வெள்ளி, 8 மார்ச், 2019

24 மணிநேரமும் இபாதத்!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D.

ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை'' (51: 56) என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த இறைவசனத்தின்படி, நாம் அல்லாஹ்வை வழிபடுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளதால் அதைத் தவிர வேறெந்த வேலையையும் செய்யக்கூடாது என்று பொருள்படுகிறது. ஆனால் நாம் ஒரு நாளில் ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுகிறோம். அதற்காக நாம் செலவழிக்கும் கால அளவு ஐம்பது நிமிடங்கள் முதல் அறுபது நிமிடங்கள் வரை ஆகும். இருபத்து நான்கு மணிநேரத்தில் ஒரு மணிநேரம் போக, எஞ்சிய நேரத்தை நாம் எவ்வாறு செலவழிக்கிறோம். அந்த நேரத்தையும் இபாதத்தாக மாற்றுவது எவ்வாறு? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

நாம் வாழும் வாழ்க்கையின் எஞ்சிய இருபத்து மூன்று மணிநேரமும் அல்லாஹ்வின் நினைவோடும் அவனுடைய அச்சத்தோடும் வாழ்வதே அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகும். அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதே இபாதத் ஆகும். ஆக எஞ்சிய இருபத்து மூன்று மணி நேரத்தில் நாம் செய்கின்ற எச்செயலாக இருந்தாலும் அதில் அல்லாஹ்வை நினைவுகூர வேண்டும். அத்தகைய வழிகாட்டுதலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள்.

ஒரு மனிதர் தூங்கச் செல்லும்போது தம் படுக்கையில் அமர்ந்துகொண்டு, “அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்;  உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுகிறார். அதிகாலை தம் உறக்கத்திலிருந்து எழும்போது, “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வஇலைஹிந் நுஷூர் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை மரணிக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், -மண்ணறையிலிருந்து வெளியேறி- அவனிடமே செல்லவேண்டியுள்ளது-புகாரீ: 6325) என்று கூறுகிறார் என்றால் அவர் துயில் கொண்ட பொழுது அனைத்தும் இறைவணக்கத்திலேயே கழிந்திருக்கிறது என்று பொருள். ஏனென்றால் அவர் உறங்கியது முதல் துயிலெழுந்தது வரை அல்லாஹ்வை நினைவுகூர்ந்துள்ளார்.

அதன்பின் அவர் கழிவறைக்குள் நுழையுமுன், அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல்கபாயிஸி (இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்-திர்மிதீ: 6) என்று கூறினால் அங்கும் இறைவனை நினைவுகூர்கிறார். அவர் அங்கிருந்து வெளியே வரும்போது, ஃகுஃப்ரானக்க (இறைவா! உன்னிடம் பாவமன்னிப்பு வேண்டுகிறேன்-திர்மிதீ: 7) என்று கூறினால் அப்போதும் அவர் தம் இறைவனை நினைவுகூர்கிறார்.

பின்னர் அவர் மிகச் சிறப்பாக உளூ செய்கிறார். உளூ செய்தபின், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக்க  லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு. அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன் வஜ்அல்னீ மினல் முத்ததஹ்ஹிரீன் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். அவன் தனித்தவன், அவனுக்கு யாதோர் இணையுமில்லை. நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாராகவும் தூதராகவும் இருக்கின்றார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். இறைவா! என்னைப் பாவமீட்சி பெற்றவர்களுள் ஒருவனாகவும் தூய்மையாளர்களுள் ஒருவனாகவும் ஆக்குவாயாக-திர்மிதீ: 50) என்று கூறி இறைவனை நினைவுகூர்கிறார். தம் இறைநம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்கிறார்.  

 பிறகு தொழுகிறார்; மனமுருகிப் பிரார்த்தனை செய்கிறார். குர்ஆன் ஓதுகிறார். இறைத்துதி செய்கிறார். தொடர்ந்து இறைவனுக்குப் பிடித்த நற்செயல்களில் ஈடுபடுகிறார். அதன்பின் யாரேனும் முஸ்லிமைச் சந்திக்கின்றபோது, முகமலர்ச்சியோடு நோக்குகிறார். ஒரு முஸ்லிம் தம் சகோதரரைச் சந்திக்கின்றபோது முகமலர்ச்சியோடு சந்திப்பது அறம்'' (திர்மிதீ: 1879) என்ற நபிமொழியைச் செயல்படுத்துகிறார். அதன்பின் அவரோடு கைலாகு (முஸாஃபஹா) செய்து, “ஃகஃபரல்லாஹு லனா வலகும்'' (அல்லாஹ் எம்மையும் உம்மையும் மன்னிப்பானாக) என்று கூறி, இறைவனிடம் பாவமன்னிப்பைக் கேட்டுப் பெறுகிறார்.

அதன்பின் அவர் உண்ணுகிறார். உணவை உண்ணுமுன், “பிஸ்மில்லாஹி வஅலா பரக்கத்தில்லாஹ்என்று கூறி இறைவனை நினைவுகூர்கிறார். சாப்பிட்டு முடித்தபின், “அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ சகானா வஜஅலனா முஸ்லிமீன் (எங்களுக்கு உணவூட்டி, தண்ணீர் கொடுத்து, எங்களை முஸ்லிம்களாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்-திர்மிதீ: 3457) என்று கூறி இறைவனைத் துதிக்கிறார்.

பின்னர் உழைக்கச் செல்கிறார். பொருளை அளந்து கொடுக்கிறார். அளந்து கொடுக்கின்றபோது, “அளவு நிறுவையில் மோசடி செய்வோருக்குக் கேடுதான்என்ற இறைவசனத்தை நினைவுகூர்கிறார். எனவே எடைபோடும் போது நேர்மையாக எடைபோடுகிறார்; அளந்துகொடுக்கிறார்; இறைவனை அஞ்சுகிறார்.

பிள்ளைகளுக்காகவும் மனைவிக்காகவும் சம்பாதித்துக் கொடுப்பது அறம்என்ற நபிகள் நாயகத்தின் வாக்கை ஏற்று, சம்பாதிக்கச் செல்கிறார். எனவே அதுவும் அவருக்கு இபாதத்தாக ஆகிவிடுகின்றது.

பின்னர் வீட்டிற்குள் நுழையும்போது, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைரல் மவ்லஜி வ கைரல் மக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வ பிஸ்மில்லாஹி கரஜ்னா வ அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா (இறைவா! சிறந்த நுழைவிடத்தையும் சிறந்த வெளியேறுமிடத்தையும் நான் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரால் நாங்கள் நுழைகின்றோம்; அல்லாஹ்வின் பெயரால் புறப்படுகின்றோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் முற்றிலுமாகச் சார்ந்திருக்கிறோம்-அபூதாவூத்: 4432) என்று கூறிக்கொண்டே, வீட்டிலுள்ளோருக்கு முகமன் கூறி, நுழைகிறார். வீட்டில் பிள்ளைகளோடும் மனைவியோடும் அன்பாக நடந்துகொள்கிறார்.

பின்னர் ஆடை அணியும்போது, “அல்ஹம்து லில்லாஹில்லதீ கசானீ ஹாதஸ் ஸவ்ப வ ரஸக்கனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வஹ் (என் புறத்திலிருந்து எந்த ஆற்றலும் வலிமையும் இல்லாமல் இந்த ஆடையை எனக்கு வழங்கி, அணிவித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்-அபூதாவூத்: 3505) என்று கூறி இறைவனைத் துதிக்கிறார்.

தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, வீட்டைவிட்டுப் புறப்படுகிறார். அப்போது அவர், “பிஸ்மில்லாஹ், தவக்கல்த்து அலல்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த  இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்...நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். அல்லாஹ்வைக்கொண்டே தவிர என் புறத்திலிருந்து எந்த ஆற்றலும் வலிமையும் இல்லை-அபூதாவூத்: 4431) என்று கூறி, இறைவனை நினைவுகூர்ந்தவாறே புறப்பட்டுச் செல்கிறார். 

 பள்ளிவாசலுக்குள் நுழைகிறார். நுழையுமுன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முகமன் கூறியவாறு, “அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மத்திக (இறைவா! உன் அருட்கதவுகளை எனக்காகத் திறப்பாயாக) என்று ஓதுகிறார். இறைவனைத் தொழுகிறார்; துதிக்கிறார்; பிரார்த்தனை செய்கிறார். பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியே புறப்படுகிறார். அவ்வாறு புறப்படுகிறபோது, “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் ஃபள்லிக (இறைவா! உன் அருளை உன்னிடம் கேட்கிறேன்-அபூதாவூத்: 393) என்று ஓதுகிறார்.

திடீரெனத் தும்முகிறார். தும்மியபின் அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுகிறார். பிறர் தும்மி, “அல்ஹம்து லில்லாஹ்என்று கூறினால், “யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உனக்கு அருள்புரிவானாக-புகாரீ 6224) என்று கூறி இறைவனை நினைவுகூர்ந்து, அவருக்காகப் பிரார்த்தனை செய்கிறார்.

தம்முடைய வேலைகளுக்கிடையே யாரேனும் நாளைய விஷயத்தைக் கூறி, வருவீர்களா? செய்வீர்களா? என்று கேட்டால், “இன் ஷாஅல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று கூறி அல்லாஹ்மீதே பொறுப்பைச் சாட்டுகிறார்.

அவர் கண்ணாடியைப் பார்த்து, தன்னைச் சரிசெய்துகொண்டு தன் முகத்தை அழகாகப் படைத்த இறைவனுக்கு நன்றி கூறியவாறு, “அல்லாஹும்ம அஹ்சன்த்த கல்க்கீ, ஃபஅஹ்சின் குலுக்கீ (இறைவா! நீ என் தோற்றத்தை அழகாகப் படைத்துள்ளாய். -அதுபோலவே- என் குணத்தையும் அழகாக்கு-முஸ்னது அஹ்மத்: 3632) என்று ஓதுகிறார்.   
   
 அவர் எங்கேனும் பயணம் புறப்பட்டால், “சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன் (நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலையில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம்-முஸ்லிம்: 2612) என்று கூறுகிறார்.

அவர் தம் பயணத்திலிருந்து திரும்பி வரும்போது, “ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்'' (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்) என்றோதி இறைவனை நினைவுகூர்கிறார்.

ஆக எல்லா நேரமும் இறைவனை நினைவுகூர்ந்த அவர், இரவு உணவு உண்டுவிட்டுத் தம் மனைவியோடு ஊடல்கொள்ளுமுன், “பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மிம்மா ரஸக்தனா (அல்லாஹ்வின் திருப்பெயரால்... இறைவா! ஷைத்தானை எங்களைவிட்டு விலகியிருக்கச் செய்! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்!-புகாரீ: 141) என்று பிரார்த்தனை செய்து அல்லாஹ்வை நினைவுகூர்கிறார்.

இவை எல்லாவற்றையும் தாண்டி, அவர் தம் அன்றாட வாழ்வில் பிறரை நன்மை செய்யுமாறு தூண்டுவதும் தீமையைக் கைவிடுமாறு அறிவுரை பகர்வதும் அறமே. அவர் தம் இறைவனை நினைத்து, சுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்,  அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ் என்று துதிப்பதும் அறச் செயலே ஆகும்.  அவர் தம் மனைவியிடம் உறவுகொள்வதும் தர்மமே ஆகும். (நூல்: முஸ்லிம்: 1832) 

இவ்வாறு மனிதன் தன் ஒவ்வொரு பொழுதையும் வீணாக்கிவிடாமல் இறைவனை நினைத்து வாழ்வதற்கான எல்லா வழிகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்க, நாமோ நம் நேரங்களை வீணடிக்கிறோம். சிலர் ஐவேளை தொழுவதோடு நிறுத்திக்கொள்கின்றனர். சிலர் வெள்ளிக்கிழமை தொழுவதோடு நிறுத்திக்கொள்கின்றனர். மிகச் சிலர் இரண்டு பெருநாட்களில் தொழுவதோடு முடித்துக்கொள்கின்றனர். மிகச் சிலர் அதுவும் இல்லை. இதுதான் நம் சமுதாயத்தின் இன்றைய நிலை.

இந்நிலை மாறி, நாம் வாழும் ஒவ்வொரு பொழுதையும் இறைவழிபாடாக மாற்றியமைப்போம். அதற்கு நாம் நம் எண்ணத்தை முதலில் தூய்மைப்படுத்துவோம். ஒவ்வொரு கணமும் இறைவனை நினைத்து வாழத் தொடங்குவோம். ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய பிரார்த்தனையை ஓதி இறைநினைவோடு நீடித்திருக்க ஆர்வம்கொள்வோம். இருபத்து நான்கு மணி நேரத்தையும் வழிபாடாக மாற்றியமைக்க முயல்வோம். 
============================================








கருத்துகள் இல்லை: