ஞாயிறு, 19 மார்ச், 2017

யார் நல்லவர்?


-முனைவர் மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உலகத்தில் நல்லவரைக் காண்பதே அரிதாக உள்ளது என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருக்கின்றார். ஒவ்வொருவரும்,  "நான் நல்லவனா?' என்று கேட்டுக்கொண்டு, தம்மைச் சீர்திருத்திக்கொண்டால் எல்லோரும் நல்லவர்களாக மாறிவிடுவார்கள். ஒவ்வொருவரும் பிறந்தபோது நல்லவராகவே பிறந்தார். அவரவர் பெற்றோரின் வளர்ப்பு, சூழ்நிலை, நட்பு-இவையே ஒருவர் தொடர்ந்து நல்லவராக நீடிப்பதற்கும் தீயவராக மாறுவதற்கும் அடிப்படைக் காரணம் ஆகும்.

ஒவ்வொருவரும் நல்லவரே. தீயவராக இருப்பது தற்காலிக நிகழ்வுதான். உலகிலுள்ள எல்லோருமே நல்லவராகத் திகழ வாய்ப்புண்டு. ஆனால் உலகிலுள்ள எல்லோருமே தீயவராக மாற வாய்ப்பில்லை. ஏனென்றால் மனிதன் இயல்பிலேயே நல்லவனாகத்தான் படைக்கப்பட்டுள்ளான். தீயவனாக மாறுவது தற்காலிகமானதுதான். ஆகவே ஒவ்வொருவரும் நல்லவராக மாற நூறு சதவிகித வாய்ப்புண்டு. ஆனால் அதற்கு அவர் தம்மை முழுமையாக மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். அவ்வளவுதான்.

ஒருவன் நல்லவனாகவும் தீயவனாகவும் மாற பெற்றோரின் வளர்ப்பு முக்கியப் பங்காற்றுகிறது.  பெற்றோர் தம் பிள்ளைகளை வளர்க்கின்றபோது நல்ல பண்புகள், நல்ல பழக்க வழக்கங்கள், நீதிபோதனைகள், அறநெறிகள் முதலானவற்றைக் கற்பிக்க வேண்டும். பாடுபட்டு வளர்க்கின்ற பெற்றோரின் பிள்ளைகள் நல்லவர்களாகவே நீடித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய நல்ல பிள்ளைகள்தாம் இச்சமுதாயத்திற்குத் தேவை.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்குத் தவறான பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுத்தால் அல்லது பெற்றோரே கெட்டவர்களாக இருந்தால் அவர்களின் கெட்ட பழக்கம் அவர்கள்தம் பிள்ளைகளிடமும் ஒட்டிக்கொள்ளும். அதன்பின் பொய்பேசுவதும், வாக்கு மாற்றம் செய்வதும், பிறரை ஏமாற்றுவதும், அநியாயம் செய்வதும் அவர்களின் பழக்கமாக மாறிவிடும். அவர்கள் தீயவர்கள் எனும் பட்டியலில் இடம்பிடித்துவிடுவார்கள். 

இரண்டாவது ஒருவன் நல்லவனாக நீடிக்கவும் தீயவனாக மாறிப்போகவும் சூழ்நிலை முக்கியப் பங்காற்றுகிறது. "மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி'' என்று கூறுவார்கள். என்னதான் பெற்றோர் நல்லவர்களாக இருந்து நல்ல நல்ல பழக்கங்களை ஊட்டி வளர்த்தாலும் அவனைச் சுற்றியுள்ள சூழ்நிலை அவனைக் கெட்டவனாக மாற்றிவிடுகிறது. ஒருவன் இலஞ்சம் வாங்குவதும், பொய் சொல்வதும், தீய பழக்கங்களுக்கு அடிமையாவதையும் சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது. சூழ்நிலைதான்  ஒருவனைக் கொலை செய்யத் தூண்டுகிறது. சூழ்நிலைதான் ஒருவனை வன்புணர்வுக்குத் தூண்டுகிறது. எனவே ஒருவன் தன் சூழ்நிலையை நல்லதாக ஆக்கிக்கொள்ள முனைய வேண்டும்.  தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.   அது குறித்து நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் ஏராளமாக உள்ளன.

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியதாவது: "ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்தப் பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இல்லாமல் பயணம் செய்ய வேண்டாம்'' என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 3006)

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனிமையாய் இருக்கும்போது தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்கிறான். ஒரு பெண் தனிமையில் பயணம் செய்யும்போது தவறு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்கிறாள் அல்லது பிறருக்கு அத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்கிறாள்.
சூழ்நிலைதான் ஓர் ஆணையோ ஒரு பெண்ணையோ தவறு செய்யத் தூண்டுகிறது. எனவே அத்தகைய சூழ்நிலையைத் தவிர்த்துக்கொள்ள நம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்ய வேண்டும்.      அதைத்தான் நபி (ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கை செய்கின்றார்கள்.

மூன்றாவது ஒரு மனிதனின் நட்பு அவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றியமைக்கும். ஒரு மனிதனின் நல்ல நட்பு அவனை நல்லவனாகவும் தீய நட்பு அவனைத் தீயவனாகவும் மாற்றிவிடும். எனவே நட்பைத் தேர்வு செய்யும்போது நல்ல நட்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாமே தவறு செய்தாலும் தட்டிக் கேட்கின்ற, அதைத் தடுத்து நிறுத்துகின்ற நட்பாக இருந்தால் நாம் நல்லவனாக நீடித்திருக்க உதவும். இல்லையேல் நாம் தீயவனாக மாறிவிடுவோம். இது குறித்த வழிகாட்டுதலும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளில் உண்டு.

"நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்துவிடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2101)

நண்பனின் குணம் ஒருவனுக்குப் பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்பதை நயமாகக் கூறியுள்ளார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். எனவே நண்பன் நல்லவனாக இருந்தால் அவனோடு சேர்பவனும் நல்லவனாக நீடிப்பான். நண்பன் கெட்டவனாக இருந்தால் அவனோடு சேர்பவனும் கெட்டவனாக மாறுவான். இது இயல்பு. நண்பனிடம் பல்வேறு கெட்ட பழக்கங்கள் இருந்தால் அவற்றுள் சிலவற்றையாவது அவனோடு சேர்பவன் கடைப்பிடிக்கத் தொடங்கிவிடுவான். இதுதான் நட்பின்மூலம் ஏற்படும் மாற்றம். எனவே நாம் சேரும் நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால்தான் நாம் நல்லவர்களாக நீடித்திருக்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால்தான் "உன் நண்பனைப் பற்றிச் சொல். நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்'' என்று தெரிவித்தார் ஓர் அறிஞர்.

இதனால்தான் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: "இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்.'' (9: 119) உண்மையாளர்களுடன் தொடர்புவைத்துக்கொண்டால் அவர்களின் பழக்கம் நமக்கு வரும். கெட்டவர்களோடு தொடர்புவைத்துக்கொண்டால் கெட்ட பழக்கம் நம்மைத் தொற்றிக்கொள்ளும். இதுதான் நட்பின் இயல்பு. அதேநேரத்தில் நல்லவன் கெட்டவனாக மாறலாம்; கெட்டவன் நல்லவனாக மாறலாம்; நண்பன் எதிரியாக மாறலாம்; எதிரி நண்பனாக மாறலாம். எதுவும் நிரந்தரமல்ல. ஏனென்றால் நல்லவனைக் கெட்டவனாகவும் கெட்டவனை நல்லவனாகவும் மாற்றும் ஆற்றல் சூழ்நிலைக்கு உண்டு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்த்துகின்றார்கள்.

"உன் நண்பனையும் ஓர் அளவோடு நேசி. ஒரு நாள் அவனும் உன் பகைவனாகலாம். உன் பகைவனையும் ஓர் அளவோடு பகைத்துக்கொள். அவனும் ஒரு நாள் உன் நண்பனாகலாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1920)

நாம் நல்லவர்களாக நீடித்திருக்க வேண்டுமானால் நல்லவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும்; நல்லவர்களோடு பழக வேண்டும்; நல்லவர்களை அடிக்கடிச் சந்திக்க வேண்டும்; அவர்களோடு கலந்துரையாட வேண்டும்; அவர்களோடு சேர்ந்தே இருக்க வேண்டும். இது குறித்து மூதுரை எனும் நூலில் அவ்வை மூதாட்டி கூறியுள்ள பாடலைக் காணலாம்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே;
நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

ஆக, நல்லவர்களைக் காண்பதும் நல்லவர்களின் அறிவுரையைக் கேட்பதும் அவர்கள் கூறிய அறிவுரைகளைப் பிறருக்கு எடுத்துக் கூறுவதும் அவரோடு சேர்ந்து இருப்பதும் நாம் நல்லவர்களாக இருக்கத் தேவையான வழிமுறைகள் ஆகும்.
அதேநேரத்தில்  ஒருவன் தீயவர்களைக் காண்பதும், தீயவர்களின் சொல் கேட்டு அதன்படி நடப்பதும் அவர்கள் கூறுவதைப் பிறருக்குச் சொல்வதும் அவர்களோடு சேர்ந்து இருப்பதும் தீயவனாக மாறுவதற்கான அடிப்படைக் காரணங்கள் ஆகும்.

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது-எனும் மூதுரைப் பாடல் தெளிவாக விளக்குகிறது.

பிறரைப் பார்த்து, இவன் நல்லவனா, கெட்டவனா என்று சிந்திப்பதைவிட, நான் நல்லவனா என்று கேட்டு நம்மைச் சீர்திருத்திக்கொண்டால் நம்மைச் சுற்றியுள்ளோரும் நல்லவர்களாக நமக்குத் தென்படுவார்கள். நாம் கெட்டவர்களாக இருந்துகொண்டு நம்மைச் சுற்றி நல்லவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தால் அது ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் நல்லவர்களைச் சுற்றி நல்லவர்கள் இருப்பதும் தீயவர்களைச் சுற்றித் தீயவர்கள் இருப்பதும் இயல்பு. நாம் நல்லவர்களாக இருந்து, நம்மைச் சுற்றிக் கெட்டவர்களாக இருந்தால்  நாம்  நல்லவர்களை நாடிச் செல்ல வேண்டும்.

கெட்டவனாக இருத்தல் என்பது தற்காலிகமானதுதான் என்று சொன்னேன். ஆம். அதனால்தான்  பாவம் செய்யும் இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ள மனிதன் பாவங்களைச் செய்துவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகின்றபோது அவனை மன்னித்துத் தூய்மைப்படுத்தி விடுகின்றான்.
"ஆதமுடைய பிள்ளைகள் யாவரும் பாவம் செய்யக்கூடியவர்தாம். பாவம் செய்வோருள் சிறந்தோர் (அப்பாவத்திலிருந்து) பாவமீட்சி பெறுபவர்களே ஆவர்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 4241)

பாவமீட்சி பெற்றுத் தூய்மையான நிலையில் நல்லவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற நமக்கு ஒரு கவலை ஏற்படுகிறது. நாம் வாழ்ந்து முடித்தபின் நம்மைக் குறித்து மக்கள் என்ன கூறுவார்களோ என்ற கவலைதான் அது. ஆனால் நாம் நல்லவர்களாக வாழ்ந்திருந்தாலும் கெட்டவர்களாக வாழ்ந்திருந்தாலும் இச்சமுதாயமே நமக்குச் சாட்சி சொல்லும்.
நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாகப் பிரேதம் (ஜனாஸா) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். பிறகு, மற்றொரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அது குறித்து (இகழ்ந்து) கெட்டவிதமாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்வின் தூதரே! அதற்கும் "உறுதியாகி விட்டது' என்று கூறினீர்கள்; இதற்கும் "உறுதியாகிவிட்டது' என்று கூறினீர்களே (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "இது சமுதாயத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கை கொண்டோர் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவர்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 2642)

எனவே நாம் இறந்தபிறகு நம்மைக் குறித்து மக்கள் நல்லவிதமாகப் பேசவேண்டுமென்றால்  வாழுகின்றபோது நல்லவர்களாக, நான்கு பேருக்குப் பயனுள்ளவர்களாக வாழ வேண்டும். அதுதான் நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமாகும்.
=========================




கருத்துகள் இல்லை: