புதன், 13 டிசம்பர், 2017

படிக்காதவர்கள் படும்பாடு!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

படிப்பறிவில்லாதவர்கள் இப்பாரினில் படும்பாடு சொல்லிமாளாது. பார்த்துப் படிக்கத் தெரியாமலும் தம்முடைய பெயரை எழுதத் தெரியாமலும் சிரமப்படுகின்றார்கள். படிப்பறிவில்லாததால் தம்முடைய பெயரைச் சரியாகப் பிறருக்குத் தெரிவிக்க முடியாமல் போவதும், அதனால் அவர்களுடைய ஆவணங்களில் பெயர் தவறாகப் பதிவுசெய்யப்படுவதும் உண்டு. அதன் காரணமாக அவர்கள் அப்பெயரைச் சரிசெய்வதற்காக இங்குமங்கும் அலைய வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். அவர்கள் செல்லுமிடமெல்லாம் அலைக்கழைக்கப்படுகின்றார்கள். 


படிப்பறிவில்லாதவர்கள் தம் இளமைக் காலத்தில் ஏதோ ஓர் அடிமட்ட அளவில் வேலை செய்து தம் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதில் காலத்தைக் கழித்துவிடுகின்றனர். ஆனால் தம் முதுமைக் காலத்தில் மிகுந்த சிரமப்படுகின்றனர். வேலையும் செய்ய முடியாது; தேவையான சேமிப்பும் இருக்காது. உணவிற்காகத் தம் உறவுகளை ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்படுகிறது. வீட்டிற்குப் புதிதாக வந்துள்ள மருமகள் தன் விருப்பப்பட்ட நேரத்திற்குத் தருகின்ற உணவை உண்டு ஓர் ஓரத்தில் ஒதுங்கிக்கொள்ள வேண்டிய நிலையில் பலர் உள்ளனர். 


வயதானவர்கள் ஆரோக்கியமாக இருக்கும் வரை சிக்கல் இல்லை. ஏதேனும் நோய் வந்துவிட்டால் அவர்களுக்கான மருத்துவச் செலவுக்குத் திண்டாட்டம்தான். மகன்கள் சிலர் நல்லமுறையில் கவனித்துக் கொண்டாலும், பலர் வயதான தம் பெற்றோரைக் கவனித்துக்கொள்வதில்லை. அதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றார்கள். 


இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் படிக்கத் தெரியாதவர்கள் தம் முதுமைக் காலத்தில் வேறொரு வகையில் மிகுந்த சிரமப்படுகின்றார்கள். எஞ்சிய காலத்தை எவ்வாறு கழிப்பது என்பதுதான் அவர்களுக்கு முன்னுள்ள மிகப்பெரும் கேள்வி. படிக்கத் தெரிந்தவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான நூல்களைப் படித்தே எஞ்சிய காலத்தை எளிதாகக் கழித்துவிடலாம்; திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தவர்கள் அதனை ஓதுவதிலும் அதன் மொழிபெயர்ப்பைப் படிப்பதிலும் காலத்தைக் கழிக்கலாம். ஆனால் படிக்கவோ ஓதவோ தெரியாதவர்கள் தம் நேரத்தை வீணாகக் கழிப்பதைத் தவிர வேறு வழி தேடுவதில்லை.
அவர்கள் தம் வயதொத்த முதியவர்கள் கிடைத்தால் கடந்த கால அனுபவங்களைப் பேசுவதிலும் அரட்டையடிப்பதிலுமே காலத்தைக் கழிக்கின்றார்கள்; அல்லது தம் வீடுகளில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலேயே பொழுதைக் கழிக்கின்றார்கள். நன்மையைச் சேர்ப்பதற்கான மாற்று வழியைத் தேடுவதில்லை. 


இளமைக் காலத்தில் நன்றாகப் படித்திருந்தால், மஸ்ஜிதுகளில் நடைபெற்று வருகின்ற பாலர் வகுப்புகளுக்குச் சென்று திருக்குர்ஆனை ஓதக் கற்றிருந்தால், ஓய்வாக உள்ள முதுமைக் காலத்தில் திருக்குர்ஆனை ஓதி நன்மையைச் சேர்ப்பதிலேயே காலத்தைக் கழித்திருக்கலாமே என்று அவர்களுள் சிலர் எண்ணலாம். நாம் நம்முடைய சிறுபிராயத்தையும் இளமைக் காலத்தையும் வீணடித்துவிட்டோமே என்று எண்ணிப் பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சும். “படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக” எனும் இறைவசனம் படிப்பைக் கற்றுக்கொள்ளவே வலியுறுத்துகிறது. அல்லாஹ்வின் முதல் கட்டளையையே முறையாகக் கடைப்பிடிக்காமல் அலட்சியப்படுத்திவிட்டதால் இப்போது முதுமைக் காலத்தில் சிரமப்பட வேண்டியுள்ளது என்று பலர் எண்ணலாம். 

இத்தகைய முதியோர்களைப் பார்க்கின்ற இளைஞர்களுக்கு அவர்களில் ஒரு பாடம் இருக்கிறது. இளைஞர்கள் தம் இளமைக் காலத்திலேயே திருக்குர்ஆனைப் பார்த்து ஓதக் கற்றுக்கொண்டால்தான் அவர்கள் தம் முதுமைக் காலத்தில் அதனை ஓதுவதில் ஈடுபட்டு, நன்மையைச் சேர்த்துக்கொள்வதோடு நிம்மதியாகத் தம் ஓய்வுநேரத்தைக் கழிக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லையேல் முதுமையைக் கழிப்பது பெரும்பாடுதான்.  


படிக்கத் தெரியாதவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்று, முதுமையின் வாசலில் அடியெடுத்து வைத்துள்ள அவர்கள் தற்போது முயன்றாலும் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளலாம். முழுமையாகக் கற்றுக்கொள்ள இயலாவிட்டாலும் அந்த முயற்சியிலேயே காலத்தைக் கழிக்கலாம் அல்லவா?


“(மனிதர்கள்) நல்லுணர்வு பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனை, நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்திருக்கின்றோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்வு பெறுபவர்கள் உண்டா?” (54: 40) என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கேட்கிறான். இதனைப் படிக்க, ஓத, கற்றுக்கொள்ள, புரிந்துகொள்ள, மனனம் செய்ய-ஆகிய அனைத்திற்கும் எளிதாகவும் இலகுவாகவும் அல்லாஹ் அமைத்துள்ளான். எனவே இப்போது முயன்றாலும் குறிப்பிட்ட காலத்தில் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொண்டுவிடலாம் என்பதுதான் உண்மை.


கற்றுக்கொள்ள இயலாதவர்களுக்கு அல்லாஹ் வேறொரு வழியைக் காட்டியுள்ளான். வாயை ஒன்று என அமைத்த இறைவன், காதுகள் இரண்டைக் கொடுத்துள்ளான். ஆகவே திருக்குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்டுக் கேட்டே நன்மைகளைச் சம்பாதிக்கலாம்.  “(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி  அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள்” (7: 204) என அல்லாஹ் கூறுகின்றான். 

ஆகவே யாரேனும் திருக்குர்ஆன் ஓதினால் அதனைச் செவிதாழ்த்திக் கேட்க வேண்டும்; பிறரை ஓதச் சொல்லிக் கேட்க வேண்டும்.  அல்லது தற்காலத்தில் எல்லோர் கையிலும் உள்ள செல்பேசியில் திருக்குர்ஆன் ஓதல் பதிவுகளைச் சேமித்து வைத்துக்கொண்டு அதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கலாம். இதனால் வெறுமையான முதுமைக் காலம் இனிமையாகக் கழிவதோடு மனதுக்கு நிம்மதியும் ஏற்படும்; நன்மையும் பெருகும். 


அதையும் தாண்டி மற்றொரு வழியையும் அல்லாஹ் ஏற்பாடு செய்து வைத்துள்ளான். அதற்கு எந்தப் பொருளும் பணமும் தேவையில்லை. எங்கும் செல்லத் தேவையில்லை. இருந்த இடத்திலிருந்தே நன்மையைச் சம்பாதிக்கலாம். அதுதான் இறைக்கீர்த்தனை-திக்ர் ஆகும். படைத்த இறைவனை எப்போதும் நினைவுகூருமுகமாக, சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், அஸ்தஃக்ஃபிருல்லாஹ், யா ரஹ்மான், யா ரஹீம் உள்ளிட்ட அல்லாஹ்வின் தொண்ணூற்றொன்பது பெயர்களையும் திரும்பத் திரும்பத் துதித்துக்கொண்டிருக்கலாம்.

 இது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்: (இறைநம்பிக்கைகொண்டோரே!) நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும், ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். (4: 103)


முதுமைக் காலத்திலும் நன்மைகளை ஈட்டிக்கொள்ள, மறுமை வாழ்க்கையை மேலானதாக ஆக்கிக்கொள்ள இத்தனை வழிகள் இருந்தும், வயதான ஆண்களும் பெண்களும் தம் குடும்பங்களில் பிரச்சனையை உண்டாக்குவதிலும் சிக்கல்களை ஏற்படுத்துவதிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மை. முதுமைக் காலத்துப் பெண்கள் தம் மருமகள்களோடு சண்டை போடுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றார்கள்; வயதான ஆண்கள் வெட்டிப் பேச்சு பேசுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றார்கள். இதை நீங்கள் ஊர்கள்தோறும் காணலாம். 


எனவே படிக்காதவர்கள்கூடத் தம் முதுமைக் காலத்தில் நன்மைகளைச் சேர்த்துக்கொள்வதற்கான வழியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளதைக் கவனத்தில்கொண்டு, இனி எஞ்சியுள்ள காலங்களை வீணடித்துவிடாமல் நன்மைகளைச் சேர்த்து மறுமை வாழ்க்கையை மேலானதாக ஆக்கிக்கொள்வதற்கான வழிகளைத் தேட  வேண்டும். “நம்மால் பிறருக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படக் கூடாது” என்ற எண்ணம் வயதானவர்கள் உள்பட அனைவருக்கும் வேண்டும். திருக்குர்ஆன் ஓதுதல், கேட்டல், இறைவனைத் துதிப்பதில் ஈடுபடுதல் உள்ளிட்ட நன்மைகளைச் செய்ய முதியோர்கள் முன்வருவார்களா? அவர்கள் தம் எஞ்சிய காலத்தை வீணாக்கும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்களா?

==================================================







 
   

கருத்துகள் இல்லை: