வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

இனாம்குளத்தூர் இஜ்திமா!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஈமானைப் பாதுகாப்பதற்கும் தொழாதோரைத் தொழ அழைப்பதற்கும் கூடுகின்ற மாநாடு என்ற முழக்கத்தோடு கடந்த மாதம் மூன்று நாள்கள் இனாம் குளத்தூரில் தப்லீஃக் மாநாடு நடைபெற்றது. அதில் பத்து இலட்சம் பேர் கலந்துகொண்டதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு மாதங்களாக மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளைச் செய்து, மாபெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாட்டில் பத்து இலட்சம் பேர் கலந்துகொண்டிருக்கின்றார்கள் என்றால் அது மிகவும் பாராட்டத்தக்கது. ஏனென்றால் இதில் கலந்துகொண்ட மக்களுக்கு, அல்லாஹ்வின் அன்பைப் பெறுதல் தவிர வேறெந்த நோக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. காலம் காலமாகத் தொழுகைக்கு அழைத்துக்கொண்டிருக்கின்ற ஒரு குழுவினர், நாமும் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்ற நன்னோக்கத்தில்தான் நம்மையும் அழைக்கிறார்கள் என்ற செய்தி அவர்களின் மனங்களில் பதிந்துபோய்விட்டதால்தான் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் தியாக மனப்பான்மையோடு முஸ்லிம்கள் பலர் மூன்று நாள்களை அங்கே கழித்திருக்கின்றார்கள்.

பொதுவாக ஒவ்வோர் இயக்கத்தாருக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. அந்தந்த இயக்கத்தினர் தத்தம் குறிக்கோளைத்தான் மாநாட்டில் செயல்படுத்துவார்களே தவிர பிற இயக்கத்தினர் தத்தம் மனங்களில் நினைப்பதையெல்லாம் நிறைவேற்ற முடியாது. அது சாத்தியமுமில்லை. இம்மாபெரும் மாநாட்டைக் கண்டு வியந்துபோன பலர் தத்தம் விமர்சனங்களை வெவ்வேறு கோணங்களில் முன்வைக்கின்றார்கள்.  

"மிக அருமையான நீர் மேலாண்மை; சிறப்பான உணவு மேலாண்மை; சேவைகள் செய்ய நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள்; பத்து இலட்சம் பேர் கலந்துகொண்ட மாநாடு. எல்லாம் சரிதான். ஆனால் என்ன பேசினார்கள், தேசிய, பன்னாட்டு அளவில் முஸ்லிம் சமுதாயம்  எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதா''  என்று ஒருவர் தமது முகநூல் பக்கத்தில் விமர்சனம் எழுதுகிறார்.  

தமிழகமெங்கும் ஃப்ளெக்ஸ் விளம்பரங்களோ தொலைக்காட்சி விளம்பரங்களோ, ஊர் ஊராக மாநாட்டுக்காக நன்கொடை வசூலித்தலோ எதுவுமின்றிப் பத்து இலட்சம் பேர் கூடுகிறார்கள் என்றால், பொதுமக்கள் அழைப்போரின் உயர்எண்ணத்தைப் புரிந்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.  இதன்மூலம் அவர்கள் அரசியல் ஆதாயத்தையோ இன்னபிற ஆதாயங்களையோ நாடவில்லை. மாறாக நம்மையும் தொழுகையாளிகளாக மாற்றவே முயற்சி செய்கிறார்கள் என்பதைப் புரிந்துள்ளார்கள்.  அதனால்தான் எந்த விளம்பரமும் இல்லாவிட்டாலும் செய்தியைக் கேள்விப்பட்டு, மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள் மக்கள். "நன்மையை ஏவுவதும் தர்மம் ; தீமையைத் தடுப்பதும் தர்மம்'' என்ற நபிமொழியின் அடிப்படையில்தான் தப்லீஃக் இயக்கத்தினர் செயல்படுகிறார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். வெளியில் நின்றுகொண்டு ஆயிரமாயிரம் விமர்சனங்கள்  செய்யலாம். ஆனால் தொழாத ஒருவனைத் தொழவைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, விமர்சனம் செய்வோர் களத்தில் இறங்க வேண்டும். 

 தப்லீஃக் இயக்கத்தினர் களத்தில் இறங்கி, வீடு வீடாகச் சென்று தொழுகைக்கு அழைக்கப் புறப்பட்டதால்தான் பட்டிதொட்டியெல்லாம் இன்று தொழுகையாளிகள் மிகுந்துள்ளனர். இது மிகையான செய்தி ஒன்றும் கிடையாது. விமர்சனம் செய்வோர் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்த இயக்கத்தைத் தோற்றுவித்தவரும் ஓர் ஆலிம்தான். ஆலிம்கள் மூலமே எல்லா நலப் பணிகளும் தொடங்கியுள்ளன என்பதை மறந்துவிடலாகாது. இந்திய விடுதலைப்போருக்காக மக்களை ஒன்று கூட்டியதுமுதல் இறைவனை அடைவதற்கான பாதையைக் காட்டியது வரை எல்லாம் ஆலிம்களே ஆவர். தப்லீஃக் குறித்து விமர்சனம் செய்வோர் ஆலிம்களாக இருந்தால், அவர்கள் தம்மைத்தாமே குறைகூறிக்கொள்கிறார்கள் என்றுதான் பொருள்.  

இந்த மாநாட்டில் தமிழக முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள், அரசியல் உரிமைகள், சமூக நல்லிணக்கச் செயல்பாடுகள், அதிகாரப் பகிர்வுகள், அரசுக்கான கோரிக்கைகள் போன்றவை குறித்து எதுவுமே இல்லை என்பது ஏமாற்றமே. இந்த மூன்று நாள் இஜ்திமாவிற்கு, கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்குமேல் செலவாகி இருக்கிறது. இந்தச் செலவில் முஸ்லிம் பொறியியல் கல்லூரிகள், மகளிர் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை அமைத்திருந்தால் ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான வழி கிடைத்திருக்கும். அவற்றிற்கு தப்லீஃக் அமைப்பினர் தமக்குப் பிடித்த பெயரை வைத்து அவர்களேகூட நிர்வாகம் செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இந்த மூன்று நாள் மாநாட்டின் நன்மைகளைவிடக் கூடுதலான, நிலையான நன்மைகள் நம் மக்களுக்குக் கிடைத்திருக்கும் என்று ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். 

கூடினார்கள் உண்டார்கள் கலைந்தார்கள் என மிகச் சுருக்கமாக விமர்சனம் செய்தோரும் உண்டு. கூடினால் கலையத்தான் வேண்டும். வயிற்றுப் பசிக்கு உண்ணத்தான் வேண்டும். இதுவெல்லாம் இயல்பானதுதானே? இது இங்கு மட்டும் அல்லவே. எல்லா இடங்களிலும் கூடினால் கலையத்தான் செய்வார்கள். பசிக்கு உண்ணத்தான் செய்வார்கள். ஆனால் அங்கு கூடியோர் ஐவேளைத் தொழுகையைக் கூட்டாக  நிறைவேற்றியதும், ஆன்மிக உரைகளைக்  கேட்டதும், இறைவனை அவன் கற்பித்த துதிச் சொற்களால் புகழ்ந்ததும் கவனிக்கத்தக்கவையாகும். அதுவே அங்கு கூடியோர் பெற்ற பயன்களும் பலன்களும் ஆகும்.  

பலரும் களப்பணியாற்றும் இக்காலத்திலும் இன்னும் ஏராளமானோர் இஸ்லாமிய ஏகத்துவக் கலிமா தெரியாமல் இருக்கின்றார்கள். அதன் பொருளை உணராமல் இருக்கின்றார்கள் என்பது வியப்பிலும் வியப்பு.  அது மட்டுமா, இஸ்லாமியக் கடமைகளை விட்டுவிட்டு, மூடப்பழக்கங்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய தருணத்தில் தொழுகைக்கு அழைக்கின்ற இச்சீர்திருத்தப் பணியும் கைவிடப்பட்டுவிட்டால் மக்களின் நிலை என்னவாகும்? குறைகூறுவோர் சிந்திக்க வேண்டாமா?

ஏன், இச்சீர்திருத்தப் பணியால் எத்தனையோ பேர் அல்லாஹ்வை உணர்ந்து, அவனுக்கு அஞ்சி வாழத் தொடங்கியுள்ளார்கள். மதுவில் மூழ்கியிருந்த எத்தனையோ பேர் அப்பழக்கத்தைக் கைவிட்டு, இன்று நல்ல முறையில் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். குர்ஆன் ஓதத் தெரியாமல் இருந்த பலர் திருக்குர்ஆனின் சிறப்புகளைக் கேட்டறிந்து, திருக்குர்ஆனை அரபிமொழியில் ஓதக் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள். மார்க்கக் கல்வியே மகத்தானது என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு தம் பிள்ளைகளை ஆலிம்களாக, ஹாஃபிழ்களாக உருவாக்கியிருக்கின்றார்கள். இப்படி எத்தனையோ நன்மைகள் இச்சீர்திருத்தப் பணியால் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும் அறியும்போது இப்பணியை நாம் வரவேற்பதில் தவறில்லை. அதேநேரத்தில் இச்சீர்திருத்தப்பணியை மேற்கொள்வோர் சிலர் தவறு செய்யலாம். அல்லது கொள்கைக்கு முரணாகப் பேசலாம். அதுவெல்லாம் அந்தந்தத்  தனிமனிதத் தவறுகளே ஆகும். அதற்கு அவர்களே பொறுப்பாளர்கள் என்பதையும் நாம் எச்சரிக்கையாகக் கூறிக்கொள்கிறோம். பொத்தாம் பொதுவாக, இப்பணி தவறானது என்று எப்பணியையும் கூற முடியாது.   

அதாவது ஒவ்வோர் இயக்கத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு. அந்தந்த இயக்கத்தினர் தத்தம் குறிக்கோளை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஓர் இயக்கத்தினர் செய்வதை மற்றோர்  இயக்கத்தாரிடம் காண முடியாது. ஏனெனில் அவர்களின் நோக்கமும் குறிக்கோளும் வேறாக இருக்கும். ஆக முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறு இயக்கங்கள் உள்ளன. ஒவ்வோர் இயக்கத்தாரும்  இஸ்லாமியச் சமுதாயத்திற்கு ஏதாவதொரு வகையில் சேவை செய்து நன்மையைப் பெற வேண்டும் என்பதற்காகவே களப்பணியாற்றுகின்றார்கள். எல்லோருடைய நோக்கமும் ஒன்றுதான். எனவே நாம் ஒவ்வோர் இயக்கத்தாரும் செய்யும் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதை நிறுத்திவிட்டு, அவர்கள் சமுதாயத்திற்கு என்னென்ன நன்மைகளைச் செய்கிறார்கள் என்பதை மட்டும் பார்த்து, மகிழ்ச்சியடைவோம். இயன்றால் நாமும் ஏதாவது இயக்கத்தில் இணைந்து செயல்படுவோம். இல்லையேல் அமைதி காப்போம். அதுவே நாம் இச்சமுதாயத்திற்குச் செய்யும் நன்மையாகும். 
=========================================





கருத்துகள் இல்லை: