திங்கள், 18 டிசம்பர், 2017

எங்கிருந்தும் நபிகளாருக்கு ஸலாம் உரைக்கலாம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைச் சந்திக்கின்றபோது கூறும் முகமன் "அஸ்ஸலாமு அலைக்கும்ஆகும். "அல்லாஹ்வின் சாந்தி உன்மீது உண்டாகட்டும்!' என்பது இதன் பொருள். இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தந்துள்ள மிக முக்கியமானவற்றுள் இதுவும் ஒன்று. இதை ஒருவருக்கொருவர் கூறிக்கொள்வதால் அவர்கள் மத்தியில் அன்பு மலர்கிறது என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதற்குப் பதிலளிக்குமுகமாக "வ  அலைக்கும் ஸலாம்' (உன்மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்!) என்று கூறுவது மரபு.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (எவரேனும்) உங்களுக்கு "முகமன்' கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான். (4: 86) இந்த இறைவசனத்தின் அடிப்படையில் அதே வாக்கியத்தை அப்படியே திருப்பிக் கூறலாம். அல்லது அதைவிடச் சிறந்த வாக்கியத்தைத் திருப்பிக் கூறலாம். ஆனால் கூடுதல் வார்த்தைகளுக்குக் கூடுதல் நன்மை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதற்கான சான்றாகப் பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது. இம்ரான் பின் ஹுஸைன் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "அஸ்ஸலாமு அலைக்கும்' என்று முகமன் கூறிவிட்டு அமர்ந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்துவிட்டு, "பத்து' என்று கூறினார்கள். பின்னர் மற்றொருவர் வந்து, "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்' என்று முகமன் கூறிவிட்டு அமர்ந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்துவிட்டு, "இருபது' என்று கூறினார்கள். பின்னர் மற்றொருவர் வந்து, "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு' என்று முகமன் கூறிவிட்டு அமர்ந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்துவிட்டு, "முப்பது' என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 4521)

அல்லாஹ்வே நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள்மூலம் முகமன் கூறி அனுப்பியதும் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களின் மனைவி ஆயிஷா (ரளி) அவர்களுக்கு நபியின்மூலம் முகமன் கூறியதும் நபிமொழித் தொகுப்பு நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஏன், அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தபின் அவரை வானவர்களிடம் அனுப்பி, அவர்களுக்கு "அஸ்ஸலாமு அலைக்கும்' எனக் கூறுமாறு கட்டளையிட்டான். அவர் சென்று முகமன் கூறியதும் அவர்கள்,  "வ  அலைக்கஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்' என்று பதிலளித்தார்கள். "இதுவே உம்முடையவும் உம்முடைய பிள்ளைகளுடையவும் முகமன்'' ஆகும் என்று அல்லாஹ் கூறினான். (நூல்: திர்மிதீ: 3290) ஆக மனிதப் படைப்பின் தொடக்கத்திலிருந்தே தொடங்கியுள்ளது முகமன் கூறும் பழக்கம்.
இப்பழக்கம் மரணத்திற்குப் பின்னும் தொடர்கிறது. ஆம், மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டுத் துயில்கொள்ளும் மண்ணறைவாசிகளைத் தரிசனம் (ஸியாரத்) செய்யச் செல்லும் மனிதர்கள் அவர்களுக்கு முகமன் கூற வேண்டும். அதற்கு அவர்கள் பதிலளிக்கிறார்கள்.

மண்ணறையை ஸியாரத் செய்யும் (பார்க்கும்) போது என்ன ஓத வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் "இந்த துஆவை ஓது'' எனக் கூறினார்கள்: "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியார் மினல் முஃமினீன வல்முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் ல லாஹிகூன்- இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள முஃமின்கள், முஸ்லிம்கள் மீது சாந்தி உண்டாகட்டும். நம்மில்  முந்திச் சென்றோருக்கும் (உங்களுக்கும்) பிந்தியோருக்கும் (எங்களுக்கும்) அல்லாஹ் அருள்புரிவானாக. அல்லாஹ் நாடினால் உங்களோடு நாங்களும் (விரைவில்) சேருவோம்'' என்ற செய்தியை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்: 1774)
நாம் ஒவ்வொரு தடவை தொழுகின்ற போதும் நபி (ஸல்) அவர்களுக்கு முகமன் கூறுகின்றோம். ஆம், அத்தஹிய்யாத் ஓதும்போது "அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு-நபியே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக''-என்று கூறுகின்றோம்.

ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும்போதுதான் முகமன் கூறவேண்டுமென்பதில்லை. ஒருவர்  ஒரு குறிப்பிட்ட ஊருக்கோ மாநிலத்திற்கோ பயணம் புறப்படும்போது நமக்குத் தெரிந்தவர் அங்கு இருந்தால், "அவரைச் சந்திக்கின்றபோது என் ஸலாமை அவருக்குத் தெரிவியுங்கள்'' என்று முகமன் கூறி அனுப்புவதும் நபிவழிதான். இவ்வாறு பக்கத்து ஊரில் உள்ளவருக்கோ அண்டை நாட்டில் உள்ள உறவினருக்கோ நண்பருக்கோ முகமன்  சொல்லி அனுப்புவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்காலத்தில், எங்குள்ளவரையும் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும் என்பதால் அவ்வாறு ஸலாம் கூறி அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட ஆளிடம் தொலைத் தொடர்புச் சாதனம் இல்லையென்றால், அவரைச் சந்திக்கச் செல்கின்ற ஆளிடம்  முகமன் கூறி அனுப்பலாம்.

பிறருடைய ஸலாமை நம்மிடம் சொல்பவரிடம், "அலைக்க வ அலைஹிஸ் ஸலாம் (உன்மீதும் அவர்மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக)'' என்று பதில் சொல்ல வேண்டும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். ஸலாம் சொன்னவரும் நம்மிடம் வந்து சொல்பவரும் பெண்ணாக இருந்தால், "அலைக்கி வ அலைஹஸ் ஸலாம்'' என்று பதிலளிக்க வேண்டும்.

நம்முள் யாராவது, நான் ஹஜ்ஜுக்குப் போகிறேன் என்றோ உம்ராவுக்குப் போகிறேன் என்றோ  சொன்னால், "எங்களுக்காக துஆச் செய்யுங்கள், மதீனா செல்லும்போது, நபி (ஸல்) அவர்களுக்கு என்னுடைய ஸலாமைத் தெரிவியுங்கள்'' என்று வேண்டுகோள் விடுப்பதைக் கேள்விப்பட்டுள்ளோம். துஆச் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்வது சரிதான். அதேநேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாமைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இவ்வாறு கேட்டுக்கொள்வது மற்றவர்களைப் பொறுத்த வரை சரிதான். நபி (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை அவர்களின் சமுதாயத்திற்கு அத்தகைய ஒரு சிரமத்தை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.

ஈருலகத் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஸலாம் கூற ஆசைப்படுவார்கள். அப்படியிருக்க எல்லோரும் அவர்களின் சமூகம் சென்று நேரடியாக ஸலாம் உரைக்க இயலாமல் போய்விடலாம். பயணம் செல்லும் வாய்ப்பும் கிடைக்காமல் போகலாம். அப்போது அவர்களின் ஆசை நிராசையாகிவிடலாம் என்ற காரணத்தைக் கணக்கில்கொண்டுதான், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூற நினைப்பவர் எங்கிருந்துகொண்டும் அதை உரைக்கலாம்.  அதை அவர்களின் சமூகம் சமர்ப்பிப்பது தனது கடமையாக அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான். எனவே போவோர் வருவோரிடம் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறி அனுப்ப வேண்டிய சிரமத்தை அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு ஏற்படுத்தவில்லை.

இது குறித்துத் தெளிவாக விளக்கிச் சொல்கின்ற நபிமொழியைப் படியுங்கள்: "(உலகைச்) சுற்றிவரும் வானவர்கள் அல்லாஹ்வுக்கு உள்ளார்கள். அவர்கள் என் சமுதாயத்தினர் சொல்கின்ற ஸலாமை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார்கள். நான் உயிரோடிருப்பது உங்களுக்கு நல்லது. நீங்கள் (என்னிடம்) பேசுகின்றீர்கள். நாம் உங்களோடு பேசுகிறோம். என் மரணமும் உங்களுக்கு நல்லதுதான். (ஏனென்றால்) உங்களின் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றன. (என் சமுதாயத்தாராகிய உங்களின்) நன்மைகளைப் பார்த்தால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்வேன். தீமைகளைப் பார்த்தால் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவேன்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்னதுல் பஸ்ஸார்: 1925)
"உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களைப் போல் ஆக்காதீர்கள். என்னுடைய அடக்கத்தலத்தை கொண்டாடும் இடமாக ஆக்காதீர்கள். என்மீது ஸலவாத் கூறுங்கள். திண்ணமாக உங்கள் ஸலவாத்-நீங்கள் எங்கிருந்தாலும்-(வானவர்கள்மூலம்) என்னை வந்தடைகிறது'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 1746)

ஆகவே ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர் நபி (ஸல்) அவர்கள்மீது கூறும் ஸலாமையும் ஸலவாத்தையும் வானவர்கள் நபியவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுகின்றார்கள். எனவே நபி (ஸல்) அவர்களுக்காகப் பிறரிடம் ஸலாம் சொல்லி அனுப்பத் தேவையில்லை. அது பிற மனிதர்களுக்குத்தான் பொருந்தும் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மூலம் நாம் தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
==============================================கருத்துகள் இல்லை: