழப்புக்குள்ளாகிறது. 


ஒரு பெண், தன் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே செய்து, தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து, அவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை அன்போடு மேற்கொண்டு அவருடைய திருப்தியைப் பெற்றநிலையில் இறப்பெய்தினால், அவள் மறுமையில் சொர்க்கத்தின் எவ்வாயில் வழியாகவும் அதனுள் நுழைந்துகொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒரு பெண் தன் கணவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடப்பது, பணிவிடைகள் செய்வது, அவர் வெளியே சென்றுவிட்டால் அவனுடைய பொருள்களையும் தனது கற்பையும் பாதுகாத்துக் கொள்வது இதுவே ஒரு குடும்பப் பெண்ணின் பண்பாகும் என்ற நபிமொழியில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. ஒரு பெண் இறைக்கடமைகளை நிறைவேற்றியபின், எஞ்சிய நேரங்களில் தன் வீட்டைப் பராமரிப்பதிலும் கணவனை மகிழ்விக்கும் செயல்களிலும் ஈடுபடுவது அவளுக்கான இபாதத் ஆகும். 

"எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர் ஆவார்...'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 3745) இந்த நபிமொழியின்படி அல்லாஹ்வின் தூதர் சொன்ன ஒவ்வொரு கூற்றுக்கும் பணிந்து நடப்பதும் அதை ஏற்று, நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட நன்மையைப் பெற்றுத்தரும்.

ஆகவே ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்படுவதும் ஒரு பிள்ளை தன் பெற்றோருக்குப் பணிந்து நடப்பதும் அவர்களுக்கான பணிவிடைகளைச் செவ்வனே செய்வதும், மாணவன் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடப்பதும் இறைவனுக்குக் கட்டுப்படுவதாகவே கருதப்படும். அதற்கான நன்மை அவரவர்க்கு உண்டு என்பதில் ஐயமில்லை. 

ஆக, கட்டுப்பட்டு நடப்பதில்தான் மகிழ்ச்சியும் சுதந்திரமும் இருக்கின்றன என்பதை மனத்தில் பதிய வைத்துக்கொண்டால் இன்று நாம் எதிர்கொள்கின்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம். கரையின் கட்டுப்பாட்டில் நீர் இருப்பதால் அது எல்லோருக்கும் பயன்படுகிறது. அது கட்டுப்பாட்டை மீறி, கரையை உடைத்துக்கொண்டு, கட்டற்ற முறையில் ஓடினால் மக்களுக்கு அழிவையே உண்டாக்கும். அதுபோலவே ஒவ்வொருவரும் தமக்குப் பொறுப்பாளியாக உள்ளவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வரை அவர்களுக்குப் பாதுகாப்பும் சுதந்திரமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் உண்டு. கட்டுப்பாட்டை மீறிச் செல்கின்றபோதுதான் இழப்பும் அவமரியாதையும் இழுக்கும் ஏற்படும். இது எல்லாத் தளங்களுக்கும் பொருந்தும் என்பதைச் சிந்திப்போர் உணர்வர். 
=====================================






கருத்துகள் இல்லை: