சனி, 20 ஏப்ரல், 2019

சிறந்த மருமகள்!



சென்னை மாநகரத்திலிருந்து வாழ்க்கைப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி எனும் ஊருக்குச் சென்றாள் மூமினா.

மூமினா ஒரு முஸ்லிம் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவள். அவளது முந்தைய பெயர் முத்தழகி. அவள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இஸ்லாமிய நூல்களையும் திருக்குர்ஆனையும் வாசித்து வந்தாள். அதன் கொள்கைக் கோட்பாடுகளாலும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு முஸ்லிமாகிவிட்டாள். 

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இஸ்லாமிய இதழ்களை வாசித்து வந்ததால், அவள் அந்த இதழில் கிடைத்த எண்ணுக்கு அழைத்தாள். நேரடியாக வரச் சொன்னதால் தாவா சென்டருக்குச் சென்றாள். அங்கிருந்த இஸ்லாமியப் பெண்அழைப்பாளரிடம் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாள். அவர் கற்றுக்கொடுத்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டாள். 

பின்னர் அங்குள்ளோரின் வழிகாட்டுதலோடு வேலூரில் அமைந்துள்ள இஸ்லாமிக் சென்டரில் சேர்ந்து நான்கு மாதங்கள் படித்தாள். பின்னர் சென்னையில் ஒரு மகளிர் அரபுக் கல்லூரியில் மூன்றாண்டுகள் பயின்று ஆலிமா பட்டம் பெற்றாள். 

அத்தருணத்தில் இஸ்லாமிய ஈடுபாடுகொண்ட ராஸிக், மகளிர் அரபுக் கல்லூரியில் பணியாற்றிய தன் ஊர்க்காரரான அக்பர் என்பவரைச் சந்தித்து, தான் ஓர் ஆலிமா பெண்ணைத் திருமணம் செய்யப்போவதாகவும் தாங்கள்தாம் எனக்காகப் பெண் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அப்போது அவர் காட்டிய ஆலிமா பெண்தான் மூமினா.

பின்னர் முற்றிலும் இஸ்லாமிய வழிகாட்டுதலோடு அவர்களின் திருமணம் இனிதே நிறைவேறியது.
ராஸிக் தன் ஊர்மீதும் ஊர்மக்கள்மீதும் மிகுந்த பற்றுகொண்டவன். தன் ஊர்மக்கள் அனைவரும் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும். அவர்கள் அனைவரும் ஐவேளைத் தொழுகையாளிகளாக மாற வேண்டும். அதன்மூலம் அல்லாஹ்வின் அன்பு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அதனால் அல்லாஹ்வின் அருள்பெற்று ஊரே செழிப்பாக இருக்க வேண்டும் என்ற அவனுடைய நீண்ட கால கனவு மூமினாவைத் திருமணம் செய்ததன் மூலம் நிறைவேறத் தொடங்கியது. 

மூமினா தன் சிறுபிராயத்திலேயே சிந்தனைத் திறனுடன் செயல்பட்டு வந்தாள். எதையும் கேள்வி கேட்டு விடைதெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமுடையவள். அந்தச் சிந்தனையும் ஆர்வமும்தான் அவள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளக் காரணமாக இருந்தன.

திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படித்து, அதன் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அவள், நம்மைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்க, நாம் இத்தனை நாள்களாக எதையெதையோ வணங்கி வழிபட்டு, காலத்தை வீணாக்கிவிட்டோமே என்று வருந்தினாள். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ள தான் இந்த அழகிய மார்க்கத்தைப் பலருக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென ஆவல் கொண்டாள். 

தன் ஆவலைத் தன் கணவரிடம் தெரிவித்தாள். அவளின் ஆவலைத் தெரிந்துகொண்ட ராஸிக் தான் விரும்பியவாறே தனக்குரிய மனைவி அமைந்துள்ளாள் என்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தான்.

"
நீ பிற சமுதாய மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைப்பது இருக்கட்டும். அதற்குமுன் நம் சமுதாய மக்கள் இன்னும் இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழையாமல் இருக்காங்க. முதலில் அவர்களைத் திருத்த உன்னால் முடிஞ்சதச் செய். இஸ்லாமிய நெறிமுறைகளை அவர்களின் மனசுல பதிய வை. அதுதான் இன்றைய அவசரத் தேவை. ஏனென்றால் நம்மைச் சார்ந்தவங்களே நரகத்துல நுழையிறத நாம் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்?'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

"
சரிங்க! நீங்க சொல்லுற மாதிரியே செய்யிறேங்க. முதல்ல நான் நம்ம வீட்லயிருந்தே தொடங்குறேங்க'' என்று கணவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படத் தொடங்கினாள்.

அவ்வூர்க்காரர்கள் அக்கம் பக்கத்து ஊர்களில்தான் பெண் எடுத்தல் கொடுத்தலைச் செய்துகொள்வார்கள். ஆனால் ராஸிக் சென்னையிலிருந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்ததை அந்த ஊரே அதிசயமாகப் பார்த்தது. பெண்களிடையே அவ்விருவரைப் பற்றித்தான் பேச்சு. 

"
அடியே மும்தாஜ்! நம்ம ராஸிக் மெட்ராஸிலிருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கானாம். பொண்ணு காலேஜ்ல படிச்சவளாம்'' - எதிர்வீட்டு காலிதா சொன்னாள்.
"
ஆமாக்கா, அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன். நாகூட இன்னும் அவங்ககிட்ட பேசல. ம்... போகப் போக அவங்களே நம்மைத் தேடி வருவாங்க'' என்றாள் மும்தாஜ். 

மூமினா, முதன்முதலில் தனது வீட்டிலுள்ளோரைத் தொழுகக் கிளப்பினாள். தன்னுடைய மாமனார் அவ்வப்போது தொழுகச் செல்வதைக் கண்டாள். ஃபஜ்ருக்கும் லுஹருக்கும் பள்ளிவாசல் செல்வதில்லை. அஸருக்குப் போயி இஷாத் தொழுகை முடித்துவிட்டு, வீட்டுக்கு வருவது வழக்கம். ஆகவே அவள் தன் மாமனாரிடம் பேசினாள். 

"
அதிகாலைத் தொழுகை ரொம்ப முக்கியம் மாமா. அதனால நீங்க ஃபஜ்ர் தொழுகைய விட்றாதீங்க மாமா. நாளையிலிருந்து இன் ஷாஅல்லாஹ் ஃபஜ்ர் தொழுகப் போங்க மாமா'' என்று அன்பொழுகக் கூறினாள். 

புதிதாக வந்துள்ள மருமகள் ரொம்ப அக்கறையோடு தன்னிடம் வந்து தொழுகையைப் பற்றிப் பேசுவதை எண்ணி மனம் நெகிழ்ந்தார். "அதிகாலைல பச்சத்தண்ணில ஒலு செய்தா எனக்கு ஒத்துக்கிறாதும்மா. அதனாலதான் நான் ஃபஜ்ர் தொழுகப் போறதில்ல'' என்றார்.

"
கவலைப்படாதீங்க மாமா! நான் ஒங்களுக்கு ஃபஜ்ர் தொழுகைக்கு வெந்நீர் வச்சுத் தாறேன். நீங்க நல்லவிதமா வீட்லேயே ஒலு செய்துட்டுப் போகலாம்'' என்றாள்.

"
அப்படின்னா சரிம்மா! நான் நாளையிலேருந்து ஃபஜ்ர் தொழுகப் போறேம்மா'' என்றதும் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.

அதன்பின் தன்னுடைய மாமியாரைத் திருத்த முயன்றாள். அவளோ வாரம் ஒரு தடவை வெள்ளிக்கிழமை மட்டும் தொழுபவள். அவளிடம் தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதோடு, அதனால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் விளக்கிச் சொன்னாள். 

புதிதாக வந்துள்ள மருமகள் சொல்கிறாளே என்பதற்காகத் தொழுகத் தொடங்கினாள். அதன்பிறகு அவளுக்கே தொழுகையில் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு, இப்போதெல்லாம் மனஓர்மையோடு தொழுகப் பழகிவிட்டாள். ஆனால் மாமி எப்போதும் தொலைக்காட்சித் தொடர்களையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்த மூமினா, அதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்றெண்ணினாள். 

மாமிக்கு காஃபி கொடுத்தவாறே அவளிடம் பேசத் தொடங்கினாள். "மாமி! இந்தத் தொடர் நாடகங்களெல்லாம் உண்மை கிடையாது. அதெல்லாம் யாரோ ஒருத்தர் எழுதுற கதைதான். அந்தக் கதைக்கேற்ப இவர்களெல்லாம் நடிக்கிறாங்க. அவ்வளவுதான். இதப்போயி நாம் ஏன் பார்த்து, வருத்தப் படணும்? ஏன் கண்ணீர் விடணும்?'' என்று மனதில் படுமாறு நச்செனக் கேட்டாள்.

"
ஓ! அப்படியா? இதெல்லாம் நெஜமாவே நடக்குதுன்னு தானே நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்'' என்றாள் அப்பாவியாக.

"
மாமி! இந்தச் சோகக் கதைகளைப் பார்ப்பதை விட்டுவிட்டு, அந்த நேரத்துல குர்ஆனை ஓதுனா நன்மைக்கு மேல் நன்மை நமக்குக் கிடைக்குமே!'' என்றாள். 

"
மூமினா! எனக்கு குர்ஆன் ஓதத் தெரியாதும்மா. எங்க ஊர் பள்ளிவாசல்ல அப்பப்ப இமாமை மாத்திடுவாங்க. அதனால நான் ஒழுங்கா ஓதப் போகாம இருந்துட்டேன். இப்ப எனக்கு குர்ஆன் ஓதத் தெரியாமப் போச்சு'' என்று கவலையுடன் கூறினாள். 

"
கவலைப்படாதீங்க மாமி! நான் ஒங்களுக்கு குர்ஆன் ஓதச் சொல்லித் தாறேன். "எளிய முறையில் திருக்குர்ஆன் ஓதக் கற்போம்'னு ஒரு டிவிடியே வந்திருக்கு. அதப் பாத்தாலே போதும். எல்லாரும் குர்ஆனை ஓதக் கத்துக்கலாம். ஒங்களுக்கு மட்டுமில்ல, நம்ம ஊர்ல யாருக்கெல்லாம் குர்ஆன் ஓதத் தெரியாதோ அவங்க எல்லாருக்கும் நான் சொல்லித் தரப்போறேன். இன் ஷாஅல்லாஹ் சீக்கிரமாவே நான் வகுப்பைத் தொடங்குறேன் மாமி!'' என்றாள் ஆர்வத்தோடு. 

குர்ஆன் வகுப்பைத் தொடங்கி எல்லோருக்கும் அதைக் கற்றுக்கொடுத்தாள். வயதான பெண்களுக்கு மிகச் சிரமப்பட்டுத்தான் கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது. அதனால் அந்த டிவிடியை கம்ப்யூட்டரில் போட்டு மீண்டும் மீண்டும் ஓடவிட்டாள். அதையே திரும்பத் திரும்பச் சொல்லச் சொன்னாள். அதை அப்படியே மீண்டும் மீண்டும் அவர்களெல்லாம் சொல்லிச் சொல்லி அரபு எழுத்துகளை மனதில் பதிய வைத்துக்கொண்டார்கள். பின்னர் ஒவ்வொரு பாடமாகப் படித்து, பதினைந்து பாடங்களையும் முடித்த பிறகு, குர்ஆனை ஓதத் தொடங்கிவிட்டார்கள். 

குர்ஆன் வகுப்பிலேயே தொழுகையைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் அடிக்கடி சொல்லி வந்தாள். "இன்றைக்கு சுப்ஹு தொழுதவங்கெல்லாம் கையத் தூக்குங்க''ன்னு சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தினாள். 

இஸ்லாத்தைப் புரிந்து ஏற்றுக்கொண்டவளே இந்தளவுக்குத் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, நாமெல்லாம் முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்தும் தொழுகையின் முக்கியத்துவத்தை உணராமல் இருக்கோமே என்று வெட்கப்பட்டே பெண்கள் பலரும் ஐவேளைத் தொழுகையைத் தொழத் தொடங்கிவிட்டார்கள். 

அத்தோடு விடாமல் ஒவ்வொரு தாயும் தன் பிள்ளையை எவ்வாறெல்லாம் வளர்க்க வேண்டும். என்னென்ன ஒழுக்கங்களைச் சொல்லித் தர வேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை போதித்தாள். "நீங்க ஒவ்வொருவரும் லுக்மான் நபி தம் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்த அறிவுரையைச் சொல்லிக் கொடுக்கணும்'' என்று கூறி, அந்த வசனங்களைச் சுட்டிக் காட்டினாள். 

இவ்வாறு மூமினாவுடைய இடைவிடாத இஸ்லாமியப் பணியால் அந்த ஊர்ப் பெண்கள் அனைவரும் திருந்தி வாழத் தொடங்கினார்கள்.

அப்பெண்கள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் இஸ்லாமியப் பழக்க வழக்கங்கள் மேம்படத் தொடங்கின. சுப்ஹு தொழுகைக்கு ஆண்களின் வருகை அதிகமாயிற்று. 

அந்த ஊரிலுள்ள ஷரீஃப் ஹாஜியார் அவ்வூருக்கு ஓர் அருட்கொடை என்றே சொல்லலாம். ஊர் மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர். மாணவ மாணவிகளின் படிப்புக்கு உதவித்தொகை வழங்குவது, அவர்களுக்கு தீனிய்யாத் சார்ந்த போட்டி வைத்துப் பரிசுகள் வழங்குவது, ஏழைப்பெண்கள், விதவைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளைப் படைத்தோனின் உவப்பை நாடிச் செய்து வருபவர். அவர் இந்த ஆண்டு, குடும்பத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதற்காக, மாமியார்-மருமகள் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்தும் விதத்தில் சிறந்த மருமகளுக்கான போட்டியை அறிவித்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னரே போட்டி அறிவிக்கப்பட்டு, அதற்கான நிபந்தனைகளும் பரிசுத்தொகை மூன்று பவுன் தங்கம் என்றும் அறிவிக்கப்பட்டது.

போட்டி அறிவிக்கப்பட்டதிலிருந்து நாற்பது நாள்கள் ஒவ்வொரு மருமகளும் தன் மாமியாருக்கு நல்ல முறையில் பணிவிடை செய்திருக்க வேண்டும். மாமியார் தன் மருமகளைப் பற்றி எந்தப் புகாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு மாமியாரும் தன் மருமகள் பற்றிக் கூறும் தகவலை வைத்துத்தான் பரிசுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதெல்லாம் போட்டியின் நிபந்தனைகள். பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்க மூன்று பெண்கள் கொண்ட குழு ஒன்று தேர்வு செய்யப்பட்டது. 

போட்டி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மருமகளும் அந்த மூன்று பவுன் தங்கத்தைத் தானே வாங்க வேண்டுமென்று தன் மாமியாருக்கு விழுந்து விழுந்து பணிவிடை செய்யத் தொடங்கினார்கள். மாமியார் கேட்பதற்கு முன்பே அவருக்கு காஃபி போட்டுத் தருவது, உணவு தருவது என்று எல்லாவற்றையும் ஆர்வத்தோடு செய்யத் தொடங்கினார்கள். 

பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்க மூவர் குழு ஒவ்வொரு வீடாகச் சென்று பத்து கேள்விகளைக் கேட்டனர். 

மாமியாருக்குப் பணிவிடை செய்தல், நேரம் தவறாமல் தொழுதல், கனிவாகப் பேசுதல், அரட்டையடிக்காமல் நேரத்தைப் பயனுள்ள வழியில் கழித்தல், பொதுநலன் விரும்புதல், பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ளுதல், கணவனுக்குப் பணிந்து நடத்தல், குர்ஆன் ஓதுதல் உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டுப் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுத்தார்கள். 

ஒவ்வொரு மருமகளும் ஒவ்வொரு விதத்தில் நல்லவர்களாக இருந்தாலும் சிலவற்றில் பின்தங்கியிருந்ததைக் குறித்துக்கொண்டார்கள். கடைசியாகப் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள். பரிசளிப்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்து, அவ்வூர் இமாமைச் சிறப்புப் பேச்சாளராகப் பேச வைத்தார் ஷரீஃப் ஹாஜியார். பயான் முடிந்ததும், பரிசு பெறப்போகும் சிறந்த மருமகள் யார் என்பதை அறிய எல்லோரும் ஆவலாக இருந்தார்கள். 

"
நம்ம ஊரின் சிறந்த மருமகளுக்கான பரிசை சென்னையிலிருந்து வாழ்க்கைப்பட்டு வந்துள்ள ராஸிக் மனைவி மூமினா பெறுகிறார்'' என்று அவ்வூர் இமாம் அறிவித்ததும்  "அல்ஹம்து லில்லாஹ்'' என்று கூறியவாறே மேடையேறிப் பரிசைப் பெற்றாள் மூமினா. 

தன் மனைவியின் சேவையைத் திருப்திகொண்டு இறைவன் கொடுத்த பரிசாக எண்ணி மகிழ்ந்தான் ராஸிக். 

                                                      -ஆலங்குடியார்
===========================================







கருத்துகள் இல்லை: