முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.,
ஒரு கொடி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு மரத்தைத் தேடுவதைப்போல்
முஸ்லிம் கட்சிகள் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள ஏதேனும் ஒரு திராவிடக்
கட்சியைச் சார்ந்து நின்றே பழகிவிட்டன. எப்போது சுயமாக வளர்வது? இன்னும் நடைவண்டியைப் பிடித்துக்கொண்டே
நடந்தால் சுயமாகத் தம் கால்களால் நடப்பது எப்போது?
முஸ்லிம் சமுதாயக் கட்சிகளே! நீங்கள்
ஓரணியில் திரள மாட்டீர்களா? உங்களைப் பற்றிய பலம் உங்களுக்கே எப்போது தெரிய வரும்?
யானை தன் பலமறியாமல்
பிணைக்கப்பட்ட சங்கிலியில் சிக்குண்டு கிடப்பதைப்போல், திராவிட கட்சிகளைப் பற்றிக்கொண்டே
எத்தனைக் காலம்தான் கடத்தப்போகின்றீர்கள்?
சமுதாய மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றவுடன் சாதி,
சமயம் பாராமல் நேரத்தையும்
காலத்தையும் பாராமல் ஓடி ஓடி உழைத்தீர்களே? ஏன்? கட்சி பேதம்கூடப் பார்க்காமல் எல்லா
முஸ்லிம் கட்சிகளும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றினீர்களே,
தேர்தல் என்றால் மட்டும்
ஓரணியில் ஒருங்கிணையாமல் காத தூரம் வெருண்டோடுவதேன்? தயங்கித் தயங்கிப் பதுங்குவதேன்?
ஒரே இறைவனான அல்லாஹ்வையும் ஒரே தூதரையும் பின்பற்றுகின்ற
நீங்கள் ஓரணியில் இணையாமல் திராவிடக் கட்சிகளையே சார்ந்து நிற்க போட்டிபோடுவதேன்?
உங்களின் இருப்பைக்
காட்ட முனையக்கூடாதா? அதற்காக ஓர் ஒத்திகைகூடப் பார்க்கக்கூடாதா?
இதோ இப்போது நல்லதொரு வாய்ப்பு கனிந்து இருக்கிறது.
உயர்ந்தோன் அல்லாஹ் அத்தகைய வாய்ப்பை முஸ்லிம்களுக்கு முன்வந்து தந்திருக்கிறான்.
ஆம். கடந்த ஆண்டின் ஆழிப்பேரலை போன்ற வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு, நிர்க்கதியாய் நின்ற மக்களுக்கு
நாம் ஓடியோடி உழைத்துள்ளோம். உண்ண உணவும், அருந்த நீரும், படுக்கப் பாயும் இன்னபிற பொருள்களையும் வழங்கியுள்ளோம். இது முஸ்லிம்கள்மீது
ஓர் உயர்ந்த எண்ணத்தையும் நல்ல அடையாளத்தையும் பிறமதச் சகோதரர்கள் உள்ளங்களில் பதித்துள்ளது.
எனவே இதைப் பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு தனித்துக் களம் நின்று பார்க்க
நீங்கள் எத்தனிக்கக்கூடாதா? அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்து ஓரணியில் இணையக்கூடாதா?
முஸ்லிம் சமுதாயமும்
பிற மதச் சகோதரர்களும் இதைத்தான் எதிர்பார்க்கின்றார்கள்.
உள்ளங்களைப் புரட்டிப்போடக்கூடியவன் ஏகன் அல்லாஹ். எனவே
கருத்துக் கணிப்புகளையோ பிறர்கூறும் கற்பனை வார்த்தைகளையோ நம்பவேண்டாம். வெற்றி கிடைப்பதற்கான
பொன்னான வாய்ப்பு நம் கண்முன் இருக்கிறது. அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்துத் துணிந்து
களம் காணுங்கள்.
முஸ்லிம் லீக், ம.ம.க., எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள்
அனைத்தும் ஓரணியில் திரண்டு களம் கண்டால்
-அல்லாஹ்வின் உதவியால்- வெற்றி நிச்சயம். நீங்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுவிட்டால்
ஓடோடி உழைப்பதற்காக நம் இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஒரு வெள்ளிக்கிழமை (ஜும்ஆ)
போதுமே! ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் வாக்குச் சேகரித்து விடலாமே? அதைத் தவிர்த்து, பிற மதச் சகோதரர்களிடம் சென்று
அன்போடு கேட்டால் நிச்சயம் அவர்களின் உள்ளங்கள் மாற்றமடையும் என்பது திண்ணம்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளிலும்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நாம் ஓடோடி உதவி செய்த தொகுதிகளிலும் நமக்குத்தான்
வெற்றி. முஸ்லிம் கட்சிகள் ஓரணியாக ஒன்றிணைந்து உலமாக்களிடம் சென்று ஆதரவு கேட்டால், அதன்பின் ஜமாஅத்துல் உலமா
சபையிலிருந்து ஓர் அறிவிப்பு மட்டும் அவர்களுக்கு வந்துவிட்டால்,
அதைக் கட்டளையாக ஏற்று
ஒவ்வோர் ஆலிமும் தத்தம் பள்ளிகளில் ஜும்ஆ உரை நிகழ்த்தத் தயாராக இருக்கின்றார்கள்.
எந்தெந்தத் தொகுதிகள் என நீங்கள் முடிவெடுங்கள். ஆலிம்களும்
தேர்தல் பணியாற்றத் தயார்நிலையில் இருக்கின்றார்கள். விடுதலைப் போராட்டத்தில் மும்முரமாக
ஈடுபட்டுத் தம் இன்னுயிரையும் நாட்டிற்காக ஈந்தவர்கள் உலமாக்கள் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
முஸ்லிம்கள், பிற மதச் சகோதரர்கள் மட்டுமன்றி, உலமாக்களும் தங்களுடைய பங்களிப்பை
வழங்கத் தயாராகவே இருக்கின்றார்கள் என்பது உங்களுக்குக் கிடைத்துள்ள குதிரை பலம்.
காலம் கனிந்து வந்துள்ள இப்போது நீங்கள் ஒன்றிணைந்து
ஒத்திகை பார்க்காமல் பிறகு எப்போதுதான் ஒத்திகை பார்க்கப்போகின்றீர்கள்? பிறருக்கு உதவிசெய்ய மட்டும்தான்
ஒன்றிணைவீர்களா? இந்தத் தமிழக மக்களின் அரசியல் புனரமைப்பிற்காகவும் அரசியல் மறுவாழ்விற்காகவும்,
மறுமலர்ச்சிக்காகவும்
ஒன்றிணைய மாட்டீர்களா? அரசியல் புரட்சிக்கு வித்திட வேண்டிய தக்க தருணம் கனிந்து வந்திருக்கிறது. முஸ்லிம் சமுதாயக்
கட்சிகளே இன்னுமா உறக்கம்? இன்னுமா தயக்கம்? வெவ்வேறு கூட்டணிகளில் பிரிந்து நின்று வாக்குகள் சிதறிப்போகக்
காரணமாக இருக்காதீர்கள். ஒருங்கிணைந்து ஒன்றிணைந்து அதிக இடங்கள் பெற்று வெற்றிகாணும்
வழிகாணுங்கள்.
==========