-----------------------------------------------
எந்தப் பிடிமானமும் இன்றித் தண்ணீரில் மூழ்கப்போகும் நேரத்தில், ஒருவர் ஒரு மரக்கட்டையைத் தூக்கிப் போட்டார். அதைப் பிடித்துக்கொண்டு கரையேறி வந்து, தம் சமுதாய மக்களையெல்லாம் காப்பாற்றலாமே என்று எண்ணிக்கொண்டு கரையேறி வரத் துடிக்கும் ஒருவரை, நாமே அந்தக் கட்டையைப் பிடுங்கிப்போட நினைக்கலாமா? ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தேசியக் கட்சி எதுவுமே நம் இனத்திற்கான பிரதிநிதியாக ஒருவரைக்கூடக் களத்தில் நிறுத்தாதபோது, ஏதோ ஒரு கட்சி, நமக்கான ஓர் அங்கீகாரத்தைக் கொடுக்கும்போது, அதை இறைவன் வழங்கிய ஒரு பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, அவரை ஒன்றுசேர்ந்து வெற்றிபெறச் செய்வது நம் கடமையல்லவா?
நம்மைக் காப்பாற்றுவார், நமக்காகக் குரல் கொடுப்பார் என்று யார் யாரையோ நாம் நம்பும்போது, ஓர் இறைநம்பிக்கையாளரை நம்ப மறுப்பதேன்? வெற்றி பெற்றபின் நமக்கெதிராகச் செயல்படுவார் என்ற எண்ணமா அவரைக் கரைசேரவிடாமல் உங்களைத் தடுக்கிறது?
“39 தொகுதிகளுள் 38 தொகுதிகளில் திமுக-காங். கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம். ஒரே ஒரு தொகுதியான-மத்தியச் சென்னைத் தொகுதியில் மட்டும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் தெஹ்லான் பாகவியை வெற்றிபெறச் செய்வோம்” என்பதே மார்க்கம் கற்ற பெரும்பாலான அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.
அல்லாஹ்வின் அருளாலும் நாட்டத்தாலும், அவர் வெற்றிபெற்றால் தேசியக் கட்சியான காங்கிரசுக்குத்தான் ஆதரவளிப்பார் என்பதில் எள்முனையளவும் ஐயமில்லை. பெரும்பாலோர் எதிர்பார்க்கும் ஆட்சி அமைய அவர் எவ்வகையிலும் தடையாக இருக்க மாட்டார் என்ற உறுதியோடு மத்தியச் சென்னையில் தெஹ்லான் பாகவியை வெற்றிபெறச் செய்வது நம் சமுதாய மக்களின் தார்மீகக் கடமையாகும்.
-முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை-68
===================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக