சனி, 22 ஆகஸ்ட், 2015

மகளிர் மஸ்ஜித்


மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

நம்முள் பலர் பற்பல நன்மைகளைச் செய்து, தொழுது, வழிபட்டு இனிதே ரமளானை வழியனுப்பி வைத்தோம். இந்த ரமளான் மாதத்தின் நிகழ்வுகள் என்னுள் சில சிந்தனைகளை விதைத்துச் சென்றது.  ரமளான் மாதத்தில் மட்டும் பெண்களுக்கெனத் தனியாகத் தொழுகை நடப்பதும் சில மஸ்ஜிதுகளில் பெண்களுக்கெனத் தனியே இட ஒதுக்கீடு செய்வதையும் காண முடிந்தது. ஆனால் பெண்கள் பலருக்குக் கூட்டாகத் தொழுகின்ற வாய்ப்புக் கிடைப்பதில்லை என்பதும் ஐவேளைத் தொழுகைக்கு  இந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதும் என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.
பெரும்பாலான மஸ்ஜிதுகளில் மகளிர்க்கெனத் தனியாக இட ஒதுக்கீடு செய்யப்படாததால் அவர்கள் வீட்டில் தனியாகத் தொழுவதில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் பெண்கள் சக பெண்களோடு இணைந்து கூட்டாக வழிபடுவதற்கும் மார்க்கச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கும் வாய்ப்பே கிடைப்பதில்லை.

கூட்டாக ஓரிடத்தில் இணைந்து தொழுகின்றபோது சோம்பல் நீங்கி, சுறுசுறுப்போடும்  ஆர்வத்தோடும் வழிபடும் நிலை ஏற்படுகிறது.  பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் ஒருவித மந்தநிலை ஏற்படுவது இயல்பு. இதனைப் போக்கும் வண்ணம் அவ்வப்போது மஸ்ஜிதுக்கு ஒரு நடை சென்று, நிம்மதியாகத் தொழுதுவிட்டு மனதாரப் பிரார்த்தனை செய்துவிட்டு, மார்க்க அறிஞரின் சொற்பொழிவைக் கேட்டு, மனநிறைவோடு இல்லம் திரும்பினால் மனதுக்கு ஒரு நிம்மதியும் புதுத்தெம்பும் ஏற்படுவதை உணரலாம்.
ஒரு கணவன் தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நடந்துகொள்ள வேண்டிய முறையை மஸ்ஜிதில் உள்ள இமாம்கள் ஆண்களிடம் சொல்லிவிடுகின்றார்கள். ஒரு மனைவி தன் கணவனிடமும் பிள்ளைகளிடமும் நடந்துகொள்ள வேண்டிய முறையை, செய்ய வேண்டிய பணிவிடைகளைப் பெண்களிடம் எவ்வாறு சொல்வார்கள்? பெண்களுக்கென இட ஒதுக்கீடு மஸ்ஜிதில் வழங்கப்பட்டிருந்தால் அவர்களும் மார்க்க விளக்கங்களைக் கேட்டு அதன்படி நடந்துகொண்டிருப்பார்கள். அந்த வாசல் அடைக்கப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு மார்க்க அறிவு எவ்வாறு கிடைக்கும்?
இஸ்லாத்தின்  தொடக்கக் காலத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர் என வரிசை வரிசையாக, ஒன்றன்பின் ஒன்றாக நின்று நபி (ஸல்) அவர்களின் தலைமையின்கீழ் ஏக இறைவனை வழிபட்டார்கள்; தொழுதார்கள். ஒரு கட்டத்தில் பெண்கள் மிகுதியாக வருகை புரிவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுவதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள், பெண்கள் வீட்டில் தொழுவதன் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் கூறலானார்கள். இதனால் பெண்களின் வருகை குறையத் தொடங்கியது. இருப்பினும் அவர்களின் வருகை முற்றிலுமாக நின்றுவிடவில்லை. உமர் (ரளி) அவர்களின் காலம் வரை நடைமுறையில் இருந்தது.

 பெண்கள் அனைவரும் மஸ்ஜிதுக்குத்தான் வந்து தொழ வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை. அதே நேரத்தில் மஸ்ஜிதுக்கு வருவதற்குத் தடை இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள் என்றுதான் கூறுகிறேன். ஒவ்வொரு மஸ்ஜிதிலும் பெண்களுக்கெனத் தனியே இட ஒதுக்கீடு செய்யப்பட்டால், அவர்கள் விரும்பினால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாய்ப்பே இல்லாதபோது அவர்கள் எங்கே போவார்கள்? மார்க்க அறிவை எங்கே பெறுவார்கள்?

கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து கடற்கரை, திரையரங்கு, பொழுதுபோக்குத் தளங்கள், சுற்றுலாத் தளங்கள் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம்; விரும்பினால் தர்ஹாவுக்குச் செல்வார்கள். மஸ்ஜிதுக்குச் சென்று தொழுக முடியுமா? "இன்று நாம் இருவரும் இன்ன மஸ்ஜிதுக்குச் சென்று  பயான் கேட்டு, தொழுதுவிட்டு வரலாம்'' என்று திட்டமிடமுடியுமா? ஆண்களும் பெண்களும் ஒருசேர இணைந்து தர்ஹாவுக்குச் செல்ல அனுமதித்தோர் மஸ்ஜிதுக்குச் செல்ல அனுமதிக்காததும்  அவர்களுக்கெனத் தனியிடம் ஒதுக்காததும் விந்தையிலும் விந்தை!

பயண நேரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள, தொடர்வண்டி நிலையம் அருகே உள்ள மஸ்ஜிதுக்குச் சென்று கணவன் தொழுகிறான்; பெண்களுக்கு உள்ளே அனுமதி இல்லாததால்  அவனுடைய மனைவி மஸ்ஜிதுக்கு வெளியே காத்திருக்கிறாள். இந்த நிலை எப்போது மாறும்?

இன்று பெண்கள் செல்லாத இடமும் உண்டோ? அவர்களின் கால் தடம் படாத இடமும் உண்டோ? பள்ளிக்கூடத்திற்குத் தம் பிள்ளைகளைக் கொண்டு விடுவதும் அவர்களைத் திரும்ப அழைத்து வருவதும், காய்கறிக் கடை முதல் துணிக்கடை வரை விருப்பம்போல் சென்று தாம் விரும்பியதை வாங்கி வருவதும், பொழுதுபோக்குத் தளங்கள் முதல் கொள்முதல் செய்யும் பெரும் பெரும் மால்கள் வரை சென்று வருவதும் பெண்களே! அப்படியிருக்கும்போது அவர்கள் மஸ்ஜிதுக்கு வந்தால் என்னதான் குழப்பம் வந்துவிடப் போகிறது?
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மஸ்ஜிதில் செய்யப்படுகின்ற பிரார்த்தனையில் ஆண்களோடு சேர்ந்து பெண்களும் ஆமீன் சொன்னால் அவர்களுடைய பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படலாம் அல்லவா? ஆண்கள் மட்டும் மஸ்ஜிதில் தொழுதுவிட்டு இல்லம் திரும்பும்போது அங்கே இல்லாள் தொலைக்காட்சித் திரையில் தொடர் நாடகத்தைப் பார்த்து உளமுருகி கண்ணீரைச் சிந்திக்கொண்டிருக்கிறாள். கணவனோ மஸ்ஜிதில் கேட்ட பயானின் சுருக்கத்தைச் சொல்லத் தெரியாமல் தவிக்கிறான். இந்நிலை மாற வேண்டுமெனில் மஸ்ஜிதில் மகளிர்க்கான தனி ஒதுக்கீடு செய்வது ஒன்றே வழி! பெண்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  பெண்களுக்கென ஒரு நாள் ஒதுக்கி, அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கூறினார்கள் என்பதை நபிமொழித் தொகுப்பு நூல்களின் வாயிலாக நாம் அறிகிறோம்.

இறைவனை இதயப்பூர்வமாக வழிபடுகின்ற இஸ்லாமியப் பெண்டிரும் சிலபல இல்லங்களில் உண்டெனினும் இறையில்லத்திற்கு வருகை புரிவதற்கான இனிய வாய்ப்பை உண்டாக்கிவிட்டால் அவ்வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு மார்க்க அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். தற்காலத்தில் பெரும்பாலோர் மனஅழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மன அமைதியைத் தேடி எங்கேனும் வெளியே செல்ல விரும்புகின்றனர். எனவே அவர்கள் அனைவரும் அமைதியைத் தேடி அல்லாஹ்வின் இல்லத்தை நோக்கி வருமாறு திசை திருப்பிவிடுவது நம் கடமையாகும்.

ரமளானில் பெரும்பாலான மஸ்ஜிதுகளில் கடைசிப் பத்து நாள்களும் சில மஸ்ஜிதுகளில் ஒற்றைப்படை நாள்களிலும் சஹர் உணவு ஏற்பாடு நன்மையை நாடிச் செய்யப்படுகிறது. இதை உண்போர் ஆண்கள் மட்டும்தானே? பெண்கள் அவ்வுணவைச் சுவைக்க வாய்ப்பில்லையே? "நான் மஸ்ஜிதில் சஹர் சாப்பிட்டுக் கொள்கிறேன். நீ உனக்கு மட்டும் சமைத்துக்கொள்'' என்று கூறிவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்றுவிடுகிறார் குடும்பத்தலைவர். அவளோ வேண்டா வெறுப்பாகத் தனக்கு மட்டும் எதையாவது சமைத்துவிட்டுத் துயில்கொண்டெழுந்து சஹர் உண்கிறாள். ஆண்-பெண் இரு பாலருக்கும் வழிபாட்டிற்கான ஏற்பாடு செய்து, சஹர் நேரத்தில் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யலாம்; மஸ்ஜிதில் போதிய இடவசதி இல்லையென்றால் அனைவருக்கும் உணவுப்பொட்டலங்களை வழங்கி வீட்டிற்கு அனுப்பலாம். ஆண்களுடைய எல்லாச் செயல்பாடுகளின் பின்னணியிலும் பெண்கள் இருப்பதைப் போன்று, தொழுகையில் ஆண்களின் பின்னணியில் பெண்களும் தனியே நிற்கட்டும். அவர்களும் படைத்தோனை உள்ளச்சத்தோடு வணங்கட்டும்.

பராஅத் இரவு அன்று ஒவ்வோர் ஊரிலும் உள்ள பொது அடக்கத்தலங்கள் (கபரஸ்தான்) தூய்மைப்படுத்தப்பட்டு, வண்ண விளக்குகள் ஒளியை உமிழ ஆண்களுக்கு ஒரு நேரம் பெண்களுக்கு ஒரு நேரம் என ஒதுக்கி ஸியாரத் எனும் ஒரு சுன்னத் உயிரூட்டப்படுவதைக் காண்கிறோம். மதீனாவில் அமைந்துள்ள நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களின் மஸாரை ஸியாரத் செய்ய ஆண்களுக்கு ஒரு நேரம் பெண்களுக்கு ஒரு நேரம் என ஒதுக்கப்படுகிறது; ஒரு சுன்னத் உயிர்ப்பிக்கப்படுகிறது. சுன்னத்தை நிறைவேற்றக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் ஃபர்ளுக்கு ஏன் கொடுக்கக்கூடாது? ஒவ்வொரு ஃபர்ளான தொழுகையையும் நிறைவேற்ற மஸ்ஜிதுக்கு வருகை புரிகின்ற ஆண்களுக்கு ஒரு பாதை, பெண்களுக்கு ஒரு பாதை என முடிவு செய்துவிட்டால் அந்தந்த வழியில் அவரவர் வந்து, இறைவனை வணங்கி, இன்புற்றுச் செல்வார்களே?

 பெண்களுக்கு ஒரு வழி; ஆண்களுக்கு ஒரு வழி. ஆனால் அனைவரும் செல்லுமிடம் ஒன்றுதான். அனைவரும் வழிபடும் இறைவன் ஒருவனே. ஆகவே ஒவ்வொரு மஸ்ஜிதிலும், "பெண்களுக்குத் தனி இடவசதி உண்டு'' என்ற அறிவிப்புப் பலகையை மாட்டி வைப்போம்; சமுதாயத்தை மாற்றியமைப்போம்!





கருத்துகள் இல்லை: