முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.
“நான்கு நபர்களை மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் வெறுக்கின்றான். (அவர்கள் வருமாறு:) அதிகமாகச் சத்தியம் செய்து விற்பனை செய்பவர்; பெருமையடிக்கும் ஏழை; விபச்சாரம் புரியும் முதியவர்; அநீதி செய்யும் தலைவர்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நூல்: நஸாயீ: 2529) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பொதுவாக ஒருவர் வியாபாரத்தில் ஈடுபடும்போது பொய் பேசுவது தவிர்க்க முடியாதது. அத்தகைய சூழல்தான் இன்றைய கலிகாலத்தில் நிலவுகிறது. ஆனால் அவ்வாறு பொய் சொல்லி வியாபாரம் மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென இஸ்லாமிய மார்க்கச் சட்டம் வலியுறுத்திக் கூறுகிறது. தவறான முறையில் உழைத்த சம்பாத்தியம் நன்மை பயக்காது. எனவேதான் இஸ்லாம் முறைதவறிய சம்பாத்தியத்தைத் தடைசெய்கிறது.
அக்கால அரபியர்கள் அடிக்கடி சத்தியம் செய்வது அவர்களின் பழக்கம். அதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமாகச் சத்தியம் செய்து விற்பனை செய்பவனை அல்லாஹ் வெறுப்பதாகக் கூறியுள்ளார்கள். அடிக்கடி சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்வதன் மூலம் அவர் பல தடவை பொய்ச்சத்தியம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் அல்லாஹ்வுடைய தண்டனையைப் பெற்றுத்தானே ஆக வேண்டும்?
வியாபாரத்தில் பொய்யைத் தவிர்க்க முடியாது. எனவேதான் ஒரு கவிஞன் சொன்னான்: “அவன் கடையைத் திறந்தான், திறந்தவுடன் முதன் முதலாக உண்மையை விற்றான்.” ஆம். இதுதான் இன்றைய நிலை. மூன்றுகள் எனும் தொடரில் நான் ஏற்கெனவே எழுதிய ஒரு நபிமொழி, பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை வியாபாரம் செய்பவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான். (திர்மிதீ: 1132)
ஆகவே எவரெல்லாம் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளாரோ அவரெல்லாம் பொய் பேசி வியாபாரம் செய்வதை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாளை மறுமையில் இழிவடைய நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பெருமை என்பது யாருக்கும் கூடாது. அதிலும் குறிப்பாக ஏழைக்குப் பெருமை அறவே கூடாது. ஏனென்றால் “பெருமை என்பது எனது மேலாடை; கண்ணியம் என்பது எனது கீழாடை. அவ்விரண்டில் ஒன்றை எவர் என்னிலிருந்து கழற்ற முற்படுகின்றாரோ அவரை நான் நரகத்தில் போட்டு (வேதனை செய்து) விடுவேன்” என்று மகத்துவமும் வல்லமையும் கொண்ட அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 3567)
பெருமை குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை செய்துள்ளான். “பூமியில் பெருமையாக நடக்காதே. நிச்சயமாகக் கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (31: 18) “பூமியில் (பெருமையுடன்) கர்வம்கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ மலையின் உச்சியை அடைந்து விடவோ உங்களால் முடியாது.” (17: 37) அதேநேரத்தில் ஒரு செல்வந்தன் தன்னுடைய பணத்திமிரால் பெருமை கொண்டான் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஒன்றுமே இல்லாத ஓர் ஏழை பெருமை கொள்ள என்ன இருக்கிறது? அல்லாஹ்வுக்கு முன்னால் பணிந்து மண்டியிட்டு அல்லவா இருக்க வேண்டும்? அவன் பெருமை கொள்ளலாமா?
பெருமை என்பது பல வழிகளில் ஏற்படலாம். செல்வத்தால் பெருமையடிக்கலாம். கல்வியால் பெருமையடிக்கலாம். அல்லாஹ்விடம் எனக்கு எந்தத் தேவையும் இல்லை என்று அவனிடம் எதையும் கேட்காமல் இருக்கலாம். அதுவும் பெருமைதான்.
உங்கள் இறைவன் கூறுகின்றான்: "நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். என்னை வழிபடாமல் பெருமையடிக்கின்றவர்கள் நிச்சயமாகச் சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள். (40: 60) ஆகவே பெருமையடித்தல் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அது எவ்வகைப் பெருமையாக இருப்பினும் சரியே!
“விபச்சாரம் ஒரு மானக்கேடான செயல்” என்று திருக்குர்ஆன் கூறுகிறது. “அதை நெருங்கவும் வேண்டாம்” என அது எச்சரிக்கை விடுக்கிறது. அந்த எச்சரிக்கையையெல்லாம் மறந்துவிட்டு, இன்றைய கலியுகத்தில் சிலர் தவறான பாதையை நோக்கிச் சென்றுகொண்டுதான் இருக்கின்றார்கள். ஓர் இளைஞன் திருமணம் செய்வதற்கு முன்பே விபச்சாரம் செய்துவிட்டால் அவனுக்கு நூறு கசையடி தண்டனையாகக் கொடுக்க வேண்டும். திருமணம் செய்தபின் அவன் விபச்சாரம் செய்துவிட்டால் கல்லால் எறிந்து கொலை செய்ய வேண்டும். இதுவே இஸ்லாமியச் சட்டம். இஸ்லாம் வகுத்துள்ள வரைமுறையை மீறிச் செல்பவருக்குக் கடுமையான தண்டனை உண்டு என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
ஓர் இளைஞன், கட்டுப்படுத்த முடியாத தன் உணர்ச்சிகளின் உந்துதலால் ஏதோ ஒரு தடவை தவறு செய்துவிடலாம். அதனை அறிவு ஏற்றுக்கொள்ளும். ஆனால் எல்லாம் அடங்கி, உணர்ச்சிகள் முடங்கிப்போன ஒரு முதியவர் எவ்வாறு விபச்சாரம் செய்யலாம்? உணர்ச்சிகள் யாவும் தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு முதியவர் விபச்சாரம் செய்கின்றார் என்றால், அவருக்கு இறைவனைப் பற்றிய அச்சம் அறவே இல்லை என்றுதான் பொருள். அத்தகையவருக்குக் கேடுதான் என்பதைவிட வேறென்ன சொல்ல முடியும்?
இன்றைய கலியுகத்தில் வயதில் மூத்தவரும் இளஞ்சிறுமிகளை வன்புணர்வு செய்துவிடுகின்ற செய்திகளை நாளிதழ்களில் படிக்க நேரிடும்போது, நமது மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகிறது. எனவே இத்தகைய இழிநிகழ்வுகள் எதுவும் இஸ்லாமிய வட்டத்திற்குள் வாழ்வோருக்கு நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள். அந்த அறிவுரையைப் பின்பற்றி வாழ்வதை ஒரு நற்பேறாகக் கருத வேண்டும்.
ஒருவர் மற்றொருவருக்கு அநீதி இழைப்பது மிகப்பெரும் குற்றமாகும். சாதாரணமாக வாழ்கின்ற ஒருவன் மற்றொருவனுக்கு அநீதியிழைக்க ஏதோ ஒரு காரணம் இருக்கும். அல்லது அது தவறுதலாகக்கூட நேர்ந்திருக்கலாம். ஆனால் தலைவனாக உள்ள ஒருவன் மற்றொருவனுக்கு அநீதியிழைக்கின்றானென்றால் அதற்கு எந்தச் சாக்குப்போக்கும் கூற முடியாது. தலைமைப் பொறுப்பில் உள்ளவன் பிறருக்கு அஞ்ச வேண்டிய தேவையில்லை; யாரேனும் தன்னை அச்சுறுத்துவார் என்ற அச்சமும் இல்லை. யாருக்கும் பணிந்து செல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் இல்லை.
அவ்வாறிருக்க அவன் மற்றவனுக்கு அநியாயம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதனால்தான் அல்லாஹ் அவனை வெறுக்கின்றான். அவனுக்கு மறுமையில் கடுமையான தண்டனை கொடுப்பான் என்பதில் ஐயமில்லை. “அநியாயம் செய்யப்பட்டவன் செய்யும் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையுமில்லை. அது நேரடியாக அங்கீகரிக்கப்படும்” என்பதைத் தலைவனாக உள்ளவன் உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆக, பொய்ச்சத்தியம் செய்தல், பெருமையடித்தல், விபச்சாரம் செய்தல், அநியாயம் செய்தல் முதலிய பாவங்களில் நாம் சிக்கிவிடாமல் நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக.
-இன் ஷாஅல்லாஹ் தொடரும்
=============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக